தேனீக்களின் துர் மரணம் :(

வழக்கம் போல, அலட்சிய மனோபாவத்துடன்தான்(இவிங்களுக்கு இதே வேலை ?)அந்தக் கட்டூரையை வாசிக்கத் தொடங்கினேன்.
அதிலும் உள் பத்தியில், ’தேனீக்கள், செல்ஃபோன் டவர்களாலும், நாம் குடித்துவிட்டு வீசியெறியும் டீ, காப்பி & கூல்ட்ரிங்க்ஸ் கப்புகளாலும்தான் அதிகம் இறக்கின்றன’ என வாசித்தவுடன், “டாய் என்னங்கடா ரீல் மேல ரீலா விடுறீங்க”ன்னு ஃபேஸ்புக்பாணி கமெண்ட் ஒன்றையும், வாய் தன்னிச்சையாய் உதிர்த்தது.

ஆனால் மிச்சக் கட்டூரையையும் வாசித்தபின், யாரோ ஓங்கி தலையில் கொட்டிய வலியுணர்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
சிட்டுக்குருவிகள், செல்ஃபோன் டவர்கள் வெளியிடும் கதிரிவீச்சுக் காந்த அலைகளால் அருகிவிட்டது என்ற சேதியை, விஞ்ஞான வளர்ச்சியை ஆதரிக்கும் எம்போன்ற முற்போக்குவாதிகளால் நம்ப முடிவதில்லை. 


யதார்த்தத்தில் எங்கள் பகுதியில் எங்கள் உறவினர்கள் போல வலம் வந்த அவைகளை இப்போது அரிதாகவே காண முடிகிறது என்கிற நிசத்தை ஏற்றுக்கொண்ட தருணம் கொஞ்சம் சுருக்கென்றது,
எதேச்சையாக என் வீட்டருகே அமர்ந்திருந்த ஒரு சிட்டுக்குருவியை என் மகனிடம் காட்டி, அதன் குரலைக் கேட்கச் செய்து, அடுத்து அதை அங்கு பார்க்க முடியுமோ முடியாதோ என்று செல்ஃபோன் கேமராவில் படம் பிடித்தபோதுதான், நம் வசதிக்காக எப்படிச் சில உயிரனங்களின் வாழ்வாதாரங்களை உதாசீனப்படுத்தியிருக்கிறோம் என்ற வெட்கம் கவ்வியது.

கண்ணுக்குத் தெரிந்து சிட்டுக்குருவி, கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை சிறு பறவைகளோ ?  சரி, இவைகள் இல்லாமல் போவதால் நமெக்கென்னப் போச்சு, என பொதுப்புத்தியோடு உளறலாம்.  புழு பூச்சி இனங்களை உண்டு வாழும் இவைகள் அழிந்தால், ஏதோ ஒரு சுழற்சியில் சமண் மாறுபட்டு, சிக்கல்கள் நமக்குத்தான்.  உதாரணத்திற்கு திடுமென சில வருடங்களாக உங்கள் வீட்டில் குட்டி குட்டியாய் பல்லாயிரம் கணக்கில் கரப்பான்பூச்சிகள் தென்பட்டிருக்கலாம்.

தவளைகள் குடியிருந்த ஏரிக்கரையை மேடுபடுத்தி, அரசாங்கம் எங்களுக்கு விற்ற வீட்டுமனைகளில் குடிவந்தபின், ஆரம்பங்களில் அவ்வளவு வாட்டாத கொசு, இப்போது கோடி கோடியாய் தலை மேல் பறக்கிறது.  அருகில் கொட்டப்படும் குப்பைகளாலும், எங்கோ தேங்கி நிற்கும் கழிவு நீராலுமென அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்துக் கொள்ள, கொசு முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வாக்களைச் சாப்பிடும் தவளைத் தலைப்பிரட்டைகள் குறைந்து போனதே காரணம் என உண்மையைச் சொல்ல விடாமல். ஏரி அருகில் வீடு கட்டிய குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தபடி இருக்கிறது :(

எனக்கே உண்டான கெட்ட பழக்கமிது, சொல்லவந்த விஷயத்த விட்டுவிட்டு எங்கெங்கோ சுற்றித் தொலைப்பது, சார்ரி !

சமீப காலங்களாய் தமிழகத்தில் தேன் உற்பத்தி பெரிதும் சரிந்துவிட்டதாய் ஒரு சர்வே சொல்கிறதாம்.  காரணம் தேனீக்களின் துர் மரணங்கள்.

புவி வெப்பமடைதல்தான் முக்கிய காரணியாயிருந்திருக்கும் என சில வருடங்களுக்கு முன் அவதானித்தனராம்.  ஆனால் ஆய்வில் பல மனிதத் திமிர்கள்தான் காரணமென தெரிந்திருக்கிறது :(

2008-2009 களில் CCD எனப்படும் COLONY COLLOPSE DISORDER தான் முக்கிய காரணி.  அதாவது எலக்ட்ரானிக் புரட்சி.  எப்படி பசுமைப் புரட்சி நம் உணவு உற்பத்தியைக் கூட்டி, தட்டுப்பாட்டை விரட்டிவிட்டாலும், செயற்கை விதை, விஷ உரம் என உடலையும், மண்ணையும் பாழ் படுத்தியதோ, இந்த CCD, கம்யூனிகேஷனை, கைகளுக்குள் உலகை கொடுத்துவிட்டு பல சிறு உயிர்களை கொல்வதோடு நிற்காமல் பேராபத்தை நமக்கு பிற்காலத்தில் விளைவிக்கப் போகிறது.

”அட இப்ப தேன வச்சி என்னய்யா பண்ணப் போறோம், தேனோடு திணை மாவ பிசைஞ்சு சாப்பிடற, சித்த மருந்தோட குழைச்சி குடிக்கிற காலத்துலயாய்யா வாழறோம்’னு ஒரு நெனைப்பு உங்க உள்ளுக்குள்ள ஓடிச்சின்னா......தயவு செய்து அடுத்த பத்திகள கொஞ்சம் ஊன்றி வாசிங்க.

வேலைக்காரத் தேனீக்கள், தம் கூட்டிலிருந்து தேனைச் சேகரிக்க, மலர்களைத் தேடி, சமயங்களில் பல கிலோமீட்டர்கள் பயணிக்கின்றன.  இவைகள் தேனைச் சேகரித்தபின், அதைச் சுமந்துக் கொண்டு, மிகத் துல்லியமாக தம் கூட்டை அடைகின்றன.  எப்படி ?

பூமியிலிருந்து இயற்கையாக வெளிப்படும் மின் காந்த அலைகளை தன் நுண்ணிய உணர்வுகள் மூலம் உள்வாங்கும் தேனி, தம் வேலை முடிந்து, அந்த அலைகளின் மூலமே கூடடைகிறது பல்லாயிர வருடங்களாக நடைபெறும் பரம்பரை நிகழ்விது.  ஆக, தேனீக்கள் தம் கூட்டிலிருந்து கிளம்பும்போது கிடைத்த சிக்னல் மூலம் பறந்துக் கொண்டிருக்கும் போது, குறுக்கிடும் செல்ஃபோன் டவர்களிலிருந்து வெளிப்படும் செயற்கை மின் காந்த அலைகளினால், அதன் நினைவுகள் குழப்பப்பட்டு, வந்த பாதை மறக்கிறது.  சேகரித்த தேனுடன் தம் கூடெது எனத் தேடி அலைகிறது.  கூடு அடைய முடியாவிடில் சோர்ந்து இறக்கிறது. 

ஸோ வாட் தேன்தானே வீணாகப் போகிறதென்பீர்கள்.  இங்கு உங்களுக்கு மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ? என்பதை விளக்க வேண்டி வருகிறது.

அதெப்படி தாவரங்கள் தாமே பூக்கிறது, காய்க்கிறது என்றெல்லாம் படித்திருப்பீர்கள்.  ஆண் - பெண் இணைவதன் மூலம் எல்லா உயிரனங்களும், தம் இன விருத்தியை தொடர்ந்து உலகில் நிகழ்த்துகிறது.  இங்கு தாவரங்கள் பெண்ணாயிருக்க, இந்த தேனீக்கள், வண்டுகள், பட்டாம்பூச்சிகள், சிறு குறு பறவைகளின் கால்களில், வாய்களில், சிறகுகளில் ஒட்டியிருக்கும் ’பிற தாவரங்களின் மகரந்தங்களே’ அவைகளுடன் இணைந்து, ஆணினமென விருத்தியை தொடர்ந்து உண்டாக்குகின்றன. 

உங்கள் வீட்டுத் தொட்டியின் பூச்செடி, நீங்கள் போட்ட விதையினாலும், ஊற்றும் நீரினாலுமேத்தான் பூக்கின்றன என நீங்கள் இதுவரை நம்பியிருந்தீர்களெனில்,  நீங்கள் சைன்ஸ் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற அதுவே காரணமென இப்போது உணருங்கள்.

ஆக, தாவரங்களின் உணவு உற்பத்திக்கு இந்த தேனீக்கள் மிக மிக அவசியம் என புரிந்துவிட்டதா ? இப்போது இந்தச் சிக்னல் குழப்பத்தினால் கூடடைய முடியாமல், அடுத்தடுத்து பல மலர்ப்பயணங்கள் மேற்கொள்ள முடியாமல், இப்படி அல்பாயுஸில் இறந்துபோவது வாடிக்கையாகிவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக, நம் தோட்டங்கள் மலடாகிப் போகும்.  தோட்டங்கள் முழுதாய் மலடாகும்போது நாம் புற்களைத் தின்ன வேண்டி வரலாம்.  கீரைகள் மட்டுமே மூன்று வேளை உணவாக இருக்கக்கூடும் ப்யூர் வெஜிடேரியன்களுக்கு.

கடந்த வருடம் அமெரிக்காவில், பல வளர்ப்புத் தேனீக்கள் இது மாதிரி கூண்டு திரும்பமுடியாமல் 35% தேன் உற்பத்தி குறைந்ததென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  உலகெங்கும் 70 விழுக்காடு விவசாயத் தாவரங்களும், 98% மரம் மற்றும் செடிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு, இந்தத் தேனீக்களே காரணம். சரி இந்த எழவு செல்ஃபோன் டவரத் தாண்டி, நாம் குடித்துவிட்டு எறியும் டீ & காபி ப்ளாஸ்டிக் அல்லது காகித கப்கள் எப்படி இவைகளுக்கு வில்லன்களாக மாறுகின்றன ?

சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், கழிவுப்பொருட்களின் கிடங்குகளில் காணப்படும் இத்தகைய கப்களில் மிச்சமிருக்கும் இனிப்புக் கரைசல்களில் கவரப்பட்டு கொசுத்தேனீக்கள் என்கிற தேனீக்கள் அக் கப்பிற்குள் நுழைய எத்தனிக்கையில், அதன் சிறகுகள் ஈரமாகி, பிறகு பறக்க முடியாமல் அதற்குள்ளாகவே மடிந்து விடுகின்றனவாம். 

இக் கட்டுரையை தின மணியில் எழுதிய முனைவர் கும்பகோணத்தைச் சேர்ந்த ச.சாண்டில்யன், மதுரையில் ஒரு கள ஆய்வை நிகழ்த்தியபோது, ஒரே ஒரு குப்பைத்தொட்டியில் மட்டுமே 800 க்கும் மேற்பட்ட கொசுத் தேனீக்கள் இத்தைகைய கப்களில் சிக்கி இறந்திருப்பதை கண்ணுற்றிருக்கிறார்.

’சரி நான் இப்ப என்ன பண்ண ?’ என்று என்னைப்போலவே தலைகுனிந்து உங்கள் உள் மனம் எழுப்பும் வினா எனக்குக் கேட்கிறது.  தேனீக்களுக்காகவெல்லாம் நாம் நம் வசதிகளை, சந்தோஷங்களை தியாகம் செய்து விட முடியாது.   நம்மைப் போல் ஓரிரு விழுக்காடு ஆட்கள் திருந்தியும் பெரிய மாற்றங்கள் விளைந்துவிடப் போவதுமில்லை.

மூடிய குப்பைத்தொட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் இந்தக் கப் கொலைகளை பேரளவு தடுக்கலாம். அல்லது இக் கப் குப்பைகளை தேங்கவிடாமல், உடனுக்கு உடன் அகற்றுவதன் மூலம் அச் சிறு உயிர்களைக் கொஞ்சம் காக்கலாம்.  இருபது வருடங்களுக்கு முன்னரும் இதே டீக்கடை, ஜூஸ் கடைகள் இருக்கத்தானே செய்தது ? அப்போது அவைகளை எப்படி அருந்தினோம், அருந்தியிருப்பார்கள் ? என நினைவுகூர்ந்தோ, கேட்டறிந்தோ அதை ஃபாலோ செய்யலாம்.  இயற்கைவளங்கள் செழிக்கும் இடங்களில் செல்ஃபோன் டவர்கள் வைப்பதை எதிர்த்து போராடலாம், அங்கெல்லாம் லேண்ட்லைன்களை மட்டுமே உபயோகப்படுத்த வலியுறுத்தலாம்.

இதையெல்லாம் அறிவுரைகளாகக் கருதாமல் எச்சரிக்கையென உள்வாங்கினால் கூட, அந்த உயிர்களுக்கு ஓரளவு வெற்றிதான் !

நன்றி -முனைவர் ச.  சாண்டில்யன், கும்பகோணம். (தின மணி) குறையும் தேன் உற்பத்தி சில காரணங்கள்.          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!