செவ்வாய், 3 ஜூலை, 2012

இவன் அவன் (சிறுகதை)

நாங்க இந்த அபார்ட்மென்ட்ல குடியேறி சில மாதங்கள்தான் ஆகின்றன !  எங்களுக்கு கல்யாணமும் மூன்று வருடங்களுக்கு முன்புதான் நடந்தது, காதல் கல்யாணம் !   கருப்பாயிருந்தாலும்  களையாகவும், சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரத்தில் பால் வடியும் முகம் இவனுக்கு, இலகுவாக என்னைக் கவர்ந்து விட்டான் !  நாங்கள் நாயுடு, இவன் கண்டிப்பா எங்க ஜாதி இல்ல, அம்மா கடுமையாக எதிர்த்தார், ஆச்சர்யமாக அப்பாதான் அம்மாவை ஆறுதல் படுத்தி, எங்கள் மணம் நடைபெற உதவி புரிந்தார் !  அவுங்க வீட்டில சுத்தம், இதுவரை ஒரு காக்கா கூடத்  தேடி வந்ததே இல்ல.  ஒரே வருடத்தில் என்னை அம்மாவாக்கி விட்டான், அழகான பெண் குழந்தை !

அப்புறமென்ன வழக்கம்போல அதுதான், இவன் இப்பல்லாம், எரிஞ்சு எரிஞ்சு விழுறான் !  அழுகிற குழந்தைய 'கொஞ்சம் தூக்கி தட்டுங்களேன்னு' சொன்னாக்கூட கொஞ்சமும் கருணையில்லாம 'அந்த சனியன நீயே கொஞ்சு' என்பான் ! பால் வடிஞ்ச மூஞ்சா அது ? ஆசிட்டாத்தான் வழியுது இப்ப !
கல்யாணமான புதுசுல நான் வேலைக்கு போயிட்டுரந்தப்போ, இவ்வளவு ஏமாற்றமெல்லாம் தெரியவேயில்லை !  கடுமையான அலுவலக வேலைகள் எனக்கு நல்ல வடிகாலாய்த்தான் இருந்தது, இதோ மடியில கெடக்குறாளே  இவளாலத்தான் மொதல்ல வேலைக்கு வேட்டு வந்தது !
இவளுக்கு ஒரு  வயசு ஆனதுக்கப்புறமா, ஒரு நாள் இவன் நல்ல மூடுல இருக்கிறப்போ, மேலேறியிருந்த நைட்டியை கீழிறக்கியவாறே,  'திருப்பி நான் வேணா வேலைக்கு போவட்டுமாப்பா ?' என்றதற்கு, 'பொத்திக்கிட்டு எங்களுக்கு பொங்கிப் போட்டா போதும்' என்று பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை ஓங்கி சாத்தினான் ! நா ஒரு லூசு, மொதல்லயே கேட்டிருக்கணும்.
'ஏன் எக்ஸ் ஓனருக்கு உன் ஞாபகம் வந்துடுச்சாமா ?' என்று  உள்ளிருந்தபடியே கேட்டான் !  நான் பதில் சொல்லாமல் திரும்பி படுத்தேன் குழந்தையை அணைத்தவாறு !  வெளியே வந்தவன் என் மொபைலை நோண்டிப் பார்த்தான் ! 
இப்பல்லாம் கரண்ட்டு அடிக்கடி கட்டாகுதா, காத்து வாங்க வெளிய வர்றப்பதான், அப்பார்ட்மென்ட்ல என்ன போல மத்தவங்களும் மூடுன கதவத் தொறந்து வெளிய வருவாங்க, அப்படித்தான் நிறைய சிநேகம் கெடச்சுது, பரவால்ல சீனியர் அக்காங்கதான்,  ஆனா ரொம்ப ஜாலியா பேசுறாங்க, என் பொண்ண செல்லம் கொஞ்சுறாங்க, அப்ப மட்டும் மனசு லேசான மாதிரி ஒரு ஃபீலிங், அடிக்கடி கட்டாவாதா கரண்ட்டு ? ன்னுல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்ன்னா பாருங்களேன் !
மொதல்ல காலைல எட்டு டு பத்து கட்டாச்சு, அப்போ இவர் இருப்பாரா, ஒம்போதரைக்கு மேலத்தான் கிளம்புவாரு, அப்பல்லாம் சொற்பமாத்தான் பேச முடியும், ஆனா இந்த ஒருமாசமா ரெண்டு டு நாலு கட்டாச்சு பாருங்க, அடடா சொர்க்கம் !

மத்தியானம் சாப்பிட்டு, குழந்தைய தாலாட்டி தூங்கச் செஞ்சுட்டு அரட்டைய ஆரம்பிப்போம் !  ருக்கக்காதான் செம டைம் பாஸ், செக்ஸியா  பேசுவாங்க, அவங்க கொஞ்சம் அழகாத்தான் இருப்பாங்க, ஆளப் பார்த்தா நாப்பதுன்னு யாரும் நம்பவே முடியாது, லோ-ஹிப் சேலைல, இடுப்பு மடிப்ப மறைக்கவே மாட்டாங்க, ஜாக்கெட் பின்னாடி முக்காவாசி முதுகு தெரியும் !
அண்ணாச்சி வழிஞ்ச கத, ஹவுஸ்ஓனர் ஜொள்ளு, சின்ன மாமனார் பண்ண லொள்ளுன்னு வாயத் தொறந்தாலே கவுச்சிதான் ! ஆனாலும் அவுங்கதான் சூப்பர்ஸ்டார், இவங்க சொல்ற கதைய கேட்டு தேவசேனா ஆன்டியும், விஜயா அக்காவும்  விழுந்து விழுந்து சிரிப்பாங்க !
அப்பத்தான், சரியா என் லைப்புக்குள்ள அவன் என்ட்டர் ஆனான் உயரமாய், வசீகரமாய் இருந்தான் !  வயது கண்டிப்பாய் முப்பதைத் தாண்டியிருப்பான் ! ரெண்டாவது மாடியில் அவனுடைய ஃபிளாட், கரண்ட் இல்லாததால் நாங்கள் படிக்கட்டில் அமர்ந்தபடிதான் அரட்டை அடிப்போமா, அவனுக்காகவே தினமும் வழிவிட வேண்டி வந்தது !  யாராவது இருவர் எழுந்து, ஒதுங்கி நிற்ப்போம், எங்களை உரசாமல் செல்கிறேன் என்று பம்மி, ஓரக்கண்ணால் பார்த்தவாறு தாவி மேலேறி மறைவான், அதே போல் ஒருமணி நேரம் கழித்து இறங்கிப் போவான் !  சாப்பிட்டு விட்டு போகிறான் போலும் ! 
அவன் மனைவி பயங்கர அல்டாப்பு அலமேலு, ஒரு தடவை அறிமுகம் செஞ்சுக்கலாமேன்னு பேசினேன், 'நாங்கெல்லாம் அப்படி,இப்படி, எங்களுக்கு ரெண்டு சொந்த வீடிருக்கு, அத வாடகைக்கு விட்டுட்டு இங்க அல்லாடுறோம்'  என்னால சகிக்க முடியல !  அதுவுமில்லாம அடிக்கடி அம்மா வீடு, கோயில் டூருன்னு, புருஷன விட்டுட்டு கெளம்பி போகுற மகாராணி !
போன வாரம் இதே நேரம், கீழே மேல்நோக்கி யாரோ வருவது போல காலடி ஓசை, நாங்க எங்க பேச்சு வால்யூமைக் குறைத்தோம் !  அவன்தான் வருகிறான் என நான் யூகித்து விட்டேன், தலையை ஒழுங்கு செய்தேன், மாராப்பைச் சரி செய்தேன், அவனை நன்கு வசதியாக பார்க்கும் ஒரு கோணத்தில் அமர்ந்தேன் !
அவனேதான்......நீல ஜீன்ஸ், வெள்ளை முழுக்கை சட்டையை இன் செய்து, சட்டைக் கையை கொஞ்சம் சுருட்டி விட்டிருந்தான். அடடா எவ்வளவு பாந்தம் ?  என்று வியந்து நான் பார்த்துக் கொண்டிருந்தபோதே, "பூன, பால் குடிக்காதுன்னு சட்டிய, கிட்டிய தொறந்து வச்சிராதீங்கடி"  என்று கண்ணால், அவனை நோக்கி  ஜாடை காட்டியவாறு ருக்கக்கா ஹஸ்கி வாய்சில் சொன்னார். 
அவன அவ்வளவா யாரும் வம்பிழுத்தது கிடையாதே, ருக்கக்கா என்ன சொல்ல வர்றாங்கன்னு குழம்பினேன்.  என் சந்தேகத்தை சுஜாதாக்கா சரியாய் புரித்துக் கொண்டைதைப் போல் அந்தக் கேள்வியைக் கேட்டார்
'ஏங்க்கா பூன என்ன பண்ணுச்சு ?'
'பூனையோட பொண்டாட்டி கோச்சுட்டு அம்மா வீடு போயி பத்து நாளாச்சு, இன்னும் திரும்பி வரல, அன்னிக்கு பால்கனில  துணி காயப் போட்டிட்டு இருக்கேன், மேலருந்து யாரோ பாக்குறாப்பல  இருக்கேன்னு பாத்தா பூன உர்ர்ர் ன்னு என்னையே பாக்குது, சனியன் மூஞ்சக் கூட பாக்காம இங்கயே உத்துப் பாக்குதுன்னு' தன் நெஞ்சைத் தொட்டார் ருக்கக்கா  !
'அக்கா இந்தக் கத தான வேணான்றது......ரீல் விட வேண்டியதுதான் ஆனா இது கொஞ்சம் ஜாஸ்தி' என்றார் விஜயாக்கா, எனக்கோ அவனைப் பற்றி பேசுகிறார்கள் என்றதுமே ஆர்வம் அதிகமாகி விட்டது !  முதலில் ருக்கக்கா இப்படி சொன்னவுடன் அவனை பொறுக்கி என்று மனதில் திட்டி விட்டேன் !  இப்போ விஜயாக்கா இடை புகுந்தவுடன் கொஞ்சம் மகிழ்ச்சியானது !
"ஆமாடி போயி காட்டிப்பாரு கண்ணை முடிப்பான்" ருக்கக்கா.
"காட்டுனா பாக்காதவன் ஆம்பளயாக்கா" சுஜாதா அக்கா.
விவாதம் ருக்கக்காவின் மீதுதான் தவறு என்பது போல திரும்பியவுடன் ருக்கக்காவின் முகம் சிவந்து, கொஞ்சம் சுருங்கியும் போனது, 'ஐயோ, ஒரு முக்கியமான வேல இருக்கு, மறந்துட்டேன்' என்றவாறே அவசரமாக இடத்தைக் காலி செய்தார் ருக்கக்கா !
அவர் கோபித்துக் கொண்டு போகிறார் என நான் சொன்னேன்,
"விடுடி....யோக்கியம் இந்தம்மா, என்னிக்குமே ஒழுங்கா மூடுனதில்ல,பத்தினி வேஷம் போடுறா" என்றார் விஜயாக்கா !  ருக்கக்காவின் குன்றாத இளமை மீதான கோபத்தை சமயம் பார்த்து, இந்த இரண்டு அக்காக்களும் காட்டிவிட்டதாக நான் உணர்ந்தேன் !  இந்தக் குழப்பத்தால் அன்றைய மீட்டிங் முன்னதாகவே நிறைவு பெற்றது !
கரண்ட் வராத வீட்டிற்குள் எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை, மேலும் அவன் கீழிறங்கி வரும் நேரமும் நெருங்கி விட்டதை உணர்ந்தேன்.
 'ச்சீ என்ன இது ?  ஏன் இது மாதிரி ஓர் எண்ணம் ? அவனும் மணமானவன் நானும் மணமானவள் '.....என்று மனதில் பேசிக் கொண்டிருக்கும்  போதே காலடிச் சத்தம் கேட்டது !  மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்து நின்றேன் !  ஆனால், யாரோ ஒரு கூரியர் ஆசாமி இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.  எனக்கு எரிச்சலானது.  'இதென்ன புதுக் குழப்பம் ?  அவன் எப்படி என்னுள் நுழைந்தான் ? ஏன் இதயம் படபடவென்று துடிக்கிறது ?'  என்றபடி, மறுபடியும் வீட்டிற்குள் நுழைய எத்தனித்த சமயம், அவனேதான் இறங்கி வந்துக் கொண்டிருந்தான் !  இப்போ எக்ஸ்ட்ராவாய்  கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான் ! இன்னும் அவனை அது கம்பீரமாய்க் காட்டியது !  அவன் என்னைப் பார்த்தது போல் தெரிந்தது,

ஆனால் அவன் கறுப்புக் கண்ணாடிக்குள் கண்கள் தெரியாதலால், உறுதியாகச் சொல்ல முடியவில்லை !  குபுக்கென்று அடிவயிற்றில் ஓர் உற்சாகம் கொப்பளித்து பொங்கியது.  புன்னகை அரும்பிய முகத்துடன் வீட்டிற்குள்நுழைந்து, பீரோ கண்ணாடி முன் போய் நின்றேன்.  கல்லூரி சென்றுக் கொண்டிருந்தபோதும், காதல் மயக்கத்தின் ஆரம்பக் காலங்களிலும், சதா கண்ணாடி முன் நின்றபடி தலையைக் கோதிக்கொண்டும், வித வித வண்ண லிப்ஸ்டிக்  மீதிருந்த தீராத மோகமும் நினைவிற்கு வந்தது.  வயிற்றைத் தடவி, மடிப்பை பற்றி இழுத்துப் பார்த்தேன், லேசாய் தொப்பை, மற்றபடி சிக்கென்றுதான் இருந்தேன், மேடேறிய நெற்றி, கூந்தலை அவிழ்த்து வாரி எடுத்து மார்பில் தவழ விட்டேன்,  முன்பெல்லாம் அடிவயிறுவரை தொங்கி வழியும், இப்போ கொஞ்சம் மேல இருக்கு, அலையலையான இந்தக் கூந்தலில்தான் மயங்கியதாக இவன் அடிக்கடி சொல்வதுண்டு,    ம்ம்ம்ம்.....இப்பல்லாம் ஒன்னும் சொல்றதுமில்ல, முகம் கொடுத்து பேசுறதுமில்ல, வந்தவுன்ன கம்ப்யூட்டர கையில எடுத்தான்னா, இவனுக்கு உலகமே அது மட்டும்தான்னு ஆயிடுவான் !
ஒருநாள் மொட்டைமாடியில் துணி காயப்போட, கொடியைத் தேடினேன் அது அறுந்து போயிருந்தது, ஸ்டூல் இருந்தால் மட்டுமே மேலேறி அறுந்த கொடியைக் கட்ட முடியும், இவனைக் கூப்பிடலாம், ஆனா, அதுக்கு நானே முயற்சி பண்ணுறதுதான் பெட்டர் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அதே பரிச்சயமான காலடி ஓசை !  அவனேதான், கையில் ஒரு பிளாஸ்டிக் வாளி வழிய வழிய துணிகள், காயப்போட மேலேறி வந்துக் கொண்டிருந்தான் ! ஷார்ட்ஸ்ம் பனியனும் அணிந்திருந்தான், விரிந்த நெஞ்சும், புடைத்த புஜமுமாய்க் காலைப் பொழுதை காமமூட்டிவிட்டான் !
என்னைக் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அவனுடைய கொடியில் துணிகள் உலர்த்திக் கொண்டிருந்தான் !  இது ஈர விறகு போல என்று மனதில் சொல்லிக் கொண்டே,  'எக்ஸ்கியுஸ்மி' என்று நானே போய் அவனிடம் முதன்முறையாக பேசினேன் !
'சொல்லுங்க'
எங்க  கொடி அறுந்துருச்சுங்க, உங்ககிட்ட ஸ்டூல் இருக்கா ?
ஸ்டூல் இல்லையே, எங்க கொடி ? காமிங்க
நான் எங்கள் கொடியான அந்த நைலான் வயரைச் சுட்டிக் காட்டியதும், அதைக் கையில் அள்ளியவன் ஒருமுறை மேலே சுற்றுமுற்றும் பார்த்தான், பிறகு ஏதோ இரையைப் பிடிக்கப் பாயும் புலியைப் போல பாய்ந்து எகிறி ஒரு திண்டைப் பிடித்து, கைகளால் உடலை வாகாய் எக்கி, டேங் மேலேயே ஏறிவிட்டான் !
'அந்தக் கொடிய கொஞ்சம் தூக்கி எங்கிட்ட வீசும்மா' என்றான் 
நான்  கொடியின் ஒரு நுனியை எடுத்து அவனை நோக்கி வீச அதை லாவகமாக பற்றி,  உச்சியில்  இருந்த  அந்தக்  கொக்கியில்  முடிச்சிட்டான் !  அப்படியே தொம்மென்று அங்கிருந்தே குதித்தான் !
'தேங்க்ஸ்ண்ணா' என்று சொல்லி, பிறகு அந்த அண்ணாவுக்காக நாக்கைக் கடித்தேன் !
'வெல்கம்' என்று சொல்லிவிட்டு தபதபவென கீழிறங்கிப் போனான் !
மஞ்சளாய் வெயில் காய்ந்துக் கொண்டிருக்கிறது !  மரம்மரமாய்த் தாவி, மலை மேல் பாய்கிறான் அவன், மலை உச்சியில் கூண்டில் இருந்த பூட்டைக் கைகளால் உடைத்து என்னை மீட்கிறான், அப்போதுதான் பார்க்கிறேன் அவன் இடக்கையில் என் பெண், மூவரும் ஒரு விழுதின் உதவியால் பறக்கிறோம், பறந்துக் கொண்டிருக்கும்போதே அவன் என்னை காமத்தோடு பார்க்கிறான், நான் நன்றியுடன் அவனை நோக்குகிறேன், மெல்ல குனிந்து என் செவ்விதழைப் பற்....
அப்போதுதான் அந்தப் பயங்கரம், அவன் கையிலிருந்து என் குழந்தை நழுவுகிறது, வீலென்று ஒரு சத்தம்......'தேஜா' எனக் கத்திக் கொண்டே  திடுக்கிட்டு எழுகிறேன், குழந்தை எழுந்து உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்,
'ப்ச்ச்....ஏய்...ச்சி...வெளிய தூக்கிட்டு போடி' என்றான் இவன் புரண்டபடி !
வெள்ளிக்கிழமை, இன்று விளக்கு துலக்கி, பூஜை செய்யவேண்டும், தலைக்கு சீயக்காய் போட்டு குளித்தேன், மிருதுவான சேலையாய் தேர்ந்தெடுத்து உடுத்தினேன், தலையை கவிழ்த்து கூந்தலை உலர்த்தி கொண்டிருந்த வேளையில், பின்பக்கமாய் வந்து அப்படியே என் இடை பற்றி தூக்கி, இவன் மார்போடு என்னை அழுத்தினான், "லாவ்....ஏய் இந்த சேலைல கும்முன்னு இருக்கடி' என்றான் காதைக் கடித்தபடி !
"பாப்பா முழிச்சுக்கப் போறாங்க, என்ன ஐயாவுக்கு ரொம்பநாள் கழிச்சு பாசம் பொங்குது ?"  ஆனால், அதற்குள் தேஜா எழுந்து, "ம்மா" என்றாள் ! 
"இன்னிக்கு மத்தியானம் லீவுடி, சாயங்காலம் கோயிலுக்கு போயிட்டு பீச் போறோம்" என்று சொல்லிவிட்டு குளியறைக்குள் புகுந்தான் !  எனக்கு கண்ணில் நீர் திரையிட்டது, காதலித்தவனை எப்படி  வெறுக்க முற்பட்டேன் என்று என் மேல் கோபம் வந்தது !  மதியவேளைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்,
"லாவண்யா" என்று ருக்கக்கா குரல் வெளியே கேட்டது.
"வாங்கக்கா"
"விஜயா, சுஜாதா, தேவசேனா எல்லாம் சிறுவாபுரி கோயில் போயிருக்காங்க உன்னக் கூப்பிடலையா ?"
"இவர் எங்கக்கா அனுப்புவாரு, அதும் குழந்தைய தூக்கிட்டு அவ்வளவு தூரம் எப்படி போறதுன்னுட்டுதான், நேத்தே முடியாதுன்னு விஜயாக்கா கிட்ட சொல்லிட்டேன், ஆமா நீங்களும் வரீங்கன்னு சொன்னாங்களே, நீங்க போகலையா"
"ப்ச்ச்...ஆமாடி போலாம்னுதான் நினைச்சேன், நேத்து நைட்டு........" என்று கட்டைவிரலை தலைக்கு நேராய் உயர்த்தி இறக்கிக் காட்டினார் ருக்கக்கா !
 அப்போது அந்தப் பரிச்சயமான காலடிச்சத்தம் !
அவன்தான் கீழிறங்கி வந்துக் கொண்டிருந்தான், அவனை பார்ப்பதை எப்படியாகிலும் இன்று தவிர்க்க வேண்டுமென அந்த விபரீதக்கனவிற்கு பின்னரே முடிவு செய்து விட்டேன், இருத்தும் அனிச்சையாய் கண்கள் அவனை நோக்கிப் போனது.  என் கண்களை ஊடுருவிப் பார்த்தவன், லேசாய் அவன் இதழ்களில் கசிந்த புன்னகையை என் மேல் வீசிச் சென்றான் !  எனக்கு சுரீரென்று கோபம் தலைக்கேறியது !
"நீங்க சொன்னது சரிதான்க்கா.....இதுகிட்ட ஒரு ஹெல்ப்புக்கு ஸ்டூல் இருக்கான்னு கேட்டா, என்னமா சீன போட்டு, பாடி பவர காமிச்சு.....நம்மள கவுத்த ட்ரை பண்ணுராராமா" என்றேன் ருக்கக்காவிடம் !
"அய்ய எனக்கு தெரியாதா இவனுங்க பவுசு, வயசுல மூத்த என்கிட்டயே வழியுதுன்னா, சின்ன பொண்ணு உன்ன விட்ருவானா ? உனக்கு எதும்னா என்னயக் கேளுடி, இத நான் அன்னிக்குச் சொன்னா......என்னமா சிலுத்துக்கிட்டாளுங்க அவளுங்க……அவனப் பாத்து ஏங்குற கேசு அவ , என்னய ரீல் விடுறன்னுட்டா நாரிப்பாட"  ருக்கக்கா கண்ணில்,  தான் சொன்ன பொய்யை மெய்ப்பிக்க ஒரு சாட்சி கிட்டிய திருப்தி
தென்பட்டது  !

                                                          ----    முற்றும்    ----இவன் அவன் (சிறுகதை)
எழுதியது - ராஜா ராஜேந்திரன் சென்னை.


 

 

 

 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக