புதன், 4 ஜூலை, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தப் பிரம்மனைக் கண்டு :(இந்தச் செய்தி கண்ணீரை வரவழைப்பதோடு மட்டுமல்லாமல், கொஞ்சம் சிந்திக்கவும் சொல்கிறது.  மத்திய மாநில அரசுகள் இதைக் கருணையோடு அணுக வேண்டும்.  ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம், சட்டத்திற்குட்பட்டு அரசால் மட்டுமே முடியும், இது குற்றவாளிகளுக்கு மட்டுமே என்கிறது சட்டம், ஆனால் வயதுக்கு வந்த இந்தப்பெண் படும் பாட்டைப் படித்தபோது, சட்டத்தைக் கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம் !

தினமணியில் நேற்று(03/07/2012) வெளியான செய்தி இது.  மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த அழகர், ஜெயாவுக்கு 1999 ல் மனவளமும், உடல்வளமும்(மாற்றுத் திறனாளி) அறவே குறைந்த பெண்குழந்தை பிறக்கிறது.  தாய்க்குத் தன்னுடைய குழந்தை பொன் தானே ?  எனவே கண்ணும் கருத்துமாய் வளர்த்தார் அந்தத் தாய்.  அந்தக் குழந்தை பகலெல்லாம் தூங்கும், இரவானாலோ பெருங்குரலுடன் அழுவும், பெற்றோரில் யாராவது ஒருவன் கொட்ட கொட்ட இரவு முழித்திருந்து அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மல ஜலமல்லாம் இருக்கும்  இடத்திலேயேதான் !  கொடுமையைப் பாருங்கள், இப்போது இவள் பருவமும் அடைந்துவிட்டாள்.  இதுமட்டும் சரியான வயதில் நிகழ்ந்துவிட்டது, என்ன எழவு லாஜிக்கோ ?

இப்போது ஓர் ஆணால் (தந்தையால்) கூட இவளுக்குத் துணையாய் இருக்க முடியாத சூழ்நிலை.  ஒரு பெண்ணால் மட்டுமே இந்தக் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியும்.  எந்த சிகிச்சையும்தான் பயன்தரவில்லை, ஏதாவதொரு தொண்டு நிறுவனமாவது இந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ளுமா என்று அலைந்தால், நடக்கும் நிலையில் உள்ள மாற்றுதிறனாளியை ஏற்றுக் கொள்வோம், ஆனால் படுத்த படுக்கையாய் இருக்கும் இவளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கை விரித்து விட்டனர்.
     
பயங்கரமாக கத்தியபடி இவள் தினம் இரவு அழுவதால் அக்கம்பக்கத்தினருடன் தினமும் சண்டை,  இதனால் தம்பதியிரடையே பிணக்கு.  இதற்காகவே ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த அந்தத் தாய், "நானிருக்கும் வரை இந்தப் பெண்ணை எப்பாடுபட்டாவது பார்த்துக் கொள்வேன், ஆனால் அதற்குப் பின் ?  எனவே, இந்தக் குழந்தையை 'கருணைக் கொலை' செய்துவிடுங்கள்" என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.   ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்க்கு இடமில்லை என்று ஆட்சியர் மறுத்துவிட்டார்.
 

இதுபோன்ற துடிக்கும் ஜீவன்களை 'கருணைக் கொலை' செய்வதால் யாதொரு பாதகமும் இல்லை என்பதே என் கருத்து.  இதில் நான் ஜெமோவின் வழியையே ('நான் கடவுள்' க்ளைமாக்ஸ்)  சரி என்பேன்.

 மாநிலம்தோறும் தலைசிறந்த மருத்துவர்கள், தொண்டுஆர்வலர்கள், மனிதநேயர்கள், பெண்ணீயவாதிகள், அறிவுஜீவிகள், சட்டநிபுணர்கள், நிறைந்த ஓர் ஆணையத்தை நியமித்து, தகுதியான ஒரு நீதிபதியைக் கொண்டு இது போன்ற கொலைகளை நிறைவேற்றும் சட்டம் வேண்டும்.


சொல்லொண்ணா வேதனையில் துடித்த கன்றுக் குட்டியைக் கொல்ல மோகன்தாஸ் வேண்டினார் என்பது கேட்டு அலுத்துப் போனதுதான், அதிலும் அவர் கூறிய எதையுமே நிறைவேற்றப் போவதில்லை எனும் 'கங்கணம்'  பூண்டுள்ள அரசைக் கொண்டுள்ள நாம், இதைத் தொடர்ந்து வலியுறுத்தினால், எறும்பு ஊறி கல் ஒரு நாள் தேயலாம் !!!     
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக