சனி, 3 மார்ச், 2012

ஆன்லைன் சூதாட்டமும் உப்புச் சத்தியாகிரகமும்

உப்புச் சத்தியாகிரகம் ஏன் வந்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கும், இருந்தும் வரலாறை ஊன்றிப் படிக்காத சிலருக்காக ஒரு கதைச் 
சுருக்கம் :- 


காலம் கி. பி.1930 -இடம் இந்தியா, ஆங்கிலேய ஆட்சி 
உப்பு எளிய இந்திய மக்களின் அன்றாடத் தேவை, அன்றாட உணவுப்பொருட்கள் உள்ளூரில் மக்களுக்கு எளிதாக கிடைத்துவிடும். ஆனால், உப்பு வெளியில் இருந்தே வரவேண்டும்.  அதுவும் உப்பு வியாபாரிகள் மூலமே வரவேண்டும்.  வெள்ளையன் மூளையில் முதலில்  உதித்தது 'உப்புக்கு சிறப்பு வரி ' எந்தப் பஞ்சம் வந்தபோதும், ஆங்கிலேயர்கள் உப்பின் மீதான வரியை கடுமையான கண்டிப்புடன் வசூலித்தனர், விடாக்கண்டர்களுக்கு கொடாக்கண்டர்களாய் வியாபாரிகளில் சிலர் வரிவசூலிப்பு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, வரிஏய்ப்பு செய்தனர்.  


இதற்க்காக கடுமையான முள்வேலிச் சோதனைச்சாவடிகளை இந்தியா முழுக்க நிறுவி, கறாராக வரியை வசூலிக்க ஆரம்பித்தது, இதற்க்கு பெரும் பொருட்செலவு ஏற்படவே,  இரண்டாவதாய் உதித்த சிந்தனை, உப்புக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயிப்பது, அதன்படி ஒரு மூட்டை உப்பு விலை ரூபாய் 2 /- என இந்தியா முழுமைக்கும் அறிவித்தனர்.  இதன்படி, கடலோரம் இருக்கும் இடங்களில் கூட மூட்டை இரண்டு ரூபாய், இந்தியாவின் வேறெந்த மூலையிலும் அதே இரண்டு ரூபாய், இதனால் உப்புக்கு விதிக்கப்பட்ட வரி கூடுதலாக வசூலானது. 


உப்பு இல்லாமல் உணவே இல்லை எண்ணுமளவு ஆகிபோயிருந்த 
இந்திய குடிமக்கள், உப்பிற்க்கான அதிக விலையையும் கொடுத்து வாங்கத் தயாராகினர், இதைத்தானே வெள்ளையன் வேண்டியது ! மேலும் பல கட்டுப்பாடுகளை ஆங்கிலேயன் உப்பு விஷயத்தில் செய்ய ஆரம்பித்தான், உப்பு காய்ச்சுவதில் கட்டுப்பாடு, காய்ச்சிய உப்பை அரசுக்கு மட்டுமே விற்க வேண்டுமென உப்பு வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு, அப்போதுதானே மக்களின் அடிப்படைத் தேவையை காசாக்கலாம் !  கொள்ளை லாபத்துக்கு லாபம், வரிக்கு வரி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

இதைக் கண்டு வெகுண்ட மகாத்மா காந்தி, ஆங்கிலேயர்களின் இந்தச் சூழ்ச்சியை கடுமையாக எதிர்ப்பது என தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க 'உப்புச் சத்தியாகிரகத்தை' ஆரம்பித்தார் !  தன்னுடைய 'தண்டி' யாத்திரை முடிவில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக, உப்பு காய்ச்சினார்.  தன்னைப் போலவே மற்றவர்களையும் உப்புக் காய்ச்சச் சொல்லி பணித்தார் ! 
(நன்றி- எஸ்.ராமகிருஷ்ணன் -எனது இந்தியா-ஜூனியர் விகடன்) 


இவ்வளவுதான் 'உப்புச் சத்தியாகிரக வரலாறு',  சரி இந்த உப்புக்கும், ஆன்லைனிற்க்கும் என்னய்யா சம்பந்தம் ? ஆன்லைன் சூதாட்டம் என்பது அசிங்கமான ஒரு தங்கலீஸ் வார்த்தை, இதன் நாகரீகமான ஆங்கில வார்த்தை, 'ONLINE TRADING IN COMMODITIES'   !


அதாவது பங்குச் சந்தையைப் போலவே, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பல்வகைப் பொருட்களுக்கான பங்குச் சந்தையே, கமாடிடீஸ் எக்சேஞ், இதில் MCX & NCDEX இரண்டு பிரபலச் சந்தையை இந்திய அரசு சில வருடங்களாக தொடர்ந்து அங்கீகரித்து, சிறப்பாக செயல்பட்டு வருகிறது !  இந்த எக்சேஞ்சில் நீங்கள், அவர்கள் சந்தைப்படுத்தியுள்ள எந்தப் பொருளையும் சந்தை விலைக்கு வாங்கலாம், விற்கலாம், இதில்  என்னய்யா தவறு என்று நீங்கள் சலிப்பது புரிகிறது, இருங்கள் வந்துவிடுகிறேன் !


இதோ, இப்போதுதான் அந்த ஆங்கிலேய வியாபார மூளை இங்கு உபயோகிக்கப்படுகிறது.  அங்கு வாங்கும் பொருட்களின் மதிப்பிற்கு நீங்கள் முழுப்பணத்தையும் உடனடியாகச் செலுத்தத் தேவையில்லை.  உதாரணத்திற்கு ஒரு கிலோ வெள்ளி இன்றைய உத்தேச விலை ரூபாய் அறுபதாயிரம் என வைத்துக் கொள்வோம், நீங்கள் வெறும் மூவாயிரம் ரூபாய் கட்டினால் போதும், உங்கள் கணக்கில் ஒரு கிலோ வெள்ளியை வரவு வைப்பார்கள், குறைந்த பட்சம் இருபதிலிருந்து முப்பது நாட்கள் வரை நீங்கள் அதை சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விற்கவோ, இருப்பாகவோ, பயன்படுத்திக் கொள்ளலாம் !  பொருளை எண்களால் வரவு வைப்பார்கள், அவ்வளவுதான் !
மாற்றாக, கணக்கில் எல்லாம் வரவு வைக்க வேண்டாம், வெள்ளியையே கையில் கொடுங்கள் என்றெல்லாம் நீங்கள் கோர முடியாது, ஏனென்றால் லாபம் கிடைக்கும் போதுதான் நீங்கள் பொருள்  வேண்டும் என அடம் பிடிக்கப் போகிறீர்கள், அந்த லாபத்தை அந்த எக்சேஞ்சிலேயே விற்பதன் மூலமே நீங்கள் பெறமுடியும் என்கிற சித்தாந்தம்தான் அங்கு செல்லும் !


இதிலிருந்து நாம் அறிய வேண்டிய பாடம், எது மக்களிடையே முக்கியத் தேவையோ, அதை மொத்தமாய் வாங்கிக் குவிப்பது, இதன் மூலம் சந்தையில் செயற்கையாக தட்டுபாட்டை ஏற்படுத்துவது,  தட்டுப்பாட்
டை பரப்புரை செய்து அதிகமாக விலையை உயர்த்துவது, எதிர்ப்பு பெரிதாய்க் கிளம்புவதற்கு முன் சரக்குகளை கொள்ளை லாபத்திற்கு விற்றுவிட்டு, இடத்தைக் காலி செய்வது,  சிறிது காலம் கழித்து மீண்டும் வேறு பொருள், அதே நாடகம், பலியாவது பொது மக்கள், எளிமையான வியாபாரிகள், மாறாக, லாபமடைவது ஒத்தூதும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பரப்புரை செய்யும் இடைத் தரகர்கள், பொது மக்கள் பணத்தில் சுயலாபம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ! 


இது எப்படி ? மேலும் ஓர் உதாரணத்திற்கு வெங்காயத்தை எடுத்துக் கொள்வோம்.  வெங்காயம் மொத்த விலையில் தற்போதைய சந்தை விலை கிலோ ரூபாய் பத்து என வைப்போம்.  ஓர் அறுவடைக் காலத்தில் சற்றே பெருமழை பெய்து சில ஹெக்டேர் நிலப் பரப்பில் வெங்காயம் அழிந்து போகிறது.  இதை பெரு வியாபாரிகள், ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து, இடைத் தரகர்கள் மூலம், வெங்காயச் சாகுபடியே அழிந்து விட்டது, இன்னும் சில மாதங்களுக்கு வெங்காயமே இந்தியாவில் இல்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை சந்தையில் பரப்புவார்கள், விலை பத்து இருபதாகும்,  இருபது நாற்பதாகும், நாற்ப்பது அறுபதாகும், ஆனால் இந்த அறுபது வரை விலையை ஏற்றுவது இந்த வெள்ளையன் ஜீனின் எச்சங்களான, மனித நேயமே அற்ற வியாபார முதலைகள்.  இவர்களுக்கு இந்த ஆன்லைன் பங்குச் சந்தை இதற்க்கு கை கொடுக்கிறது, ஏனெனில் நூறு கோடி முதலீட்டை கொட்ட வேண்டிய இடத்தில் இவர்கள் பத்தே கோடியைக் கொட்டுகிறார்கள், பத்து ரூபாய்க்கு வாங்கிய வெங்காயத்தை செயற்கையாய் அறுபது ரூபாய் வரை ஏற்றிவிட்டு, அதை விற்று, ஐந்து மடங்கு லாபத்தை அள்ளிச் சென்று விடுகிறார்கள்.  ஆனால், இதற்க்கு பணத்தைத் தவிர, வேறு ஒரு சின்ன உடல் உழைப்பைக் கூட இவர்கள் தருவதில்லை.


பல மாதங்கள் பாடுபட்டு வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிக்கு கிடைப்பது கிலோவிற்கு பத்து ரூபாய், கிலோ நூறு ரூபாய் போகும் எனக் கூறி செயற்கைத் தட்டுப்பாட்டைக் காட்டி அறுபது வரை ஏற்றிவிட்டு, ஓடிவிடும் மூளைகார முதலைகளை நம்பி அறுபதுக்கு மேல் விலை கொடுத்து வாங்கி, நிஜத்தில் இருப்பு வைக்கும் சில்லறை வியாபாரிகள், பிறகு மழை பாதிக்காத இடங்களில் இருந்து வரும் அறுவடைகளில், விலை குறைந்து, செயற்கைத் தட்டுபாடு மறைந்து, மீண்டும் அதே பத்து ரூபாய்க்கே வந்து சேரும்போது நட்டமடைகிறார்கள்.  உழைத்தும்,  இழப்பவர்கள் யாரார் தெரியுமா ? விவசாயி, உபயோகிப்பாளர்களான நாம், சில்லறை வியாபாரிகள் !


சில வருடங்களாக இப்படித்தான் செயற்கையாக, தங்கம், பெட்ரோல், உணவு எண்ணெய், பருத்தி, உருளைக் கிழங்கு, மஞ்சள், மிளகாய், வெள்ளைப் பூண்டு, புளி,  மிளகு, சீரகம், சர்க்கரை, பருப்பு வகைகள், மக்காச் சோளம், என்று விலையை ஏற்றி கொள்ளையடித்து வருகிறார்கள், இதற்க்கு மாநில, மத்திய விவசாய, நிதி அமைச்சர்கள் வரை ஒத்துழைத்த கதையெல்லாம் உண்டு.  இந்த வெங்காயச் சூழ்ச்சியில் பாஜாக தம் டெல்லியை பல வருடங்களுக்கு முன்னர் இழந்ததை, இன்னும் மீட்ட்டெடுக்கவில்லை. 


சரி, இதனால் அரசுக்கு என்ன லாபம் ?  தினமும் இந்த சந்தையில் பல கோடிகள் புரளுவதால், சேவை வரிகள் பல கோடி கிட்டுகிறது, கணக்கு வழக்குகள் ஏமாற்றி மறைக்க முடியாது என்பதால் வருமான வரியும் கொட்டுகிறது, எனவே கூட்டுக் கொள்ளை நடந்தும், என்கவுண்டர்  நடக்கவில்லை !


கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு இதெல்லாம், வெள்ளையன் அவன் நாட்டில் (லண்டன், நியூயார்க்) செய்யும் ஜெகஜ்ஜாலம்தான் !  இதை நேர்மையாக யாராவது தட்டிக் கேட்டால் இந்த மாபியா அவர்களை ஒழிக்கவும் தவறுவதில்லை ! 
இனி, மார்கெட்டில் திடீரென ஒரு முக்கிய உணவுப் பொருளின், அல்லது அவசிய உலோகத்தின் விலை அதிகரித்திருந்தால், தயவு செய்து இந்த கமாடிடீஸ் சந்தையை ஆராயுங்கள் உண்மை புலப்படும் !!!
                                       


                                  ---   முற்றும் ---