செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பெண்களுக்காக மதப் பற்றாளரும்/மறுப்பாளரும் !!!

பெண்களுக்கு ஆதரவான இரு நூல்கள். 

முதல் நூல், பெண்களை எப்படியெல்லாம் ஆண்கள், மதம் மற்றும் பழம் பொன்மொழிகள் மூலம், ’தன்னை விட தாழ்த்தி’ என நிறுவி, அவளினம் கொண்டே அவளைத் தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கி, அவளை முழு விடுதலையை நோக்கிச் செல்லத் தூண்டுகிறது !

அடிமையாய் இருந்தாலும் அவளுக்கிருக்கும் சில உரிமைகளை எடுத்துச்சொல்லி, இறைவனின் பெயரால்/இறைத்தூதர் வகுத்த சட்டங்களறிந்து தெளிந்து சற்றே இன்புறு, என்பதை விளக்குகிறது இரண்டாவது நூல்.

”பெண் ஏன் அடிமையானாள் ?’

பெரியார் ஈ.வெ.ராமசாமி 75 - 80 வருடங்களுக்கு முன்னர் பல கட்டூரைகளாக எழுதி, கி.பி.1942ல் தொகுக்கப்பட்டு முதல் பதிப்பாக வெளிவந்து பல பதிப்புகள் கண்ட, 80 பக்கங்கள் கூட இல்லாத வெறும் ரூ.25/- ல் கிடைக்கும் இந்தியப் பெண்களுக்கான பொக்கிஷம் இந்த நூலே நான் வாசித்துக் கொண்டிருக்கும் முதல் நூல் !

நீதி நூல்கள் என்பவைகள் எப்படிப்பட்ட பெரியோர்களால் எழுதப்பட்டவைகள் என்றாலும், அவை அக்கால நிலைகளையும், எழுதப்பட்ட கூட்டங்களின் சவுகரியங்களையும், அனுசரித்து எழுதப்பட்டதே !

மேலும் நீதியானது எக்காலத்தும் எல்லாத் தேசத்திற்கும், எல்லாக் கூட்டத்தாருக்கும் சவுகரியமாகவும், பொதுவாய் இருக்கும்படி எழுதமுடியாது, எனவே எந்தக் கொள்கையும் எக்காலத்தும், எல்லாத் தேசத்திற்கும் எல்லோருக்கும் சவுகரியமாயிருக்கும் என்றுக் கருதி, கண்மூடித்தனமாய், குரங்குப் பிடிவாதமாய்ப் பின்பற்றக்கூடாது (1940 களில் எழுதப்பட்ட பெரியார்த் தமிழை பெரும்பாலும் அப்படியே கொடுக்க ஆசைப்படுகிறேன், எனவே நடையை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்)

“காதல்” என்பது ஒரு தெய்வீகச் சக்தியால் ஏற்பட்டதென்றும், அது என்றும் மாற்றப்பட முடியாதென்றும், ஆதலால் ஒரு தடவை காதல் என்பது ஏற்பட்டுவிட்டால் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறகு அதை மாற்றிக் கொள்ளக் கூடாதென்றும் சொல்லப்படும் நிர்பந்தக் காதலை.................(மன்னிக்கவும் முடியல.  ஐயா பெரியார் ஆவி பொறுத்தருக, என்னோட
தமிழ்ல எழுதுனாத்தான் எனக்காவது புரியும்)

அதாவது காதல் என்பது ஓர் ஆசை.  அவ்வளவுதான்.  அந்த ஆசை வாழ்நாள் முழுக்க அப்படியே இருக்க எந்த அவசியமுமில்லை.  பிற ஆசைகளைப் போலவே காதலிலும் சலிப்பு வந்தால் அந்த ஆசை மறைந்துபோகும் தன்மை கொண்டதே.  எனவே அது தெய்வீகம், அதுல தோத்துட்டா வேற யாரையும் காதலிச்சா அது பாவம், காதலிக்க ஆரம்பிச்சதகப்புறம்தான் தெரியுது அவன் ஒரு ஃப்ராடு, இருந்தாலும் அந்தக் காதலத் துறக்க முடியாது, உயிருக்கு உயிரா நேசிச்சவ வேறெவனையோ கல்யாணம் பண்ணிகிட்டா, நான் தாடிய வச்சிகிட்டு, குடிக்கணும் இப்படிப்பட்ட எல்லா அபத்தங்களையும் தெய்வீகக்காதல் என்ற பெயரால் ஏமாற்றுகிறார்கள் எனப் பெரியார் சாடுகிறார்.


கல்யாணம் என்பது ஆண்-பெண் இவர்களிருவருக்கிடையேயான சந்தோஷ வாழ்க்கைக்கான ஓர் ஒப்பந்தம் மட்டுமே.  இதிலும் எந்த வெங்காயச் செண்டிமெண்டும் கிடையாது.  ஒருவேளை இந்தக் திருமண வாழ்வில் இருவர் மனங்களும் ஒன்றுபட முடியாமல் சண்டைகளும், சச்சரவுகளும் தொடந்ததெனில் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்து விடலாம், அதாவது கல்யாண விடுதலை.  சமகாலத் தமிழில் சொல்ல வேண்டுமேயானால் ‘டைவர்ஸ்’  (ம்க்கும்....இது யாருக்கும் தெரியாது பாருங்க, ஃபேம்லி கோர்ட் வாங்க, ஒரு நாளைக்கு நூறு கேசு வருதுன்னு சொல்றவங்க எல்லாம் 1942 க்குப் பிறகு வந்திருக்கிற சினிமாக்களையெல்லம் பார்க்கச் சபிக்கிறேன், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் பொன்மொழி இதன்மூலம் பகடிக்குள்ளாக்கப் படுகிறது)


பெண்கள் பிள்ளைப் பெறும் இயந்திரம் கிடையாதென்பதை மறுக்க அவர்கள் அஃபார்ஷன் செய்துக் கொள்ள விரும்பினால், அல்லது கருத்தரிக்க முடியாதபடி கர்ப்பத்தடை சாதனங்களை நாடினால், அவர்களைத் தடுக்கக் கூடாது, அப்படித் தடுப்பவர்களை எதிர்க்க வேண்டும். (மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது 8 - 10 குழந்தைகள் இருந்தனரா என்று உங்கள் பாட்டி தாத்தாவிடம் விசாரியுங்கள்)

சரி, பெரியார இங்க அமர வைப்போம்.  மீதி சிந்தனைகளை ஓரிரு நாட்களில் முடித்துவிட்டு முழுக்க விவாதிப்போம். அடுத்து அந்த இரண்டாம் நூலான ‘பெண்கள் தொடர்பான ஷரிஆ சட்டங்கள்” (ஆசிரியர்-அப்துர் ரஹ்மான் உமரி)       

இஸ்லாமியப் பெண்களுக்கான சட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்றெண்ணியே இதை வாங்கினேன்.  ஆனால் இந்நூல், இஸ்லாமியப் பெண்கள் இறைவனைன் தொழ, சுப காரியங்களில் கலந்துக் கொள்ள, மதச் சடங்குகளில் பங்குபெற வேண்டிய கால்ங்களின் போது ஏற்படும் அவர்களுக்கே உரித்தான மாதந்திர அசெளகரியங்களின் போது எப்படியெப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது பற்றி பல இறைத்தூதர்கள் இயற்றியுள்ள ஷரிஆ சட்டங்களை மட்டுமே சொல்கிறதென்பது கொஞ்சம் ஏமாற்றம்தான். 

“அது ஒரு தூய்மையற்ற நிலை, ஆகவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்.  தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூமையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்.  தீமையில் இருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர்களையுமே அல்லஹ் நேசிக்கிறான்”
(- அல்குர் ஆன் 2 : 222)


இதை வாசிக்கும்போது ஓர் ஆணாதிக்க வாசனையை  நுகர்வீர்கள், எனினும் அடிமைகள் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கச் செய்த ஏற்பாடகவும் இதைக் கருதி ஆறுதல் கொள்ளலாம் !  ஏனெனில் மாதவிலக்கான பெண்களை மரியாதையுடன் நடத்தும் மார்க்கத்தில் முன் நிற்பது இஸ்லாம் மதமே என்கிறார் இதன் ஆசிரியர்.


ரத்தம் என்பது இஸ்லாமைப் பொறுத்தவரை அசுத்தமானது.  அதனால்தான் கால்நடைகளின் இரத்தத்தை உண்பதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்படுள்ளது.  மாதவிலக்கின் போது வெளிப்படும் ரத்தமும் தூய்மையற்ற அசுத்தமான ரத்தமேயாகும்.   எனவே தொழுவதும், இறைவனை வணங்கி வழிபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.  மற்றபடி பெண்கள் சமூகத்தோடு கொண்டுள்ள உறவுகளை எவ்வகையிலும் மாதவிலக்கு தடை செய்யாது.  கிருத்துவ/இந்து மதங்களில் மாதவிலக்குப் பெண்கள் எங்கணம் நடத்தப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி பழைய அரபு நாட்டு மதச் சட்டங்களை எடுத்துக்காட்டி பிற்போக்குத்தனமாய் பேசிக்கொண்டே போகிறாரே என சலிக்கும் வேளையில், காலத்திற்கேற்றவாறு கொஞ்சம் சட்டத்தை வளைத்துக் கொள்ளலாமென கீழ்க்காணும் யோசனை ஒன்றைக் கூறுகிறார்.

மாதவிலக்கைத் தள்ளிப்போடுவதற்காக இப்போதெல்லாம் மாத்திரைகளைச் சாப்பிடுவது வழக்கத்திலுள்ளது.  இயற்கை உடல்போக்கை செயற்கையாக தடுத்து நிறுத்துவதென்பது உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்க வைக்கக்கூடியது. 
ஆனால் ஹஜ் போன்ற புனிதப் பயணத்திற்குச் சென்றுவிட்டு, அவ் வேளையில் மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டால் ?  மாதவிலக்கான பெண்கள் என்னென்ன செய்யக்கூதென்று ஷரிஆ சட்டங்கள் கூறுவதைப்
பாருங்கள் :-

தவாஃப் செய்யக்கூடாது.
ஸ ஈ செய்யக்கூடாது.அவ்வளவு தூரம் செலவழித்துச் சென்றுவிட்டு, இந்தச் சடங்குகளையெல்லாம் நிறைவேற்ற அனுமதியில்லையென்றால் பாவம்தானே ?  ஆக, அப்பெண்கள் மாதவிலக்கைத் தள்ளிப்போகச் செய்ய தாராளமாக மாத்திரைகளை உட்கொள்ள ஷரிஆ தடையேதும் விதிக்கவில்லை !!

சரி, பெண்கள் நாங்கள் படிக்க வேண்டிய சமாச்சாரங்களை நீங்கள் ஏன் படிக்கவேண்டும் ? என்று யாரேனும் தோழிகள் கேட்பீர்களேயாயின்......

“ நீங்கதாங்க படிக்கணும், உங்க பாட்டிங்க, பூட்டிங்கல்லாம் பெரியார ஏத்துகிட்டு படிச்சிருந்தாங்கன்னா இந்தப் பதிவுக்கே அவசியமிருந்திருக்காதே ?”

ஆக, ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு நூல்களை பாதி வாசித்துவிட்டேன், மீதியை வாசித்துவிட்டு விஷயமிருப்பின்/தேவைப்படின் பகிர்கிறேன் :)

                              (தொடரக்கூடும்......)
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக