வெள்ளி, 20 ஜூலை, 2012

ஒரு டைமிங் ஸ்டோரி :)'ஏன் இவ இப்படி வற்புறுத்துரா ?  என்னாலதான் ஒழுங்கா எல்லா நாளும் இருக்க முடியாதே ?  நடு ராத்திரில மொதல்ல எழுந்திரிக்கவே முடியாது.  அப்புறம் சாயங்காலம் முடிக்கப் போகணும், என் ஆபிஸ் பக்கத்துல அதுக்கு எங்க போகணும்ன்னு இதுவரை தெரிஞ்சிகிட்டதில்ல. ஒரு மணி நேரத்துக்கொரு முறை டீ குடிக்கலன்னா தலைவலி வரும்.  அப்புறம் நைட்டு தூங்க அது வேணும், அதுவும் வேணும், புரிஞ்சி தொலைய மாட்டாளே லூசு,  நீதான் இருக்கல்ல, விடேன், நானும் வைக்கணுமாம், பசங்களும் வைக்கணுமாம்.......ஸ்பென்சரைத் தாண்டியவன், பச்சை மஞ்சளாகி சிவப்பானவுடன், தலைக்கு மேல் கையைத் தூக்கி சைகை காட்டியவாறு வண்டியை நிறுத்தினான் இம்தியாஸ்.

பச்சை ஒளிர்ந்தவுடன் வேகமாக வண்டியை முடுக்கினான்.  புது வண்டி, முப்பதாவது வினாடியிலேயே எண்பதைத் தாண்டியது.  மெட்ரோ வேலைகளில் ட்ராபிக் நெருக்கடி இல்லை, ஆனால் டைவர்ஷன்  தெரியாமல் புதிதாய் நுழைபவர்களுக்கு நிறைய குழப்பங்கள் உண்டு, பாவம் அவர்களுக்கு விளக்க ஆட்களும் இல்லை.  ஒழுங்கற்ற முறையில் யாராவது சிலர் ஓட்டியபடியேதான் இருந்தனர்.  தூரத்தில் தாராபோர் டவர் சிக்னலிலும் பச்சை, ஆனால் வினாடிகள் உதிர்ந்தபடியே, உயிரை இழக்க இருந்தது.  இன்னும் ஆக்சிலேட்டரை முறுக்கினான்.  

முன்னே வேகமாக சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று, எதிர்பாராமல் நின்றது.  நின்ற வேகத்தில் அப்படியே வலது புறமாய் வழியே இல்லாத பாதை நோக்கி அதை திருப்ப முற்பட்டான் அதன் ஓட்டுனன்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த அறியாமையை சிறிதும் உள்வாங்க கூட நேரமின்றி,  இம்தியாஸ் தன்னிச்சையாய் அதிவேகமாக கால் பிரேக்கையும், கை முன்சக்கர பிரேக்கையும் அழுத்தினான்.  அழுத்தின வேகத்தில் கை பிரேக் அறுந்துத் தெறித்தது.  வண்டி குடிகார பாம்பு போல வளைந்து, நெளிந்து பிரீச்ச்ச்ச்........என்ற சத்தத்துடன் வழுக்கியது. 

எல்லாம் முடிந்தது என்பதை ஒருகணம் இம்தியாஸ் உணர்ந்தான்.  கண் முன்னே, "ஏங்க, இந்த வாட்டியாவது" என்று கெஞ்சியபடி ஜரினாவும், பப்பா என்றபடி ஃபாமிதாவும், இர்பானும் ஒடி வந்தது போன்ற பிரமை வேறு ஏற்பட்டது.  அய்யய்யோ புதுவீடு கட்டின லோன் டியு இன்னும் பதினெட்டு வருஷத்துக்கு........

"த்தா, டாபரு வண்டியா ஓட்டுற, ஒன்னால எப்டி உளுந்தாரு பார்ரா"  பஸ் ஓட்டுனர் குரல் கொடுத்தார்.  "எழுந்திருங்க சார் ஒன்னும் ஆகல" என்று இளைஞன் ஒருவன் இம்தியாஸ்க்கு   கைகொடுத்தான்.     

"ஜரினா"

"ஆ, ஆபிஸ்லருந்தல்லாம் போன் போடறீங்க ?"

"சரி, ஒனக்காக இந்த வாட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன், ஆனா முடிஞ்சவரைதான் வைப்பேன், பரவால்லல்ல ?"

"அல்லா தேங்க்ஸ், போதும்பா, நாளைக்கு காலைல எழுப்பிர்றேன், மொதல்ல பரிதாக்காக்கு போன் போட்டு சொல்லணும், இந்த சந்தோஷமான சேதிய" அவன் பதிலைக் கூட எதிர்பாராது உற்சாகத்துடன் கட் செய்தாள் ஜரினா.      

"இங்க எங்கடா பக்கத்துல மசூதி இருக்கு, நானும் ரம்ஜான் நோம்பு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்"  இம்தியாஸ் அவனுடைய கொலிக்கை விசாரித்துக் கொண்டிருந்தான் !!!                                                


                                                              --   THE END  --
 
   

1 கருத்து: