ராஜன் மகள் (சிறுகதை) ஆசிரியர் பா.வெங்கடேசன்

Image result for ராஜன் மகள்

’வாசக சாலை’ குழுமம்,   நல் இலக்கியத்தை தேடித் தேடி ருசிக்கும், ருசித்ததை பகிரும், பகிர்ந்ததை அலசித் தர்க்கங்கள் புரியும், எங்கள் நண்பர்கள் குழுவினரால் ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கபட்ட ஒன்று.



ஆரம்பத்தில், வாசித்ததை சிறு, குறு கட்டுரையாக மட்டுமே பலர் அதில் பதிந்து விவாதித்து வந்திருந்தோம்.  அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் என்று பலவற்றை அறிமுகப்படுத்தும் செயல்களையும் செய்துக் கொண்டிருக்கிறோம்.



குழுமத்தின் அடுத்தக் கட்ட பாய்ச்சலாக, வாசிப்பை பலரிடமும் மேம்படுத்தவும், வாசிப்பு என்றாலே ஒரு குறுகிய வட்ட இலக்கியவாதிகளையேச் சுற்றிச் சுற்றி வாசித்து, குளமாய்த் தேங்கி நின்று விடாமல், பலரால் அறியப்படாத சில பொக்கிஷங்களை அறிமுகப்படுத்தி, அதை வாசிக்கத் தூண்டி, நம்மை காட்டாறாய் ஓட வைத்து, விரைந்து பேரிலக்கியக் கடலில் நம்மைச் சங்கமிக்க வைக்கும் ஒரு முயற்சியாகவே.......................மாதா மாதம்  நடு அல்லது  கடைசி ஞாயிறுகளில், திருவான்மியூர் பனுவல் நூல் அங்காடியில் காலைப் பொழுதுகளில், இலக்கியச் சந்திப்பை, இயன்றவரை அப் பொக்கிஷத்திற்குரியவரையும் அழைத்து, நிகழ்த்தத் துணிந்தோம் ;)



இலக்கியக் கூட்டமென்றாலே ‘துணிந்தோம்’ என்பது சரியான பதம்தானே ?



நான்கு அற்புதமான நிகழ்வு முடிந்து, நேற்று ஐந்தாவது நிகழ்வாய் எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்கள் எழுதிய, ‘ராஜன் மகள்’ எனும் சிறுகதையை தலைப்பாய் எடுத்துக்கொண்டு, அந்தக் கதை தந்த அனுபவத்தைப் பேச முடிவு செய்தோம்.



செய்தோம், வந்தோம் என்று பன்மையில் பேசி, இதற்கென கடுமையாக உழைக்கும் அருண், கார்த்திக் கிருபாசங்கர், பார்த்திபன், பாஸ்கர் போன்றோருடன் என்னையும் இணைத்துக் கொள்வது கொஞ்சம் சங்கடமாய்த்தான் இருக்கிறது, ஏனெனில் முதல் நான்கு அருமையான நிகழ்வுகளுக்கு என்னால் செல்லவே இயலவில்லை, அந் நிகழ்வுக்கான சிறு பங்களிப்பையும் என்னால் வழங்காமல், அதென்ன  நாங்க, நாங்க என இப்பச் சேர்ந்து கொள்வது என்று ஆழ்மனம் நெளிந்தாலும், இங்கு  வெளியே நின்று ஒரு பார்வையாளனாய் விமர்சிக்க நிச்சயம் என் வெளிமனம் இடம் கொடுக்காது, எங்களுக்குள்ளான இலக்கிய இணக்கம் அப்படி ;)



பா. ராகவன் - பா.வெங்கடேசன் இந்த இரு பெயர்களுக்கான வித்தியாசம் கூடத் தெரியாமல் இருந்ததுதான் என் இலக்கிய அறிவு :(  ஓர் அரிய இலக்கிய எழுத்தாளர் என்று பா. வெங்கடெசனைச் சொல்கிறார்களே........’டாலர் தேசம்’ , ‘மொஸார்ட்’, ’கேஜிபி’, ’சிஐஏ’, ’ரா ’ எனக் கட்டுரைத் தொகுப்புகள் எழுதியவரா அரிய இலக்கிய எழுத்தாளர் ? என்று ஏகக் குழப்பம்.



சரி பன்முகத் திறமை கொண்டவராயிருப்பார் போல, அந்த ராஜன் மகள் கதையையாவது வாசித்துவிட்டு கலந்து கொள்வோம் என அதன் பிடிஎஃப் வடிவத்தைக் கோரினேன் கார்த்திக்கிடம்.  உண்மையில் எனக்கு நூலாய் வாசிப்பதில் கிட்டும் போதை, பிடிஎஃப் பில் என்றுமே(ஓரிரு ஆக்கங்கள் விதிவிலக்கு)கிட்டியதில்லை.  போக, ஓர் எழுத்தாளரின் ஆக்கத்தை காசு கொடுத்து வாங்கிப் படிப்பது மட்டுமே அந்த எழுத்தாளனுக்கு கொடுக்கும் முதல் மரியாதை என்று ஒன்று என்னுள் ஆழ விதைக்கப்பட்டிருந்ததும் பிறவொரு காரணம்.  அதற்கேற்ப அந்த எழுத்துரு வடிவமும் என் கண்களுக்கு ஊர்ந்து செல்லும் எறும்பு வடிவங்களாய் புலப்பட, எவ்வளவு முயன்றும் அத் தமிழை என்னால் வாசிக்கவே முடியவில்லை.  ஆக, அந்தக் கதையை வாசிக்காமலேயே, இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டேன்.


இப்படி ஒரு சூழ்நிலையில், ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் நிகழ்ந்த ஓர் இலக்கிய அமர்வு எவ்வளவு போரடித்திருக்க வேண்டும் ?


மாறாக, ’அய்யோ முடியப்போகிறதா ?  எழுத்தாளர் ஏற்புரை பேசிவிட்டு போய்விடுவாரா ?’  என்று ஏங்க வைக்குமளவு நிகழ்ச்சி அமைந்ததை மிகையென்று சொல்லவே முடியாது.  காரணம் அதை வாசித்து, மீள் வாசித்து, பேசியவர்கள். 


பலர் உணர்ச்சி வசப்பட்டு பேசினர்.  திரு.மனோ மோகன், மனோஜ், உமா ஷக்தி போன்றோர் படைப்பிற்குள் ஆழமாகச் சென்று பேசினர்.  இளம் எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணகுமார் நல்ல கேள்விகளை கேட்டார்.   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கிருபாசங்கர், ’படைப்பில் கணக்கெல்லாம் வருகிறது’ என்ற உமா ஷக்தியின் ஒரு வாக்கியத்தை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு ’நான் கணக்கில் வீக் எனக்கு தெளிவாக விளக்குங்கள்’ என்று தன்னுடைய பல பலவீனங்களை சபையில் சொல்லத் துணிந்தார்.  வாசகர்களாய் வந்திருந்தும் சரத்குமார், தீக்‌ஷன்யா, மீனாட்சி சுந்தரம், சசிகலா, பத்மஜா போன்றோர்  தெளிவான சிந்தனையையும்,  தீர்க்கமான இலக்கியவாதிகளுமாகவும் மிளிர்ந்தனர்.



 
பா.ராகவனையே மனதளவில் பா.வெங்கடேசனாய் மனக்கண்ணில் அவதானித்திருந்ததால், என்னருகே மெல்லிய தேகத்துடன் எந்த அலம்பலுமின்றி நிகழ்ச்சி தொடங்குமுன் அமர்ந்திருந்த எழுத்தாளரை, சக வாசகராக கருதியதுதான் தமிழின் அரிய இலக்கிய படைப்பாளிகள் பெற்ற சாபத்திற்கான குறியீடு :(



அருண் நிகழ்ச்சியை தொடங்கி வைக்குமுன், ”வாங்க சார்” என்று அவரை மேடை நாற்காலியில் அமர அழைத்தபோதுதான் பா.ராகவன் வேறு பா.வெங்கடேசன் வேறு என உணர்ந்தேன்.



தொடக்கவுரையை மற்றுமொரு அரிய இலக்கிய எழுத்தாளரான திரு.மனோஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.  இவரிடம் எல்லா வகையான இரண்டு முதல் எட்டுச் சக்கர நவீன வாகனங்கள் இருந்தும், ’அவசியமில்லாவிடில் பொது வாகனங்களையே   உபயோகப்படுத்த வேண்டும்’ என்ற தன் கொள்கையை மீறாமல், அரசுப் பேருந்தில் பயணித்து நிகழ்வு சரியாய்த் தொடங்கும்போது ஆஜரானார்.  இதே பண்பு பத்ரி சேஷாத்திரியிடமும் இருந்ததை கவனித்திருக்கிறேன்.    



ஐம்பதடி நடக்கக் கூட பைக்கை, ஆட்டோவை நாடும் என்னை சவுக்கால் விளாறியது போலிருந்தது :(



வாசக கலந்துரையாடல் இடையே, பத்மஜா, பா. வெங்கடேசனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.  ”உங்களுக்கு ஏன் சார் கமா, ஃபுல்ஸ்டாப்ல்லாம் பிடிக்கறதே இல்ல ?”


உண்மையில் நிகழ்ச்சி தொடங்குமுன், மேடையில் இருந்த அந்த நூலை எடுத்து புரட்டியபடி, ”என்ன அண்ணா இது ஒரு ஒரு பத்தியும் பக்கக் கணக்கில் நீளுது ?” என்று மீனாட்சிசுந்தரத்திடம் நான் கேட்டிருந்தேன். 



பா.வெங்கடேசன் பதிலளிக்குமுன் இடைபுகுந்த மனோஜ், தனக்கும் இந்த அரைப்புள்ளி, காற்புள்ளியெல்லாம் பிடிக்காது என்றும், பதிப்பாளர்கள் மிரள்வதற்கஞ்சியே அதையெல்லாம் தவறாமல் செய்ய வேண்டி வருகிறதென்றும், பலர் கவிதைகளில் கூட இது போல பங்க்சுவேஷன் மார்க்குகள் இடுவதையும், இடையிடையே வரும் ஆச்சர்யக்குறிகளை பகடி செய்தும் பதிலளித்தார்.



எழுத்தாளர் இடையிடையே அடைப்புக்குறிகள் இடுவது மட்டும் தமக்கு நெருடலாக இருந்ததாகவும், ஆனால் அப்படி அந்த ப்ராக்கெட்டுகள் வரும்போதுதான் நாம் பா.வெங்கடேசன் எனும் ஓர் எழுத்தாளர் கதையை வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற பிரக்ஞைக்கு மீள்வதாகவும், அந்தளவு கதைக்குள் நுழைந்தால், அக் கதை தம்மை ஆழ உள்ளிழுத்து விடுவதாகவும் உற்சாகம் கொப்பளிக்க பாராட்டினார்.



”என்னதான் எல்லோரும் புகழ்ந்தாலும் உங்கள் கதைகளெல்லாம் ஒரே முறை வாசித்தெல்லாம் புரிந்து விடும் ரகமில்லை சார்.  நீங்கள் வேண்டுமென்றே எங்களை குழப்ப அல்லது உங்களை மித மிஞ்சிய அறிவாளியெனக் காட்டிக் கொள்ள, கதையமைப்பை மிகச் சிக்கலாக கையாளுகிறிர்கள்.  ஆனாலும் எப்படியாகிலும் உங்கள் கதையை புரிந்துகொண்டேயாக வேண்டும் என்று அக்கதையை ஆறேழு முறை வாசிப்பேன்.  ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு புரிதல், விதவிதமாய் பரிமாணம் என பரிமளிக்கும் அக்கதை பாணி சொக்க வைத்து விடுகிறது”  ’ஆஹா, குறை சொல்ல வந்திருக்கார் போல, விழா களைகட்டப் போகிறது’ எனச் சுதாரிப்பதற்குள் சேம் சைட் கோல் போட்டு முகம் மேல் கரி பூசினார் வாசகர் சசிகலா ;)



”வாசிக்கும் எல்லாக் கதையும் புரிந்துவிட வேண்டும் என அவசரப்படாதீர்கள்.   உங்களுக்கு புரியவேக் கூடாது என்று எழுதுவது என் நோக்கமல்ல.  ஒரு சில கதைகள் மீள் வாசிப்பில் லேசே புரியவரும்.  புரியாவிடினும் மோசமில்லை.  ஒவ்வொரு வாசகனுக்கும் விதவிதமான புரிதல்களைத் தரச் செய்ய எழுதும் எழுத்தாளன் நிச்சயம் அரிய எழுத்தாளனே.  மனோஜ் சொன்னது போலவே, எங்கே நான் சொல்லும் கதை நோக்கம் திரிந்து விடுமோ என அஞ்சியே அவ்வப்போது அந்த அடைப்புக் குறிப்புகளை நான் இட நேர்கிறது.  நீள நீளமான பத்திகள் நான் விரும்பி எழுதுவதல்ல, எழுத்து அதுவாக அப்படித் தன்னை நீட்டிச் செல்கிறது.  அதைத் தடுக்க நான் முனையும்போது எழுத்தே சிக்கலாகி என்னை முடக்கி விடுகிறது.  எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு பத்தி மூணு பக்கத்திற்கு மேல் நீளுவதைக் கண்ட பதிப்பாளர் முகம் வெளிறிப் போனதைப் பார்த்தபோதுதான், நான் செய்யும் அநியாயமே எனக்குத் தெரிய வந்தது.  எழுதும் போது  நிச்சயம் அது எனக்குத் தெரியவே தெரியாதென்றார், நிகழ்ச்சியின் நாயகன் பா. வெங்கடேசன்.




“மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.  15 வருடங்களுக்கு முன் எழுதி, பெரிதாக வரவேற்கப்படாமல் எங்கோ புதைந்துப் போன ஓர் ஆக்கத்தைத் தேடி எடுத்து, புரியச் சிக்கல் மிக்க அந்த ஆக்கத்தை ஆழ வாசித்து அதையும் விவாதிக்கத் துணிந்த இந்த இள வாசகக் கூட்டத்துக்கு அளவில்லா நன்றிகள்.  இதன் மூலம் நான் உணர்வது,  நல்லெழுத்துக்கு இறப்பில்லை.  எழுதப்பட்டபோது கவனிக்கப்படாவிடினும் உரிய காலத்தில் கண்டெடுக்கப்பட்டு புகழ்பெறும், ஒரு சிறுகதைக்காக ஒரு விவாத நிகழ்வு இப்போதுதான் கண்டேன், அதுவும் என் கதைக்கே, மிக்க மகிழ்ச்சி” என நெகிழ்ந்தார் பா.வெங்கடேசன்.



இக் கதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிறு விமர்சனத்துடன் மேலும் பலர் பேசியதைச் சொன்னால் கொஞ்சம் சுவையாக இருக்கும் என அவதானிக்கிறேன்.    நாளை வரை பொறுக்கவும்.  இந்தக் குழுமத்தில் இணைய விரும்பும் இலக்கியப் பித்தர்கள் கீழேயுள்ள பக்கத்தில் சேரலாம்.  மாதந்தோறும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு, அரிய படைப்பாளிகளை ஊக்குவிக்கலாம்.  பதிப்பகம், படைப்பு பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் சொல்கிறேன்.


https://www.facebook.com/groups/216649928462007/


சிறுகதை வாசித்தபின் எழுதப்பட்ட மதிப்புரையின் தொடர்ச்சி........



’ராஜன் மகள்’ என்பது பா.வெங்கடேசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு.  ஆனால்  நான்கே நான்கு சிறுகதைகள்.  மொத்த பக்கங்கள் 240.  ஆக, ஒரு சிறுகதைக்கு சராசரியாக 60 பக்கங்கள்.  எனவே இவைகளை குறு நாவல்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  ஆனால் ஆசிரியருக்கு சிறுகதை என்று சொல்லத்தான் விருப்பமாம் ;)



தலைப்புக் கதையான ராஜன் மகளை மட்டும் இப்போதைக்கு வாசித்து முடித்தேன்.  இந்த 60 பக்கச் சிறுகதையைப் படிக்க எனக்கு இரண்டு முழு நாட்கள் பிடித்தன. ஒன்று அல்லது ஒன்றரை பக்கங்களுக்கு நீளும் நீண்ட  நீண்ட பல பத்திகள்.  ஒரே ஒரு வரியை தவறிக் கடந்துவிட்டால் கூட கதையின் முக்கியப் பகுதியை ஏதோ தவற விட்டதைப் போன்ற குழப்பங்கள் வந்துவிடுகிறது.  உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரே ஒரு வாக்கியத்தை விட்டு விட்டிருந்தால் கூட :)



’இன்ஸெப்சன்’ படத்தில் கனவுக்குள் கனவு, அதற்குள் இன்னுமொரு கனவு என்றெல்லாம் வருமாமே, அதெல்லாம் கூட நம்மைக் குழப்பக்கூடும்.  ஆனால் இப்படத்திற்கெல்லாம் சீனியரான இந்தக் கதையில் எக் குழப்பமுமே இல்லை.  


இதோ இதுதான் மையக்கரு.   ’இளம் பெண்ணான  நோயுற்ற இளவரசியின் பிணிக்கு அதிமுக்கிய காரணி அவளுக்கு வரும் ஒரு கொடுங்கனவு’ என்பதை கதை  நாயகனான நாவிதரும், மருத்துவரும், பண்டிதருமான அப்பைய்யாவுக்கு  ஒரு கட்டத்தில் புலப்பட்டுவிடுகிறது.  ஆக, அதைச் சரிசெய்ய அந்த இளவரசியின் கனவுக்குள் செல்வது என்று முடிவு எடுக்கிறார் அப்பைய்யா’


கலை தெரியுமென்பதற்காகவெல்லாம் நம்மிஷ்டத்துக்கு எவர் கனவுக்குளுக்கெல்லாம் நுழைந்து விடக் கூடாதாம்.  கீழிருக்கும் பட்டிலைப் பாருங்கள்.


1.) பிறர் அனுமதியின்றி அவர்களின் கனவில் நுழையக் கூடவே கூடாது.  அது அடுத்தவர் வீட்டில் கன்னம் வைத்து திருடுவதற்குச் சமமான பாவச் செயல் !


2.) இளம்பெண்கள் கனவில் அவர்களாக அனுமதித்தாலும் நுழைந்து விடக்கூடாது !


3.) நோயுற்றவனின் கனவில் நுழையும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கலையை பிரயோகிக்க வேண்டும், பிறழ்ந்தால் அவனுடைய பிணியின் வீரியம் உங்கள் மூளையை குழப்பிவிடும் !


4.) அதே போல்தான் மிருகங்கள் காணும் கனவும்.  அவைகளுக்கு பிரத்யேக பேச்சு மொழிகள் கிடையாதென்பதால், அவைகளின் உணர்வு மொழி(சிவப்பும் வெளுப்புமாய் மட்டுமே அவைகளின் கனவுகள் இருக்கும்) தெரியாமல்,  கனவுக்குள் பிரவேசித்து விட்டீர்கள் எனில் தொலைந்தீர்கள்.


பட்டியல்படி பார்த்தால் இளவரசி கனவுக்குள் நுழைய அப்பைய்யா முயலக்கூடாதுதானே ? ஆனால்  ’தன் ஒரே மகள், ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, இப்படி நாசமாகப் போய்விட்டாளே ?’ என்று நொடிந்து நோய்வாய்ப்பட்டுப் போன ராஜனுக்காகவும், அவருடைய நிர்வாகத் திறன்மிக்க மனைவி ராணிக்காகவும்.........ஒரு பெரிய ரிஸ்க் எடுக்கத் துணிகிறார் அப்பைய்யா.



Image result for நாவிதர்
அது என்ன துர்கனவு ?  அப்படி இளவரசி கனவில் யார்தான் வந்தது ?  அதை அப்பைய்யா கண்டறிந்தாரா ?  அப் பெண் பிணியிலிருந்து மீண்டாளா ?  நாவிதருக்கு அரண்மனை மட்டுமல்லாது அந்தப்புரம் வரை செல்ல அக்காலக் கலாச்சாரம் அனுமதித்திருந்ததா ?  நியாயமாக இதற்கான பதிலை நிச்சயம் நீங்கள் அந்தக் கதையை வாசித்துதான் அறிய வேண்டும்.


ஒருவேளை வாசித்து, கதையை நன்கு உள்வாங்கி, ஒரே அமர்வில் முழுக்கதை புரிந்து நீங்கள் பெருமூச்சு விட்டால்............உண்மையில் நீங்கள் ஒரு சிறந்த வாசகர்.  இதற்குப் பின் நீங்கள் தாராளமாக கோணங்கி அண்ணாச்சியின் ’ தா ’,  ’பாழி’ , ஜெயமோகனின் ’ கொற்றவை ’, ‘காடு ’ போன்ற எந்த வகை நாவல்களையும் துணிந்து வாசிக்கப் போய்விடலாம்.


இருப்பினும், என்னை நம்பி நீங்கள் வாங்கி வாசித்துவிட்டு ’சிறிதும் புரியவில்லை’ என்று ஒரு சிலர் திட்டிவிடக்கூடாதே என்று இன்னும் கொஞ்சம் கதைச் சுருக்கத்தை சொல்ல விழைகிறேன்.  அடுத்து வரும் சில பத்திகள், பெண்களின் முகச் சுளிப்பை அதிகரிக்கக் கூடும், ஆனால் இதை நீங்கள் பெரும்பாலும் கேள்வி கூடப் பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால்................தவற விடக்கூடாதென்பதென் ஆவல் !


தலை தொடங்கி, உடலில் ஆங்காங்கு முளைக்கும் ரோமக் கற்றைகள் இருக்கிறதில்லையா................அவைகளெல்லாம் ’இறந்து போன செல்கள்’ என்று அல்லோபதி சொல்வதாக, ஹாய் மதனில் ’மதன்’ ஒருமுறை எழுதியிருந்தார்.


ஆனால், நம் இந்திய மருத்துவக் குறிப்புகள் அவைகள் உடல் வெளியே ஓடும் ’நரம்புகள்’ என்கிறது.  ஆம், ஒருவர் உடலில் இருக்கும் ரோமங்களின் மாறுபாட்டைக் கொண்டு, ஒரு தகுதியான மருத்துவ சாஸ்திரம் கற்றவனால் அவரைப் பீடித்திருக்கும் நோய் பற்றி அறிந்துவிட முடியுமாம்.  அந்த முடிகளை அகற்றுவதன் மூலமோ, திருத்துவதன் மூலமோ, வளர்ப்பதன் மூலமோ................அந்த நோயைக் குணப்படுத்தவும் முடியுமாம்.  அந்தக் கலையில்தான் நம்ம அப்பையா சிறந்த விற்பன்னர்.


வியர்வைச் சுரப்பிகளை மூடியிருக்கும் அடர்த்தியான ரோமத்தை அறவே நீக்கி, அச் சுரப்பிகளின் மூலமாக சில விளைவுகளை ஏற்படுத்த முடியும்.  அதிகமாய்ச் சுரக்கும் வியர்வைச் சுரப்பிகளை அதிக ரோமம் வளர்க்கச் செய்து மூடுவதன் மூலம் சில நல்விளைவுகளை கொண்டு வர முடியும், முக்கியமாய் இன்பமயமான நீடித்த தாம்பத்ய விளையாட்டுகள் ;)


இன்றைய கிராமத்துச் சமுதாயச் சூழலில், மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நாவிதர்கள், இக்கதை நடந்த காலத்தில், சமூகத்தில் மிகுந்த உச்சம் பெற்றிருந்ததாகவும் , அதனாலேயே அப்பைய்யாவால் அரண்மனைக்குள் எங்கும் உலவ முடிந்ததென்றும், அப்பையாவிடம் சிகையலங்காரம் செய்து கொள்ள, எத்தனையோ தூர தேசங்களிலிருந்தெல்லாம் பெரும் செல்வந்தர்கள், இந்த ராஜனின்  ராஜ்ஜிய்த்திற்கு வந்து, நாள் கணக்கிலெல்லாம் காத்திருந்து அப்பையாவிடம் சிகை திருத்திச் செல்வார்களாம்.


”பெண்கள் தங்களின் அக்குள்கள் & அந்தரங்க உறுப்பிலிருக்கும் ரோமங்களை அகற்ற தேவைப்படுபவர்களுக்கு திருத்த, அவர்களுடைய காதலனோ, கணவனோ உதவ வேண்டும், நாட்டில் பல பேர் வீட்டில் அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறது” என்றெல்லாம் பப்ளிக்காய் பேசி, அப்பைய்யா ராஜனை நெளிய விட்டிருக்கிறார். 


என்னதான் அப்பைய்யா ஓர் அரிய நாவித மருத்துவ பண்டிதரென்றாலும், நாடு கலாச்சாரம் என்கிற போர்வைக்குள் பெண்களை அடிமைப் படுத்தியல்லவா வைத்திருக்கிறது ? அவர்களுடைய  நிதம்பத்தில் இருக்கும் ரோமத்தை ஆண்கள் சிரைக்கிறார்கள் என்கிற அப்பையாவின் வாக்குமூலத்தால், பண்பாடு சிதையும் என ராஜன் புழுங்குகிறார். இருந்தாலும் தன் மகள் பிணிப்போக்கி, நாட்டிற்கு இருந்த ஒரே வாரிசையும் மீட்டுக் கொடுத்த ஒரே காரணத்துக்காக பல்லை இறுகக் கடித்துக் கொள்கிறார்.


22 தலைமுறைகளாக தவறாமல் தோன்றிய ஆண் வாரிசுகளால் எந்தச் சிரமமுமின்றி பரிபாலனம் நடந்து கொண்டிருந்த ஒரு ராஜ்ஜியத்தின், 23ம் தலைமுறை ஆண் வாரிசில்லாமல் போய்விடுகிறது.  ஆண் வாரிசுக்காக ராஜன் நடத்திய புத்திர காமேஷ்டி யோகத்தால் ஒரு பலனும் விளையவில்லை.  ராஜன் மனக்குறையை தங்களுக்கு வந்த குறையாக பாவித்து ’ராஜ்ஜியத்துக்கு ஆண் வாரிசு கிட்டட்டும்’ என்று மக்கள் நடத்திய இதே யாகத்தால் நல்ல பலன் விளைந்தது. ராஜனைத் தவிர்த்து, எல்லா வீடுகளிலும் தவறாமல் ஆண் வாரிசுகள் உருவாகின ;)  


ராஜன் தன் மனத்தை இறுக்கிக் கொண்டு, மகளை இருபத்திரெண்டு ஆண்களின் வலிமைக்கு நிகராக வளர்க்க ஆரம்பிக்கிறான். அவளுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுத்தரச் செய்கிறான்.  அப்பைய்யாவும் இளவரசிக்கு வர்மக்கலை போன்ற பயிற்சிகளைத் தருகிறார். அப்போது இளவரசி முகரேகையைக் கொண்டே, ”இளவரசி உங்கள் பத்மத்தில் அடர்ந்திருக்கும் ரோமக்கற்றையில் வெண்மை நிறம் மண்டியுள்ளது, அது தீரா துர் கனவுகளைத் தரவல்லது”  என்கிறார்.  


தீர்க்கதரிசி அல்லவா அப்பையா ? அப்படியே ஆகிறது.  அவரே அதை நிவர்த்தியும் செய்கிறார். அத்தோடு அவர் புகழ் ஓங்கி........ஆச்சர்யமாய் அதனாலேயே பெரு வீழ்ச்சியும் கொள்கிறது. பேரிழப்பும் கவ்வி, அதன்பின் நாவிதர்கள் நாலாம்தர மக்களாய் ஊருக்கு வெளியே துரத்தப்படுகிறார்கள் :(



1.) இளவரசியின் எந்தச் செயல் ராஜனை குலை நடுங்கச் செய்தது ?


2.) அதென்ன இருபத்திரெண்டு ஆண்களுக்கு நிகரான திறன், வலிமை கணக்கு ?

3.) கதை நடை எப்படி ?

4.) அப்பைய்யா பிணி நீக்கும் காட்சிகள்  


தொடர்ந்து பார்ப்போம்.........





// எந்த ஒன்று பிறிதொன்றை வீழ்த்தும் போதும் வீழ்த்தியதன் ஆகிருதி வரலாறாக எழுதப் படும்போது வீழ்த்தப்பட்டதன் எச்சம் வரலாற்றினடியில் கதையாக மறைந்து நின்று முற்றான அழிவிலிருந்து தன்னை தப்பிவித்துக் கொண்டு விடுகிறது.


வரலாற்றினுள் கதை வரலாறாயும், கதையினுள் வரலாறு கதையாகவும் தனித்துவம் அழிந்தவையாய் சதா உருண்டு கொண்டே இருக்கின்றன //


இது கதையாசிரியர் பா. வெங்கடேசன் அவர்களுடைய எழுத்து நடை.  போன பகுதியில் சொன்னபடி ஒன்றரை பக்கங்களுக்கு நெடுக வரும் ஒரு பத்தியிலிருந்து பிடுங்கிப் பதிந்தது.   இந்த வரிகளையே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்தே உள் வாங்க முடியும் !


இப்போது கதைக்குள் நுழைவோம்.


அந்த திறமையான இளவரசி தன் பதினான்காவது வயதை அடைந்துவிட்டாள்.            அந்த அரசு வம்ச நம்பிக்கைபடி இவ்வருடம் நிச்சயம் இளவரசிக்கு திருமணம் நடத்தி விடவேண்டும்.  ”தப்பித்தவறி இளவரசிக்கு 15 வயது வரை திருமணம் நடைபெறாவிடில் நாட்டிற்கும், வீட்டிற்கும் தரித்திரம் பிடித்துவிடும்”  இது ராணி ராஜனிடம் சொன்னது.  இளவரசி என்ன சொல்கிறாள் தெரியுமா ?



“எனக்கு கோரமான, குருபியான, அவலட்சணமான ஒரு மணமகனாக கண்டுபிடித்து திருமணம் செய்யுங்கள், அப்படிச் செய்யாவிடில் எனக்குத் திருமணமே வேண்டாம்”

’ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறாள்’ என்று அதை அலட்சியப்படுத்தி சுயம்வரம் நடத்தினால்.....அத்தனை அழகான ஆண்களையும் நிரகாரித்து விடுகிறாள் இளவரசி.  அதன்பின்தான் நிலைமையின் தீவிரம் பற்றி ராஜனும், ராணியும் உணரவே செய்கிறார்கள்.

ஒரே தீர்வாக அப்பையாவின் உதவியை நாடுகிறார்கள் ராஜனும், ராணியும்.  பிறகுதான் இளவரசி ஒரு துர்கனவால் இப்படி மாறிவிட்டாள் எனவே அதை அறிய அவள் கனவுக்குள் நான் சென்று கண்டுபிடிக்கிறேன் என்கிறார் அப்பைய்யா.  இதையெல்லாம்தானே போன பகுதியில் பார்த்தோம் ? 

இளவரசியின் அறை அருகே இருக்கும் அவளுடைய தோழியின் அறையில் தங்கியிருந்து, இளவரசி துயிலும் நேரமாய்ப் பார்த்து, அவள் கனவில் பிரவேசிக்கிறார் அப்பைய்யா.

இளவரசியின் வயதிற்கும், பொங்கும் பருவத்திற்குமேயுரிய கனவுதான்.  யாரையோ எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறாள் இளவரசி.  குளிர்ச்சியான தென்றல் அவள் மேனியைத் தீண்டிய மாத்திரத்தில், கட்டழகான, உயரமான ஓர் இளைஞன்  அந்தப்புர சாரளம் வழியே உள் நுழைகிறான்.

ஆரத் தழுவி அவனை வரவேற்கிறாள்.  பிறகு காமரசம் ததும்பத் ததும்ப அவர்கள் உரையாடத் தொடங்குகிறார்கள்.  ஓடியாடுகிறார்கள்.  களைத்து மஞ்சத்தில் சரிந்த இளவரசியின் ஆடைகளை நெகிழ்த்தி களியாட்டத்தின் உச்சம் செல்ல எத்தனிக்கிறான் அவ்விளைஞன்.

அவள் மாவிலை பாதத்தில் தன் முத்தத்தை பதிக்க ஆரம்பிக்கிறவன், அப்படியே அவள் மேனியின் மேல் நோக்கி முன்னேறுகிறான்.  முகத்தினருகே வரும்போது ஏனோ அவன் முகம் சற்றே குரூரமாக மாறுகிறது.  திடுக்கென அந்தக் காமக் களியாட்டத்தை நிறுத்துபவன், அரக்கப்பரக்க அவன் ஆடையள்ளி எழுந்து, இளவரசியின் கெஞ்சல் முகபாவத்தை உதாசீனப்படுத்தியோடு மட்டுமல்லாமல் வாயைக் குவித்து..........த்தூவென அவள் முகம் மீது காறி உமிழ்கிறான்.  அப்படியே பாய்ந்து அந்தச் சாளரம் வழியே வெளியேறிச் சென்றும் விடுகிறான்.  

உச்சகட்ட அவமானத்திற்குள்ளான இளவரசி, தன் முகத்த்ல் வழிந்த அவன் எச்சிலைத் துடைத்துக்கொண்டே குமுறிக் குமுறி அழுகிறாள்.  ஒரு நாளல்ல........பல நாட்களாக இது ஒரு நாள் கூட விடாமல்  தொடர்ந்து நடைபெறுகிறது.  ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் இக் கனவு நிகழ்ந்து, அவள் அழுது முடித்த மாத்திரத்தில் அசந்து தூங்கி, இந்தக் கனவை ஒவ்வொரு நாளும் மறந்துவிடுவதே ! 

இக் கனவும், மகிழ்ச்சியும், இறுதியில் சொல்லொண்ணா அவமானமும் தொடர்ந்து ஒவ்வோர் இரவும் அவளுக்கு நிகழ்ந்து, நிகழ்ந்து, அவளறியாமலேயே ’அழகு என்றால் ஆபத்து, அவமானம் நிகழும்’ என்கிற கசடு அவள் ஆழ் மனதில் படர்ந்து போய்விட...........’எனக்கு குருபியாய்,ரோகியாய் மாப்பிள்ளை வேண்டும்’ என்று அவளை புலம்ப வைத்துவிட்டது என்பதை அப்பையா அறிகிறார்.  ஆனால்.................

ஆமாம், அவள் கனவில் வரும் அந்த ஆண்மகன் மனிதனல்ல, அது ஒரு வரிப்புலியின் தந்திரம்.  வரிப்புலியின் ஒரு கனவு.  இதைத்தான் அப்பைய்யா முழுமையாக அறிகிறார்.

புலி வேட்டைக்குச் செல்லும் அரசர்களுக்கு உதவ, மலைவாசிகள் அல்லது காட்டு வேடர்கள், கொம்பு முரசு மற்றும் முழவு ஜண்டை போன்றவற்றை இசைப்பதன் மூலம், புதருக்குள் பதுங்கியிருக்கும் புலியை அச்சப்படுத்தி, அரச வேட்டைக்குத் தோதாக காட்டின் மையப் பகுதியில் வெளிவரச் செய்வார்கள்.  அப்படியொன்றும் எளிதாக வாசித்து விடக்கூடிய இசை அல்ல அது.  கொஞ்சம் ஓங்காரமாக வாசித்துவிட்டீர்களெனில் உச்ச அச்சமடையும் புலி இதயம் வெடித்து இறந்து விடுமாம் !

புலி அஞ்சவும் வேண்டும், அடர்புதரிலிருந்து வெளிவரவும் வேண்டும், ஆனால் அதுவாக இறக்கலாகாது.  காட்டு வேடர்களின் இத்தகைய இசை மூலமே, இளவரசியின் கனவில் அவ் வரிப்புலியை வரவழைத்து, பிறகதை அவள் கனவிலிருந்து நிரந்தரமாக துரத்த வேண்டுமென அப்பையா முடிவெடுக்கிறார்.  அதற்காக இருபது வேடர்களை அழைத்தும் வருகிறார்.  அத்தனை பேரையும் இசைக் கருவிகளோடு இளவரசியின் அந்தப்புரத்தில் தங்கவும் வைக்கிறார் அப்பைய்யா.

புலி வந்ததா ?  ஏன் மகளின் துன்பத்தை நீக்க உதவிய அந்த இருபது வேடர்களின் தலையை ராணி சீவச் சொன்னாள் ?  வேடர்களுக்கே அந்தக் கதியெனில் நாவிதர் என்னவானார் ?  அடுத்த பாராக்களில்........

Image result for tiger
ஒரு காலத்தில் பெரு வனமாக அடர்ந்திருந்த ஒரு பகுதி, நாட்டை விரிவாக்குவதற்காக அல்லது புதியதாய் நிர்மாணிக்கும் நிமித்தம் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.  அப்போது அதிலிருந்த காட்டு விலங்குகள் துரத்தவோ, கொல்லவோ படுகிறது !




Image result for காடு
அந்த நாட்களில் வனத்தின் ஒரு மாபெரும் கடம்ப மரத்தின் உச்சியில் ஒய்யாரமாக உறங்கி, வசித்து வந்த ஒரு வரிப்புலி, இக்காட்டை அழித்ததனால் தன் அருமையான இருப்பிடத்தை இழக்கிறது.  கடம்ப மரத்தை வீழ்த்தி, தன் இருப்பிடம் பறிக்கப்பட்டது அதன் ஆழ் மனதில் வடுவாகப் பதிந்து...........தன் சுகமான வாழ்வு பறிபோனதை, தன் வாரிசுகளுக்கு கதையாகச் சொல்லி, காலம் காலமாய் அக்கதை, அப் புலி வாரிசுகளிடையே கடத்தப்பட்டுக் கொண்டிருக்க, தற்போதைய ஒரு வரிப்புலி தன் கனவில் தினமும், தங்களுடைய ஆஸ்தான கடம்ப மரத்தைக் காண்கிறது.  ஆசை ஆசையாய் அக் கடம்ப மரம் உச்சி ஏறி துயிலச் செல்கிறது.



Image result for கடம்ப மரம்
அந்தக் கடம்பமரம் இருந்த பகுதியில்தான் இளவரசியின் அந்தப்புரம் இப்போது அமைக்கப்பட்டிருக்கிறது.    தினமும் கனவில் தங்களின் இருப்பிடத்தில் தூங்கும் இளவரசியையும் அது கனவில் காண்கிறது. புலிகள் சாதுர்யம் மிகுந்தவைகள் என்கிறார் ஆசிரியர்.  




தன் பின்னங்கால்களின் அடையாளங்களை மட்டுமே தரையில் பதிக்கும் அவைகளின், முன்னங்கால்களின் அச்சு மட்டும் என்றுமே மண்ணில் பதியாதவாறு பார்த்துக் கொள்ளுமாம்.   அதாவது தன் அதிக எடையை அந்த முன்னங்கால்களுக்கு அழுந்தக் கொடுப்பதன் மூலமே, பதியும் முன்னங்கால் அச்சு தானே அழிந்து போகும்.  இத்தகைய தந்திரம் மிகுந்தவைகள்  புலி என்பதால், இளவரசியின் கனவில் தன் நிஜ உருவத்தைக் காட்டாது, ஓர் அழகான வாலிப உருவம் கொண்டு நுழைந்திருக்கிறது, தினமும் சரசத்தின் உச்சகட்டத்தில் அவளை அசிங்கமும் படுத்துகிறது :(



”தன்னிச்சைக்காக காடுகளை அழிக்கும் மனிதனை, அவமானப்படுத்துவதாக கதாசிரியர் இதைக் குறியீடாக்கி வியப்பிலாழ்த்துகிறார்” என்றார்கள் இதை வாசித்த விமர்சகர்கள், ஆனால் நான் என் போக்கில் கதை மட்டுமே சொல்லிச் சென்றேன் என்றார் பா.வெங்கடேசன்.




”ஒவ்வொரு மிருகமும் வனமெங்கும் உலவி சுகமாக வாழ்வதாகக் காணும் கனவில், நாம் அவைகளின் இருப்பிடத்தை பெரும்பாலாய் ஆக்கிரமித்த அநீதி தென்படுவதேயில்லை” ஆசிரியரின் இந்த வரி புரிய எனக்கு இன்னும் சில வருடங்கள் பிடிக்கக்கூடும் !  ஆனாலும் இந்த வரிகளில் வன மிருகங்களின் மீதான அக்கறையும், அவைகள் போட்ட பிச்சைதான் நம் வாழ்விடங்களும் என்பது மறைபொருள் !




இப்படியாக இளவரசியின் கனவில் நுழைந்து, அவள் கனவில் வந்த வாலிபனை பின் தொடர்ந்ததில் அது ஒரு புலியின் தந்திரம் மற்றும் அது காணும் கனவே என்பதை ’அப்பைய்யா’ கண்டறிந்ததாக முந்தைய பதிவில் பார்த்தோம்.




இப்போது இந்தப் புலியை, புலியாகவே அவள் கனவில் வரவழைக்க வேண்டும். அப் புலியை வேட்டையாடுவதன் மூலம் நிரந்தரமாக இளவரசியின் கனவில் அப் புலி இனி வரவிடாமல் செய்யலாம் என்பது அப்பையா வகுத்த உத்தி.  காடுகளில் வேட்டையாட அரசர்கள் செல்லும்போது இசைக்கருவிகளை இசைத்து வேட்டைக்கு தோதாக உதவும் மலைவாசி / காட்டுவாசி  வேடர்கள் இருபது பேரை அழைத்து வரச் செய்கிறார் அப்பைய்யா(இதையும் ஏற்கனவே பார்த்திருந்தோம்)




இளவரசியின் தோழி இருந்த அறையில் தங்கித்தான் அப்பையா இக் கனவு ஆய்வை மேற்கொள்வதால், அவருடனேயே அந்த இருபது வேடர்களும் தங்கி, இசைப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.  அதுவரை அந்த இசையை சர்வ சாதாரணமாக எண்ணி வந்த ராஜன்(இவரும் இந்த ஆபரேஷனில் ஒரு பார்வையாளராகப் பங்கு கொள்கிறார்)வேடர்களின் பயிற்சியையும், ஒத்திசைவையும் பார்த்து பெரிதும் வியந்து போகிறார்.



இளவரசி அன்று ஆழ்ந்த துயிலிற்குள் சென்றுவிட, வேடர்கள் புலியை வரவழைக்க, தங்கள் இசைக்கருவிகளை முழங்க ஆரம்பித்தனர்.  சில நிமிடங்களில், அந்தப்புரச் சாளரம் வழியாகப் புலி நுழைவதைக் கண்டு அனைவரும் திடுக்கிடுகின்றனர் அப்பைய்யாவைத் தவிர.  இளவரசி அப் புலியை நோக்கி ”நீயா ?” என்கிறாள்(கனவில்தான்)




அந்த ஊர் பொதுமக்களுக்கு இளவரசிக்கு நிகழ்ந்த வெற்றிகரமான சிகிச்சையைப் பற்றியதான இக்கதையை, முழுதாகச் சொல்லிவிடாமல் ’இதுவரை’ மட்டுமே சொல்லி, மிச்சக்கதை நாளை என்று எழுந்து போகிறார் அப்பைய்யா.  


அந்தப் புலி ஒவ்வொரு நாளும் இளவரசியின் தோழியின் அறைக்குள் சென்றுதான் ஓய்வெடுத்தாக(இளவரசியின் கனவில்) அப்பைய்யா சொல்லிவிட, அப்போதும் இருந்த மிகை உணர்ச்சிமிக்க நம் லூ கூ* மக்கள், ”தோழிதான் இளவரசியை சரியாக கவனிக்காமல் நோய்க்குள் தள்ளிவிட்டு விட்டார்” என்று தாமாகவே ஒரு முடிவெடுத்து, தோழியின் பெற்றோர் வீட்டுக்குத் தீவைத்து..................அவர்களைக் கொன்று விடுகிறார்கள்.  அரண்மனைக்குள் இளவரசியின் சோகத்தையெல்லாம் தாங்கி வடிகாலாயிருந்த தோழிக்கு இந்தச் சேதி பல நாட்கள் கழித்துதான் சொல்லப்பட்டிருக்கிறது.  அதன் பின், ”எந்தப் பாவமும் செய்யாத தமக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?” என்று அவள் அந்தப்புர மாடியேறி புலி வந்த சாளரம் வழியாகவே கீழே குதித்து தற்கொளை செய்து கொள்ளுமுன் விட்ட சாபமே இந்த ராஜ்ஜியம் சீரழிந்து போனதற்கு ஒரு காரணம் என்றும் ஒரு கதை புனையப்பட்டது !  (*லூ கூ என்றால் லூசுக் கூமுட்டைகள்)




கதைப்படி, நாவிதர்கள் இந் நிகழ்வுவரை கூட அந்த நாட்டில் உயரிய ஒரு கலைஞர்களாகத்தான் போற்றப்பட்டு வந்ததாக வரலாறு கூறினாலும், வேடர்கள்/காட்டுவாசிகள் தீண்டத்தகாதவர்கள்தான் அரசு வம்சத்தினருக்கு.  ’இந்த அப்பையா வைத்தியம் சக்ஸஸ் ஆகித் தொலையட்டுமே’ என்றுதான் அரச குடும்பத்தினர் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தனர்.   அந்தப் பாவப்பட்ட இருபது வேடர்களுக்கும் நுணல் போல இளவரசி பற்றி இருபது விதாமாய் ஆளுக்கொடு கதைகள்  புனைந்து சொல்ல....................  ”ஆடைகள் நெகிழ தூக்கத்தில் இருந்த இளவரசியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்” என்ற ஒரு காரணத்தை குற்றமாகச் சுமத்தி அந்த இருபது பேரின் தலைகளையும் சீவ உத்தரவிட்டாள் ராணி.      ”ஓர் அரசு வாரிசை நோயிலிருந்து மீட்க உதவியதற்கா உயிரிழப்பு ?” என்று அந்த வேடர்களும், அவர்களின் குடும்பத்தினரும்  கதறிய கதறலும் கூட அந்த ராஜ்ஜியம் அதன்பின் சீரழிய பிறவொரு காரணம் என்றும் ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது !




இருபத்தியிரண்டு ஆண்களுக்கு நிகரான வலிமையும், வீரத்தையும், தீரத்தையும், திறமையையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு பெண் மகவு தமக்கிருந்தும், அரசாள ஆண் வாரிசுதான் தேவை எனத் தள்ளாத வயதிலும், இயலாமலும் கூட யாகங்கள் பல செய்து தமது மெய்வருத்திக் கொண்டிருந்த தன் தந்தையின் செய்கைகளால் மன உளைச்சல் உற்றே, இத்தைகய துர்கனவுகள் வரக்காரணம் என்று நம்பி வெதும்பிய இளவரசியின் மனக்குறை கூட இந்த ராஜ்ஜியம்  பின் நாசமாக காரணமென மற்றுமொரு கதையும் உலா வரத்தான் செய்கிறது !




சரி.  என்னுடைய இப் பெரிய பெரிய பதிவுகளைப் பார்த்தால் நான் முழுக்கதையையும் சொல்லிவிட்டாற்ப் போலத்தானே தெரிகிறது ? இல்லவே இல்லை.  நான் கதையின் சில பிரதான அம்சங்களை கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கிறேன், உண்மையில் இந்தக் கதையை நீங்கள் குழப்பமற்ற மன நிலையில் ஆழ்ந்து வாசிக்கும் போது, உச்ச இலக்கியம் ஒன்று தரும் உன்னத  இன்பத்தை நுகர்வீர்கள்.  நான் சொல்லியிருப்பது வெறும் பத்து விழுக்காடு, மிச்சமிருக்கும் அந்த 90 விழுக்காடு எழுத்துகளை வாசித்து உணருங்கள்.




// “ நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். மதுரையின் வெப்பம் பற்றி நீங்கள் அறிவீர்கள். குளிர்காலம் என்று மார்கழியில் சொல்வார்களேத் தவிர அப்போதும் கூட எங்களால் குளிரை பெரிதாய் உணர முடிந்ததேயில்லை.  என்ன கோடைக்காலங்களில் அபரிமிதமாய் வேர்ப்பது மார்கழிகளில் இருக்காது, அவ்வளவுதான் மதுரைக் குளிர்.


இந்தச் சூழலில் என் வேலை நிமித்தம் நான் ஹொசூர் போக வேண்டி வந்தது.  மார்கழி முடிந்து பங்குனி ஆரம்பித்த பொழுது.  மதுரை வெப்பநிலையை மட்டுமே அறிந்திருந்த எனக்கு ஹொசூரின் பூகோள நிலை பற்றி அதுவரை தெரியாது.  அது குளிரின் உச்சகட்ட காலமாம் ஹொசூரில்.


கண்ணாடிகள் கொண்டு மூடியிருந்த பேரூந்தினால்..........முன்னதிகாலை ஹொசூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்படும்வரை எனக்கு குளிரின் வீரியம் பற்றித் தெரியாது.  அந்த இருட்டில், நான் முதன்முதலாக அனுபவித்த அந்தக் குளிர்..........கொடூரக் குளிர், இதுவரை அறிந்தே இராத உச்சக்குளிர்............இதுவரை நான் குடித்த எல்லா வெப்பத்தையும் ஒரே  நிமிடத்தில் உறிஞ்சி வெளியே துப்பும் ஆவேசத்துடன் என்னிடம் அது நடந்துக் கொண்டது //




ஒரு சில கதைகளில் சொல்லப்படும் அதிர்ச்சிகராமான நிகழ்வுகள் இதுபோலொரு தருணத்தில் அதுவாக அமைந்து விடுகிறது என்கிற காரணத்துக்காக மேற்கண்டச் சம்பவத்தைச் சொன்னார் இதன் ஆசிரியர் பா.வெங்கடேசன்.



உண்மையில் இந்த ஃபேஸ்புக் மட்டும் இல்லையெனில் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிச்சயம் இதுபோலொரு கதையை அல்லது எழுத்தை என் வாழ்க்கையில் வாசித்தே இருக்க மாட்டேன்.  ஃபேஸ்புக் என்றால் இதன் மூலம் கிட்டிய இலக்கிய அறிவு.  இதன் மூலம் என்றால் இப்படித் தேடி தேடி வாசிப்பதோடு நில்லாமல் அதைப் பரப்ப நினைக்கும் நல் இலக்கிய வாசக நண்பர்கள்.   அப்படிப்பட்ட அரிய வாசிப்பாளர்கள்தான் அருண், கார்த்திக், கிருபாசங்கர், பாஸ்கர் ராஜா, பார்த்திபன், மணி தனுஷ்கொடி.....................எல்லோருக்கும் தலைவராக மனோஜ்.  இவர்களெல்லாம் எனக்குக் கிட்ட காரணமாயிருந்த இந்த வலைத்தளத்திற்கு பல கோடி நன்றிகள் _/\_  



முற்றும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!