வெள்ளி, 9 மார்ச், 2012

அரவான்


மகாபாரத இதிகாசத்தில் களப் பலியாக இடப்படுபவன் 'அரவான்' இந்தப் படத்திலும் ஒரு களப் பலி இடப்படுகிறது !  மன்னிக்கவும் ஒன்றல்ல இரண்டு !  அது ஏன், எதற்கு ?  அரவான் கதையை 'சு.வெங்கடேசன்' தன்னுடைய 'காவல் கோட்டத்தில்' வரும் பல கதைகளில் ஒன்றாய் எழுதியிருந்தார்.  அதை அழகாக தேர்ந்தெடுத்து, கதையை தன் பாணியில் இன்னும் செழிப்பாக்கி இயக்கியிருக்கிறார் என்னுடைய தற்போதைய டாப் டென் இயக்குனர்களில் ஒருவரான 
திரு. வசந்தபாலன் !


எனக்கு வரலாறு மிக மிகப் பிடிக்கும், ஒரு முறை எல்லா பாடத்திலும் பெயில் ஆகிவிட்டேன், வரலாறில் மட்டும் சரியாய் நூற்றுக்கு முப்பத்தி ஆறு மார்க், இன்னொரு கொடுமை வகுப்பில் நான் மட்டுமே வரலாறில் பாஸ் !


சந்திரமுகியில் வரும் வேட்டையன் கதை, தசாவதாரத்தில் வரும் சோழன் மதவெறி, செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவனில் வரும் சோழ பாண்டிய விரோதம், இதையெல்லாம் உருகி உருகி சலிக்காமல் பார்த்தவன்,  இன்னமும் பார்த்துக் கொண்டே இருப்பவன்.  சந்திரமுகியில் ஜோதிகாவை ஸ்பிலிட் பெர்சனாலிடியாக காட்ட, அவர் படிக்கும் போது, வரும் நாடகக்காட்சியில் வாளேந்தி வீர மங்கையாய் வீட்டில் நடித்துப் பார்ப்பார், நானும் அதுபோல் தென்னங்குச்சியை என்னுடைய அரைஞான் கயிற்றில் செருகிக் கொண்டு, கைகளை காற்றில் குதிரை கடிவாளத்தை பிடிப்பதைப் போல் பிடித்த வாக்கில், போருக்குச் செல்பவன், மிகச் சிறு வயதில் ! 


ஆக, இந்த அளவு ஒரு வரலாற்றுவெறி பிடித்த எனக்கு அரவான் பிடிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் உங்களுக்கு வராது !  எனவே, 
அரவானை அறவே வெறுப்பவர்கள் இங்கிருந்து விலகிவிடவும், நான் என்ன சொன்னாலும் மறுக்கத்தான் போகிறீர்கள், ஆயிரம் கேள்வி வேறு கேட்ப்பீர்கள், வரலாற்றில் சில புனைவுகள், பிழைகள் சகஜம் !


வெரி குட், உங்களுக்கு ஏதோ வசந்தபாலன் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது, அந்த தைரியத்தில்தானே தொடருகிறீர்கள் ?  வாருங்கள் உள்ளே செல்வோம் !


அறுநூறு பேர் வரை பார்க்கும் வசதியுடைய சென்னை அபிராமி செவென் ஸ்டாரில் மொத்தம் என்னுடன் சேர்த்து ஐம்பத்தி இரண்டு பேர் மட்டுமே இருந்தோம் !  இந்த சாட்சி போதாதா, இந்தப் படம் சிறந்த படம்தான் என்பதற்கு ?


சென்னைவாசிகள் ஒருமுறையாவது  அபிராமியில் மசாஜ் செய்துவிடும் சேரில் அமர்ந்து படம் பார்த்து விடுங்கள், மொத்தமே பதினெட்டு சீட்டுகள்தான், டிக்கெட் விலை நூற்றி இருபது, மசாஜ்க்கு தனியாய் எண்பது ஆகமொத்தம் இருநூறு ரூபாய்.  அடடா.....தாய்லாந்து மசாஜ் பாரில் கூட அந்த சுகம் கிடைக்காது, மணிக்கு இருமுறை இதமாய் முதுகை, கால்களை அமுக்கி விடுகிறது, படம் போரடித்தால் அப்படியே படுக்கையாக்கி தூங்கியும் விடலாம், ஆனால் அரவான் என்னை படுக்கவே விடவில்லை ! 


முதலில்  இருந்து முடிவு வரை சொல்லப் போவதில்லை, அதை திரையில் பார்த்து நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள், சுருக்கமாய் சொல்லிவிடுகிறேன் !


ஒரு பாவமும் அறியாத சின்னா (ஆதி)  சதியால், பலி கொடுக்கப் படப் போகிறான்.  தன் சாவுக்கு முன் அந்த சதிகாரன் யாரென துப்பறிகிறான், யாரென பார்த்தால் மாபெரும் அதிர்ச்சி, சரி அந்த சதிகாரனை சபையில் நிறுத்தினால் அவன் பலியாவது நடக்காது, சதிகாரனைத் தூக்கிக் கொண்டு சபை தேடி வருகிறான், ஆனால் விதி செய்கிறது ஒரு சதி, எனவே அதில் தோற்றுவிட,  'வரிப்புலியாய்'  களவுக்காரனாகிறான்,  அதன்மூலம் அவன் தாய் பிறந்த மண்ணை மிதிக்கிறான் !


கர்ணனுக்கு உதவிய துரியோதனன் போல, ஆதிக்கு அடைக்கலம் தருகிறார் பசுபதி (கள்ளர்களின் தளபதி)  சின்னா, வரிப்புலியான கதையை, பசுபதி  எவ்வளவு கேட்டும் ஆதி சொல்லவே மாட்டார், ஆனால், அதே அந்த எழவெடுத்த விதி, அதையும் ஒரு இக்கட்டில் அவர் வாயால் சொல்ல வைத்து விடுகிறது.   


போச்சு, வழக்கம் போல வசந்தபாலன் படத்தில் வரும் சோக முடிவு, இதிலும் வந்து விடுகிறது (ஆல்பம் படம் நான் இதுவரை பார்க்கவில்லை, எனவே அதில் என்ன முடிவோ ?  நாம் வெயிலில் இருந்தே பார்ப்போம்)


    
வாழ்க்கையில் இவ்வளவு கேவலமான சினிமா விமர்சனம் நான் படிச்சதே இல்லை என நீங்கள் துப்பியது என் காதுகளில் விழத்தான் செய்கிறது, இருந்தும் ஒன்லைன் ஸ்டோரி இவ்வளவுதான் !


இனி படத்தில் வரும் சம்பவங்களின் கோர்வையை மட்டும் பார்ப்போம் !
களவை மட்டுமே தொழிலாக கொண்ட ஒரு கிராமமே இருக்கிறது, அவர்களுக்கு என்று பல நல்ல கட்டுப்பாடுகள் உண்டு, கொள்ளைக்கு போகும் முன் அவர்கள் கும்பலில் உள்ள ஒரு பெண்ணை வாக்கு சொல்லும் குறிகாரியாக அனுப்பி, துப்பு சேகரிக்கிறார்கள், ஊர் விட்டு ஊர் செல்ல நடந்தோ, ஓடியோ மட்டுமே போகிறார்கள், குதிரை, மாட்டு வண்டி என்று எதையுமே அவர்கள் உபயோகிப்பதில்லை !  களவுக்கு போகுமிடத்தில் பெண்களிடம் தவறாய் நடப்பதில்லை, ஏழைகளிடம் வழிப்பறி பண்ணமாட்டார்களாம், ஆதாரத்துடன் யாராவது வந்து களவு போன பொருட்களை கேட்டால் கொடுத்து விடுவார்கள் !  பாளையஜமீனே அதற்க்கு ஒத்துழைக்கிறார் !  (கொஞ்சம் அவன் இவன் மாதிரி தெரியுதுல்ல, இதனால்தான் எஸ்.ரா விற்கும், அவர் சிஷ்யன் 
சு. வெ க்கும் ஏதோ கசப்புன்னு நினைக்கிறேன்)


இன்னொரு ஊர் இருக்கிறது, அது அப்படியே தலைகீழ், அங்கிருப்பவர்கள் காவலர்கள், அவர்கள் ஜமீனையோ, ஊரையோ காவல் காப்பவர்கள், ஆனால், அருகே உள்ள கோட்டையூர் கிராமத்துடன் அடிக்கடி மோதுகிறார்கள், சமாதானம் செய்ய வரும் பாளைய ராசா மிகவும் சலித்துக் கொள்கிறார், இதனால் இரு ஊர்க்காரர்களும் கொஞ்சம் மனமிரங்கி இனி தகராறு செய்துக் கொள்வதில்லை என வாக்குக் கொடுக்கின்றனர் !  முதல் பாராவில் சதி என்று சொன்னேனே, அது நிகழ்ந்து விடுகிறது, கோட்டையூரின் குடிமகன்(பரத்), சின்னா(ஆதி) ஊரில் கழுத்தறுபட்டு செத்துக் கிடக்கிறான்.   மோதல் வெடிக்கிறது.


ஆனால் அந்தக் கொலைக்கும், ஆதி வாழும் ஊர்க்கும் எந்த சம்பந்தமுமில்லை, இதை கோட்டையூர்வாசிகள் ஏற்க மறுக்கிறார்கள், நாட்டாமை வருகிறார்(பாளைய ராசா), தீர்ப்பை கொடுக்கிறார், அதாவது இறந்தவனின் வயதையொத்த இளைஞன் ஒருவன், கோட்டையூருக்கு பலியாய் கொடுக்க வேண்டும், குலுக்கலில் கூழாங்கல் விழுந்து, ஆதி குடியை கெடுக்கிறது.  ஆனால் பலிக்கு முன் முப்பது நாள் பலியாளுக்கு பல பூஜைகள் நடத்தப் பட வேண்டும், கிடைக்கும் இந்த முப்பதுநாளில் கொலைகாரன் யார் என கண்டுபிடிப்பதில் 'ஆதி' ஈடுபடுகிறார் !  இருபத்தி ஒன்பதாம் நாளில் கண்டும் பிடித்து விடுகிறார், ஆனால் கையில் சிக்கிய கொலைகாரனை தவற விடுவதோடில்லாமல், நடமாட முடியாதபடி விபத்தில் சிக்கிவிடுகிறார்.


முப்பதாவது நாளில் பலி வேண்டி வரும் கோட்டையூர் வாசிகளுக்கு முன், ஆதி பலிக்கு பயந்து ஊரை விட்டு ஓடிவிட்டான் என்று, ஆதி ஊரின் தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார், மேலும் ஆதிக்கு பதிலாக வேறு ஒரு இளைஞனை பலியாக கொடுக்க ஒப்புக் கொள்கிறார், அதன்படி ஆதியின் சொந்தமான ஒரு இளைஞன் பலி கொடுக்கப் படுகிறான், 'ஆதி' பலிக்கு பயந்தே, வேண்டுமென்றே தப்பி ஓடி விட்டதாய் அவனுடைய ஊர் மக்கள் நம்புகிறார்கள், மேலும் ஆதி சிக்கினால், ஆதிக்கு பதிலாய் இறந்தவனுக்கு 'பலி' கொடுப்பதாய் சபதமெடுக்கிறார்கள் !


ஆனால், யாருக்கும் தெரியாமல் ஊர் வந்து தம் குடும்பத்தினரை சந்திக்கும் ஆதி, பத்து வருடம் கழிந்த பின்னர் இந்த தாய்நாடு திரும்பினால், பழைய தண்டனை இல்லை என்ற ஊர் வழக்கை, ஆதியின் மாமனார், ஆதியின் கால்களில் விழுந்து விளக்கி, அவரை யார் கண்ணிலும் படாமல் ஓடி, பத்து வருடம் கழித்து வருமாறு கெஞ்சுகிறார், ஆதியும் பல மைல் கடந்து, திருடனாய் ஒன்பது வருடங்களை கழித்து விடுகிறார் ! 


செஞ்சோற்றுக் கடனுக்காக ஒரு ஜல்லிக்கட்டில், பசுபதியைக் காப்பாற்ற, தான் யார் என்பதை ஆதி கூட்டத்தினர் இடையே அறிவித்து விடுகிறார், இதனால் சிக்கி பலியாகிறார் !


சரி இனி மிக ஈர்த்த கதாபாத்திரங்களைப் பார்ப்போம்.


வெட்டியோ, உதைத்தோதான் ஒருவனை பழி வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, விதைத்தும் பழி வாங்கலாம் என்று கள்ளக் காதலில் கர்ப்பமாகி, தன்னை, தன் குடும்பத்தை சீரழித்த ராசாவுக்கு எதிராய்,  வீர வசனம் பேசும் சின்ன ராணி !
இன்னும் ஒரு திங்களுக்குள் இறக்கப் போகிறான் எனத் தெரிந்தும், ஆதியையே மணப்பேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் தன்ஷிகா !  "ஒரு மாதத்தில் பலியாகப் போகிறவனை தெரிந்தே மணந்து விதவையாகப் போகிறாயா?" எனக் கோபத்துடன் கேட்கும் தந்தையைப் பார்த்து, "சரி எனக்கு இறக்கப் போகாதவனாய்ப் பார்த்து மணமுடியுங்கள்" என்று வாதிட்டுவிட்டு, "என்ன அவன் சாகப் போகிற நாள் தெரிஞ்சுடிச்சு, உங்களுக்கு அது தெரியலன்ற கர்வம், அவ்வளவுதான ?"  அடடா...வெங்கடேசன் ஐ லவ் யு, முதல் வேலையா 'காவல் கோட்டம்' வாங்கிடனும் !
ஒரு அரைஞான் கொடியை கொடுத்து, இதை அணிந்தவன் யார் எனக் கேட்டவுடன், தன் ஞானத்தில் ஆதியின் இடுப்பைத் தடவி, மனக்கண்ணால் பார்த்து விடைகூறும் அந்தப் வேசி  !தன் கணவன் சாவுக்கு இவன்தானே காரணம் என நம்பி, ஆதி சிக்கியவுடன் குரோதக் கண்ணுடனே பார்த்தவாறு இருக்கும் அந்த முதல் பலியானவரின் மனைவி,  அடடா அந்த கோபக் கருவிழிகள் !
ஆதி, மன்னிப்பு கேட்டும் அதை சிறிதும் ஏற்காமல், கருணையை மறந்த அந்தப் பெண் பாத்திரம் !


பெண்பித்தனாய், காமமிருகமாய்  அலைந்து,  அநியாயமாய் உயிரை விட்ட பரத்தை ஏதுமறியா அப்பாவி என்றே நம்பும், பரத்தின் தாயும், தங்கையும் !  


பலியாளாய் ஆனபின்னரும், தன் சொந்தம், நண்பன் ஆதி, கோழையல்ல, அவன் ஓடிப் போகவில்லை, அவனை இகழாதீர்கள் எனக் கலங்கும், கலங்கவைக்கும் வீரா !


எல்லாம் சரி, கதாநாயகர்கள் ஆதி, பசுபதி நடிப்பு யதார்த்தம்.  சில இடங்களில் மிகை, சில இடங்களில் குறைவு, ஆனாலும் ஏமாற்றமெல்லாம் இல்லை.


குறை எதாவது சொல்லித்தான் ஆகவேண்டுமென்றால் 'கார்த்திக்' இசையைக் கூறலாம்.  இந்த வலுமிக்க, செண்டிமெண்ட் கதைக்கு, இளையராஜா, வித்யாசாகர் உதவி நிச்சயம் தேவை.  குறைந்தபட்சம், வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ்குமாருடன் சண்டை போட்டிருக்கவே கூடாது !


கலை, உடை, ஒளிப்பதிவு, லொகேசன், எல்லாமே தேவைகேற்ப சரியாகவே இருந்தது.  அந்த நீர்வீழ்ச்சி காட்சி தேவையே இல்லை. ஆனால் அந்த நிலாப் பாட்டு ஒரு கனவு, ஆகவே அங்கு அந்த கிராபிக்ஸ் காட்சி தவறே இல்லை.  அப்புறம் கடைசியில் ஒரு வாசகம் வருமே, 'இது மரண தண்டனைக்கு எதிரான ஒரு படம்' என்று, அது வெட்டி பந்தா.  


வசந்த பாலனின் இந்த தைரியத்தை பாராட்ட சினிமாக்காரர்கள், பத்திரிக்கையாளர்கள், பரிசு தேர்வுக் கமிட்டியினர், பொதுமக்கள் என  எல்லோரும் முன் வர வேண்டும்.  


வரலாற்றை வழக்கம்போல கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு, பொறுமையுடன் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கத்தான் செய்யும், மேலும் வீட்டில் நீங்கள் இந்தப் படம் பார்த்தால்,   உங்களால் ஆழ்ந்து ரசிக்கவே முடியாது, எனவே என்னைப் போலவே, லீவு எடுத்துக் கொண்டாவது இந்தப் படத்தைப் பார்த்து விடுங்கள், உங்களுக்கு அனுமதிக்கப் பட்ட லீவில்தான் படம் பார்ப்பேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடித்தால், பிறகு 'ஆரண்ய காண்டம்' கதிதான் 'அரவானுக்கும்' !  ஏனென்றால் ஆங்கிலம், அறிவியல், கணக்கு பிடித்த அளவுக்கு, தமிழனுக்கு தமிழும், வரலாறும் பிடிக்காது, அதனால் நீண்ட நாள் ஓடாது !


கடைசியில் எது நடக்கவே கூடாது என நினைத்தேனோ அது ஒவ்வொன்றாய் நடந்து கொண்டே வரும் அவலத்தைப் பாருங்கள், 'பிளாக்' ஆரம்பிக்கவே கூடாது என்று பிடிவாதமாய் இருந்தேன், சரி அப்படியே ஆரம்பித்தாலும் சினிமா விமர்சனம் எழுதவே கூடாது என்று பக்கத்து வீட்டு ஆன்ட்டி தலையில் அடித்து சத்தியமே செய்திருந்தேன்......ம்ம்ஹீம்ம்.....என்னால் என் சத்தியத்தை காப்பாற்ற முடியவேயில்லை !   

  


                          ---  அவ்வளவுதாம்பா --- 


2 கருத்துகள்: