கடன்பட்டான் நெஞ்சம் !!!

கடன்பட்டான் நெஞ்சம் !!!      - ராஜா ராஜேந்திரன்
=====================

ஒவ்வோர் இரவுமே
அப்பாடா இன்றெப்படியோ
தப்பினோமென்றே முடிகிறது

ஒவ்வொரு பகலுமே
அய்யோ இந்நாளை எப்படி கடத்தப்போகிறோமோ
என்ற சிந்தனையோடே விடிகிறது

அலைபேசி ஒலிக்கும்போதெல்லாம்
இதயம் ஒரு மடங்கு அதிகமாகத் துடித்து
அழைப்பவன் அவனல்ல என
அறியவரும்போது வெளிப்படும்  நெடும் பெருமூச்சு

சேமிக்காத எண்கள்
திரையில் ஒளிரும்போதோ
அவனேதானோ எனக் கைகள் நடுங்க
காதில் வைத்தால்.........
கிரெடிட் கார்ட் வேண்டுமா சார்
குரல் தேனெனப் பாய்கிறது

கடன் கொடிது
கடன் வாங்காதே
கடன் கொடுக்காதே
அப்பா தவறாதுபதேசித்த அறிவுரைகள்

கடன் இனிது
மற்றவன் பெறுவதை
நாமும் .அனுபவிக்க
கூடாநட்பு ஓயாமலுபதேசித்த போதனைகள்

அப்பா வாக்கை ஒரே ஒரு
விடயத்தில் காப்பாற்றினேன்
யாருக்கும் கடனைக் கொடுத்ததேயில்லை
இதுவரை கொடுக்க முடியவுமில்லை

நற்சேதியென வீடு தேடி வரும்
நண்பனைக் கண்டால் கூட முகமிருண்டது
எங்கே கொடுத்த கைமாற்றை
கேட்க நாடகமாடுகிறானோ ?

வெளியே  யாரோ தட்டுகிறார்கள்
அவன்தான் போல.....
’அவரில்லை அப்புறமாய் வாருங்கள்’
மனதுள் மனைவி குரலில்
மிமிக்ரி பண்ணிக்கொண்டே
அனிச்சையாய் கதவைத் திறந்துவிட்டேன் !!!

நன்றி,

ராஜா ராஜேந்திரன்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!