திங்கள், 16 ஜூலை, 2012

மன்னிக்கவும் இது ஒரு சுயதம்பட்டம் :(

அம்மா சென்டிமென்ட்டை விட உலகில் வேறேதும் பெரிய பாசப்பிணைப்பு இருந்துவிட முடியுமா என்ன ?
என் தாய் என்னை மிகச் செல்லமாக, எல்லாச் சுதந்திரமும் கொடுத்து, அந்தச் செய்கையின் விளைவால் நிகழும் சங்கடங்களைச் சகித்து, தியாகத்தை உணர்த்தியவள்.

அப்பேற்பட்ட தாயே, மாமியார் எனும் ஒரு பதவி உயர்வு கிடைத்தவுடன், அதிகார போதையில், சற்றேத் தடுமாறி, என் மனைவியைக் கட்டுப்படுத்துவதாய் எண்ணி, என் உரிமையில் தலையிட ஆரம்பித்தாள்.  (வாரம் வாரம் அதென்ன சினிமா, நீதான் அவனுக்கு எடுத்துச் சொல்லணும், ஒரு பொண்ணு தலையில இத்தனை பூவ வச்சிட்டு, நக நட்ட போட்டுட்டு நைட்டு பன்னெண்டு மணிக்கு வந்தா என்ன அர்த்தம்,  வெளில சாப்டுட்டு வரணும்னு காலைலயே முடிவு பண்ணிருப்பீங்க,  அதச் சொல்லித் தொலச்சிருக்கலாம்ல்ல, ஏன் ஞாயித்துக் கிழம இப்படித் தூங்குறான், முன்னெல்லாம் இப்படியில்லையே....?

நான் இன்றும் என் தாயை உயிராய் நேசிக்கிறேன், அம்மா பெயர் பொறித்த பலகையைத் தாங்கிய வீட்டைக் கட்டி, அங்கு அம்மாவின் கையால் பால் காய்ச்சி, வசிக்கவைத்து மகிழ்ந்தேன்.  ஆனால், என் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்காக, தாயைப் பிரிந்து வாடகை வீட்டில் வசிக்கிறேன் மனைவியுடன்.  பார்ப்பதற்கு மனைவி சொல் கேட்டு தாயைப் பிரிந்தேன் என்பது போல் காட்சிபிழை ஆனது.

கஷ்டமான ஜீவனத்திலுமே, என்னைச் சிறிதும் வாட விடாது காப்பாற்றிய ஓர் உயிரையே என் சுதந்திரத்திற்காக நான் பிரிய முடிகிறது.  'அவர்' நிச்சயம் என் சிந்தனையைக் கிளறியவர்தான், கொஞ்சம் மொண்ணையாய் இருந்த என் மூளையை சீர் படுத்தியவர்தான், பாசத்தையும், நேசத்தையும் காட்டி, கொஞ்சம் வெளிச்சப்படுத்தியவர்தான், அதற்காக என் கூட்டில் மட்டும் இரு என்றால், 'நான் என்ன பறவையா ?'

நான் காற்று (அதான் சுய தம்பட்டம் ன்னு தலைப்பிலேயே சொல்லிட்டேன்ல்ல)  தென்னகத்தைச் சேர்ந்தவன், எனவே தென்றல் காற்று, எங்கும் சென்று வர எனக்கு உரிமம் தாருங்கள், வேண்டாமென ஜன்னலை பூட்டினால், என்னை வரவேற்ப்பவர்களுக்கு மட்டும் பயன்படுகிறேன்.  இங்குதான் வீசவேண்டுமேன்றால்..........மன்னிக்கவும், விடைபெறுகிறேன் !
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக