வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பெரியாரை ஏன் புறக்கணித்தீர்கள் இந்தியப் பெண்களே ???

பெரும்பாலான இந்தியப் பெண்கள் பெரியாரை, மத வெறுப்பாளரென்று புறக்கணித்ததின் பின்விளைவுதான், இன்னமும் என்னைப் போன்றவர்களெல்லாம் பெண்ணின ஆதவாளர் என வேடம் தரிக்க வைக்கிறது.


உண்மையில், பெண்கள் விடுதலை சார்பாக ஆண்கள் குரல் கொடுப்பதை பெரியார் பெரிதும் பகடி செய்கிறார். அது :-

எலிகளுக்கு பூனை ஆதரவு தெரிவிப்பதைப் போல

கோழிகளுக்கு நரிகள் பச்சாதாபம் கொள்வதைப் போல

ஆடுகளுக்கு ஓநாய்கள் அழுவைதைப் போல....என்கிறார்.

ஆமாம், பெண் விடுதலை ஏன், எதற்கு, என்ன என்பதை பெண்கள்தான் முன்னெடுத்துக் கேட்டுப் பெற வேண்டும், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், பழம் பொன்மொழிகளின் பெயரால் அதைத் தடுக்க முயல்பவர்களை, பெருஞ் சீற்றம் கொண்டெழுந்து முடக்க வேண்டும்.  அப்படிக் கிட்டும் விடுதலையே, வெற்றியே நிரந்தரமானது.

அன்றி, ஆண்கள் உங்களுக்காகப் பரிந்துப் பேசி பெற்றுத்தரும் சலுகைகளானது தற்காலிகமானது, உங்களை கற்பின் பெயரால் அடிமைப்படுத்த நினைக்கும் ஆண்களின் பசுத்தோல் போர்த்திய புலி வேடமது !  (இக்கால ஆண்கள் இதை வாசித்துக் கோபம் கொள்ள வேண்டாம், 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில், பெரியார் மதத்தின் பெயரால்(குறிப்பாக இந்து மதம்) பெரும் அறிவுஜீவிகள் கூட, பெண்களுக்கான உரிமைகளை ஏதோ பரிந்து விட்டுக்கொடுப்பதைப் போல் பேசியதின் பாதிப்பது)

மனதில் வையுங்கள்.  பெரியார் பெண் விடுதலை பற்றி எழுதி/பேசிக் கொண்டிருந்த காலத்தில், பெண்களுக்கு 8 -10 வயதில் திருமணம் செய்து வைப்பார்கள், எவ்வளவு வயதானாலும் சரி நீங்கள் குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும், கர்ப்பத்தடைக்கு அனுமதி கிடையாது(கர்ப்பத்தடைக்கு ஆதரவான பிரச்சாரத்தை எதிர்த்த சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை பெரியார் கடுமையாகச் சாடுகிறார், ”டாக்டராயிருந்தும், பெண்ணாயிருந்தும் கூடவா இவ் வேதனை உங்களுக்குப் புரியவில்லை ?”) ஆதிக்கச் சாதிகளில் கூட அவர்களுக்கு கல்வி உரிமை கிடையாது, சொத்தில் பங்கு கிடையாது, பால்ய வயதில் திருமணமாகி வீட்டுக்காரர் ஒருவேளை 12 -13 வயதில் இறந்து விட்டால் கூட மறுமணம் செய்து கொள்ள அனுமதி கிடையாது(19ம் நூற்றாண்டு வரை இறக்கும் கணவனோடு அப் பெண்ணைக் கட்டி உடன்கட்டை ஏற்றி உயிரோடு எரித்து விடுவார்கள், இப்ப கொஞ்சம் தேவல, ஆனால் அதை விடக் கொடுமையானது இந்தத் தண்டனை என்கிறார் பெரியார்)


ஓர் இடைச்செருகல் :-  உடன்கட்டை(சதி) ஏறுதலை ஒழித்ததில் பெரும்பங்கு ராஜாராம் மோகன்ராய் போன்ற இன்னும் சில சமூகசீர்திருத்தவாதிகளுக்கு உண்டு என உங்களுக்குத் தெரியும், ஆனால் இந்த சதி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்து பலப் பல உயர்சாதி இந்துக்கள், ’எங்கள் மதச் சம்பிரதாயங்களில் தலையிட நீங்கள் யாரென’ வெள்ளைக்காரர்களுக்கு எதிராக பெரிதும் பொங்கினார்களாம், அப்படி பொங்கியவர்களின் சில ஜீன்கள் தொடர்ச்சிதான் இப்போதும் பெண்களுக்கு கொடுக்கப்படும் கட்டற்ற ஆடை, கல்வி, ஆண்களுக்கு நிகரான பழக்கவழக்கச் சுதந்திரத்தை குய்யோ முய்யோ எனக் கத்தி குறை சொல்கிறது, என் மதத்திற்குச் சம்பந்தமில்லாத நீயெப்படி என் மதப்பிழைகளை விமர்சிக்கலாம் எனக் கூக்குரலிடுகிறது.


மகாத்மா காந்தியை பெரியார் பெரிதும் விமர்சிக்கிறார்.  இருப்பினும் காந்தியின் சில முற்போக்குச் சிந்தனைகளை தம் போராட்டங்களுக்கு உதாரணம் காட்டி அவரை சமயங்களில் புகழ்ந்துமிருக்கிறார்.  ஏனெனில் காந்தி எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்று கேட்டுக்கொள்ள அப்போது பெருங்கூட்டமிருந்திருக்கிறது.  காந்தி ஆதரித்த, விதவைகள் மறுமணத்தை பெரியார் இப்படி எழுதுகிறார் :-


// தேசிய சர்வாதிகாரியும், வர்ணாஸ்ரமப் பித்தும், பழமைப்பற்றும் மிகுந்த தோழர் காந்தியும், இந்து விதவைகள் மறுமணம் பற்றி அநேக இடங்களில் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்.  1925, நவஜீவன் பத்திரிகையில் அவர் இதுபற்றி எழுதிய கட்டூரையை வாசித்தால் உங்களுக்கு உண்மை புலனாகும் //

கற்பு, விபச்சாரம் இவ்விரு வார்த்தைகளும் மிகச் சாமர்த்தியமாக பெண்ணினத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கப்பட்டிருப்பதும், அதைப் பெண்களும் அப்படியே ஏற்கும்படி ஏமாற்றியதும்தான் ஆண்களின் பெரு வெற்றி.

கற்பு என்பதின் நேரடி பொருள் எதுவெனப் பார்த்தால், நாணயம், சத்தியம், சொல் தவறாமை, ஒப்பந்தம் மீறாமல் நடத்தல் என்பதாக இருக்கும்.  ஆக, இவ் வார்த்தைகள் எப்படி பெண்ணிற்கு மட்டும் சொந்தாமக இருக்கும் ?  சரி கற்பை VIRGINITY யோடு பழைமைவாதிகள் சம்பந்தப்படுத்துவார்களேயானால் கூட அதுவும் பெண்ணினத்திற்கு மட்டும் எப்படி சொந்தமாகும் ?  ஓர் ஆணும், பெண்ணும் கலப்பதில் பெண்ணிற்கு மட்டும் எப்படி கற்பு போய்விடும் ?  ஆணிற்கும்தானே போகிறது ?  கற்பு என்பதை ’பதிவிரதம்’ என்று தவறாக பொருட்படுத்தி, அதைப் பெண்ணிற்கேயுரியச் சொல்லாக மாற்றியதுதான் ஆணினத்தின் தந்திரம் :(  

இதே வார்த்தை விளையாட்டுதான் விபச்சாரத்திலும்.........

தன் கற்புநெறி தவறி, உடலை காசுக்கு விற்பவள்தான் விபச்சாரி என்று உருவகப்படுத்தியிருக்கிறர்களல்லவா, அப்படி தவறியவளோடு கூடுபவன் மட்டும் எப்படி புண்ணியாத்மாவாய் இருக்க முடியும் ? 

பல ஆண்களிடம் கூடுபவள் விபச்சாரி என்றால், பல பெண்களுடன் கூடுபவன் விபச்சாரன் தானே ? அதிலும் ஒருவனை விபச்சாரி மகன் என்றால் அவனுக்கு பொத்துக்கொண்டு வரும் கோபம், விபச்சாரன் மகன் எனச் சொன்னால் வருவதில்லை.  அதைப் பெருமையாக பார்க்கும் அவலம் கூட இங்குண்டு.  பல பெண்களை அடைய நினைப்பவனும், பல பெண்களை வைத்திருப்பதாய் பீற்றிக் கொள்பவனுக்கும் இங்கு கிடைக்கும் வரவேற்பு உங்களுக்கு தெரியுமல்லவா ? ஆக, விபச்சாரன் எனும் ஆண் பதம் மட்டும் பெருமை, விபச்சாரி எனில் சிறுமை. 

இங்கு விபச்சாரத்தை ஆதரித்து பெரியார் பேசவில்லை என்பதைக் காண்க. விபச்சாரி என்கிற வார்த்தையை தனக்குப் பிடிக்காத, மதிக்காத, படியாத பெண்களுக்கெல்லாம் கூட புரட்டாகச் சூடி மகிழ்வதைப் பார்க்கும் ஆண்களை எதிர்க்கவும், ஓர் எதிரி ஆணை வசைப்பாடக்கூட, வீட்டில் நன்னெறிகளோடு வாழும் அவனுடைய தாயை, மனைவியை, மகளை, சகோதரியை விபச்சாரி என வசைபாடி ஆத்திரம் தணித்துக் கொள்ளும் அற்பர்களுக்கெதிராகத்தான் இவ் வார்த்தையே ஓர் ஆணாதிக்க மோசடி என்கிறார் பெரியார்.

ஆக, கற்பரசி, விபச்சாரி எனும் ஆணாதிக்க மோசடி வார்த்தைகளை, ஆண்களோ, பெண்களோ பயன்படுத்துவதை பெரிதும் எதிர்க்க வேண்டிய அவசிய கடமை பெண்களுக்கு இருக்கிறது, ஆம் பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது !!!  
 


                        ====முற்றட்டும்====

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக