வெள்ளி, 8 ஏப்ரல், 2016

இளையராஜா உள்ளில் வாழும் எம் எஸ் வி

இளையராஜாவுக்கு இருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது பெரு வியப்பு.  2011 இறுதியில் நேரு உள் விளையாட்டரங்கில்  நிகழ்ந்த கச்சேரிக்கு வந்திருந்த பலரும் நேற்றைய(27/ 07/ 2015 திங்கள்) மெல்லிசை மன்னருக்கான கீதாஞ்சலிக்கு பெருத்திரளாக வந்திருந்தது உவப்பாக இருந்தது.


Image result for m.s.viswanathan
ஏற்பாட்டாளர்களின் தடுமாற்றத்தை பார்த்து, கொஞ்சம் திடுக்குன்னு வச்சதால பெரிசா திணறுறாங்களே, ஏன் இவ்வளவு சீக்கிரம் வச்சார் ?அப்படியில்லங்க, இன்னிக்கு சார் இறந்து 13 வது நாள்.  இந்து சம்பிரதாயப்படி.....சார்ரி உங்களுக்கு இந்து சாஸ்திர நம்பிக்கைங்க மேல நம்பிக்கை இருக்கா ?பரவால்ல சொல்லுங்க சார் என்று வரிசையில் என் முன் நின்றவரை ஊக்குவித்தேன்(மனசு என்ன சொல்லியிருக்கும்ன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்)சார், உயிர் பிரிஞ்சவுன்ன அது மேல போகாது சார்.  உடலை பிரிஞ்ச ஆன்மா மிக மிக பலவீனமா இங்கேயேதான் இருக்கும்.  இங்கன்னா அவர் வீட்டுல, அவர் அதிகமா சுத்தன இடத்துல, அவர் பாசமா பழகின ஆட்கள் இருக்கிற இடத்துல.  இறந்த ஆத்மாவுக்காக அடுத்தடுத்து செய்யும் பூஜைகள், திவச வழிபாடுகள், அஸ்திக்கு செய்யும் மரியாதைகள்.........இந்தச் செயல்கள் மட்டுமே அந்த ஆத்மா மேலே போகும் பலத்தைக் கொடுப்பவை.  அதனாலத்தான் ராஜா சார் இந்த நாளைத் தவறவிடக்கூடாதுன்னு நினச்சுருக்கணும்.  சிலருக்கு பத்தாவது நாள், ஒரு சிலருக்கு பதிமூனாவது நாள், பதினாறாவது நாள், முப்பதாவது நாள், நாப்பதாவது நாள்ன்னு குறிச்சு அதனாலத்தான் சிறப்பு வழிபாடு செய்வாங்க.  பாருங்க இன்னிக்கு சாரோட ஆவி இங்கதான் இருக்கும், அவருக்கு செலுத்தற கீதாஞ்சலிய இன்பமா அனுபவிச்சிட்டு நிம்மதியா மேல போகும்.
நான் அடுத்தவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதே இல்லை. நம்பிக்கையை ஆயுதமாக்கி ஏமாற்றுபவர்கள்தான் என் இலக்கு. மேலே உள்ள பத்தியை சீரியஸாக நான் எடுத்துக் கொள்ளாவிடினும், உள்ளே ராஜா ஒவ்வொரு பாடலின் போதும், ’ஏம்பா இப்படி பாடுற ? தப்பாப் பாடுனா அண்ணா கோச்சுப்பாருப்பா, கேட்டுட்டு சும்மா இருந்தேன்னா என்னைத் திட்டுவாரு, இரண்டு கட்டை இல்ல ஒரு கட்டைதான்’ ’ஏம்பா தவில் மேல உனக்கு கோபமா ? இப்படி அடிக்கிற ? என்னையே போட்டு அடிக்கிறாப்பல இருந்துச்சு, அண்ணாக்கு பிடிக்குமா ? வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்துலருந்து அண்ணாக்கு அடிச்ச ஆளாச்சே, அண்ணா இங்கதான் எங்கயோ இருக்காரு, முதுகுல தொம்முன்னு போடப்போறாரு’ என்று ஜாலியாக சொன்னபோது மூட நம்பிக்கைகளைத் தாண்டி கொஞ்சம் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.விழா ஏழுக்கு மேல் தொடங்கியது.  மிகச் சரியான நேரத்தில் கச்சேரியை ஆரம்பிக்கும் இளையராஜாவை மழை கொஞ்சம் தாமதப்படுத்த வைத்துவிட்டது.  மேடையில் இருந்த விஸ்வநாதன் புகைப்படத்தை வணங்கிவிட்டு, வழக்கம் போல ரமண மாலையுடன் தொடங்கினார் ராஜா. மேடையின் வலது மற்றும் இடதுபுறத்தில் பிரம்மாண்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தில் கோட் அணிந்த விஸ்வநாதனின் ஒளிப்படங்கள் அபாரமாக இருந்தது.  இளையராஜா ஒவ்வொரு தவறின் போதும் அந்தப் போட்டோக்களைப் பார்த்தே ’அண்ணா மன்னிச்சுக்கோங்க’  என்றார்(மயக்கமா கலக்கமா (பி பி சீனிவாஸ்) பாடலைப் பாடும்போது நடுவில் வரி தவறிப் போய்விட்டார்.  உடனே நிறுத்தி மன்னிப்பு கேட்டு விட்டு தொடர்ந்தார்)Image result for ilaiyaraaja


ஜி கே வெங்கடேஷ்தான் ராஜாவின் மாஸ்டர் என்றாலும், விஸ்வநாதன் ட்ரூப்பிலும் இருந்திருக்கிறாராம்.  இதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பே.  ஒவ்வொரு பாடலின் பின்னணி, ராஜாவின் அனுபவம் என்று அவர் சொல்வதே பெரிய கிறக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.சி. ஆர். சுப்பராமன் இசையில் தேவதாஸ் படம் முடிவதற்குள் அவர் இறக்க, மீதிப்படத்தை முடித்துக்கொடுத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என உங்கள் பலருக்குச் சமீபத்தில் தெரிந்திருக்கும். ஆனால் அந்த படத்தில் இந்த இரட்டையர்கள் போட்ட முதல் பாடல் எது தெரியுமா ?
உலகே மாயம், வாழ்வே மாயம்.  இந்தப் பாடல் எவ்வளவு புகழ் பெற்றது என உங்களுக்கேத் தெரியும்.  ஆனால் இதை இயற்றிய உடுமலை நாராயணக் கவியை அழைத்து வந்து இந்த இரட்டையரும் எப்படி இருக்கு ஐய்யா பாட்டு ? எனக் கேட்க, பாடலை கேட்ட கவி, ஓங்கி விஸ்வநாதனை அறைந்தாராம்.


Image result for ghantasala

“என்னடா பாட வச்சிருக்க ?  உல்க்கே மாயம்ன்னு பாடிருக்கான் ?”  பாடியவர் அப்போதைய மிகப் பிரபல பாடகரான கண்டசாலா.  தெலுகு பாட்டுக்காரர்.  அவர் வாயில் உலகே உல்க்கேன்னு நுழஞ்சிருக்கு.  இப்படி ராஜா பல தகவல் துணுக்குகளை அள்ளித் தெளித்தார்.  எல்லாம் பன்னீர் தெளியல்கள் :)
குலேபகவாலி படத்துக்காக அப்போதைய சூப்பர் ஸ்டார் எம் ஜி 
ஆருக்காக மயக்கும் மாலை பொழுதே நீ போ போ என்று மிக மிக மென்மையான ஒரு பாடலை வைக்கிறார்கள்.  இப்ப இருக்க சூப்பர் ஸ்டாருக்கு அப்படி வைக்க முடியுமா ?  தியேட்டர்ல ஒரு பய ஒக்கார மாட்டான்.  மொதல்ல அந்த சூப்பர் ஸ்டாரே ஒத்துக்க மாட்டாரு(எதிரே சூப்பர் ஸ்டாரை வைத்துக் கொண்டே இந்த கலாய் ;) )
போக இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி .மகாதேவன்.  ஆனா படத்துக்கு பொருத்தமா இருக்கு உபயோகிக்கலாமா என எம் எஸ் வியைக் கேட்கிறார்கள்.  எந்த ஈகோவுமில்லாமல் அதை ஏற்கிறார் எம் எஸ் வி.  அதுதான் எம் எஸ் வி.
என்னை மிக மிக ஈர்த்த பாடல் தங்க ரதம் வந்தது வீதியிலே......!  இதில் சுசீலா பாடும் பகுதிகளைப் பாடிய ஸ்வேதா மோகன் சொக்க வைத்தார்.  ஆனால் பாலமுரளி கிருஷ்ணா பகுதிகளைப் பாடிய ஸ்ரீராம் ம்ம்ம் ஓக்கேதான்.  சில பிழைகள் தென்பட்டதெனக்கு.  அந்தப் பாடலில் மாங்கனி கன்னத்தில் தேனூற, இரு மைவிழிக் கிண்ணத்தில் மீனாட பகுதிகளை, அதற்கடுத்த வரிகளை மட்டும் பால முரளி குரலில் கேட்டுப்பாருங்கள்.  இசைத்தெய்வத்தை தீண்டிய இன்பம் கிட்டக்கூடும் !

Image result for balamuralikrishna

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது(பாவ மன்னிப்பு) பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.  பார்க்கும் போதெல்லாம் பொட்டு இல்லாமல் இருக்கும் தேவிகாவின் அழகான நெற்றியை ரசிப்பதிலேயே அழகான பல வரிகளை சரியாக நான் உள் வாங்கவில்லை போல ;)  கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் என்று ஒரு பெண் ஆணைப் பார்த்து பாடும்போது, அப்படி பார்க்கப்படும் ஆண் எவ்வளவு பாக்கியசாலி ?


Image result for devika pavamannippu

காதலின் ஆரம்பகட்ட செயல்பாடு இது.  ஆண்களுக்கு எப்போதுமே கட்டவிழ்ந்த கண்கள்தான்.  வகைதொகையில்லாமல் எங்கும் மேயும்.  ஆனால் பெண்களுக்கு கட்டவிழ்ந்த கண் தனக்குப் பிடித்தமானவனை மட்டுமே தேடும்.  அப்படி அலைபாய்ந்து தேடி, தன்னுடையவன் மேல் உறையும்போது, அந்த ஆணுள் ஜிவ்வென்று ஒரு ராக்கெட் சீறிக் கிளம்பும் பாருங்கள்(இங்கு பெருமூச்சு ஸ்மைலி :( )
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிதான் இசையின் தன் ஆரம்பப் பாடம் என்றும், அந்தப் பாடலை தான் 13 - 14 வது வயதுகளில் கேட்டதாகவும், அந்தப் பாடலின் பொருளை விளக்கியும் ராஜா அருமையாகப் பேசினார்.  டிவியில் ஒளிபரப்பும் போது அவசியம் காணுங்கள்.  எம் எஸ் வி இழப்பு உங்களை குலுங்கி குலுங்கி அழவும் வைக்கக் கூடும் !
நெஞ்சம் மறப்பதில்லை இந்தப் பாடலை மேடையில் யார் பாடினார் என எனக்குத் தெரியவில்லை.  அய்யோ உருக்கி எடுத்தார்.  இந்தப் பாடலின் ஒலிப்பதிவைக் காணவந்த இசைமேதை நெளஷாத் அப்படியே திகைத்துப்போனாராம், இத்தனைக்கும் எம் எஸ் வியின் மானசீக குருவே நெளஷாத்தானாம் !
விஸ்வநாதன் வேலை வேணும் பாடலை விட, ராஜா சினிமா வரும்முன், கம்யூனிசக் கொள்கைப் பிரச்சாரப் பாடலுக்காக அதை டைமிங்காக மாற்றி மேடைகளில் பாட இயற்றிய தன் அண்ணன் பாஸ்கரைப் பற்றி அவ்வப்போது சொன்னது  நன்றாக இருந்தது.  அப்ப அரிசிப் பஞ்சம்  தலைவிரித்தாடிக் கொண்டிருந்த சமயமாம்.  அதற்கான பொறுப்பில் மத்தியில் இருந்தவர் சி. சுப்ரமணியம்.  முன்னால் வரும் வரிகளை அழகாகச் சொல்லிக்கொண்டே ‘சுப்ரமணியம் சோறு வேணும்’ என்று முடித்தபோது அரங்கமெங்கும் உற்சாக கைத்தட்டு !  


அதே போல மேலே பாலிருக்கும், பழமிருக்கும் பாடலுக்கேற்றவாறு.....

ஏர் பிடிக்கும் 
உழவனுக்கு 
நிலமிருக்காது 
இயந்திரம்போல் உழைத்திடுவான் 
பலனிருக்காது ! 

என்று அப்போதைய விவசாயிகளின் நிலைமையை கம்யூனிஸ பார்வைகொண்டு தன் அண்ணன் எழுதியதை அழகாக நினைவு கூர்ந்தார் ராஜா !
ஊரு சனம் தூங்கிருச்சி இந்த ஒரு பாட்டுதான் ஓரளவு லேட்டஸ்ட் சாங்க்.  ஆனா எனக்கு ’தேடும் கண்பார்வை தவிக்க’ பாடல்தான் ரொம்ப ஃபேவரைட்.  அப்படில்லாம் போட முடியாது, எனக்குப் பிடிச்ச பாடல போடறதுதான் பேச்சு,  சரி சரி உங்க விருப்பத்துக்காக ஒரு பாட்டு வேணா போடுறேன்னு வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற எஸ் பி பியின் மாஸ்டர் பீஸை முகேஷ் பாடினார், அருமையாகவே பாடினார்.   இங்கு ஒரு தமாஷ்.  ஒரு ரசிகர், எங்கே நிம்மதி பாடலை தம் விருப்பமாகக் கூறினார்.  யோவ் அதுக்கு 300 + ஆர்க்கெஸ்ட்ரா வேணும்ய்யா எனக்கு ?  விளையாட்டா என்ன ?  அப்பக்கூட அத அதே அழகுல மேடைல போட்டுற முடியாது.
பல நூறு தடவை அப் பாடலைக் கேட்டிருந்த போதும், இதற்குப் பின்னர் கேட்ட போதுதான், அந்த இசை பிரம்மாண்டத்தை உணரவே முடிந்தது.  மனதுள் பிரவாகமாய் பாயும் குழப்பம், உளைச்சல், பயத்தை அவ்வளவு வயலின்கள் வைத்து வெளிக்காட்டியிருந்திருப்பார் மெல்லிசை மன்னர் !

Image result for t.m.soundararajan


காவடிச் சிந்து இசையில் மெட்டிய பாடல்  ’ஆடை கட்டி வந்த நிலவோ’ டி.ஆர். மகாலிங்கமும், கோமளாவும் பாடிய பாடல்.  காவடிச் சிந்து எனும் நாட்டுப்புறப் பாடலிசையோடு, மேல் நாட்டுப் பாணி இசையைக் குழைத்துக் கொடுத்த, அந்த இசை நுட்பத்தை சொன்னதோடு  நில்லாமல், இசைக்கவும் செய்தபோது சிலிர்ப்பு.  அதே போல இறுதிப் பாடலாய் அமைந்த ’பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்பாயோ’  நிச்சயம் இந்தப் பாடலைப் பாடிய டி எம் எஸ் குரலோடு யாரையும் கற்பனையே பண்ண முடியாது என்றாலும் முகேஷ் கிட்ட நெருங்கிப் பார்த்தார்.  அதே போல் சுசீலா குரலையும் பாடிய பாடகி.


Image result for ilaiyaraaja

இளையராஜாவிடம் மிகப் பிடித்த அம்சம், ரசிக்கும் கூட்டம் அப்படியே மெய்மறந்து கேட்கிறது என்றால் கச்சேரியை நிறுத்த மனமில்லாமல் போய்க்கொண்டே இருப்பார்.  நேரத்தைப் பற்றி கவலையே பட மாட்டார்.  ஆனாலும் பத்துமணிக்கு மேல் பாடுவது இப்போது சாத்தியமில்லாத ஒன்று என ஆகிப்போனதால் பாதி மனத்தோடே  நிகழ்ச்சியை முடித்தார்.  ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொடக்கத்தில் வந்து, இறுதிவரை ரசித்துச் சென்றால் எந்தப் பகட்டுமில்லை, கோஷமில்லை, துதிகளில்லை.  தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்று அருகிலிருப்பரைக் கிள்ளிப் பார்த்து திட்டு வாங்கினேன் ;)
’சாமி உங்க விருப்பம் ஏதுமிருக்கா ?’ என்று ரஜியைப் பார்த்துக் கேட்டார்.  அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று டிவியைப் பார்க்கும்போது மட்டுமே தெரியும்.  ஆனால் மேடையேறி ரஜினி பேசும்போது ’என் சாமிக்கு இந்தச் சாமி நல்லா அஞ்சலி செலுத்துவார்ன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும் ஞானியோட பாட்டுல இந்த ஞானிக்கு எந்தெந்த பாட்டு பிடிச்சிருக்கும்ன்றதக் கேக்கத்தான் ஓடோடி வந்தேன்’னு ரசிகர்களுள் ரசிகராகச் சொன்னதே அலாதி.  


Image result for rajinikanth

மேடையில் வைத்து ரஜினி முன்னிலையிலேயே விஸ்வநாதன் குடும்பத்தாருக்கு காசோலை வழங்கப்பட்டது.  எங்கப்பா கூட பிறந்தவங்க யாருமே இல்ல, ஆனா வாய்க்கு வாய் அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு அவரோட தம்பியா ராஜா சார்தான் இருந்தாரு, மிக்க நன்றி என்று தழு தழுக்கப் பேசினார் மெல்லிசை மன்னரின் மகள்.
ஞாநிகள் இது ஏதோ தான் செய்த கலகத்தால் விளைந்தது என்றெண்ணக் கூடும், உங்களால் அப்படி எண்ண மட்டுமே முடியும்.  ஐ மீன் சாதிப்பவன் எண்ணுவதோடு, பேசுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. செய்வான், செஞ்சான் டாட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக