பெரிய பருப்பு இப்ப அரிய பருப்பு !!!

பொதுவாக ’பெரிய பருப்புடா’ என்கிற சொலவடையை பிஸ்தா, பாதாம் பருப்புகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்துவார்கள். ஆதிகாலத்திலிருந்தே இந்த பாதாம் பிஸ்தா பருப்புகள் செல்வந்தர்களுக்கு மட்டுமே உரியவை என்பதால் பெரிய பணக்காரண்டா அவர் என்பதைக் குறிக்க இந்த பருப்புச் சொலவடை தோன்றின.  



Image result for toor dal

ஆனால் கிட்டத்தட்ட இன்று, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்புகளும் இந்தப் பணக்காரப் பருப்புப் பட்டியலில் சேர்ந்துவிட்டன.  திடுமென இந்த ஆறு வருடங்களில்தான் பருப்புகள் இத்தகைய இமாலய விலைக்கு உயர்வதும், சமயங்களில் ஆல்ப்ஸ் மலை அளவு சரிவது(!!!)மாகவே தொடர்ந்து வருகின்றது.







நம் நாடு விடுதலைக்கு முன்னர் இங்கு அரிசிச் சோறு, பருப்புச் சாம்பார், இட்லி, தோசை போன்றவைகளெல்லாம் பணக்கார வீட்டுச் செல்லங்கள் ;)  இப்போதும் விஷேசங்களில் பந்திக்கு நாம் முந்திச் செல்ல பிரதான காரணி நம் ஜீன்களில் இவைகளெல்லாம் அரிய சாப்பாட்டுப் பண்டங்களாகப் பதிக்கப்பட்டு கடத்தி வரப்பட்டிருப்பதால்தான் ;) 





இப்போதைய தலைமுறைகளுக்கு  நம்முடைய இத்தகையச் செயல்கள் சற்று முகச்சுளிப்பைத் தந்திருக்கலாம்.  ஆனால் பருப்புலகில் இத்தகைய நிலை நீடித்தால் அவர்கள் நம்மை விட மோசமாக பந்திகளில் நடந்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துப் போனதுதான் சோகம் ! 







விடுதலைக்குப் பின் மக்களாட்சியால் நிகழ்ந்த பசுமைப் புரட்சி மாயங்களாலும், விவசாயச் சலுகை ஊக்குவிப்புகளாலும், விவசாயிகளின் கடுமையான உழைப்பாலும் அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய் கனிகள் அமோகமாக விளைவிக்கப்பட்டு நாடு பல்லாண்டுகளாக மக்கள்தொகை எவ்வளவு கூடினாலும் தன்னிறைவு பெற்றதோடு நில்லாமல் பல விவசாயப் பொருட்களை, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கணிசமான அன்னியச் செலவாணிகளும் நமக்குக் கிட்டின.






ஆக, விவசாயிகள், மக்களாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், இடை வர்த்தகர்கள், கொள்முதல் வியாபாரிகள் எல்லோருமே நாட்டுக்காக, மக்களுக்காக அயராது பாடுபடுவர்களாக, நல்லவர்களாக இருந்தாலும், இந்த எழவெடுத்த பருவமழை அடிக்கடி மக்கர் செய்து நமக்கு பெரிய வில்லனாக உருமாறும்.






நாடு விடுதலையடைந்து 68 வருடங்கள் நிறைவாகிவிட்ட நிலையிலும் நாட்டு விவசாய நிலங்களில் பாதிக்கும் மேல் வானம் பார்த்த பூமிதான். விதைக்க ஆரம்ப மழை வேண்டும்.  விதைத்தது முளைக்க அடுத்த மழை வேண்டும், முளைத்தது செழிக்க இடைக்கால மழை வேண்டும், செழித்தது அறுவடைக்குத் தயாராகும் போது துளி மழை கூட பெய்யக் கூடாது.  ஆனால் இப்படித்தான் பல சமயங்களில் விவசாயிகளின் கனவுகளுக்கேற்ப பருவமழையும் நன்கு ஒத்துழைக்கும்.   






திடீரென பைத்தியம் பிடித்து இந்த பருவமழை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, பத்து வருடங்களுக்கு சில முறையென அப்படியே தலைகீழாக நடந்து கொ(ள்ளு)ல்லும்.  விதைக்கும்போது நிலம் சேறாகும் அளவு மழை வேண்டுமென்றால் லேசாகத் தூறிவைக்கும்.  முளைக்க வேண்டிய மழை நன்கு பெய்துவைக்கும், ஆனால் அவைகள் செழிக்கத் தேவையான மழையிருக்காது.  குத்துயிரும் குலையுயிருமாய் நீரில்லாமல் சொங்கிக் கிடக்கும் பயிரை அறுக்கப் போகும்போது சோவென்று கொட்டித் தொலைக்கும்.  வேர் அழுகி முக்கி முக்கி அரைகுறையாய் விளைந்ததும் நாசமாகும்.






பொதுவாக இப்படிப்பட்ட ஒரு முட்டாள் மழையை நாட்டு நலன் வேண்டும் எவரொருவரும் விரும்பவே மாட்டார்கள்.  ஆனால் இப்படியான ஒரு வில்லனை ஒரு சிலர் மட்டும் பெரும் தவம் செய்து வேண்டுவார்கள்.  வருடா வருடம் வேண்டுவார்கள்.  என்றாவது ஒரு வருடம் இந்த முட்டாள் மழை அவர்களின் தவத்துக்குப் பணிந்து வரமளித்து விடும்.  பெருங் கோடீஸ்வர பதுக்கல்காரர்கள் இவர்கள். 







இது பரம்பரை பரம்பரையாக சர்வ சாதாரணாமாக இங்கு நடைபெற்று வந்த ஒன்றுதான், பருவகாலங்களில், பண்டிகை காலங்களில் இந்த பதுக்கல்காரர்கள் விஸ்வரூபமெடுப்பார்கள்.  இம்மாதிரி மழை ஏமாற்றிய காலங்களில் விவசாயிகளுக்கு முன் பணத்தை கொடுத்து அரைகுறையாய் விளைந்தவைகளை சொத்தை எனக் காரணம் காட்டி சல்லிசாக வாங்கி கிட்டங்கிகளில் இருப்பு வைத்து அடைத்துவிடுவார்கள்.







இடை வர்த்தகர்கள், வியாபாரிகள் சுதாரிக்கும் முன்னர் இவர்கள் துணிந்து விளை பொருட்களுக்கு விலை வைத்து வாங்கி பதுக்கிவிடுவார்கள்.  பிறகு பருவமழை பொய்த்ததால் குறிப்பிட்ட பயிர்களின் விளைச்சல் மிகக் குறைவு இன்ன விலைக்கு உயரும் எனப் பரப்புவார்கள்.  பதுக்கிய சரக்குகளை ’எந்த விலை கொடுத்தாலும் ’இல்லை, காலியாகி விட்டது’ என்று நம்ப வைப்பார்கள்.  







பிறகு இடை வர்த்தகர்களும், வியாபாரிகளும் பெருந்தவிப்புக்குள்ளாகி ’எந்த விலையானாலும் சரி, சரக்கு கிட்டினால் போதும்’ என்கிற நிலைக்கு வரும்போது பதுக்கிய சரக்கில் பாதியை உச்ச விலை நிர்ணயித்து காலி செய்வார்கள்.  இனி அரசு பதுக்கல் சோதனை, கீதனை வரக்கூடும் எனும் ஒரு ரகசிய சேதி கிட்டும் சமயம் பார்த்து, இன்னும் கொஞ்சம் உச்சம் வைத்து எல்லாவற்றையும் காலி செய்து அடுத்த பருவம் பொய்க்க வேண்டுமென தவம் செய்யப் போய்விடுவார்கள்.







ஆனால், இதெல்லாமே பாபர் அக்பர் காலக் கதைகள் என்பதுதான் இங்கு எதிர்பாராத திருப்பம்.  ஆகவே இங்கு நிற்க ;)






மில்லேனியம்(கி.பி.2000) பிறந்த பிறகு நாட்டின் எல்லாது துறையிலும் வியத்தகு புரட்சி ஏற்பட்டது.  நம்பினால் நம்புங்கள்  நகரங்களில் கி.பி 1999ல் சதுர அடி 1000 ரூபாய்க்கு இருந்த இடம் 2009ல் 10000 ஆகியிருந்தது 10 மடங்கு உயர்வு.  தினம் 30 ரூபாய் மட்டுமே இருந்த அடிப்படைக் கூலி கூட 300 ரூபாயாக அதிகரித்தது.  இப்படியான இந்த பத்து மடங்கு உயர்வு, கடந்த பத்துவருடங்களில் பல துறைகளில், பல நிலைகளில் ஏற்பட்டதுதான். சினிமா டிக்கெட், பெட்ரோல் விலை, உணவுப் பொருட்களின் விலையைக் கூட உற்று நோக்கினால் இது விளங்கும்.  இருந்தாலும் நில விலையோடும், பெட்ரோல் விலையோடும், சினிமா டிக்கெட் விலையோடும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்க முடியாது, பார்க்கக் கூடாது.






ஏனெனில் இந்த அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோர் எல்லோரும் பல நிலைகளில் வாழும் மக்கள்.  தினம் 100 ரூபாய்க்கு குறைவாய்ச் சம்பாதிப்பவனும், தினம் ஒரு கோடி சம்பாதிப்பவனும் ஒரே விலையில் ஒரு பொருளை நுகர வேண்டுமென்பது பெருங் கொடுமை.  சினிமாவோ, பெட்ரோலோ, சொந்த நிலமோ இல்லாமல் கூட நிம்மதியாய் தூங்கி உயிர் வாழ முடியும், ஆனால் உணவில்லாமல் தூங்க முடியுமா ???







இப்படியான ஒரு சூழ்நிலையில் எல்லா விளைபொருட்கள், மெட்டல்களின் வர்த்தக முன் பேரங்களை ஆன்லைன் வணிகத்தில் நுழைத்தது இந்திய(காங்கிரஸ்) அரசு.  விளை பொருட்களின் உண்மை நிலையை………….அதாவது டிமாண்ட் என்ன ?  மற்ற ஊர்களில் விலை என்ன ?  எதிர்கால விலை என்ன ? என்பதை சாமானிய விவசாயிகள், பொதுமக்கள் கூட அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் நியாயமான நோக்கம்






ம்க்கும், அரசு என்னமோ மக்கள் நலனுக்காக பாடுபடும்தான், அதைக் கெடுக்கத்தான் ஆட்கள் இருக்கிறார்களே ???  எனவே இதன் பின்விளைவு அதி பயங்கர மோசமானதாய் இருந்தது.  வரம் கொடுத்த கடவுளின் தலையிலேயே கைவைத்துப் பார்க்கத் துணிந்தனர் அதோ மேலே பத்து பத்திகளுக்கு முன் வந்த பதுக்கல்காரர்களுக்கு இந்த முன்பேர வர்த்தகம் பழத்தை உரித்துத் துண்டுகளாக்கி, பிழிந்துக் கொடுத்ததோடு போதாது புனல் வைத்து அவர்கள் வாயில் அந்த ரசத்தை ஊற்றிவிட்டதைப் போலவும் ஆனதென்பேன் !






விவசாயிகள் அல்லது பொதுமக்களுக்கு உதவும் நோக்கோடு செயல்பட நினைத்த அந்த முன்பேர வர்த்தகம் தொடங்கிய சில நாட்களிலேயே சூதாடிகளால் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்டது.  அரசு நிர்வாகமும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாட்டில் பருவ மழை குறையும், இப்போது இந்தப் பொருளுக்குத் தட்டுப்பாடு என பொதுவில் உளற ஆரம்பித்தது.  அம்பானி, அதானி, டாடா, கோத்ரெஜ், ஐடிசி போன்ற சர்வதேச நிறுவனங்கள் எல்லாம் இந்த முன் பேர வர்த்தகத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கின.  நான் முன்பு சொன்ன காலகட்டங்களில் வெறும் கோடீஸ்வரர்களாக மட்டுமே இருந்த அந்தப் பதுக்கல்கார்கள் இப்போது இந்த ராட்சத பண முதலைகள் முன் கொசுக்களாகிப் போனார்கள்.  கொசு என்றால் டெங்கு கொசுக்கள், மலேரியக் கொசுக்கள்.  






அந்த ராட்சத முதலைகள் ஒரு வருடம் கரும்புத் தட்டுப்பாட்டில் கோடிகளைக் குவிக்கும், சர்க்கரைகளை லட்ச லட்ச மூட்டைகளாய் கிடங்குகளில் பதுக்கும்.  அடுத்த வருடம் கரும்பு நன்கு விளைந்திருக்கும், ஆனால் இவர்கள் அதைக் கை கழுவி விட்டு பருத்திக்குப் போயிருப்பார்கள்.  இவர்கள் உயர்த்தி வைத்த விலையை நம்பி வேறெந்தப் பயிர்களையும் தவிர்த்து கரும்பை விளைவித்த விவசாயி கொள்வாரில்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து சாவான். சரி அது எப்படி அந்த பண முதலைகளுக்கு சாத்தியமாகிறது எனப் பார்ப்போம். 






பருத்தி இம்முறை சற்று தேவையை விட குறைந்த உற்பத்தி எனக் கணித்துவிடும் இந்த ராட்சத நிறுவனங்கள், பருத்தி விளைந்த நேரத்தில் முன் பேர வர்த்தகத்தில்(ஆன்லைன் எம்சிடிஎக்ஸ் போன்ற பங்கு மையங்களில்) விலையை ஏகமாக உயர்த்தி விட்டு விடுவார்கள். அது தவறான விலை என நினைத்து வியாபாரிகள் பருத்தியைக் கொள்முதல் செய்யத் தயங்கும் நேரத்தில்………… நல்ல விலை கொடுத்து இந்த நிறுவனங்கள் அள்ளி குடவுன்களில் பதுக்குவார்கள்.  இதனால் விவசாயிகளுக்கு லாபம்தான் ! 






ஆனால் இந்த சூதாட்ட உத்தி தெரியாமல் மீண்டும் மீண்டும் அதே பருத்தியை விதைத்து உற்பத்தி செய்யும்போது, அமோக விளைச்சல்களின் போது இவர்களுக்கு பழைய விலை கிட்டாது, பிறகென்ன ? உரிய விலை கூடக் கிடைக்காமல் அதிக வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து பயிர்வித்த பொருளை நடு ரோட்டில் கொட்டிவிட்டு தூக்கு போட்டு சாவான்.  





அந்த ராட்சத சுயநல நிறுவனங்கள் ஒருபோதும் இவர்களுக்கு அவ்வமயத்தில் உதவ முன்வராது.  அவர்களுக்கு எந்தப் பொருள் தட்டுப்பாடோ அதில்தான் கவனம்.  இப்படியாக அவர்கள் அடுத்த வருடம் தங்கம், அதற்கடுத்த வருடம் பெட்ரோல் அதாவது கச்சா எண்ணெய், ஒரு வருடம் உணவு எண்ணெய், ஒரு வருடம் வெங்காயம், ஒரு வருடம் உருளைக் கிழங்கு, ஒரு வருடம் தக்காளி, ஒரு வருடம் அரிசி, இப்போது சில வருடங்களாக இந்த பருப்புவகைப் பயிர்கள் என இந்தப் பணத் தவளைகள் தாவித் தாவி சூதாடிக் கொண்டிருக்கின்றன.  






கி.பி 2004 – 2009 இந்த ஆன்லைன் சூதாட்ட வணிகத்தால் திடுமென தினமும் விளைபொருட்கள் உயர்வதை சராசரி இந்திய நியாய வியாபாரிகளாலும், மக்களாலும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.  அவர்கள் இந்த புது ஊழலை எதிர்கொள்ள முடியாமல் கொதித்த வேகத்தில் உடனடியாக காங்கிரஸ் அரசு பகுதி பகுதியாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்த வணிகச் சூதாட்டத்தில் இருந்து விலக்கியது.  ஆனால் ருசி கண்ட ஓநாய்கள் இந்த அரியவகை ருசியான கோழிகளை விட்டுவிடுமா என்ன ????






உச்சகட்டமாக 2009 களில் சற்றே அந்த வில்லப்பருவ மழை வந்துவிட, இதோ இப்போது பத்திரிகைகளில் வருவது போலவே துவரம்பருப்பு ஜோக்குகள் பெரியளவில் வந்தது.  அப்போது கிலோ 100 ரூபாய் அளவு துவரம் பருப்பு வரலாறு காணாத உயரம் தொட்டவுடன், மத்திய அரசு மானிய விலையில் மக்களுக்கு பருப்புகளையும் வழங்க மாநில அரசுகளைப் பணித்தது.






அதானி, அம்பானிகளுடன் தமிழக அரசும் இந்தப் பருப்புவகைப் பயிர்கள் விளையும் இடங்களுக்கே நேரில் போய் பருப்புவகைகளை 100 ரூபாய்க்கு வாங்கி மக்களுக்கு 40 ரூபாய்க்கு கொடுத்தது.  மக்களின் அதிக நுகர்வான துவரம் பருப்பு & உளுந்தம் பருப்புகளுக்கு மட்டுமே இம் மானியம்.  பாசி பருப்பு மற்றும் கடலை பருப்புகளுக்கு இத்தகைய அவலம் அவ்வளவாய் நேர்வதில்லை, காரணம் இவைகளுக்கு மாற்றுப் பயிர்வகைகள் உண்டு, போக பாசிப்பயிறு அறுபது நாட்களில் விளையும் பயிர் என்பதால் எங்காவது விளைந்த வண்ணமிருக்கும்.  



அதே போல் கடலைப்பருப்புகளை அரைப்பதில் கிடைக்கும் கடலை மாவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் பட்டாணி மாவு மாற்றாக கிட்டுகிறது. இதனால் என்ன பதுக்கினாலும் இந்த இரண்டு பருப்புவகைகளுக்கு இதுவரை வரலாறு காணாத உச்ச விலை அந்தஸ்துகள் கிட்டுவதில்லை, அரிதாகக் கிட்டினாலும் நீடிப்பதில்லை.. 





எனவேதான் அதிக மற்றும் அத்தியாவசிய நுகர்வான துவரம்பருப்பு & உளுத்தம்பருப்புகளை மானிய விலையில் நிரந்தரமாக கொடுக்க அரசுகள் உத்தேசித்தன.  துவரம் பருப்புக்கு கூட ஒரு சில மாற்று துவரம் பருப்பு மாதிரி பயிர்கள் உள்ளன.  ஆனால் இந்த உளுந்து இருக்கிறதே ? அது ஓர் அபூர்வப் பிறவி.  உளுந்து கொடுக்கும் பசைத்தன்மை மட்டும் இல்லாவிடில் நமக்கு இட்லி, தோசை, மெதுவடை, அப்பளம், முறுக்குகள் இல்லவே இல்லை.  உளுந்து மிகவும் உடல் வலிமை தரும் அருமருந்து எனவும் சொல்லலாம். 





அப்போது இப்படி மானிய விலையில் மிக நியாயமாக மக்கள் அனைவருக்கும் இந்த பருப்புவகைகளைக் கிட்டும் படி செய்த மாநில அரசால், பதுக்கல்காரர்கள் மிகவும் நொந்து போக ஆரம்பித்தனர்.  அவர்கள் பதுக்கி வைத்த பொருட்களுக்கு உரிய விலை கிட்டாமல் அல்லாட ஆரம்பித்தனர்.  அதனால் 2010 களில் மீண்டும் துவரம்பருப்பு, உளுத்தப்பருப்பு மானிய விலையைக் காட்டிலும் வெறுமனே கிலோ 20 30 ரூபாய்கள் மட்டுமே அதிகமாக சந்தைகளில் இருந்தன.  அதாவது ரேஷனில் கிலோ ரூ.40 என்றால் சந்தை விலை கிலோ 70 அல்லது 80.  தேவைப்படும் மக்களுக்கு மாதம் ஒரு கிலோ மானிய விலையிலும் சரியாகக் கிட்டிவிட……..பருப்புவகைகளை வைத்து சூதாடிய முதலைகள் சற்றே துவண்டன.  






2011 ஆரம்பத்தில் இப்போதைய நிலையைப் போல் பதுக்க நினைத்த மாத்திரத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் அதிரடி அறிவிப்பைச் செய்தார்.  அவர்கள் விலையைக் கூட்டினால் கூட்டிக் கொண்டு போகட்டும், நான் குறைக்கிறேன் இனி பருப்பு கிலோ ரூபாய் முப்பது என்றார்.  போச்சு.






சூதாடிகள் இனி பருப்பு முன்பேர மற்றும் பதுக்கல் வர்த்தகத்துக்கே வரக்கூடாது என ஒதுங்கிப் போயினர் 





ஆஹா, அப்படி  நிரந்தரமாக ஒதுங்கிப் போக அவர்கள் ஒன்றும் கேணைகள் அல்லவே, அப்படி ஒதுங்கிவிட்டார்கள் என நம்பிய என்னைப் போன்ற, நம்மைப் போன்ற சாமானியர்கள்தான் கேணைகளாகிப் போனோம் 




1.) முன்பேர வர்த்தகத்தில் பருப்புவகைப் பயிர்களை நீக்கியாயிற்று.



2.) மானிய விலையில் மாதந்தோறும் பருப்புகளை வழங்கப் போகிறோம்.


இனி என்ன விலை உயர்ந்து விடப் போகிறது ?  


இவ்வளவு நாள் நாக்கைச் சப்புக்கொட்டிப் பதுக்கி கொள்ளையடித்த பெரு நிறுவனங்கள் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டன என்று எல்லோரையும் நம்ப வைக்கப்பட்டது.


இவ்வளவு பெரிய பருப்பு அல்லது மளிகை நுகர்வுச் சந்தையை முகர்ந்து விட்ட அம்பானி, அதானி, டாட்டாக்கள், பிர்லாக்கள் சில்லறை மளிகைக் கடைகளை ஊரெங்கும் திறந்து நிரந்தரமாக இந்த பருப்பு உற்பத்தியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டது.





இங்கு தமிழக விவசாயத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும்.  நமக்கு நிரந்தரமான ஜீவ நதிகள் ஏதுமே கிடையாதென்பதால்(தாமிரபரணி விதிவிலக்கு) 75 விழுக்காடு வானம் பார்த்த பூமிதான்.  பருப்புவகைப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கெல்லாம் அதிக நீர் தேவை.  எனவே நம் மண் சார்ந்து விளையும் பயிர்களையே இங்கு விவசாயிகள் பயிர் செய்கிறார்கள்.  25 விழுக்காடு வளமான டெல்டா அல்லது திருநெல்வேலி மாவட்டங்களில் நெல், சமயங்களில் பாசிப்பயிறு & உளுந்து பயிறு வகைகள் பயிர் செய்யப்படுகின்றன.  






துவரைச் செடி ஐந்து அல்லது ஆறு மாதங்கள் விளையும் பயிர்வகை.  அதன் செடி கிட்டத்தட்ட ஆறு அடிகளுக்கு மேல் வளரும் தன்மை கொண்டது.  அது வளர வளர அமோக நீர் தேவை.  இதற்கான ஒரு விழுக்காடு சூழ்நிலையும் இங்கு இல்லாததால் இங்கு துவரை உற்பத்தி நம்முடைய ஒரு சதவிகித தேவையைக் கூட தீர்ப்பதாக இல்லை.  உளுந்து பாசிப்பயிறு உற்பத்தியும் கூட நம்முடைய இரண்டு அல்லது மூன்று மாதத் தேவையைக் கூட திருப்தி படுத்த முடியாதவைகள்.  கடலைப்பருப்பு வகைக்காக பயிறுக்கும் இதே கதி.  ஆக இந்த நான்கு வகைப் பருப்புவகைகளுக்குமே நாம் அண்டை மாநிலங்களையோ, அன்னிய நாடுகளையோத்தான் நம்ப வேண்டி வருகிறது.



இந்த உண்மையை ஆன்லைன் கேம்ப்ளிங் மூலம் தெளிவாக அறிந்துக் கொண்டன இந்த ராட்சத சர்வதேச நிறுவனங்கள்.  



அதே போல இனி மானிய விலையில் பருப்புகளை நாம் கொடுக்காவிட்டால் இவர்கள் மக்களை மிகவும் வெறுப்பேற்றித் தொலைப்பார்கள் என்று மத்திய மாநில அரசுகளும் உணர்ந்துக் கொண்டன.



எச்சரிக்கை :-




இனி கீழே தொடர்பவைகளுக்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. பத்திரிக்கை & பிற ஊடகச் செய்திகள், நேரடி வியாபார அனுபவங்கள் மூலமாக கிரகிக்கப்பட்டவைகள்.  எனவே இதை ஆழமான பார்வை என எடுத்துக்கொள்ளலாம், மேலோட்டமான அவதானிப்பு எனவும் நம்பிக் கொள்ளலாம்.



ஆக, மானிய விலையில் பருப்புகளை கொள்முதல் செய்ய அதுவரை கிலோவுக்கு வெறும் ஒரு ரூபாய் அல்லது ரெண்டு ரூபாயை மட்டும் கமிஷனாகப் பெற்றுக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் (இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  செவிவழிக் கேள்விதான் எனினும் பருப்புகளை அரசுக்கு வழங்கக் கோரப்படும் டெண்டர்கள் உங்களுக்கு பாஸ் பண்ண வேண்டுமென்றால் இதெல்லாம் அரசர் கால நடைமுறைகள்தானே ?) இந்தப் பெருமழை போன்ற பண வரவில் அடிமையாக ஆரம்பித்தனர்.  ஆசை பேராசையாக உருமாறி கிலோவுக்கு 3, 4, 5 விலை உயர உயர 10 வரை உயர்ந்துவிட்டது என்கிறார்கள்.






2010- 2012 களில் மாதத் தேவைக்கு மூன்று லட்சம் கிலோ துவரம் பருப்பு, 3 லட்சம் கிலோ உளுத்தம் பருப்பு டெண்டர்கள் கோரப்பட்டன.  அப்போது கிலோவுக்கு ரூபாய் 1 அல்லது 2 லஞ்சம் என வைத்துக்கொண்டால் கூட மாத லஞ்சம் தோராயமாக 6 முதல் 12 லட்சம்.  இதை பலர் பகிர்ந்துக் கொள்வர்.  வருடக் கையூட்டு வருவாய் 72 லட்சம் முதல் 1 கோடியே 44 லட்சங்கள்.  இந்தத் தொகையை அதிகபட்சமாக தமிழகம் முழுவதும் 500 பேர் பகிர்ந்துக் கொள்வார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். தோராயமாக அவர்களுக்கு மாதம் பருப்புவகைக் கொள்முதல்களுக்கு மட்டுமே உபரி வருவாய் மாதம் ரூபாய் 2000 - 2500 வரை சராசரியாக வந்துக் கொண்டிருந்தது.



இப்போது இதில் ஒரு கொடுமையான கொள்ளை ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது ஜெயா அரசு, அல்லது அப்படிச் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்கள் !





மாதம் மாதம் பருப்புகளுக்கு டெண்டர் கோருவது கடுமையான குழப்பத்தையும், கால தாமதத்தையும், விலை வித்தியாசங்களையும் தருகிறது எனவே இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டெண்டர் என்று மாற்றி இப்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறை டெண்டர் என்று இதைப் பிரம்மாண்டமாய் ஆக்கிவிட்டது.  இதிலுள்ள சதுரங்க வேட்டைச் சாகஸங்கள் என்னென்னவெனப் பார்ப்போம்.





ஒரு மாதத் தேவைக்கு மூன்று லட்சம் கிலோ பருப்புகளுக்கே பத்திலிருந்து இருபது பேர் வரை டெண்டர் கோருவார்கள்.  பல விலை வித்தியாசங்கள் இருக்கும்.  யார் குறைந்த விலை கோரியிருக்கிறாரோ அவருக்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் கிலோக்கள் வரை சப்ளை செய்ய அனுமதி வழங்கப்படும்.  அவருக்கு அடுத்து யார் யார் சற்றே விலை அதிகரித்துத் தந்திருக்கிறார்களோ அவர்களுக்கும் அதே முதல் பார்ட்டி சப்ளை செய்யும் விலையில் கொடுப்பதாகச் சம்மதித்தால் மிச்ச சொச்ச சப்ளைகள் செய்ய  அனுமதி தரப்படும்.  அறுவடைக்காலங்களின் போது இப்படிப்பட்ட சிறு டெண்டர்கள் மிக எளிதாக சப்ளை செய்யுமளவு சரக்குகள் கிட்டிவிடும்.  அறுவடை முடிந்து ஆறுமாதக் காலம் வரை கூட சின்ன அளவு என்பதால் பெரிய விலை மாறுதல்கள் இன்றி குறைந்த லாபம் அல்லது மிகக் குறைந்த நட்டத்தில் இந்த டெண்டர் சப்ளைகளை, அனுமதி கிட்டிய நிறுவனங்கள் அரசுக்கு வழங்கிவிடும்.  ஆனால் அதை மூன்று மாத ஆறு மாத டெண்டர்கள் என ராட்சததனமாக மாற்றும்போது புது சிக்கல்.



திடுமென ஒன்பது லட்சம் முதல் பதினெட்டு லட்சம் கிலோ வரைக்குமான டெண்டர் எனும்போது குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் அதை அரசுக் கிட்டங்கிகளுக்கு சப்ளை அனுப்பிவிட வேண்டும் என்ற கட்டளைக்கேற்ப விலைவாசிகள் மாறாமல் இருந்தால் மட்டுமே, இத்தகைய டெண்டர் அனுமதி கிட்டும் வியாபாரிகள் அரசுக்கு இந்தப் பருப்புகளை சரியாக வழங்க முடியும்.  இவர்கள் குறிப்பிட்ட விலைக்கு மேல் சந்தை விலை பல சமயங்களில் உயர்ந்துவிடும்போது, இவர்களால் சொன்ன விலைக்கு சப்ளை செய்ய முடியாமல் போய்விடும் அபாயமுள்ளது.  அந்தச் சமயங்களில் இவர்கள் பாதுக்காப்பு வைப்புத் தொகையாக வைக்கப்படும் பல லட்சங்கள் பறிபோகும் அபாயமும் உள்ளது.



எனவே இதுபோன்ற பிரம்மாண்ட டெண்டர்களை சிறு வியாபாரிகள் தவிர்க்க ஆரம்பித்தனர்.  அது அந்த மல்ட்டி நேஷனல் பதுக்கல் முதலைகளுக்கு மிக வசதியாகப் போனது.  ஒவ்வொரு மாநில அரசு மற்றும் ஆளும் அரசியல்வாதிகளோடு இவர்கள் எளிதாக கைகோர்த்துக் கொண்டனர்.  ராட்சத டெண்டர்களுக்கான பொறுப்பை தங்களுக்கே தருமாறு ஆக்கிக்கொண்டனர்.  பெரிய டெண்டர்களுக்கு மிக உச்ச விலை ஒன்றை நிர்ணயித்து அதை அரசு ஒத்துக்கொள்ள நிர்பந்தித்தனர்.  ச்சும்மா ஒரு பேச்சுக்கு இந்த உதாரணத்தைப் பாருங்கள்.



கடந்த ஆகஸ்ட் மாதம் துவரம் பருப்பு சந்தை விலை கிலோ ரூ.120 என இருந்திருக்கும்.  அப்போது மூன்று மாதத் தேவைக்கான கொள்முதலை அரசு செய்ய விரும்புகிறது.  ஏற்கனவே டெண்டர் போட்டு ஏற்ற இறக்கங்களில் நொந்து போன அனுபவமிக்க சிறு வியாபாரிகள் எவருக்கும் இந்தப் பெரிய டெண்டர்களில் ஆர்வமிருக்காது.  அப்படியே ஆர்வமிருந்தாலும் இப்போது நிழல் மாஃபியா சப்ளையர்கள் பிடிக்குள் போய்விட்ட அரசு இவர்களது எந்த டெண்டர்களையும் ஏதோ ஒரு காரணம் காட்டி நிராகரித்தும் விடும்.  சந்தை விலை 120 இருக்கும்போது மாஃபியாக்கள் அல்லது பெரு நிறுவனங்கள் ரூ.160 விலைக்கு ஒரு கிலோவை மூன்று மாதத் தேவைகளுக்கு தர முடியும் எனத் துணிந்து விலை நிர்ணயிப்பார்கள்.  கண்ணுக்குத் தெரிந்து இது பெரு கொள்ளையாகத் தெரியும்.  ஆனால் எந்தச் சலனமுமில்லாது அரசு அவர்களுக்கே இந்த டெண்டரை ஒழுங்கான, நம்பகமான சப்ளையர்கள் எனக் காரணம் காட்டி அனுமதிக்கும்.  இதில் அரசுக்கு என்ன லாபம் தெரியுமா ?



இதுவரை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கையூட்டு இப்போது கிலோ ஒன்றுக்கு 10 முதல் 20 வரை கூடியிருக்கிறதாம்.  போக தமிழகம் முழுக்க தோராயமாக 500 பேருக்கு கொடுக்கப்பட்ட இத்தகைய கமிஷன்கள் இப்போது போட்டி மிக குறைந்து போனதால் வெறுமனே 100 பேர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்றளவுக்கும் சுருங்கி விட்டதாம்.  ஒன்பது லட்சம் கிலோ x ரூ.20/- = 1 கோடி 80 லட்சம் / 100 = 1 லட்சத்து எண்பதாயிரம் / 3 மாதங்கள்.  ஆக, பிரதி மாதம் ஒருவருக்கு அறுபதாயிரங்கள் கையூட்டு வருவது உறுதி. 2000 ரூபாய் வருவாய் சில வருடங்களுக்குள் 30 மடங்கு கூடி விட, ருசி கண்ட டைனோசரஸ்கள் இன்னமும் குதர்க்கமாய் எவ்வாறெல்லாம் கொள்ளையிடலாம் எனச் சிந்திக்க ஆரம்பித்தன.





இனி அரசு மானியமாய் பருப்புகள் வழங்குவதை என்றுமே நிறுத்தவே நிறுத்த வாய்ப்பில்லை என்பதை அறிந்துக் கொண்ட இந்த மல்ட்டி நேஷனல் மாஃபியாக்கள் அல்லது நிறுவனங்கள் பருப்புவகை உற்பத்திக் கேந்திரங்களில் ஆரம்பத்திலேயே பெரு விலை வைத்து பயிர்வகை அல்லது பருப்புகளை கொள்முதல் செய்து பதுக்கிவிடுகின்றன.  இங்கு மட்டுமல்லாது பருப்புவகைப் பயிர்களின் அன்னிய தேச உற்பத்திக் கேந்திரங்களான பர்மா, சீனா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கக் கண்ட நாடுகள், கனடா, அமெரிக்க நாடுகள் போன்ற நாடுகளிலும் முன்னரே நல்ல விலை நிர்ணயித்து வாங்கிப் பதுக்கி விடுகின்றன.






பிறகு இந்தியா முழுக்க மழை குறைவு, தட்டுப்பாடு என்று மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், வானிலை அதிகாரிகளைப் பேசத் தூண்டுகின்றன.  தாமாகவே ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை மிகக் கடுமையாக உயர வைக்கின்றன.  எல்லா மாநில டெண்டர்களிலும் உட் புகுந்து அரசுக்கு அதிக விலையில் பருப்புகளை சப்ளை செய்கின்றன.





இவர்களோடு கைகோர்க்கும் முன்னர் சொன்ன அந்தப் பழைய பதுக்கல் மலேரிய, டெங்கு கொசுக்கள் இந்த மாஃபியா முதலைகள் நாட்டுக்கு சொல்வதெல்லாம் உண்மையே, உண்மையைத் தவிர வேறில்லை என எல்லோரையும் நம்ப வைக்கச் சேதி பரப்புகின்றன.  எல்லோரையும் பதுக்கல்களையும் தூண்டிவிட்டு கடுமையான தட்டுப்பாட்டை உருவாக்கியபின், பதுக்கிய பொருட்களையெல்லாம் உச்ச விலையிலவவ் விற்றுவிட்டு தப்புகின்றன.





அய்………ச்சும்மா அள்ளி விடாதய்யா, இவ்வளவு வெளிப்படையாய் கொள்ளை அடிக்க முடியுமா என்ன ? அதான் பருவமழை பொய்ச்சிருச்சில்ல ? விட்டாக்கா இவர் மானியமே தப்பும்பாரு போல ?





ஹாஹா இதெல்லாம் கூட வணிக உத்திகள் என்று பல்லைக் கடித்துக்கொண்டு சமாதானம் செய்துக் கொள்ளலாம், ஆனால் நிஜ அட்டூழியங்கள் பலப் பல, அதில் சில………..





1.) அரசு மானிய விலையில் வழங்க வாங்கும் பருப்புகளில் பல விழுக்காடு அளவுகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.




2.) ஒன்பது லட்சம் கிலோ பருப்புகள் வந்துவிட்டதாய் வரவு வைக்கப்பட்டு அதற்குரிய தொகையை டெண்டர் காரர்களுக்கு வழங்கி விடும் அரசு. ஆனால் கிட்டத்தட்ட பல்லாயிரம் கிலோக்கள் சப்ளை செய்யாமலேயே சப்ளை செய்துவிட்டதாய் நூதன பில் டெலிவரி ரிசீவ்ட் மோசடிகளும் சர்வசாதாரணமாய் நடைபெறுகின்றன.




3.) துவரம்பரு[ப்பு என்கிற பெயரில் நமக்கு ரேஷனில் வழங்கப்படுவது துவரம் பருப்பே அல்ல, அது மிகவும் சத்து குறைந்த வெளிநாட்டு பருப்பு.  நீர்த்த சுவையற்ற சாம்பார் மட்டுமே அப் பருப்பால் கிட்டும்.




4.) 160 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பை வாங்கி வெறும் முப்பது ரூபாய்க்கு மக்களுக்காக தியாகசீலர்கள் வழங்குகிறார்கள்.  நிகர நட்டம் ஒரு கிலோவுக்கு 130 ரூபாய்.  எல்லாம் நம் பணம்.  தோராயமாக வருடத்திற்கு 36 லட்சம் கிலோ துவரம்பருப்பு வழங்குவார்கள் என்று வைத்தால் 3600000 X 130 = 46 கோடியே 86 லட்சம் ரூபாய் நிகர நட்டம் துவரம் பருப்புக்கு மட்டும்.  உளுத்தம்பருப்புடன் சேர்த்தால் இது கிட்டத்தட்ட 75 – 80 கோடிகள் வரை போகக் கூடும்




5.) பல மளிகைக் கடை அண்ணாச்சிகள், சிறு வியாபாரிகள், பருப்பு தயாரிப்பு ஆலையைச் சேர்ந்த எளியவர்கள், நியாயமான அரசு டெண்டர் சப்ளையர்கள் எல்லாம் பல வருடங்களாக இந்த அரசு பருப்புக் கொள்முதலால் நொந்து  நொடிந்துக் கிடக்கின்றனர்.




6.) ரேஷனில் எல்லோருக்குமே பருப்பு வகைகள் கிட்டுவதில்லை.  குறிப்பிட்ட ஓரிரு நாட்களுக்குள் ஸ்டாக் தீர்ந்ததாக போர்டு மாட்டிவிட்டு 160 ரூபாய் கொடுத்து வாங்கிய பருப்பை 120 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்று மொத்தப் பணத்தையும் ஆட்டைய போடுவார்கள்.  யார் வீட்டுப் பணத்த எவண்டா தின்னறதுன்னு கேட்க நாம் எல்லோருக்கும் உள்ளூர ஒரு நிரந்தரப் பயமிருக்கும் துணிவு அவர்களுக்கு 




7.) மிக மிக எளிதாக பதுக்கல்காரர்களை கண்காணிப்பதன் மூலமும், அரசு நிறுவனங்களான NAFED(நேப்பட்) போன்ற வணிக நிறுவனங்களை இத்தகைய பருப்புவகை பயிர்களை கொள்முதல் செய்ய வைப்பதன் மூலமும் ஒரு பலமிக்க அரசால் விலைகளை பெருமளவு உயராமல் சாதிக்க முடியும் எனும் போது, அரசு மக்களுக்குத்தான் நாம் குறைந்த விலையில் கொடுக்கிறோமே ? என மல்ட்டி நேஷனல் மாஃபியாக்களிடம் தந்திரமாய் அமைதி காப்பதை சிறிது கூடச் சகிக்க முடியவில்லை.




8.) ஒரு கோடி பேர் சாப்பாட்டுக்காக நம்பியிருக்கும் இந்த பருப்பு வணிகத் தொழிலை சில 100 பேர் மட்டும் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிக்க விடும் இந்த மத்திய மாநில அரசுகள் கடிந்து அழியும்.  என்ன அழிந்து என்ன, அதற்குள் பல லட்சம் கோடிகள் இந்தக் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு லாபமாய்க் கிட்டிவிடும்.  தேர்தல் நிதிக்கு சில 100 கோடிகளை விட்டெறிந்தால் போயிற்று 




9.) இப்படியாகத்தான் அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை போன்றவைகளும் நமக்கு மானியமாக கிட்டுகிறது என்றாலும் அவை மிக மிக அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் வருவதால்……….அதில் வெளிப்படையான பெருங்கொள்ளையோ, ஏற்ற இறக்கங்களோ இதுவரை சாத்தியப்படவில்லை.  என்ன கள்ளச் சந்தைகளில் அவைகளை விற்பதன் மூலம் சொற்ப கோடிகளே பல்லயிரம் ஊழல் கொசுக்களுக்கு கிட்டின..  இந்தப் பருப்புவகைகள்தான் அமுத சுரபி.





10.) சாராயம் விற்கக் கற்றுக்கொண்ட அரசு அடுத்து மணல் விற்றது, பருப்பு விற்றது, சிமெண்ட் விற்றது, உப்பு விற்றது, மருந்து விற்றது, தண்ணீர் விற்றது………….எல்லாமே மானியம்.  ஆனால் கொள்முதல் விலை அதிகம்.  மானாவாரி கமிஷன்தான் அதி முக்கிய காரணி என இப்போது நீங்கள் உணர்ந்திருக்கக்கூடும்.  பல்லாயிரம் கோடி இப்படி மானியத்திற்கே போவதால் நாட்டில் எந்தப் பெரிய நலத்திட்டத்திற்கும் ஒதுக்க அரசிடம் பணமிருக்காது.  நதி கால்வாய் இணைப்புகள், புது ஏரி நிர்மாணங்கள், தூர் வாருதல், புது சாலை வழிகள், பாலங்கள், இதர மக்கள் நலனுக்கான திட்டங்கள்…………..எல்லாமே வாய்ச் சொல்லாக இருக்குமேயன்றி சாத்தியப்பட வாய்ப்பிருக்காது.




இப்போதெல்லாம் பதுக்கல்களுக்கு எதிராக எந்தப் பெரிய நடவடிக்கைகளையும் எந்த மாநில மத்திய அரசும் செய்வதேயில்லை.  இத்தனைக்கும் அத்தியாவசிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து ஜாமீன் இல்லாத கடுமையான தண்டனைகள் பதுக்கல்காரர்களுக்கு உண்டு என்று சட்டம் உள்ளது.  




முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்ட குடவுன்கள் சீல் செய்யப்பட்டு அதிலுள்ள உபரிப் பொருட்களை அரசே எடுத்துக்கொள்ளவும் சட்ட வகைகள் உள்ளன.  




நாட்டில் வங்கிக் கடன்கள் அள்ளியள்ளி வழங்க ஆரம்பித்தபின், அரசு கிட்டங்கிகள் மட்டுமே இருந்த விவசாயக் கேந்திரங்களில் இப்போது பல லட்சம் தனியார் கிடங்குகள் பெருகிப் போய்விட்டன.  அங்கு நீங்கள் 100 மூடை பருப்பு ஸ்டாக் வைத்தீர்கள் எனில் குறைந்த வட்டியில் உங்களுக்கு அந்தத் பருப்பு மூட்டைகள் மதிப்புக்கு ஈடாக பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.





பிறகென்ன 100 மூட்டைய்லிருந்து 100 லட்சம் மூட்டைகள் வரை பதுக்கப்படுகின்றன.  கேட்பாரில்லை.  புலம்பும் மக்களுக்கு, ”அதான் முப்பது ரூபாய்க்கு தரோமில்ல ?” எனப் போகிறார்கள்.  எது எந்த விலை கூடினாலும் உடனே மானிய விலையில் தருகிறோம் என வியாபரத்திற்கு  ஓர் அரசு வருவதா நிர்வாகத் திறன் ?  கொள்ளைக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தானே ஆயுதம் தாங்கிய அத்தனை அரசு வேலையாட்கள் ???




கூட்டுக்களவாணிகள் கைகோர்த்து கோடி கோடியாக கொள்ளையிட்ட வண்ணமுள்ளார்கள்.  





ஆனால் இந்த மனச்சாட்சியற்ற மிருகங்கள் நினைத்தால் பருவ மழையை நம்பியிராத  நவீன விவசாய முறைகளை கொண்டு வரலாம்.





பருப்புவகை உற்பத்தியை அதிகரிக்கும்படி விவசாயிகளுக்கு ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தலாம்




குறிப்பிட்ட விலைக்கு மேல் ஒரு பொருள் உயருமாயின் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு பதுக்கலை முற்றிலும் அழிக்கலாம்.




ஆனால் லட்சம் கோடிகள் மட்டுமே கொண்ட அதானிகளும், அம்பானிகளும் உலகப் பணக்காரர்களில் முதல் இரண்டாமிடம் எப்படியாவது பெற்றுவிட வேண்டும், அதன் மூலம் ஒவ்வொரு இந்தியனும் காலர் உயர்த்தி பீடு நடை போட வேண்டும், அதற்கு அவர்களுக்கு எப்படியெப்படியெல்லாம் உதவ வேண்டுமென எண்ணும் அரசுகளால், இவைகளெல்லாம் நிறைவேறும் என நினைப்பது அடி முட்டாள்தனம் அல்லவா ???





ஆக, இதை ஒரு படு முட்டாளின் கட்டுரையாகவே கருதி, பரிதாபத்தோடு தூர எறியவும்.  வாட்டியமைக்கு அனுதாபங்கள், நன்றி நன்றி நன்றி !!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!