சனி, 16 ஏப்ரல், 2016

சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை வாசகசாலை நிகழ்வு

வாசகசாலையின் பத்தாவது நிகழ்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட புதினம் கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை 20/09/2015 ஞாயிறு மாலை 06 : 30 இடம் பனுவல், திருவான்மியூர்.எதிர்பாராவிதமாக இதே நாளன்று ஆசிரியர் சல்மாவுக்கு இன்னுமொரு முக்கிய நிகழ்ச்சி அமைந்துவிட அவரில்லாமலேயே கொஞ்சம் தாமதமாக நிகழ்ச்சி தொடங்கியது.


எல்லோரையும் வரவேற்றார் அருண்(எதிர்கால திரைப்பட இயக்குனர்)


தொடக்கவுரையை ஆற்றவிருந்த மனோஜ் அவர்களுக்கும் வருகைச் சிக்கல். அவருக்குப் பதிலாக கார்த்திகேயன் தொடக்கவுரை ஆற்றினார். தாமதத்திற்கான காரணத்தைக் கூறி வருத்தம் தெரிவித்துவிட்டு, சல்மா & நாவலைப் பற்றிச் சுருக்கமாக கூறிவிட்டு, திரு.பார்த்திபன் அவர்களை, இரண்டாம் ஜாமங்களின் கதையைப் பேச முதலில் அழைத்தார்.இந்த வாய்ப்பை தாம் விரும்பிக் கோரிப் பெற்றதாகக் கூறினார். இவருக்கு அடுத்து பேசிய ஜீவலட்சுமியும் இதையேக் கூறினார்.  ஆக, வாசகப் பார்வையைப் பேச, இனி கடும்போட்டி, அடி தடி, ஆள்கடத்தல் வரை போக வாய்ப்புள்ளது எனக் கணிக்கலாம் ;)ஆனால் ஏன் அவ்வாறு அவர்கள் பேச விரும்பினர் என்பதற்க்கான சான்று அவ்விருவரின் பேச்சிலும் மிளிர்ந்தது.  
ஒரு நாவலை இத்தனை அழகாக உள் வாங்க முடியுமா என வியக்குமளவு இருவரும் கதாபாத்திரங்களை அலசித் தீர்த்துவிட்டனர்.Image result for rajathi salma“ஆண்கள் அயர்ந்திருக்கும் இரண்டாம் ஜாமத்தில்தான் பெண், தன்னை பெண்ணாகவே உணர்கிறாள்” இது நாவலின் பின்னட்டையில் காணப்படும் ஒரு வரி.  இந்த வரியிலிருந்தே தன் உரையைத் துவங்கினார் பார்த்திபன்.  இந்த வரியிலேயே கதையின் காரணம் ஓரளவு புரிந்துவிடும்.  பெண்ணை தன் சவுக்கு வீச்சுக்கு அடங்கும் ஒரு மிருகமாக உணரும் ஆணினச் சமூகம், அப்படியே அதை அந்தப் பெண்ணுக்குள்ளும் கடத்திவிடும் சாமர்த்தியம்………..இருந்தும் இந்தச் சாமர்த்தியங்கள் தகர்கிறது இரண்டாம் ஜாமத்தில்.  இங்கும் மிருகமாகவே அணுகும் ஆண்கள் இந்த வரிக்கு பொருந்த மாட்டார்கள்.  அங்கேனும் சிறிதளவு அவள் கோரிக்கையைக் கேட்கவும், அவள் விருப்பத்திற்கேற்ப வெல்லவும் அல்லது தோற்கவும் செய்கிறான் ஆண். அத் தருணத்தில்தான் ”ஓஹோ நாம் இயந்திரமல்ல” என்பதை உணர்கிறாள் பெண்,கட்டுப்பாடான, பாரம்பரியமிக்க ராவுத்தர் குடும்பமொன்றில் நிகழும் கதைகளாக இந் நாவல் புனையப்பட்டிருக்கிறது.  மதச் சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய குடும்பம் என்பதால் பெண்கள் மிக இறுக்கமான கூட்டுக்குள் அடைத்து, அதற்குள்ளும் கோடு கிழித்து அதைத் தாண்டிவிடாதவாறு கட்டுப்பாடுகள்.  இந்தக் கட்டுப்பாடுகள் பற்றி, கட்டுமீறி கோடு தாண்டி, கூடு தாண்டிச் சென்ற பெண்களைப்பற்றி, இரண்டாம் ஜாமங்களிலும் இயந்திரமாகவே புணரப்பட்ட பாவிகளைப் பற்றி சொல்கிறது இத் துணிவு மிக்க நாவல் என்பதை பார்த்திபன் பேசிய கருத்துக்கள் வழியே நான் உணர்ந்தேன். இந் நிகழ்ச்சி முடிந்ததும் நண்பர் சொன்னார்.  ”இனி இந்த நாவல வாசிக்கவே தேவையில்ல, நாவல் என்ன சொல்ல வந்துச்சுன்னு பச்சமரத்துல கூரான ஆணிய வச்சு அறஞ்சா மாதிரில்ல பேசிப் பதிச்சிட்டாய்ங்க” என்றார்.இந்த நாவலைப் பற்றி பொதுவாகச் சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு, ”பெண்களின் புலம்பல்களையும், அவர்களின் பேராசைகளையும் காரணம் காட்டி மதச்சட்டங்களை குறை சொல்லத்தான் ஆக்கத்தை ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டார்” என்பது.  ஆனால் அது பொய்.


எந்த ஆண்களை வில்லனாகச் சித்தரித்துக்கொண்டு வருகிறாரோ அதே ஆண்களுக்குள் இருக்கும் ஈரத்தையும், மறு முகத்தையும் காட்ட மறுக்கவில்லை ஆசிரியர் என்றார் பார்த்திபன்.   


நாம் எல்லோருமே சமயங்களில் நாயகன் போலவும், சமயங்களில் வில்லனாகவும், பல நேரங்களில் கோமாளிகளாகவும்தானே காட்சி தருகிறோம், அதைத்தான் நாவல் கண்ணாடியாய் கதாபாத்திரங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது.Pleasure of Text & Pain of Text இப்படி இரு கலவைகளாய் சல்மாவின் எழுத்து சென்றுகொண்டிருந்தது இதைப் போய் எப்படி எளிதாய் வெறும்  புலம்பல்கள் என்று உங்களால் உதாசீனப்படுத்த முடிகிறது ? என்று மேதைகள் நோக்கி முஷ்டி உயர்த்தினார்.4 X 40.  நான்கு நாற்பதுகளில், ஒரு பெண்ணின் சொர்க்கமும், நரகமும் முடிந்து அவள் எஞ்சிய வாழ் நாட்களை வெறுமையாய் கடப்பதன் மூலம் ஓர் உக்கிரத்தை உள்ளுக்குள் பெறுகிறாள் என்று கூறி அவள் ஏன் அப்படி ஆனாள் ? என்று சல்மா சொல்லியிருந்த ஒரு பெண் பாத்திரத்தை விளக்கினார்.அந்தப் பெண் தன் 12 வது வயதில் 55 வயதான ஒரு பணக்கார ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.  இது முதல் 
நாற்பது நாள் கொண்டாட்டம்.  திருமணமான சில வாரங்கள் கழித்தே வயதுக்கு வருகிறாள் இது இரண்டாம் நாற்பது நாள்.   அதாவது முஸ்லீம்களுக்கு இந்த நாப்பது நாள் என்பது ஒரு சடங்கு.  பிறகு கருத்தரிக்கிறாள்.  இந்த மூன்றாவது நாற்பது.  நான்காவது நாற்பது அந்த வயதான கணவன் இறந்தபின் வந்து தொலைக்கிறது.  எல்லாம் ஒரே வருடத்திற்குள்.  


அதன் பின் அவள் மறுமணத்தையும் மறுக்கிறாள்.  வருபவன் எனக்கு நல்ல கணவனாகத்தான் இருப்பான், என் குழந்தைக்கு நல்ல அப்பனாக இருக்க வாய்ப்பு குறைவு என்று.  இப்படி ஒரே வருடத்திற்குள் நான்கு நாப்பதை பார்ப்பவள், சொர்க்கத்தையும் நரகத்தையும் அடுத்ததடுத்த நாற்பதுகளில் சந்திப்பவளின் குணம் உக்கிரமாய்த்தானே இருக்கும் ?நாவலில் ராபியா எனும் சிறுமி கதாபாத்திரம் மூலம் மிகத் துணிவான கருத்துக்களை கூறிய சல்மாவுக்கு சலாம் என்றார் பார்த்திபன்.அது ஏம்மா ஆம்பிளைங்க மட்டும் மூணு கல்யாணம் பண்ணாலும் தப்பில்ல ?


நபிகளே 11 கல்யாணம் பண்ணியிருக்காருல்ல, அதான்.


அதே போல ஒரு ஹஸரத்தின் மனைவி(ஹசரத் என்றால் ஏரியா மதத் தலைவர்) Non Stop பிள்ளைகள் பெற்றுக் கொண்டே போகிறாள். இந்த அவலத்தைப் பார்த்து அவளைக் கண்டிக்கும் பிற பெண்களிடம், ”கரு கலைப்பு மதத்துக்கு எதிரானதாம். நானே மீறி அதச் செஞ்சுட்டா, உங்க வீட்லயே இப்படி, நீ எப்படி மதப்பிரச்சாரம் செய்ய வந்துட்டன்னு அவுகள நாக்கு மேல பல்லப்போட்டு பேசிடுவாகல்லக்கா ?” என்கிறாளாம்.சரி இதுக்கு என்னதான் தீர்வு ?என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிள்ளைகள பெத்துப் போட வேண்டியதுதான், அப்புறம் அல்லா கூப்பிட்ட வேகத்துல போக வேண்டியதுதான்.அதன்படியே எத்தனையாவதோ ஒரு பிரசவத்துக்குப் பின் செத்தும் போய்விடுகிறாள்.  இங்கு மிகப் பொருத்தமாக ஒரு கதையை நினைவு கூர்ந்தார் பார்த்திபன்.மனோஜ் அவர்கள் எழுதிய மஹல் என்னும் சிறுகதை.  அதில் நாயகி மும்தாஜ்.  ச்சூ, கட்டிப்புடி கட்டிப்புடிடா மும்தாஜ் அல்ல நம்ம ஷாஜகானின் மும்தாஜ்.  ஆனால் மும்தாஜ் என நேரடியாகச் சொல்லியிருக்க மாட்டார் மனோஜ்.  அந்தக் கதையை நானும் வாசித்திருக்கிறேன்.மும்தாஜ் ஷாஜகானுக்கு மட்டுமே 14 குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தவள்.  அதென்ன ஷாஜகானுக்கு மட்டுமேன்னு நக்கல் என்று ஷாஜுதீனோ, அபூ பக்கரோ கோபப்படலாம்.  வரலாற்றுப்படி மும்தாஜ் இன்னொருவரின் மனைவி.  இளவரசர் ஓர் அழகியை விரும்பிவிட்டால் பிறகு அடுத்தவர் மனைவியாய் இருந்தால்தான் என்ன ? காதலியாய்த்தான் இருந்தாலென்ன ?ஆஹா பதினாலு குழந்தைகள்.  என்ன அற்புதமான ஜோடி ? ஷாஜகான் எவ்வளவு அன்பாயிருந்தால், ஐ மீன் மும்தாஜ் மீது எத்தனைக் காதல் இருந்தால் இவ்வளவு பேரன்பைச் செலுத்தியிருக்க முடியும் என்று யாரேனும் கமெண்ட் செய்தால் ஈவிரக்கமில்லாமல் அன் ஃப்ரெண்ட் செய்து பின் ப்ளாக் செய்வேன்.   இதைத் தட்டிக் கொண்டிருக்கும் போது கூட வயிறு எரிகிறது.  மயிர்க்கால்கள் கோபத்தில் சிலிர்த்தெழுகிறது.மதன் எழுதியிருப்பார்.  ஷாஜகான் எடுக்கும் ஒவ்வொரு படையெடுப்பின் போதும் போர்க்களத்துக்கு மனைவியை அழைத்துப் போய்விடுவாராம்.  பாதுகாப்பு அரண்கள் சூழ கூடாரத்துக்குள் மும்தாஜ்க்கு பல பிரசவங்கள் நடந்துள்ளதாம்.இப்படி ஒரு போர்க்களத்தில் 14 வது பிரசவத்தின் போது இறக்கிறாள். அவள் இறந்துகொண்டிருக்கும் வேளையில் ஷாஜகான் ஸ்பாட் வருகிறான்.  அவனைச் செருகிக் கொண்டிக்கும் கண்களால் பார்க்கிறாள்.  ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சலீம் குமாரா ?” இதை அந்தக் கண்கள் பேசியிருக்க வேண்டும்.  அந்தக் கண்களைச் சந்திக்க ஷாஜகானுக்கு சிறிதும் துணிவில்லை.  


மனது தந்த ஓயா உளைச்சலில் மனைவியின் ஆவியையும், வரலாறையும் திருப்திப்படுத்த அவள் பூத உடலுக்கு மேல் தாஜ்மஹல் கட்டுகிறான்.  தான் இறந்தபின் தன் உடலை அந்த மஹலிலேயே அவள் உடல் அருகில் புதைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். ஏன் ?  


ஏன்னா ஷாஜகானின் அழகிரி பாசம் ஒவ்வாது ஒளரங்கசீப் அப்பாவையே கைது செய்து உள்ளே வைத்தபின் வைக்கப்பட்ட கோரிக்கை அது.அதன்படி, ஷாஜகான் இறந்தபின் அவன் உடல் ஒரு பேழையில் வைக்கப்பட்டு படகில் ஏற்றப்படுகிறது.  படகு சீற்றமான யமுனையில் பயணிக்கிறது.  திடுமென வானம் கறுக்கிறது.  மேலும் உக்கிரமாகப் பொங்குகிறது யமுனை.  படகு பெரிதும் தத்தளிக்கிறது.  ஓர் அசரீரி.  ”அந்தப் பாவியை என்னிடம் கொண்டு வராதீர்கள், இப்ப இப்பதான் கொஞ்சம் நிம்மதியாயிருக்கிறேன்”


இயற்கை அந்தக் குரலுக்குச் செவிசாய்க்கிறது.  யமுனை பொங்கி படகை கவிழ்க்கிறது.  பேழை நழுவி ஆற்றில் விழ, ஆற்றுக்குள் உடல் நழுவிச் சென்றுவிடுகிறது.  அரசக் குற்றமாகிவிடுமோ எனப் பயந்த படகோட்டிகள் வெறும் பேழையை மட்டும் கொண்டுச் சென்று மும்தாஜ் சமாதி அருகே புதைத்தாக முடியும் அந்த மஹல் கதை.இது வெறுமனே கதை அல்ல.  இன்றளவும் டெல்லி யமுனையைச் சுற்றியுள்ளவர்களிடையே நாடோடிக் கதைகளாக உலா வந்துக்கொண்டிருப்ப்துதானாம்.  இதையொற்றி தன் அழகுத்தமிழில் அற்புதமாகப் புனைந்திருப்பார் மனோஜ்  


ஏன் இந்தக் கதை ?


அன்பும் அறமும் நிறைந்த இணை. என்று நாம் எதை நம்ப வேண்டும், எதை தூற்ற வேண்டும் என்பதை உணரவே.  


ஆக, பார்த்தியின் இந்த விரிவுரை இன்னமும் முடியாமல், அடுத்து இன்னுமொரு முக்கிய பாயிண்டைத் தொட்டது.  இந்த நாவலில் இருக்கும் பெண்களின் வலியை, ஒடுக்குமுறையை இன்னுமொரு சமகால இஸ்லாமியப் பெண்கள் அனுபவிக்கும் வலியோடு ஒப்பிட்டார்.

Image result for parthiban charu

ஆக்சுவலாக அவர் சொல்லும்போதே பலருக்கு கண்கள் கலங்கியிருக்கும், ஏற்கனவே வினவு தளத்தில் இது பற்றின ஒரு கட்டுரையை நான் வாசித்துள்ளேன். இதை அந்தக் கட்டுரையில் வாசித்துப் பார்த்தால் கதறியழ வாய்ப்புண்டு.  அந்தத் தமிழ் கட்டுரைச் சுட்டியை நண்பர்கள் (ப்ளீஸ் வில்லன்ஜி) மறுமொழிப்பெட்டியில் பகிரலாம்.  பார்த்திபன் சொன்னது பெண்களுக்கு நடத்தப்படும் சுன்னத்.  அதற்கான இஸ்லாமிய வார்த்தை என்னவென்று எனக்குத் தெரியாது.  ஆப்பிரிக்க, ஐரோப்பிய, இந்தோனேசிய நாடுகளிம் இன்றளவும் இருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான ஒரு மதச்சடங்கு. இங்கு(எனக்குத் தெரிந்து) இல்லை.Desert Flower எனும் படம் மற்றும் நாவலில் வரும் கதாநாயகிக்கு நடந்த நிஜச் சடங்கு அது.  அவர் சொன்ன பின்னர்தான் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சடங்கே உலகெங்கும் தெரிய வந்தது.சரி அந்தச் சடங்கை எப்படி & எதற்குச் செய்கிறார்களாம் ?ஒரு குறிப்பிட்ட வயதில், பெண்ணுறுப்பிலுள்ள கிளிடோரிஸ் என்கிற உள் நாக்குகள் போன்ற உணர்வு முடிச்சுகளை கூரிய கல் அல்லது ப்ளேடுகள், உபயோகத்தில் இருக்கும் பழையகத்தி மூலம் சிதைத்துவிடுவார்களாம்.  சிறு நீர் மற்றும் மாதவிடாய் கழிவுகளுக்கும், புணர்தலுக்கும் தேவையான துளையை மட்டும் வைத்துவிட்டு, எஞ்சிய துளைகளை முட்கள் கொண்டு மூடிவிடுவார்களாம்.  ஏன் ?இதனால் பெண்களுக்கு தேவையற்ற செக்ஸ் உணர்ச்சிகள் வராதாம். கள்ள உறவோ, இனம் மாறி காதலிப்பதோ மட்டுப்படுமாம்.  மதம் சுத்தமாக, அற்புதமாக பெருகுமாம்.இதில் எந்தளவு உண்மை, எந்தளவு மிகை, எந்தளவு பொய் என எதுவுமே எனக்குத் தெரியாது.  நீங்கள் அந்த டெஸர்ட் ஃப்ளவர் படம் அல்லது நாவல் வாசிப்பது மூலமாகத் தெரிந்துக் கொள்ளலாம்.இந்தச் சடங்கிற்குப் பின் அந்தப் பெண், சிறு நீர் கழிக்கும் போதெல்லாம், மாதவிடாய்க் காலங்களில், உடலுறவின் போது, குழந்தை பெறும்போது அடையும் வலிகள் மண்ணில் காணும் நரகங்கள்சரி.  இந்தக் கதையை ஏன் பார்த்திபன் இங்கு சொன்னார் ? இக்கதைக்கும் நாவலுக்கும் என்ன சம்பந்தம்.அவர் பொதுவாய் பெண்களை இந்த உலகம் நடத்தும் முறைகளைச் சொல்ல விரும்பினார்.  அதில் ஒரு சாம்பிள் இது.  புராதான மதச் சட்டங்களை கேடயாமாகக் கொண்டு பெண்களுக்கு காலந்தோறும் இழைக்கும், கொடுமைகளில் உயிர்ப்புடன் இப்போதுமிருக்கும் ஒரு கொடுமை இது என்பதற்காகச் சொன்னார்.  உலகெங்கும் 15 கோடி இஸ்லாமியப் பெண்களுக்கு இச் சடங்கு நடைபெற்றிருக்கிறதாம்.  நாள்தோறும், இதோ இதை வாசித்துக்கொண்டிருக்கும் போதும் சில பெண்களுக்கு இச் சடங்கு நிறைவேற்றப் பட்டிருக்கக் கூடும்.  கருக்கலைப்பு அல்லது காண்டம் உபயோகித்தல் போன்றவை மதத்துரோகம் என்று முன்னோர்கள் எழுதிவைத்திருக்கிறார்களென்று இப்படி பெண்களை காமத்துக்கும், குழந்தை பெறுதலுக்கும், இயந்திரமாய் உழைக்கவும் வைக்கும் வாதையைச் சொல்ல இக் கதையை அவர் சொல்லியிருக்கக் கூடும்.பெண்களுக்கு நீங்கள் முழு விடுதலை கொடுக்க வேண்டாம்.  சம உரிமை கொடுக்க வேண்டாம்.  அவர்களை அவர்களாக Just வாழ விடுங்கள் என்று முடித்தார்.இது பார்த்திபன் பேசியதிலிருந்த முக்கிய பகுதிகள் மட்டுமே. உண்மையில் இன்னமும் அவர் சிறப்புற, இன்னமும் நுட்பமாக, ஈர்த்த கதாபாத்திரங்களைப் பற்றியெல்லாம் பேசினார்.  அதையெல்லாம் யு ட்யூபில் காண்க.  நன்றி பார்த்தி டியர்   அடுத்து பேச அழைக்கப்பட்டவர் ஜீவ லட்சுமி.இவரை அழைக்கும்முன் கார்த்திகேயன் டைமிங்காக ஒன்றைச் சொன்னார்.  ”உலகத்தின் ஒட்டுமொத்த மேகமே கிழிந்துபோனது போல கொட்டிவிட்டார் பார்த்தி, இனிமேலும் பேச என்ன இருக்கு ? வாம்மா வந்து பேசுன்னு சாலமன் பாப்பைய்யா சொல்வாரில்ல….அது போல நினச்சுக்குங்க, வந்து பேசுங்க” என்றார்.

Image result for த ஜீவலட்சுமி

ஜீவலட்சுமி, ”சல்மா, பாமா, இளம்பிறை போன்ற எழுத்தாளர்களை அவசியம் வாசிக்க வேண்டும்” என்று தன் ஆசிரியை சொன்னதாலேயே இளம் வயதிலிருந்து எனக்கு சல்மா மேல் ஒரு பிடிப்பு உண்டு.  அந்த காரணத்துக்காகவே இங்கு பேச வாய்ப்பை, வலிந்துக் கோரி பெற்றேன்” என்று ஆரம்பித்தார்.இந் நாவலில் காலம் அப்போது நடந்த சம்பவங்கள் மூலமே காட்டப்படுகிறதேயன்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லை அதே போல கதை நடக்கும் களத்தையும்.  உதாரணத்துக்கு, வெலிக்கடை சிறை உடைப்பு என்று சொல்லும்போது அதை 1983 எனத் தெரிந்து கொள்ளலாம்(ஆக்சுவலாக இதை பேராசிரியர் கல்யாணராமன் தன் உரையின் போது ஜீவாவுக்குச் சொன்னார், இருந்தும் ஜீவா சொல்ல வந்தது இதைத்தான்) மகாத்மா படுகொலை என வரும்போது 1948, சினிமா படங்கள் வந்த காலங்கள், மதுரைக்கு துணி எடுக்கப் போகலாம் என்று வரும்போது ஆக, கதைக்களம் மதுரைக்கு அருகேயுள்ள ஒரு கிராமம் அல்லது சிறு நகரம் என அவதானித்துக் கொள்ளலாம்.சிறுமிகள் ராபியா & மதீனா நட்பு மிக துல்லியமாக அழகாகச் சொல்லப்படுகிறது.  ராபியா வழியாக சல்மா பல கேள்விகளை தம் சமூகத்திற்கு வைக்கிறார்.  அதெல்லாம் ஆவணம்.  சல்மாவின் இந்த நாவலே ஒரு சமூக ஆவணம்.ஜீவலட்சுமி பேச நினைத்ததையெல்லாம் பார்த்திபனே பேசித் தொலைத்துவிட்டதால், சில ரிப்பீட்கள் ஆனது.  இருந்தும் கருக்கலைப்பு படலம் பற்றி அவர் நூலில் இருந்ததை வாசித்தபோது உணர்வுப்பூர்வமாக இருந்தது.இஸ்லாமியச் சடங்குகளைப் பற்றி ஒரு காட்சியைச் சொன்னார்.நாள் முழுக்க ஓயா வீட்டு வேலைகள் செய்தபின், இரண்டாம் ஜாமத்தில் புருஷன் கூப்பிடுவான்.  சரி போய்த் தொலையட்டும்.  அந்த கடுமையான சோர்வுக்குப் பின்னும் அவளைத் தூங்க விடாது அவளுடைய மதச் சட்டங்கள்.உடல் உறவுக்குப் பின் அந்தப் பெண் கண்டிப்பாக குளிக்க வேண்டும். உள்ளாடைகளைத் துவைத்துக் காயப் போட வேண்டும். அவ்வளவுதான்.  ஜீவலட்சுமி இன்னும் பல கதாபாத்திர அமைப்புகளை பேசினார்.  அதையும் யு ட்யூபில் பாருங்கள். ஜீவலட்சுமி சொன்ன இந்தக் கடைசி காட்சியில் இருந்து மட்டும் சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன்.


இந்தக் காட்சி இன்றளவும் இஸ்லாமியச் சமூகங்களில் பெரும்பாலும் கடைபிடிக்கக் கூடிய சடங்குதான்.எனக்கு நெருங்கிய பல நண்பர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன்.  பெண்கள் குளிப்பார்கள்.  ஆனால் ஆண்கள் முழுமையாகக் குளிக்கத் தேவையில்லை, குளிக்கவே கூடத் தேவையில்லையோ, என்னமோ ?பெண்கள் தலைக்குக் குளிக்க வேண்டும்.  அது நள்ளிரவானாலும் சரி, மதியமானாலும் சரி.  படுத்திருந்த பாய் அல்லது கட்டிலில் இருந்த போர்வைகள் வரை துவைக்க வேண்டும். பாய் என்றால் பாய் விரிக்கப்பட்டிருந்தத் தரையையும் கழுவி விட வேண்டும். அசாதாரண நேரத்தில் இப்படி ஒரு பெண் துணி காயப்போடுவதன் மூலம் பார்ப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும் அவள் உறவு கொண்டிருக்கிறாள் என்று.ஏதோ ஒரு ராஜ்கிரண் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும், ஓர் ஆற்றில், ஊரே பாயைத் துவைத்துக் கொண்டிருக்கும்.  அவர் சமூகத்தில் நடந்ததை இப்படி இந்து சமூகத்தில் நடப்பதாய்க் காட்டியிருப்பார்.என் மனைவியின் தோழி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருவார்.  ஆனால் என்ன வற்புறுத்தினாலும் கட்டிலில் அமர மாட்டார். கேட்டதற்கு, ”உங்களுக்குள் உறவு முடிந்தபின் இடத்தைச் சுத்தமாக்கும் பழக்கமில்லை, அது தீட்டு அல்லது பாவம்.  விந்துத் துளிகள் சிதறிக்கிடந்தால் அதன் மூலம் சைத்தான்கள் உருவாகும். வீடெங்கும் பெருகி வளரும்” ;)இதைச் சொல்வதன் நோக்கம் அவர்களின் நம்பிக்கையை கிண்டல் பண்ணுவதற்கல்ல.  போக, சுத்தப்படுத்திக் கொள்ளுதல் என்பது உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லதுதான்.  ஆனால், ஆண்களால் இயற்றப்பட்ட இந்த மதச்சட்டங்கள் அதென்ன பெண்களுக்கே எல்லா ஒழுக்கத்தையும் நிர்பந்தித்து விடுகின்றன என்பதைக் காட்டத்தான். ஆணும் தலை முழுகி குளிக்க வேண்டும். தீட்டுப்பட்ட  எல்லாத் துணிகளையும் அவன்தான் துவைக்க வேண்டும் எனச் சட்டத்தை திருத்தியிருக்கலாம்.  இப்படி இருவரும் சரிசமமாக சட்டத்தைக் கடைபிடிப்பது போல் வைத்தால், நானும் என் வீடுகளில் சைத்தான்களை வளர்க்காமல் பார்த்துக்கொள்வேன் ;)அடுத்து பேச வந்தவர் மீனா சோமு.


Image result for meena somu

மீனா சோமு, "தான் இலக்கியம் வாசித்தது எல்லாமே கல்லூரி காலங்களில்தான், நடுவே ஒரு பெரிய இடைவெளி.  இதைப்பற்றை பேச வேண்டிய ஆவலிதான் இந் நாவலையே நீண்ட நாளுக்குப்பின் வாசித்தேன். இது வெறுமனே நாவல் மட்டுமா ?  அல்ல இது ஓர் ஆவணம்.  வெறுமனே இஸ்லாமியப் பெண்களுக்கே மட்டும்தானா ? இல்லை மொத்த இந்தியப் பெண்களுக்கானது"


ராபியா வழியாகத் தெரியும் சிறுவயது சல்மா பிறகு வாஹிதா வழியாகவும் தென்படுகிறார்.  இப்படி ஏதோ ஒரு பாத்திரத்தில் எழுத்தாளர் வெளிப்படுவது இயல்புதான்.  அந்தப் பாத்திரங்கள் வாயிலாக தங்கள் குறைகளை சமூகத்திடையே உரத்துச் சொல்ல முடிகிறது.பெண்களுக்கு மதங்களின் பெயரால் திணிக்கப்படும் வலிகளை, அவர்களுக்கு இருக்கும் கடுமையான வேலைகளின் மூலம் மறக்கடிக்கச் செய்கிறது சமூகச் சூழல்.  பெண்களை பொம்மைகளாக அதாவது ரிமோட் பொம்மைகளாக ஆக்கவே மதக்கட்டுப்பாடுகள் என்றார்.  அடுத்து பேச அழைக்கப்பட்டவர் என் சூப்பர் ஸ்டார் பேராசிரியர் கல்யாணராமன்.ஆஜானுபாகுவான உயரம்.  திடகாத்திரமான உடல்.  கணீர் பேச்சு. வாயைத்திறந்தால் மடை கடந்து பாயும் வெள்ளம் போன்ற தூயத்தமிழ், எதைப் பேச வந்த்தோமே அதை முழுவதுமாய் உள்வாங்கி, சிறிதும் அதிலிருந்து நழுவாமல் சொல்லவருவதை தெளிவாகச் சொல்லும் மாண்பு இவைகள்தான் பேராசியர் கல்யாணராமன்.இவர் எப்போது பேசவருவார் எனக் காத்திருந்து, காத்திருந்து………மைக்க கொடுத்தாத்தானே ? ஆனால் இவர் பேச நினைத்ததையெல்லாம் அந்த மூன்று பேரும் பேசிவிட்டார்கள், நான் சுருங்கவே பேசுவேன் என்று ஆரம்பித்தார்.தனக்குப் பிடித்த துணிவான பாத்திரம் இந் நாவலில் வரும் ப்ரதவுஸ்தான்.  தி.ஜானகிராமனின் அலங்காரத்தம்மாளும், ப்ரதவுஸ்சும் ஒன்றே.  காலத்தால் அழிக்கமுடியாத(அம்மா வந்தாள்) அலங்காரத்தாம்மளைப். போலவே ப்ரதவுஸ்க்கும் சாகாவரம் உண்டு. இந்த நாவலில் ப்ரதவுஸ் ஆசிரியரால் கொல்லப்பட்டு விடுகிறார், எந்தத் தேவையுமேயில்லாமல்.  ஆனால் அந்த அப்பாவியை இந்த உலகில் வேறெங்கேனும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.  ஒருவேளை ப்ரதவ்ஸை நான் சந்திக்க நேர்ந்தால்……………அவள் காலில் விழுந்து ஆணினம் சார்பாக மன்னிப்பைக் கோருவேன். உணர்ச்சிப்பிழம்மான இப்பேச்சுக்கு பலத்த கைதட்டு !இந்த நாவலில் தன் சமுதாயத்தின் மேலான விமர்சனத்தைப் பேசும் பெரிய அரசியல் உண்டு.  இலக்கியத்தில் அரசியலும், அரசியலில் இலக்கியத்தையும் யாராலும் பிரித்துவிட முடியாது.ஜாமம் என்றால் என்ன ?   நம் முன்னோர்கள் ஒரு நாளுக்கான நேரத்தை ஆறு பெரும்பிரிவுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். அதன் படி முதல் சாமம் மாலை ஆறு மணியில் தொடங்கி இரவு பத்து மணி வரையும், இரண்டாம் சாமம் பத்து மணியில் தொடங்கி நள்ளிரவு இரண்டு மணிவரைக்கும்……….இப்படியாக ஒவ்வொரு சாமமும் தலா நான்கு மணி நேரங்கள் கொண்டவைகளாக ஆறு சாமங்கள்.இந்த இரண்டாம் சாமத்தில்தான் பெண்களுக்கு ஆண்களிடத்தில் பேச, சிந்திக்க உணர உரிமை தரப்படுகிறது.  ஆக, அந்தப் பெண் பேச்சுக்களை நீங்கள் கேட்கவே இந்த இரண்டாம் சாமத்துக் கதைகள்.65  நீண்ட அத்தியாயங்களும், 500 பக்கங்களும் கொண்ட இந்தப் பெரிய நாவலில் ப்ரதவுஸ் பேசிக்கொண்டே இருக்கிறார்.  ஆனால், அவருடையை மேல்சாதி காதலன் சிவா தன் தரப்பைப் பேச ஒரு பத்தி கூட ஆசிரியர் தரவில்லை, ஏன் ? ரமேஷ் அம்மா ஒரு மாதிரி என்று துணிந்து சொல்லிவிட்டு அவர் பெயரைச் சொல்ல ஆசிரியருக்கு என்ன தயக்கம் ?இவ்வளவு பாஸிட்டிவ் இருக்கும் நாவலில் எனக்குத் தென்பட்ட சிற்சில நெகட்டிவ்கள் இது.  சல்மா விளக்கினால் மகிழ்ச்சி என்று தன் இனிய உரையை நிறைவு செய்தார் ஆளுமை.அடுத்து ஸ்டாலின் ராஜாங்கம் பேசவந்தார்.  அதற்குள் சல்மா அரங்கிற்குள் வந்துவிட்டார்.  வருவாரோ எனக் காத்திருந்து, கடைசியில் இனி வரவாய்ப்பில்லை என நம்பிக்கை இழந்திருந்த நேரம், அவதரித்தார் சல்மா.  மணி ஒன்பதைக் கடந்திருந்தும் அது மகிழ்ச்சியைத்தான் அதிகரித்திருந்தது, காரணம். பேச்சளர்களின் நாவலைப் பற்றி புகழ்ந்துப் பேசியிருந்தது.

Image result for ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின், தனக்கு முன் பேசிய எல்லோர் பேச்சுகளில் இருந்ததைத்தான் பேசினார் என்றாலும் மிக விரிவாக அந்த முழு நாவலை அலச முற்பட்டார்.  ஆறு இஸ்லாமியக் குடும்பங்களில் இருந்த முஸ்லீம் பெண்கள் பேசுவதுதான் முழு நாவல்.  ராபியாவில் தொடங்கி அதே ராபியாவில் முடிகிறது.  ஒரு பண்டிகையை முன்வைத்து நாவலின் துவக்கம் அமைகிறது.  நாம் ஏன் பண்டிகைகளை கொண்டாடுகிறோம் தெரியுமா ?நம்முடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டுக்கூறுகளையும், மதச் சட்டங்களையும் தங்களின் குழந்தைகளுக்கு கடத்தவே வருகின்றன பண்டிகைகள் வருடந்தவறாமல்.  அட என்று நம்மைச் சிந்தக்க வைத்தார் ஸ்டாலின்.அப்பாவி ஃபாத்திமாவை ஏன் சாகடித்தீர்கள் சல்மா ?  ப்ரதவுஸ் சாவும் அப்படித்தான் என்றாலும் ஓடிப்போய் எங்கோ வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஃபாத்திமாவை சாகடிக்க எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் இது தேவையேயில்லாத ஒன்றல்லவா ?  நாவலில் வரும் இந்த இரண்டு மரணங்களுமே மிகவும் வலி தருபவை.இன்னும் நிறைய பேசினார் ஸ்டாலின்.  மணி ஒன்பதரையைத் தாண்டி விட்டதால், பேச்சை அவசர அவசராமாக முடித்தார்.  ஏற்புரை ஆற்ற வந்தார் சல்மா.


சல்மா ஏற்புரை ஆற்றத் தொடங்கும் போது நேரம் இரவு
9 : 30


நெடுந்தொலைவிலிருந்து பேருந்து, மின்தொடர் வண்டி மூலம் வந்திருந்த பலரும் ஞாயிறு இரவு என்பதால் எட்டு மணியிலிருந்தே ஒவ்வொருவராய் கிளம்பிக்கொண்டிருந்தனர்.எஞ்சியிருந்த கூட்டத்தைப் பார்த்தே, இலக்கியத்திற்கு இவ்வளவு வாசகர்களா என வியந்தபடி பேச ஆரம்பித்தார் சல்மா (அரங்கில் சுமார் 40 பேர் இருந்திருக்கலாம், ஆனால் இன்றைய வாசிப்புச் சூழலில் ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு மேல் இத்தனை இளைஞர்களை குழும வைப்பதெல்லாம் அசாத்தியமான ஒன்றுதான்)”என் இந்த இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல், வெளிவந்து பத்து வருடங்களுக்கு மேலாகி பல பதிப்புகளைக் கண்டாலும், அதற்கென நிகழும் முதல் விமர்சன நிகழ்வாகத்தான் இதைக் கருதுகிறேன். இதற்குமுன் நான் இல்லாமல் வேறெங்கோ எப்போதோ நிகழ்ந்தது எனச் சொல்லக் கேட்டிருந்தும், நான் என் நாவல் மதிப்புரைக்காக கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு என்பதால் எனக்கு பெரிய மகிழ்ச்சி.எதிர்பாராவிதமாக இன்றைய தேதியிலேயேத்தான் நான் நடித்த குறும்படமான மெஹர் க்கு விருது கொடுக்கப்போகிறோம் என்று சொல்லிவிட்டதால், அதற்குப் போய்விட்டு தாமதமாக வந்ததற்கு முதலில் என் வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறேன்.“சல்மா எங்களுக்கு உங்கள் மீதான கோபம் இன்னும் போகவில்லதான் என்றாலும்………” என்று எனக்கு விருது கொடுக்கும் நிகழ்விலும், என் மீதான கோபத்தை நீறு பூத்துவிடாமல் இருப்பதை முன்னிறுத்தத்தான் பலரும் விரும்புகின்றனர்.  இந்த நாவலுக்காக வெளிவந்த அறிவுஜீவிகளின் விமர்சனங்கள் மிகக் கடுமையாக இருந்தன. ”சல்மாவின் இந்த நாவல் புதினத்துக்கான எந்த ஒழுங்கு வடிவுமில்லாமல் அபத்தமாக இருக்கிறது” என்று ஜெயமோகன்கள் சொன்னபோது அதற்கு பேராதரவு கிட்டியதைக் கண்டு நான் மிகவும் மனம் சோர்ந்து போனேன்.இவ்வாறாக இன்றளவும் என் சமூக ஆட்களாலும், சக இலக்கியவாதிகளாலும் நானும், என் நாவலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுக் கொண்டேதான் இருந்தது.  இந்த நாவலை பி.எச்.டி செய்யவெல்லாம் பலர் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னாலும், இந்த நாவலுக்கு உருப்படியாய் இணையத்தில் ஓரிரு விமர்சனங்களே கிட்டுகின்றன.  அவ்வளவு கடுமையாக நான் உதாசீனப்படுத்தப்பட்டேன்.  சமீபமாய் இந்  நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பின்னரே தேசிய மற்றும் சர்வதேச அளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது.  அதன்பின்னரே உலகெங்கிலுமிருந்து என் நாவலுக்கான விமர்சனங்களும், பாராட்டுகளும் வந்த வண்ணமுள்ளன.நான் ஒரே ஒரு நாவல் எழுத வேண்டும், அந்த ஒரே நாவலிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று விரும்பினேன், அதனால்தான் இத்தனை பெரிய நாவல்.   நான் பார்த்த, பழகிய, அனுபவித்த, கேட்டவைகளை அப்படி அப்படியே எழுதினேன். ஃபாத்திமாவை, ப்ர்தவுஸ்சை ஏன் சாகடித்தீர்கள் எனக் கேட்டார்கள்.அவர்கள் சாகவேண்டும் என சமூகம் விரும்பியது.  எல்லை மீறும் பெண்கள், மதச்சட்டம் தாண்டும் பெண்கள் இப்படித்தான் இறந்துபோகவேண்டும் என மக்கள் விரும்பினார்கள்.  அவர்களின் விருப்பத்துக்காக அந்த அபலைகள் செத்துப்போய் அவர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தினார்கள்.  இந்த உதாரணங்களைக் காட்டி தங்கள் அடிமைகளை இன்னமும் கட்டுக்குள் வைத்தார்கள்.  அதே போல ரமேஷ் அம்ம ரமேஷ் அம்மா என்கிறீர்களே அவர்களுக்கு பெயர் இல்லையா என்றீர்கள்.  உண்மையில் அந்தப் பெண்ணை அப்படித்தான் எல்லோரும் அழைத்தார்கள்.  அவருடைய உண்மையான பெயர் என்னவென்று கூட யாரும் அறிந்துக்கொள்ள முற்படவில்லை.  ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு இரண்டு கணவர்கள்.  இரண்டு பேரோடு வாழும் ஒரு பெண்ணையெல்லாம் இச் சமூகம் தம் மத்தியில் வாழ விடுவதே சாதனை எனும் போது பெயர் என்ன அவர்களுக்கு பெரிய அவசியம் ?  ஆனால் அந்தப் பெண்மணியின் பெயர் என்னவென்று இந்த  நாவலை எழுதும் முன் நான் கேட்டுத் தெரிந்துக்கொண்டேன், ஆனால் நாவலில் மக்கள் அழைத்த ரமேஷ் அம்மாவாகவே வந்தார்.அப்புறம் இந்த நாவலில் பெண்கள், ஆண்கள் பேசுவதைக் காட்டிலும் அதிகமாக பாலியல் மற்றும் பாலியல் அங்க வர்ணனைகள் பேசுவதாக ஒரு பேச்சு இருப்பது எனக்குத் தெரியும்.  இந்த நாவலில் வரும் பெண்களுக்கு சிரியா நிலவரமோ, அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளோ எதுவுமே தெரியாது.  ஒருவேளை என் கதையில் பிராமணப் பெண்கள் வந்திருந்தால் இப்படி பாலியல் பேசாது அரசியல் பேசியிருக்கக் கூடும்.  என் கதை கிராம மகளிருக்கு பாலியல் பேச்சுக்கள்தான் பெரிய வடிகால்.  அவர்கள் அப்படி பேசியதைக் கேட்டதால்தான் அதை அப்படியே எழுதவும் முடிந்தது.


ராபியா வழியாக நான் வெளிப்பட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்வேன்.  என் பல ஆதங்கங்களை நான் அவள் வழியாக சொல்ல முற்பட்டேன்.


நேரமின்மையால் சல்மா சற்று விரைவாகவே பேசி முடித்தார் என்றாலும், அவர் சொல்லவேண்டிய எல்லாவற்றையும் மிக நிதானமாக, அழகாகச் சொல்லி முடித்துவிட்டார்.அதன்பின்னரும், அவருடன் போட்டோ எடுத்துக்கொள்வது, நாவலில் கையெழுத்து பெற்றுக்கொள்வது என்று இன்னமும் சில நிமிடங்கள் செலவானது.வேண்டி உதாசீனப்படுத்தப்பட்ட தம் படைப்பை முன்வைத்து, ஒரு சிறப்பான நிகழ்வை வெற்றியாக்கிக் காட்டிய வாசகசாலை, சமூகத்தின் போலிப் புனிதங்களை கட்டுடைக்கும் படைப்பாளர்களை சரியாகத் தேர்ந்தெடுத்து, அதி அற்புதமான சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அவ்வளவு களைப்பான ஒரு சூழலிலும், சல்மா முகத்தில் வீற்றிருந்த நிம்மதி புன்னகையே சாட்சி !!!முதல் & இரண்டாம் பகுதிகளை வாசிக்கத் தவறவிட்டவர்கள் கீழே க்ளிக்கவும்.நன்றி _/\_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக