திங்கள், 24 பிப்ரவரி, 2014

முகமது பின் துக்ளக் !!!

நான் அர்விந்த் கெஜ்ரிவாலை, ஜோக்கர்/துக்ளக் என்றதற்கு பலரும் வருந்தினர்.  துக்ளக் நிச்சயம் ஜோக்கர்தான், ஆனால் தன் மக்கள் மீது அபரிமிதமான அன்பைக் காட்ட நினைத்த ஓர் அறிவுஜீவி.  அர்விந்தும் அதைத்தானே செய்கிறார் ? 

அர்விந்த் கெஜ்ரிவாலைப் போலவே மெத்தப் படித்த மேதாவி முகமது பின் துக்ளக்.  சரி, துக்ளக் ஆட்சி/துக்ளக் தர்பாரென்றெல்லாம் பகடி செய்கிறோமே.......அது ஏன் ? சிறுவயதில் படித்த வரலாறு ஞாபகம் வருகிறதா நண்பர்களே ?

கோரி முகமதுவின் அடிமைகளினால் துவங்கப்பட்டு டெல்லியை ஆண்ட அடிமைவம்சத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த கில்ஜி, துக்ளக் வம்சத்தில் வந்த அதிக புத்திசாலி அரசர் முகமது பின் துக்ளக்(துக்ளக் வம்சத்தில் திறமையானவர்)


’அதிக அறிவு என்பது கிட்டத்தட்ட முட்டாள்த்தனம்’ என்பதை நிருபித்தவர் துக்ளக்.  சீர்திருத்தங்கள் எனும் பெயரில் இவர் செய்த கலாட்டாக்களை வாசிக்கும் போது சிரிப்பு வரலாம்.  ஆனால் அது ஒரு கொடுமையான நிகழ்வுகள் :(

காலம்காலமாய் இந்தியாவின் தலை நகரம் டெல்லி.  டெல்லி இமயமலைக்கருகில் இருப்பதால் கணவாயைக் கடக்கத் திறமையிருக்கும் அன்னிய படைகளால் அடிக்கடி தாக்கப்பட்டது.  இதைத் தடுக்க மாரடிப்பதே பெரும் வேலையாகிப் போவதால், துக்ளக்கிற்கு, ’நாட்டின் நடுவே தலைநகரை அமைத்துக் கொண்டால் என்ன ?’ என ஒரு யோசனை வந்தது.  பாதுகாப்பிற்கு பாதுகாப்பாகவும் ஆகிவிடும், நாட்டின் மையத்தில் இருந்தால் யாவற்றையும் கண்காணித்து பரிபாலனம் செய்வது எளிதாக இருக்கும் என்கிற ஆசை.

நம் நாடு சுதந்திரம் பெற்ற போது கூட நாக்பூர் நாட்டின் மையமாக இருப்பதால் அங்கு தலைநகரை நிறுவ அப்போது சிலர் யோசனை கூறியதாகவும், அதை ஆட்சியாளர்கள் உடனடியாக நிராகரித்ததாகவும் பேச்சுண்டு.  ஏன், எம்ஜிஆர் கூட, சென்னையை விட திருச்சி தமிழகத்தின் மையமாக இருப்பதால் நிர்வாகம் செய்ய வசதியாயிருக்கும் என தலைநகரை அங்கு மாற்ற முயற்சித்தார் எனச் சொல்வோரும் உண்டு.  ஆக, இது ஒரு தவறா என துக்ளக் வாசகர் வட்டம் கொதித்துக் கேள்வி கேட்கக்கூடும்.  மேட்டர் அதிலில்லை சாப் :)

ஆக, தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிவிட அதிரடியாக முடிவெடுத்தார் துக்ளக்.  டெல்லியிலிருந்து தேவகிரி 1500 கிலோமீட்டர் தூரம்.  இப்போதைய கர்நாடகா கோதாவரி கரையோரமிருந்த ஒரு நகரம். 
அடுத்த அதிரடி, டெல்லியில் ஒரே ஒரு ஆள் கூட இனி இங்கு இருக்கக்கூடாது, ஏன் அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளைக் கூட எடுத்துக் கொண்டு சில நாட்களுக்குள் தேவகிரி கிளம்ப வேண்டுமென்று உத்தரவிட்டார். 

“அய்யோ, அப்ப கட்டிய வீடு, நில புலன்கள் ?” 

“மயிரே போச்சு, கெளம்புன்னா கெளம்புங்கடா நொண்ணைகளா” இப்படி இருந்திருக்க வேண்டும் துக்ளக்கின் ரிப்ளே. 

விளைவு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் உடமைகளுடன், தங்கள் குழந்தைகளுடன், தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கிளம்பினர்.  பாவம் வயதானவர்களும், நோயாளிகளும்.  துக்ளக் எந்த இரக்கமும் காட்டவில்லை. 

”என் மக்கள் என் கண் போன்றவர்கள், அவர்கள் யாருமே அந்நியர்களால் துன்பப்படுவதை என்னால் சகிக்க முடியாது, யார் எப்படியிருந்தாலும் கிளம்பித்தான் ஆக வேண்டுமென்ற இந்த செண்டிமெண்ட் மிரட்டலை ............ஐயா/அம்மா இப்படிக் கற்பனை செய்யுங்கள்.  

நீங்களும், உங்களின் வயது முதிர்ந்த அப்பாவும், சீக்கான அம்மாவும், உடன் நண்டு சிண்டுமாய் ஏழு குழந்தைகளுடன்,  நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன்,  வேறுவழியேயின்றி தேவகிரி கிளம்ப ஆயத்தமாகி விட்டீர்கள்.  அப்போது குதிரை, ஒட்டகம், யானை, மாட்டு வண்டி இவைகளைத் தவிர வேறெந்த போக்குவரத்துச் சாதனங்களும் கிடையாது.  குதிரை வண்டி, மாட்டு வண்டி என்பதெல்லாம் பணக்காரர்கள் சொத்து.  யானை & ஒட்டகம்  எல்லாம் அரசு சமாச்சாரங்கள்.  ஆக, பத்து விழுக்காடு மக்களைத் தவிர்த்து, மீதமுள்ள 90 விழுக்காடு ஏழை மக்கள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு தம் நடைப்பயணத்தைத் தொடங்கினர்.

வழியெல்லாம் துன்பம்.  சீதோஷ்ண நிலை மாறுதல்.  குறுக்கிட்ட காடுகள்( காட்டு விலங்குகள், முட்கள் மண்டிய காட்டுப்பாதை) நதிகள், (வெள்ளம், சுழிகள், ஆழம்) மலைகள்.  லட்சக்கணக்கான மக்களும், கால்நடைகளும் ஒரு சேரக் கிளம்பியதால் உண்டான  சுகாதாரச் சீர்கேட்டில் பரவிய கொள்ளை நோய்கள்................பல லட்சம் பேரில் சில லட்சம் பேர் இறந்தனர்.  நோய்வாய்ப்பட்டவர்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு அந்த நகர் மாற்றம் நகர்ந்துக் கொண்டிருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு தேவகிரியை அந்த இடப்பெயர்ச்சி அடைந்தது.

இந்த இடப்பெயர்ச்சி நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு டெல்லிக்கு வருகை புரிந்த அயல் நாட்டுப் புலவர் ஒருவர்,  ’டெல்லி ஆளரவமற்ற சுடுகாட்டைப் போலிருந்தது.  இருக்கும் மிச்ச மீதி குற்றுயிர் விலங்குகள், மனிதர்களை உணவாக்கிக் கொள்ள நரிகளும், கழுதைப் புலிகள் மட்டுமே டெல்லி வீதிகளில் சுற்றித் திரிந்ததாகக்’ குறிப்பெழுதியிருக்கிறார். 

அட லகுடபாண்டியே, இத்தனை  லட்சம் பேரை நகர் மாற்றினாயே, அதற்கேற்ற வசதி அங்குள்ளதா எனப் பார்க்க வேண்டாம் ?  எல்லாத்தையுமா அல்லாஹ் பார்த்துக்கொள்வார் ? 
திடுமென லட்சக்கணக்கானவர்களை அந்த சிறு நகரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.  சில நாட்களில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம், உணவுப் பஞ்சம், இடப் பற்றாக்குறை, மனித மிருகக் கழிவுகளால் உண்டான வயிற்றுப்போக்கு............. நிலவரம் கலவரம் வரை போகும் என அவதானித்த துக்ளக் மீண்டும் தன் அதிரடியை அறிவித்தார்.  ’வாபஸ் டெல்லி சலோ’

இம்முறையும் அதே கண்டிஷன்தான், ”எவரெவரெல்லாம் டெல்லியிலிருந்து தேவகிரி வந்தீர்களோ, அத்தனை பேரும் மீண்டும் டெல்லி வர வேண்டும்.  ஏனெனின் முகமது பின் துக்ளக் அல்லாவிற்கு அடுத்தபடியாக உங்களைத்தான் அதிகம் நேசிக்கிறார்”

சரி இந்தக் கூத்துகள் முடிந்ததா ?  அடுத்த அதிரடி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரையும் பணக்காரராக்கப் போகிறேன் என்றார் அறிவுஜீவி துக்ளக். 

அப்போது செலவாணியாக நாணயங்கள் தங்கம் அல்லது வெள்ளியில்தானே இருந்திருக்கும் ?  ஆக, தங்கமும், வெள்ளியும் அரசர், அமைச்சர், பிரபுக்கள், ஜமீன்தார், வியாபாரி, செல்வந்தர், கொள்ளைக்காரன் இவர்களிடம் மட்டுமேத்தானே இருந்திருக்கும் ?  தன்னுடைய எல்லா மக்களிடமும் நாணயங்கள் இருந்து அனைவரும் சரி சமமான அந்தஸ்தில் இந் நாடு இருக்க வேண்டுமென துக்ளக் விரும்பினார், என்னே பாசம் ?
செலவாணியை இரும்பு நாணயங்களாக அச்சடிக்க நாணயசாலைகளுக்கு உத்தரவிட்டார்.    தங்க & வெள்ளி நாணயம் வைத்திருப்பவர்கள் அதைக் கொடுத்து, மாற்றாக பல நூறு இரும்பு நாணயங்களைப் அரசு கஜானாவில் பெற்றுக் கொள்ளளாம் என ஆணையிட்டார்.  நாணயப் புழக்கம் அதிகமானதால் எல்லோர் கைகளிலும் காசு, துட்டு, பணம்.   எல்லார்க் கைகளிலும் காசிருப்பதால் பொருட்களின் விலைகளும் தாறுமாறாய் உயர்ந்து போயின.   இது எப்படி என விளங்காமல், துக்ளக்கின் விழி பிதுங்கியது. 


ஹிஹி, இரும்பை மண்ணிலிருந்து பிரித்தெடுக்க  நம்ம பயகளுக்கு சொல்லியாத் தரணும் ?  டெல்லி புற நகரில் இருந்த ஒவ்வொரு குடிசைகளிலும் கள்ள நாணயச்சாலைகள் உருவானதாம்.  எது அரசோட அசல் நாணயம், எது கள்ள நாணயம் என பகுத்தறிய முடியாத அளவு நேர்த்தியான தொழில்(டெல்லி மேட்னா ச்சும்மாத்தானா ?)  கிடைத்த இரும்பையெல்லாம் உருக்கி அவனவன் அரசு நாணயத்தைக் குடிசைத்தொழில் போல் செய்ய ஆரம்பிக்க..................பிடி அடுத்த அதிரடி. 

”நாளை முதல் இரும்பு நாணயம் துக்ளக் அரசில் செல்லாது”
கையிலிருக்கும் இரும்பு நாணயங்களை  கஜானாவில் கொடுத்து அதற்குரிய தங்கம் & வெள்ளிகளை பெற்றுச் செல்லவும் என்றார் துக்ளக்.  ஒரிஜினல் டூப்ளிகேட் என கஜானா முழுக்க இரும்பு நாணயங்களாய் குவிய, தங்கமும், வெள்ளியும் வெளியேறி......கஜானா காலியானது, அரே அல்லா :(

பாசக்கார துக்ளக், தொடர்ந்து தென்னிந்தியாவின் மீதே படையெடுத்து எதற்கு நம் மக்களை, நாமே துன்புறுத்த வேண்டுமென எண்ணினார்.  எந்த இந்திய அரசரும் சிந்திக்கக் கூடத் துணியாத சீனா மீது படையெடுக்க முடிவெடுத்தார்.  முடிவெடுத்ததெல்லாம் தப்பில்லை.  இந்தச் சீனா, ரஷ்யா மீதெல்லாம் படையெடுக்குமுன், அங்கிருக்கும் க்ளைமேட் பற்றிய புவியியலறிவு மிக மிக அவசியம்.

உதாரணத்திற்கு, மே மாத மத்தியில் சென்னையில் நடக்கும் டெஸ்ட் மேட்சை எந்த அந்நிய அணியாலும் இந்தியாவை வென்று விட முடியாது.  மே மாத மத்தியில் சென்னையில் டெஸ்ட் மேட்ச் வைக்க ஏற்பாடு செய்பவர்களுக்கு இதயமே கிடையாதென்று கூடச் சொல்லலாம்.  அத்துணை மகா மோசமான வெயில்.  சென்னை வெயிலின் கொடை இடையறா வியர்வை.  லிட்டர் லிட்டராய் நீங்கள் அருந்தும் நீரை அப்படியே வியர்வையாய் தொப்பல் தொப்பலாக்கி வெளியே தள்ளும்.  அதே போலத்தான்  ஜூலையில் மும்பையில் திருமணத்தை வைத்துவிட்டு பத்திரிக்கை தந்த நண்பனை, ’போடா போக்கத்தவனே’ என்றேன்.  மழை.  மும்பை சீஸன் மழை உங்களை மிரளவைத்து விடும்.   

ஆக, நீங்கள் சீனா அல்லது ரஷ்யா மீது குளிர்காலங்களின் போது படையெடுக்கத் துணிந்தீர்கள் எனில் தொலைந்தீர்கள்.  அப்படி தொலைந்த இரு மாவீரர்கள் நெப்போலியன் & ஹிட்லர்.  

துக்ளக்கிடம் எவ்வளவு மன்றாடியும் விடாப்பிடியாக குளிர்காலத்தின் போது எடுக்கப்பட்ட சீனப் போரால் பல லட்ச வீரர்களை இழந்து சீனப் படையிடம் எளிதில் தோற்றுப்போனது துக்ளக் படை.  புறமுதுகு காட்டி எஞ்சி டெல்லி வந்து சேர்ந்த படை வீரர்கள் அத்தனை பேர் தலைகலையும் சீவச் சொன்னார் துக்ளக்.

இன்னும் அவர் செய்த சில கலாட்டாக்களெல்லாம் உண்டு, இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவில் தங்கியிருக்கிறது.  அவரைப் பற்றியும், இந்தியா மீது எடுக்கப்பட்ட பிற படையெடுப்புகளையும் மதனின் ’வந்தார்கள் வென்றார்கள்’ நூல் வாங்கி வாசியுங்கள்.

அடுத்த பதிவில் அர்விந்த் கெஜ்ரிவால் செய்த சீர்திருத்த முயற்சிகளை, துக்ளக் சீர்திருத்தங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம் !!!

                                                      --  -- ஷூக்ரியாஜி  -- --
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக