தேர்தல் முடிவுகள் தரும் த்ரில் !!!

பாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் !
==============================================
அச்சு அசலாக இன்றைய தினம் போலவே 1967 சட்டசபைத் தேர்தலுக்குப் பின், “ காங்கிரஸ் முதலாளிகளின் ஆட்சி இறங்கப்போகிறது, ரூபாய்க்கு மூன்று படி அல்லது ஒரு படியாவது அரிசி கிட்டிவிடும்” என்கிற பெருமகிழ்ச்சியில், வால்வு செட் ரேடியோ பெட்டி அருகே விடியலுக்காக காத்துக் கிடந்திருக்கிறார்கள் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள்.


அப்போதைய செண்டிமென்ட் படி(இப்போதும் எப்போதும் கூட) ”முதல் செய்தியில் எந்தக் கட்சி அதிக இடங்களில் முன்னிலை என்கிறார்களோ அவர்களே முழு வெற்றி பெறுவார்கள்”

அதன்படியே முதன்முறையாக 1967ல் தமிழகத்தை ஆள்வதிலிருந்து காங்கிரஸ்க்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.  இனி நாமாக அழைத்தால் கூட ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பார்களேயன்றி என்றுமே தமிழகத்தை அவர்களால் ஆள முடியாது :)  

ஆல் இந்தியா ஆகாஷ்வாணியில் அண்ணாதுரை தலைமையிலான திமுக பலப்பல இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என்று முதல்சுற்று தேர்தல் முடிவுச் செய்திகளில் சொல்லியிருக்கிறார்கள்.


காங்கிரஸ்க்கு மட்டுமே வாக்களித்து வந்த தமிழர்களில் பெரும்பாலோர் திமுகவிற்கு பெருவாரியாக ஆதரவளித்திருந்ததால் அண்ணா முதல்வராகிறார்.  உச்சகொடுமையாக அவர்கள் என்றும் போற்றும் காமராஜரையே விருதுநகரில் கவிழ்த்தியிருந்திருக்கிறார்கள்.  அமுதம் கடைந்ததில் கசிந்த விஷம் போல :(

இரண்டாண்டுகளில் அண்ணா புற்று முற்றியதில் இறந்துவிட, நெடுஞ்செழியனுக்கு போகவிருந்த நாற்காலியை எம்ஜிஆர் உதவியால் பறித்து, முதல்வராகிறார் கருணாநிதி.  “அந்தப் பயலுக்கு வெறும் வாய்தான், சூதானமில்லாத பய” என நெடுஞ்செழியனின் சாமர்த்தியமின்மையை எள்ளியிருந்தாராம் தாத்தா !



அதன்பின் குடும்பத்தில் திமுக என்றால் கருணாநிதி, கருணாநிதி மட்டுமே திமுக என்று கிட்டத்தட்ட கலைஞர் அடிக்ட் ஆகியிருக்கிறது அம்மா  ஃபேம்லி. 

1971 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதி பேரின்பம் கொடுத்திருக்கிறது.  .1972 ல் எம்ஜிஆர் வெளியேற்றப்படுகிறார்.   ”சினிமா நடிகங்களல்லாம் கிட்ட வச்சிகிட்டதே தப்புதான், இப்பதான் தலைவர் சரியா செஞ்சிருக்காரு” என்று தாத்தா பெருமை பட்டிருந்திருக்கிறார்.


1977 தேர்தல் முடிவுகள்தான் முதன்முறையாக அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினாற் போலிருந்திருக்கிறது.  ’ரேடியோ பெட்டி முதல் சுற்றில் பெரும்பாலான இடங்களில் எம்ஜிஆரின் அஇஅதிமுக தான் முன்னிலை’ என்றதை அவர்களால் கிஞ்சித்தும் நம்பவே முடியவில்லையாம்.  மறு நாள் செய்தித்தாள்களில் வெளியான முழு முடிவுகளில் அதிமுகவினர் வாங்கிய வாக்குக்களைப் பார்த்த பின்னர்தான் சலிப்போடு ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இவ்வளவு நேரம் பாட்டி சொன்ன கதைகளுக்கிடையே, இப்ப அம்மா உள்ள வந்துட்டாங்க.  

1980 ல் அதெப்படியோ ஒரே நேரத்தில் சர்க்கரையையும், வேப்பஞ்சாறும் ருசித்தார்களாம்.  நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுகிறதாம், அதே சட்டமன்றத் தேர்தலில் தலைகீழ்.  இரண்டாம் முறையாக எம்ஜிஆர் வெற்றி பெற்றிருந்திருக்கிறார்.  1982 ல் வரவேண்டிய சட்டமன்றத் தேர்தல் அதெப்படி 1980 லியே வந்தது ?  ஆமா, அப்பல்லாம் அப்படித்தான்,  நடுவண் அரசு நினச்சா போதும் மாநில ஆட்சிய கலைச்சிடலாம்.  நல்லவேளை உச்சநீதிமன்றம் தலையிட்டதால இப்பல்லாம் அந்த அட்டூழியம் ரொம்பக் கிடையாது.

1984 ல் பால்யத்திலேயே ஓரளவு தேர்தல் களேபரங்களை என்னால் யூகிக்க முடிந்துவிட்டது.  எம்ஜிஆர் கிட்னி ஃபெய்லியராகி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தும், பெரிய பலனில்லாமல் உடல் நலம் அடிக்கடி குன்றிப்போன சமயமது, எம்ஜிஆர் ஊரில் இல்லாமலயே நடந்த தேர்தல் அது.  

”எம்ஜிஆர் செத்துட்டாண்டா, பொணத்ததான் அப்பல்லோலருந்து தூக்கிகிட்டு அமெரிக்கா போனான்ங்க, இந்தக் குள்ள நரி வீரப்பன் இருக்கானே, எல்லாம் அவன் செஞ்ச வேல பாத்துக்க” என்றார் அப்பா அவருடைய நண்பரிடம்.

ஒளியும் ஒலியும் பார்க்க, எதிர் வீட்டிற்கு போனால் சவுகார் ஜானகி வெள்ளைச் சேலையில் ‘இறைவா உன் மாளிகையில்.......’ என்று கதற, எதிர் வீட்டு அக்கா கண்களிலிருந்து கர கரவென கண்ணீர் வீழ்ச்சி.


எம் ஜி ஆர் களத்தில் இல்லாத சூழலில், இம்முறை திமுக வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வராவார் என எங்கள் குடும்பத்தின் பெரும்பாலோர் காத்திருக்க, ஆர். எம். வீரப்பன், பாக்யராஜை அமெரிக்க ப்ருக்ளீனுக்கு அனுப்பி, கோலி சோடாபுட்டி கண்ணாடியும், தொப்பியில்லா வழுக்கைத் தலையுடனிருந்த எம்ஜிஆர் ஃபோட்டோவுடன் வரச் செய்கிறார்.  சவுகார் ஜானகியும், பாக்யராஜூம் இணைந்து எம்ஜிஆர் மூன்றாம் முறையாகவும் முதல்வராக சிறு உதவி புரிந்திருக்கிறார்கள்.


1987 ல் எம்ஜிஆர் இறக்க வி.என் .ஜானகி மகா மொக்கையான ஆட்சி ஒன்றை சில நாட்கள் நடத்தியிருந்திருக்கிறார்.  கட்சி உடைப்பு, வீரப்பன் - ஜெயலலிதா சண்டை, பானுமதி கொண்டைன்னு ஒரே அக்கப்போர்.  தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஆதரவு எம் எல் ஏக்களை பஸ்ஸில் ஊராராய்க் கூட்டிக் கொண்டுப் போய், ‘எல்லா’ வசதிகளும் செய்துக்கொடுத்து, பாதுகாத்திருந்திருக்கிறார்கள்.  இந்த ஆட்சியும் கலைக்கப்பட்டு கவர்னர் அலெக்ஸாண்டர் நடத்திய ஓராண்டு ஆட்சி செமையாக இருந்ததாம் :)

அப்பாடி, 1989ல் மீண்டும் காதில் தேன் வந்து பாய்ந்திருக்கிறது எங்கள் குடும்பத்தினருக்கு. ஜானகி தனியே இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட, ஜெயா சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறார்(இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது) கருணாநிதி 13 ஆண்டுகால ஆரண்யகாண்டம் முடிந்து, முடி சூடுகிறார்.


இதன்பிறகு நடந்ததெல்லாம் ஓரளவு எனக்கே நினைவிலிருக்கிறது.  இரண்டே வருடங்களில் ராஜிவ்காந்தி, ஜெயாவுடன் சேர்ந்து கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார், இந்திய அரசு ரகசியங்களை புலிகளுக்கு பாஸ் செய்து ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிவிட்டாரென கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படுகிறது பிரதமர் சந்திரசேகரால் !! (இனப்போராளிகளே கருணாநிதி புலிகள் சப்போர்ட்டர் என்பதற்கு ஆவணங்களே உள்ளனவாம் :) )

1991ல் இதோ இதே மே மாதம் இன்னும் ஆறு நாள், ராஜிவ் திருப்பெரும்புதூரில் கொல்லப்படுகிறார்.  கருணாநிதி ஆட்சியிழந்த சிப்ம்பத்தி தொலைந்து, ராஜிவ் கொலயாளிகளென திமுகவினர் மீதி பழி விழுந்து ஒட்டுமொத்தமாக பலியாகின்றனர், ஜெயாவின் பிரம்மாண்ட பலமிக்க அரசு, மூர்க்க ஆட்சியைத் தொடங்குகிறது.


மகாமக ஜலக்க்ரீடை, வளர்ப்புமகன் ஆடம்பர திருமணம், ’அக்கா அந்த மலைய வாங்கிக் கொடுக்கா’ என சசிகலா ஜெயாவைப் பார்த்துக் கேட்பதைப் போல மதன் கார்ட்டுன் போடுமளவிருந்த சசிகலா குரூப்பின் நில வெறி, ட்ராபிக்கை ரோட்டில் மணிக்கணக்கில் நிப்பாட்டி சாவகாசமாக உலா வந்த பந்தா ஜெயாவை பர்கூரில் சுகவனம் தோற்கடித்த நம்ப முடியாத அதிசயக்காட்சி பாய்ந்தது தாத்தா கண்களில் 1996 தேர்தல் முடிவுகளில்..............!!!

ம்ம்ம்ம்ம்ம்.........பாட்டி பெருமூச்சு விட்டார், நாளைய தேர்தல் முடிவுகளைக் கேட்க தாத்தாயில்லையே என :)

பார்லிமெண்ட் எலக்‌ஷன் ரிசல்ட்டப்ப அசெம்ப்ளி ரிசல்ட்கள சொல்லிக்கிட்டு தாத்தா இல்லாத ஏக்கம் வேறயா என பாட்டிக் குமட்டில் குத்தினேன் :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!