மரப்பசு - தி .ஜானகிராமன் ( நாவல் மதிப்புரை)

மரப்பசு - தி. ஜானகிராமன்.


இந்த க்ளாஸிக் நாவலுக்கு என் விமர்சனமென்பது அவசியமேயில்லாத ஒன்று.  ஆனால் 'சாரு நிவேதிதா'வை, 'பாலகுமார'னை ஆதர்ஸங்களாகக் கொண்டு, அவர்களை தெய்வங்களாக்கி அபிஷேகங்கள் செய்யும் ’தாஸர்கள்’ அவசியம் இந் நாவலை வாசிக்க வேண்டும்.



நூறு பாலச்சந்தர், இரு நூறு பாலகுமாரன், முன்னூறு சாரு நிவேதிதாவிற்கு இணையாய் பேராளுமை புரிந்திருக்கிறார் தி.ஜா.   இப்படி ஒரு பெண்ணைப் பற்றியெழுத அக்காலத்தில் நிச்சயம் பெருந்துணிவு வேண்டும்.



20 வயது ’அம்மணி’ தாமாகவே முன்வந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறாள்.  எடுத்தவுடனே நொடிக்குள் நூறு கிலோமீட்டரைத் தொட்டாற் போல் பரவசமான வரிகள்.  வீட்டில் பிணமாய்க் கிடத்தப்பட்டிருக்கும் சித்தப்பாவைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வருகிறது.  கணவனை இழந்த துயர் தாளாது அழும் சித்தி, அம்மணியின் கண்களுக்கு கோமாளியாய்த் தெரிகிறாள்.  சித்தியைக் கட்டிக்கொண்டு அழும் தொண்டு கிழங்களின் அங்க சேஷ்டைகள்  அவளை ROFL செய்யத் தூண்டுகிறது.



அம்மணியின் அம்மா தலையிலடித்துக் கொள்கிறாள், “என் வயித்துலன்னு வந்து பொறந்தீயே ?” அம்மணியின் கையைப் பற்றித் தர தரவென புழக்கடைக்கு இழுத்துச் செல்கிறார்.  “அதென்னடி சாவு வீட்டுல இப்படி பல்லக் காமிச்சிண்டு அசடாட்டம் ?”


அம்மணிக்கு தன்னை ஈர்க்கும் எவராகிலும் அவர்கள் கைகளைப் பிடித்து அழுந்தக் குலுக்க வேண்டும், ஆரத்தழுவி கட்டிப்பிடிக்க வேண்டுமென்றெல்லாம் ஆவல்.  ’பூ விலங்கு மாட்டுற கல்யாணம், என்ன கல்யாணமடி கல்யாணம் உங்க கல்யாணமது கல்யாணம்’ என்கிற கேரக்டர்.


இப்படி வித்தியாசமான சிந்தனைகள், கொஞ்சம் முற்போக்கான வாழ்வாசைகள் என்று தன்னைச் சராசரிப் பெண்களிடமிருந்து தனித்துக் காட்ட விரும்பும் துடுக்குமிக்க அல்லது துணிச்சல் மிக்க, புத்திசாலி அம்மணிக்கு, ’கோபாலி’ என்னும் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத வித்வான் ஆளுமையின் மீது மழலையிலிருந்தே தீராக் காதல்.  கோபாலி அம்மணிக்கு உறவுக்காரரும் கூட.


பெரியம்மா வீட்டிலேயே வளரும் அம்மணிக்கு, தன் தங்கை(பெரியம்மா மகள்) கல்யாணத்தில் கோபாலியை கச்சேரிக்கு அழைக்க வேண்டுமென ஆவல்.  என்னதான் உறவுக்காரர் என்றாலும் கோபாலி செம காஸ்ட்லி, தனக்குக் கட்டாது என்று பெரியப்பா மறுத்து விடுகிறார்.


’நான் போய் அழைத்தால் அவர் வந்து பாடுவார்’ என்று அம்மணி சொல்ல, விளையாட்டுப் பேச்சு என்று எல்லோரும் அதை மறந்தே விடுகிறார்கள், அம்மணியோ  சீரியஸாக எடுத்துக்கொண்டு கோபாலியிடம் விண்ணப்பிக்க அவர் வீட்டுக்கே போகிறார்.

மாடியிலிருக்கும் இப்போதைய 45 + வயதான கோபாலி குரலும், கட்டுறுதியான உடலும், கம்பீரமும், அந்தப் பெரிய கண்களும், ஆளுமையான பேச்சும் ஏனோ  அம்மணி உடலில்  மின்சாரமென கடந்து போகிறது, போதாதற்கு கோபாலியின் மனைவி குஞ்சாளியின் கோர வடிவம்.  ஹனுமனின் முகம் போல ஒரு வதனம்.  ’இப்பேற்பட்ட ஆளுக்கு இப்படி ஒரு துணையா ?’

ஊஞ்சலில் அமர்ந்து லேசே முன்னேயும் பின்னேயுமாய் ஆடிக்கொண்டிருந்த கோபாலி, அம்மணியின் குசலம் விசாரிக்கிறார். “அடியே குட்டைப் பாவாடை  போட்டுண்டு ரேழில ஓடிண்டுருந்தவளா இப்படி வளர்ந்து  நிக்குற ?” என்று அம்மணியை இழுத்து மார்போடு வாஞ்சையாக அணைக்கிறார்.  ஓசியில் கச்சேரி செய்வதாக ஒப்பும் கொள்கிறார்.  வண்டிச் சத்தம் ஒரு ரூபாய், இரு பக்க வாத்தியக்காரர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு ரூபாய் என வெறும் மூன்று  ரூபாய்களை மட்டும் அம்மணியின் பெரியப்பாவிடமிருந்து கச்சேரி சம்பளமாகப் பெற்றுக்கொள்கிறார்.

ஊரிலேயே(கும்பகோணம்) கல்யாணத்தில் அவ்வளவு சிறப்பான கச்சேரியை சமீபத்தில் கேட்டதாக யாருக்கும் நினைவேயில்லை.  ஏற்பாடு செய்த  அம்மணிக்கு பாராட்டுகள் குவிகிறது.  மறு நாள் நன்றி சொல்ல கோபாலி வீட்டுக்குப் போகிறாள் அம்மணி.  கோபாலியின் அதே அணைப்பு.  அணைப்பார் என அம்மணி ஏனோ எதிர்பார்த்தாள்.  இம்முறை கோபாலி உடலில் இருந்து அத்தர் நறுமணம் தூக்கலாக கசிய, அந்த அணைப்பிலிருந்து விலக அவளுக்கு விருப்பமில்லை.  கோபாலிக்கு பழம் நழுவி பாயில் விழுந்தது !

அம்மணியின் மேற்படிப்புக்காக சென்னைக்குப் போகச் சொல்கிறார் கோபாலி.  சென்னையில் தங்கிக் கொள்ள அவளுக்கென்று பிரத்யேகமாக மாம்பலத்தில் எல்லா வசதியோடும் ஒரு வீடு தருகிறார்.  உதவிக்கு ஒரு வேலைக்காரன்.  சங்கீதத்தில் வளர்ந்துவிட்டதால் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கவும் ஆரம்பிக்கிறார்.  எங்கு ?  அவர் வீட்டில்தான் அம்மணியுடன் !

அம்மணி எந்த வித சங்கோஜமுமின்றி, வயது வித்தியாசமும் பாராமல் எல்லா ஆண்களுடன் சகஜமாக எந்த செய்திகளென்றாலும் பேசி உரையாடுவதில் விருப்பம் கொண்டவள்.  ஆச்சர்யம் என்னவென்றால் கோபாலி அதை எதிர்ப்பதேயில்லை.  அம்மணிக்கு நாட்டியமும் கால்கூடியதால் அவளுடைய நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் கோபாலி மறுப்பு தெரிவித்ததில்லை, ஆக படிப்பு நேரம் போக வீட்டில் கோபாலி இல்லாத நேரங்களிலும் அரட்டை விவாதம் என்று இப்போதைய ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பையும் விஞ்சிய மகிழ்ச்சியை, சென்னை வாழ்வு அம்மணிக்குத் தருகிறது.


பெரியம்மா அரவணைப்பில் வளர்ந்தவள் என்பதால் திடுக்கென்று மகளைப் பார்க்க மாம்பலம் வருகிறாள் பெரியம்மா.  அம்மணி படுக்கையறையிலிருந்த இரட்டைக் கட்டில் எல்லாச் சேதிகளையும் உணர்த்திவிடுகிறது பெரியம்மாவுக்கு.  பத்தாததற்கு அம்மணியும் கோபாலியுடனான உறவைப் பற்றிச் சொல்லிவிடுகிறாள்.  அதிகமாய்ப் பேசாமல் இரவே ஊர் திரும்பி விடுகிறாள் பெரியம்மா.


வால் போய் கத்தியாய் வருகிறார் பெரியப்பா.   வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் ”ஊருக்கு கிளம்பு இப்பவே என் கூட”  என அம்மணியை மிரட்டல் தொனியில் அழைக்கிறார்.  ரிப்ளே வராத கோபத்தில் மகளை அறைகிறார், முதுகிலும் தலையிலும் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்.  தந்தைப் பாசம் என நினைக்கிறோம், சகலை மகளை சுவரோரமாகக் கொண்டுச் சென்று நெருக்கி இறுக்கி கைகளை முறுக்கி ’என்ன சொல்ற ?’ என்கிறார்.  அம்மணிக்கு திருதிராஷ்டிரர் நினைவுக்கு வருகிறார்.


”பாசத்தில் கூட திருதிராஷ்டிரர் குந்தியையோ, திரவுபதியையோ இப்படி இறுக்கி அணைக்க நினைத்தில்லையே ?”  அவ்வளவுதான்.  இப்போதைய ட்ரான்ஸ்க்ரஸ்ஸிவ் ரைட்டர்ஸ் இங்கு ஐம்பது பக்கத்திற்கு பெரியப்பா சிந்திப்பதாய், ’ஓகாட்’ எழுதித் தள்ளியிருப்பார்கள்.  


பெரியப்பா திடுமென விலகி விடுகிறார், நிஜக் காரணம் அழைப்பு மணியோசை.  வாசலில் கோபாலி.  கோபாலிக்கும் அதிர்ச்சி என்றாலும் பெரியப்பா கோபாலியை விட இளையவர்(!) என்பதால் பயத்தை வெளிக்காட்டாமல் வாய் நிறைய ’வாங்கோ’ என்கிறார்.  


அடுத்தகணம், அழைத்த வாய் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது.


“இதக் காட்டித்தானடா எம்பொண்ணை மயக்குன பாவி” என்றபடி பெரியப்பா,  சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ’தியாகராஜர், இன்ன பிற இரு மூர்த்திகள் படங்களை பிடுங்கி தரையில் எறிகிறார்.  தன்னை அடித்த போதும் வராத கோபம், தம் குருக்களை அவமானப்படுத்தும் போது பொத்துக் கொண்டு வருகிறது கோபாலிக்கு.  அப்படியே அந்தக் காட்சி நம்ம ஃபேஸ்புக் பிரபலம் பிச்சைக்காரனைப் பார்ப்பது போலவே இருந்தது :)


ம்ஹூம், பெரியப்பா வெறுங்கையோடு திரும்புகிறார்.  சும்மாக் கிடந்தச் சங்கை பெரியப்பா ஊதிவிட்டு விட்டதால், எந்தத் தயக்கமும், குற்றவுணர்வுமின்றி கோபாலி - அம்மணி காதல் படுக்கையில் ஓங்கி வளர்கிறது, ஆயிரம்தான் இருந்தாலும் Gopali is a old guy :(



”தன் தங்கை மகன் பட்டாபி கல்லூரி படிப்பு படிக்க சென்னை வருகிறான், இங்குதான் தங்கப் போகிறான், உனக்கு எல்லாவிதத்திலும் உதவியாய் இருப்பான்” என்கிறார் கோபாலி.  கோபாலி போலவே பஞ்சகச்சமும், பட்டுக் குடுமியுமாய் இருப்பான் என அவதானித்த அம்மணிக்கு பட்டபியின் உயரமும், எக்ஸசைஸ் பாடியும், இளமையும், அளவில்லா ஆனந்தத்தையும், கிளர்ச்சியையும் தருகிறது.



அம்மணியின் எண்ணத்திற்கேற்ப கோபாலியும் சங்கீதம், கச்சேரி என்றே தொடர்ந்து அதிக இடைவெளிகள் விட நெருப்பு வெகு எளிதாக பஞ்சை எரித்துவிடுகிறது.  பட்டாபிக்கு ஏக மன உளைச்சல்.  அடைக்கலம் கொடுத்த மாமாவிற்கு துரோகமிழைப்பதா ?  ஆனால் அம்மணி அவனை ஒருநாள் கூட நிம்மதியாய் தனியே தூங்க விடாமல் அள்ளி அள்ளி உண்கிறாள்.


Image result for thi.janakiraman

மேற்கண்ட வரிகள் கூட என் வயித்தெரிச்சலுக்காக நான் எழுதியதுதான், தி.ஜா இப்படி ஒரே ஒரு வரி கூட எழுதவில்லை.  அம்மாஞ்சிகள் படித்தார்களேயானால் ’அம்மணி - கோபாலியிடையே கூட மகள் தந்தை உறவுதான்’ எனப் புனிதப்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது. ’ பட்டாபி அம்மணிய என்னய்யா செய்தான் ?’ என அவர்களிடம் கேட்டீர்களேயானால், ”என்ன வந்தான், துணி துவச்சிப் போட்டான், சமையல் பண்ணான், காலேஜ் போனான், ஒரு சபா செகரட்டரி போதைல  அம்மணி இடுப்ப பிடிச்சப்ப அவனை அலேக்கா தூக்கி வெளிய வீசினான்” என்பார்கள் :)


தி.ஜானகிராமன் ’சிலிர்ப்பு’ எனும் தன் சிறுகதைத் தொகுதி முன்னுரையில், ”இந்தக் கட்டுப்பாடு & பண்பாடு மிக்க சமூகத்தில் என்னால் எல்லா விஷயங்களையும் உடைத்துச் சொல்ல முடியவில்லை” எனப் பெரிதும் ஏங்கியிருந்தார்.  ”ஒருவேளை பிற்காலத்தில் எவரேனும் இப்படித் துணிந்தால் நான் பெருமகிழ்ச்சி கொள்வேன்” என்றுமிருந்தார், நமக்கு கிட்டியது அல்ட்டிமேட்டும், அராத்தும்தான் ;)


பட்டாபி நிச்சயம் நம்மினம்.  கலாச்சார மீறல்களை அவன் மனம் முழுமையாய் ஏற்கவில்லை.  ஒன்று ”கோபாலியை புறக்கணித்து என்னை மணம் செய்து கொள், அல்லது நான் இங்கிருந்து விலகுகிறேன்” என்கிறான்.  திருமணமா, ஹாஹாஹா என அதிர்ந்து சிரிக்கிறாள் அம்மணி.  ஆளை அள்ளும் சிரிப்பு. அவளுக்கே பிடிக்கும் சிரிப்பு.  இனமானத் தமிழன் பட்டாபி அம்மணியை பிரிந்து வேறிடம் போகிறான்.


ஒரு வேலைக்காரன் இருக்கிறான் எனச் சொன்னேனிலில்லையா....(ஹல்லோர் அவசரப்படக்கூடாது, இதென்ன வடிவேல் கண்டமனூர் ஜமீன் காமெடியா ?) அவன் திடுமென ஒரு நாள் எனக்கு கல்யாணம் என்கிறான்.  அட லூகூ கல்யாணம் என்பது சிறை என அவனுக்கு உபதேசிக்கிறாள் அம்மணி.  இல்லை ஈடுபாட்டுடன் வாழ்ந்தால் அது சொர்க்கம் எனச் சொல்லிவிட்டு மரகதத்தை மணக்கிறான் அவன்.


அள்ளிப் பூசிய அமாவாசை இரவாய்(நன்றி மனோஜ்) இருக்கிறாள் மரகதம்.   ஆனாலும் நெகு நெகுவென வாளிப்பாய் மிளிர்கிறாள்.  அம்மணிக்கு அவளை அள்ளித் தூக்கி சுற்ற வேண்டுமெனகிளர்ச்சி எழுகிறது.  என்னா கருப்பு, என்னா அழகு என மரகதத்துடன் உயிராய்ப் பழகுகிறாள், நீங்கள் அவதானிப்பது போல் அவர்கள் லெஸ்பியனாயெல்லாம் ஆகிவிடவில்லை, ஆனால் தி. ஜா அப்படித்தான் சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார், கலாச்சாரம் பண்பாடு அவரை அநியாயத்திற்கு பயம் காட்டியதால், மேலே போகவில்லை, ஆனால் இந்த மரகதம் மூலமே க்ளைமேக்ஸ் வருகிறது.


அம்மணி சலிக்க சலிக்க தன் இளமையை பலரோடும் பகிர்ந்து இன்பம் பெறுகிறாள்.  வெளி நாடுகளுக்கு நாட்டிய நிகழ்ச்சியாய் செல்பவள், வித்தியாசத்திற்காக ஒருமுறை சாலை வேசியாகி இருவரை அழைத்தும் செல்கிறாள், ஆனால் அவள் எதையும் நிரந்தரமாக செய்வதில்லை, எந்த நட்பானாலும் உண்மையாய் இருக்கிறாள், ஆனால்  நாமார்க்கும் குடியல்லோம் என்பது அவள் கோட்பாடு.


வாழ்க்கைச் சக்கரம் வேக வேகமாகச் சுழல 38+ வயதையெட்டும் அம்மணிக்கு முகச் சுருக்கம், தலை நரை வாழ்க்கைப் பயத்தை தருகிறது.   நிரந்தரத் துணையில்லாமல் எஞ்சிய வாழ்வைக் கழிக்க முடியுமா எனும் புது எண்ணம் துளிர...................... (மீதியை அறிய நாவலை வாங்கி வாசியுங்கள் ;) )



அநேகமாய் கணையாழியில் இத் தொடர்கதை(நாவல்) 1955 1960 களில் வந்திருக்கக் கூடும்.  ஒரு விடுதலை வேட்கை கொண்ட ஆணிற்கு இருக்கும் எல்லா உரிமையும் பெண்ணிற்குமுண்டு என்று ஒத்துக்கொண்டால் அம்மணியை உங்களுக்கும் பிடிக்கும்.  No Problem, தி. ஜாவிற்கு ஈமெயில் அனுப்பி, அம்மணியின் விலாசம் கேட்டு அவளுடன் உரையாட நீங்கள் தாராளமாய்ப் போகலாம், ஆனால் அவளாய் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் அம்மணியை ஆள முடியும்.   அம்மணியை மட்டுமல்ல எப் பெண்ணாயினும் அவளுக்கு விருப்பமில்லையெனில் நீங்கள் விலகினால் போதும், அம்மணிக்கு இறுதியில் அந்த பயம் கூட வந்திருக்காது, விடுங்க இன்னும் 50 - 100 வருஷம், எல்லாம் சரியாயிடும் ;)

இப்ப ஓர் உரையாடல் :-

“சரி, சினிமாக்களில், ரீமேக் படம், ரீமேக் பாடல் என்றெல்லாம் முயல்கிறார்களே, இது போன்ற க்ளாஸிக்குக்களை எவரேனும் ரீரைட் பண்ண்யிருக்கிறார்களா ?  அப்படிப் பண்ணியிராவிட்டால் இந் நாவலை ஏன் ஜெயமோகன், சாரு போன்றவர்கள் மீண்டும் எழுத முயலக்கூடாது ?”

“அதெல்லாம் சாரு எந்தக் காலத்துலருந்தோ ரீரைட் பண்ணிக்கிட்டிருக்காருங்க”

“ஓ அப்படியா ? யாரோட புக்க ரீரைட் பண்ணாரு ?”

“ம், அவரோட நாவல்களத்தான்”

“யோவ் , நீ அந்தக் குழாமச் சேந்தவன்தானே ? அப்படியே ஓடிப்போயிடு, இயற்கை தண்டிச்சிறப்போகுது”

உதாரணத்துக்கு இந்தக் காட்சிய சாரு எழுதுனா எப்படி இருக்கும் ?

இப்ப கோபாலி - அம்மணிக்கு மாம்பல வீட்டுல ஃபர்ஸ்ட் நைட்.


கோபாலி சாம்பிராணி, ஊதுபத்தி புகைக்கு நடுவே, சங்கீத மும்மூர்த்திகள் படங்களுக்கு முன்னால் மனைக்கட்டை மேலமர்ந்து உன்னத சங்கீதம் பாட ஆரம்பிக்கிறார்.  தோடி ராகம், ஆதி தாளம்.


அம்மணி அந்தச் சங்கீதத்தில் அப்படியேச் சொக்கி, கோபாலி அருகில் அமர்கிறாள்.  கோபாலி தன் தொடையில் தட்டிய கைகளை மாற்றி அப்படியே அம்மணி தொடையில் தட்டிக்கொண்டே உச்சஸ்தாயிக்குப் போக.............அம்மணி பாய்ந்து கோபாலி உதடுகளை கவ்வுகிறாள். கோபாலி.....வேணாம் என் வழி தி. ஜா வழியாவே இருந்துட்டுப் போகட்டும், ஆனா இப்படி ஒரு 60 -20 காதல எவன் சொல்லியிருக்கான் ?

“அதயும் சாரு 2011 ல விலாவரியாச் சொல்லியிருக்கார் “

“யோவ் நீ இன்னும் போகலையா ? “

“ இதச் சொல்லிட்டு போயிடறேன், எக்ஸைல் நாவல்ல உதயாவுக்கு 60, ஆனா மூணு கொழந்த பெத்த அஞ்சலிக்கு 20 தான், நாவலத் தொறந்தவுன்ன என்ன சீனுன்னா, உதயா பைப்ப எடுத்து....”

“ நாசமாப் போறவனே” நான் அந்த இடத்தைவிட்டு விலகி ஓட ஆரம்பித்தேன் !!!


நன்றி.

மரப்பசு ( நாவல்)
ஆசிரியர் தி.ஜானகிராமன்.
காலச்சுவடு எனில் காஸ்ட்லி ஆனால் செம்பதிப்பு
நான் வாசித்தது மலிவுப்பதிப்பு ஐந்திணை பதிப்பகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!