ஆழி சூழ் உலகு
ஆழி சூழ் உலகு - ஆசிரியர் ஜோ.டி குருஸ் அவர்களுடன் ஓர் அளவளாவல் !

நேற்றைய வெள்ளி(26/06/2015) மாலையை இனிமையாக்கிய..... என்று தொடங்கினால், ’தேய்வழக்காக எழுதுவதே உம் தொழிலோ ?’ என நீங்கள் விசனப்படக் கூடும். உண்மையில் அதைக்காட்டிலும் ஒரு சிறப்பான வெள்ளியைச் சந்திக்க எனக்கு இன்னும் சில வருடங்கள் கூட ஆகக்கூடும் என்பதுதான் உண்மை !
அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் இந் நாவலைப் பற்றி மதிப்புரை ஆற்றிய கரு. ஆறுமுகத் தமிழன்(S/O - பழ.கருப்பைய்யா அங்காடித்தெரு அண்ணாச்சி எங்க துறைமுகத் தொகுதி எம் எல் ஏ) பேச்சாய்யா அது ???
நான் பார்த்தவரை, நூல் மதிப்புரை ஆற்றியவர்களில் என்னை மிக ஈர்த்தவர்கள் போன வருட ஆரம்பத்தில் உயிர்மை விழாவில் உரையாற்றிய பாரதி கிருஷ்ணகுமார், இவ்வருட தொடக்கத்தில் சஞ்சாரம் மதிப்புரை வழங்கிய அருணன், வாசகசாலையில் கவிதை மற்றும் கவிஞர்கள் பற்றிப் பேசிய பேராசிரியர்.கல்யாணராமன் அவர்கள்...........இவர்களையும் விஞ்சி அபார உரையைத் தந்து வியப்பிலாழ்த்தினார் திரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள். இந்தப் பேச்சின் பதிவை யு ட்யூப் சுட்டி கிட்டினால் பகிர்கிறேன் தவறவே விடாதீர்கள், அதிலும் ஆழி சூழ் உலகை வாசித்தவர்கள் அவசியம் பாருங்கள், இப்படி ஒரு பார்வை வீச்சா என அதிர்ந்து உடனடியாக மீள்வாசிக்கப் போய்விடுவீர்கள் !
விழாவின் ஆரம்பத்தில் திடீர் இடைச்செருகலாக திரு.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய பருக்கை நாவலுக்காக யுவ புரஷ்கார் சாகித்ய அகடமி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள எண்ணி, விழா நாயகர் ஜோ.டி.குருஸ் அவர்களின் அனுமதியுடன் சில நிமிடங்கள் அது பற்றிப் பேச ஜீவலட்சுமியைப் பேசச் செய்தனர் வாசகசாலை நிர்வாகிகள்.
பருக்கை நாவல் பற்றி சுருக்கமாகப் பேசினாலும் அதைப் பிறர் வாங்கத் தூண்டுமளவு அழகாகப் பேசினார். கதை இப்போது பரவலாக இருக்கும் கேட்டரிங் கலாச்சாரம் பற்றியது என்றார். கேட்டரிங் நிறுவனத்திற்காக வைபவங்களில் நமக்கு உணவு பரிமாற வரும் எளிய கல்லூரி இளைஞர்கள், வரவேற்பாளர்களாக அழகுச்சிலைகளாக உலா வரும் ஏழை மாணவிகளின் பசி & அவர்களின் பின்புலம்தான் கருவின் மையம். இப் பேச்சால் கவரப்பட்டு, அந்த நாவலை வாங்கி ஆசிரியர் வீர பாண்டியனிடம் கொடுத்து கையெழுத்து கேட்டால், மனிதர் போட உடன்படவே இல்லை.
“அட எங்க ஃபீல்டுல 100 - 150 லைக் வாங்கிட்டாலே எங்களுக்கு கொம்பு முளைச்சிடும், நாங்க யாருன்னு தெரியுமுல்லன்னு சீன் போடுவோம், அறிவுரைங்க சொல்வோம், விருது வாங்குன எழுத்தாளர் நீங்க இவ்வளவு அடக்க ஒடுக்கமா இருந்தா தமிழ் இலக்கியத்துக்கு இழுக்கு பாஸ்” என்று அவரைக் குழிக்குள் தள்ளிவிட்டு கையெழுத்தை பெற்றுவிட்டேன் ;) (அதனாலத்தான் நான் ஃபேஸ்புக் ட்வீட்டர்லல்லாம் இல்ல பாஸ் என்று பல்ப் கொடுத்தார்) பருக்கை பற்றிய மேலதிக தகவல்களை பனுவல் திருவான்மியூர் புத்தக நிலையம் மற்றும் த.ஜீவலட்சுமி அவர்களின் பக்கங்களில் காணலாம் !
வாசகசாலை அமைப்பின் பிரதான தூண்களான அருண் & கார்த்திக் ஆழி சூழ் உலகின் நாவல் அறிமுகம் செய்துவைத்த கையோடு என்னைப் பேச அழைத்தனர். சர்க்கஸில் பெரிய சாகஸங்கள் தொடங்கும் முன் கோமாளி ஒருவர் வந்து நம்மை உற்சாகப்படுத்த கிச்சுகிச்சு மூட்டுவார். எனவே அந்தக் கிச்சுக்கிச்சுக்களைப் பற்றி பிறகு சாவகாசமாகப் பேசலாம் என்பதால் எனக்கு அடுத்துப் பேச வந்த அடவி சிற்றிதழ் ஆசிரியர் குழுவில் இருக்கும் மிருதுளா அவர்களின் உரையிலிருந்து ஆரம்பிப்பதே சிறந்ததாக இருக்கும்.
மிருதுளா நாவலை அக்கு அக்காகப் பிரித்து அலசி ஒரு கட்டுரையாக எழுதி வந்திருந்து அதை வாசித்தார். இந்தக் கட்டுரை வாசிப்பை உரையாக சபைகளில் நிகழ்த்தும்போது அதை அப்படியே உள் வாங்குவதில் எனக்கு கொஞ்சம் சிரமம், எனவே மிருதுளா அக் கட்டுரையை அப்படியே பதிவேற்றினால் பலருக்கு ஆழி சூழ் உலகை வாசிக்க ஒரு நல்ல தூண்டுதலாக இருக்கும் என்பதில் எச் சந்தேகமுமில்லை.
அடுத்து பேச அழைக்கப்பட்டவர் திரு. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள். மதுரை வட்டார வழக்கில் தித்திக்கும் தூய தமிழில் தன்னுரையை ஆரம்பித்தார். விமானம் கிளம்பி ரன்வேயைத் தொடும்வரை மெதுவாக ஊர்த்து செல்லும், பிறகு சில விநாடிகள் ரன்வே வாயிலில் நிற்கும், அதன்பின் விசிறிகள் உச்ச வேகத்தில் சுழல அசுர வேகத்தில் ரன்வேயில் ஓடும், விசுக்கென்று உயரத்தாவும், ஒரு நிமிஷம்தான் ஐந்தாயிரம் அடிக்கு மேல் பறக்க ஆரம்பித்திருக்கும்............இதுதான் அவர் உரையின் வீச்சுக்கான உவமானம் !
”மீனவர்கள் எத்தனை ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதித்தாலும் அதை உடனடியாக செலவழித்து அனுபவிக்கத் துடிப்பார்கள். தெற்கே சின்னஞ்சிறு கிராமத்தில் இருக்கும் மீனவர்கள் கூட கையில் காசு சேர்ந்ததும் அருகிலிருக்கும் ஊர்களில் எல்லாம் துணியெடுக்க விரும்பாமல் பெரு நகரங்களான நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துகுடி என்றுதான் ஊர்வலமாய் கிளம்பி போவார்கள். ’அதிகமான ரேட்ல எடுத்துப் போடுப்பா’ என்று கையிலிருக்கும் எல்லாக் காசையும் செலவழித்த பின்தான் ஊருக்குத் திரும்புவார்கள், நாளை பற்றிய சிறிய கவலை கூட அவர்களுக்கு இருக்காது, ஏன் என்றால் நாளை என்கிற நாளில் அவர்களுக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை. அந்த நிலையாமை வாழ்க்கையைப் பற்றிப் பேசும் நாவல்தான் ஆழி சூழ் உலகு.
சலம் என்றால் நீர். அதைச் ஜலம் என்று எழுதவோ/உச்சரிக்கவோ படுவதால் நாம் சொல்லக் கூச்சப்படுவோம் அது ஏதோ வடமொழிச் சொல், பிராமணர்கள் உபயோகப்படுத்துவது என்றெல்லாம் நினைத்துக்கொண்டு. கிடையவே கிடையாது தமிழ்ச் சொல்தான் சலம் (சமீபத்தில் ஷிவம் என்பதுதான் சரி என நான் சொல்ல, ”கிடையவே கிடையாது சிவம் என்பதுதான் சரி, சமஸ்கிருதத்தில் கூட சிவம்தானே ஒழிய ஷிவம் எனக் கிடையாது” என ஆணித்தரமாக வாதிட்டார் கருந்தேள்)
சல சலவென நிலைத்து நிற்காமல் தளும்பிக்கொண்டிருப்பது சலம். அதை நம்பி வாழும் மீனவ வாழ்க்கையும் நிலையாமை கொண்டதே. மாறாக அசையாமல் ஓங்கி அப்படியே நிலைத்திருப்பதற்கு பெயர் அசலம். மலை ஓர் அசலம். அருணாச்சலம், வெங்காடாச்சலம் போல. தரையை நம்பி ஜீவிக்கும் நம்முடைய வாழ்வும் நிலையாமை கொண்டதுதான் என்றாலும் நம்மிடம் ’போய்ட்டு வந்துடுவோம்’ன்னு ஓர் அசாத்திய நம்பிக்கை இருக்கும், தண்ணில அந்தக் கதை வேலைக்கே ஆகாது. கடலுக்குள்ள போய்ட்டா கடல் அவன என்ன செய்யும்ன்னு எந்த உத்திரவாதமும் அவனுக்கில்ல. கடலில் வாழும் ராட்சத உயிர்களெல்லாம் ஏதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டுத்தான் நம்மளயெல்லாம் விட்டு வச்சிருக்குன்னு அவன் நம்புறான், எல்லோருக்கும் அவன் ஜனிச்ச வழி எதுன்னு தெரியும், ஆனா எப்படிச் சாவான்னு எவனுக்குமே தெரியாது, ஆனா இவன் தன்னோட சாவு கடலுக்குள்ளதான் இருக்கோ ?ன்னே வாழ்றவன், அவன் என்னத்துக்கு நாளைக்கு வரை காத்திருக்கணும், வாழணுமா தரையில் இருக்கிறப்பவே ஆனந்தமா வாழுன்றது அவன் சித்தாந்தம் !
கதைக்களம் 1933 ல் தொடங்கி 1985 வரை கடலோர மீனவர்களின் மூன்று தலைமுறை வாழ்வைப் பிரதிபலித்தபடி பயணிக்கிறது. இண்டெலக்சுவலுக்கும், இன்ஸ்டிங்டிற்குமிடையேயான வித்தியாசங்களைப் பற்றி அலசும் அழகான பதிவாக இந் நாவலைப் பார்க்கலாம். இன்ஸ்டிங்காக இவர்கள் இருந்த காலத்தில் தன் சொந்தத்துக்காக, தன் நண்பர்களுக்காக, தன் உற்றார்களுக்காக எதையும் இழக்கத் துணியும் பரதவர்கள் கால ஓட்டத்தில் கல்வி கிட்டி இன்டெலக்சுவலாக மாறிவிடும்போது சொந்த அண்ணனை கண் முன் கொல்லப்போகிறார்களே எனத் தெரிந்தும், அப்படிக் கொல்பவனை பின் ஒரு நாள் பழி வாங்கிக் கொள்ளலாம் என அப்போதைக்கு தப்பிச் செல்கிறான் !
ஆக நாளைய நாளைப் பற்றிய எந்தச் சிந்தனையுமில்லாமல் நிலையாமை வாழ்வைப் பற்றி பதிய நினைக்கும் ஒருவர் இதைவிடச் சிறப்பான ஆக்கத்தை படைக்கவே முடியாது என்கிற எடுத்துக்காட்டாய்த்தான் ஆழி சூழ் உலகு இங்கு நம்மை வெல்கிறது.............”
ஓர் இடைச்செருகல்.
நான் பேசும்போது, வசந்தா என்கிற கேரக்டர்தான் என் நினைவில் ஆழப்பதிந்த ஒரு கேரக்டர். எப்போது ஆழி சூழ் உலகு பற்றி விவாதம் நடந்தாலும் இந்த வசந்தா துணையோடு அதில் போய் கலந்து கொள்வேன் என்றிருந்தேன். அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆறுமுகம், ”வசந்தாதான் இந் நாவலியேயே இழி பிறவி அவளைப் போய் இவருக்கு எப்படிப் பிடித்ததோ ?” என்று கதைச் சம்பவத்தைப் பற்றிக் கொஞ்சம் சொன்னார்.
உண்மையில் அவர் பேசியதில் ஒரு சில தேன் துளிகள் மட்டுமே இது. இப்படிப் பேசுவதாயிருந்தால் மட்டுமே நூல் மதிப்புரை பற்றி அடுத்து பேச அழைத்தால் இப்படிப் பேச வேண்டுமென்று புதுச் சபதம் எடுத்தேன், இப் பிறவியில் அது வாய்கூடினால் பெரும் வரம்பெற்ற தன்யனாவேன் ;)
சரி, அந்த வசந்தா எதற்காக என்னை ஈர்த்தாள் எனப் பாருங்கள்.
வசந்தா அழகான கட்டுடல் கொண்ட அபார அழகி. அம்மா இல்லாத பெண், அப்பா மட்டுமே ஆதரவு. செப்புச்சிலை போன்ற வளைவு சுளிவான அவயம் கொண்டவள். ஊரே அவள் கடைக்கண் தரிசனத்துக்காக ஏங்கிக் கிடக்கும் நேரம். ஊர்ப் பெண்களே அவள் அழகை வியந்து பெருமூச்சு விடுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்பேற்பட்ட அழகி வசந்தா ஜஸ்டின் எனும் திடகாத்திர புஜபலமிக்க ஆடவன் அழகுக்கு அடிமை. ஜஸ்டினை விட இரண்டு வயது பெரியவள் என்கிற போதும் விடாப்பிடியாக அவனை தன் கணவனாக்கிக் கொள்ள வேண்டுமென விரும்புகிறவள். அதற்காக திருமணத்திற்கு முன்பே தன்னைத் தரவும் அவள் தயங்கவில்லை.
ஜஸ்டின், வசந்தாவின் அழகில் மயங்கினாலும், தன் உடல் வலிமையைக் கண்டு அவளே மயங்கி இப்படி விழுகிறாளே என்று அவளை சதா அனுபவிப்பதிலேயே இருக்கிறானே ஒழிய, கல்யாணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் லட்சியம், அது இது என்று தட்டிக்கழித்து காலம் கடத்துகிறான். இதற்குள் பல அபார்ஷன்கள் நடந்து விடுகிறது ஊருக்குத் தெரியாமல் !
இருந்தாலும் ஜஸ்டின் ஒரு நாள் தன்னைத் திருமணம் செய்துகொள்வான் என்பதற்காக, தன் ஆசைக் காதலனுக்காக. ஆனால் ஜஸ்டின் திருமணம் மயிலடியாளோடு நடந்து விடுகிறது, ஒரு கலவரத்தில் ஜெயிலுக்குப் போய் ஆயுள் தண்டனையும் கிட்டி விடுகிறது ஜஸ்டினுக்கு.
நிராதரவாகிப் போன அனாதை வசந்தா(அப்பாவும் இறந்துவிடுகிறார்) எது கிட்டியதோ அதைப் பற்றும் கொடி போல தன்னை விட இருபது வயது கூடுதலான ஒரு அண்ணாச்சியின் வைப்பாட்டியாக ஊரை விட்டு ஓடிப்போகிறாள். இவள் கெட்ட நேரம் ஒரு பெண் பிறந்த சில நாட்களில் அந்த அண்ணாச்சியும் செத்துப் போக மீண்டும் அதே ஊருக்கு கைக்குழந்தையுடன் வந்து சேர்கிறாள். அவ்வளவு அழகான வசந்தாவின் எல்லா அழகும் இந்த சில வருடங்களில் கரைந்து அலங்கோலமாக இருக்கிறாள் வசந்தா. கடை வைத்து நாய் பிழைப்பு ஓடுகிறது. அவள் கஷ்டப்படும் ஒவ்வொரு நிமிடமும் ஜஸ்டின் மீது அவளுக்கு தீராக் கோபம் எழுகிறது.
ஆயுள்தண்டனை முடிந்து வெளிவரும் ஜஸ்டின் வசந்தாவின் இந்த நிலை அறிந்து பெருந்துயர் கொள்கிறார். இளமைத் துடிப்பில் ஆடி, இப்படி வசந்தா வாழ்க்கையை நாசமாக்கிய பாவத்தைப் போக்க இனி ஒருபோதும் சண்டை, பஞ்சாயத்து சச்சரவுகளுக்குப் போவதில்லை என முடிவெடுக்கிறார், ஆனால் கத்தி எடுத்தவன் கத்தியால்தானே சாக வேண்டும் ? தான் சம்பந்தமேப் படாத ஒரு சாதிக்கலவரத்தில் நாட்டு வெடியால் நெஞ்சு பிளந்து குற்றுயிராய் ஓர் ஓரத்தில் எவர் கண்ணுக்கும் புலப்படாமல் கிடக்கிறார் ஜஸ்டின். தூரத்தில் தெரியும் வசந்தாவைப் பார்க்கும் ஜஸ்டினின் கண்கள், வசந்தா தண்ணீர் கொடுத்து தன்னைக் காப்பாற்றுவாள், அதன் மூலம் அவள் தன்னை மன்னித்து விட்டதாக நிம்மதியடையலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் ஜஸ்டின் அருகே வரும் வசந்தா, “பாவி உன்னாலத்தாண்டா இப்படி நிர்க்கதியா நிக்கறேன், மிரட்டி மிரட்டி இந்த உடம்ப அணுவணுவா உறிஞ்சி உதறிட்டுப் போன நாயே” என்றபடி அந்த பிளந்த நெஞ்சில் மண்ணையள்ளிப் போட்டு ஜஸ்டின் மரணத்தை துரிதமாக்கிவிட்டு மன்னிப்பை நிராகரிக்கிறாள்.
ஓகே. இதுதான் வசந்தாவின் சுருக்கமான ஒரு கதை. இன்று டிவியில் அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்தேன். உச்சகட்டக் காட்சி. வில்லன் நாகேஷ் சர்க்கஸ் கூடார உச்சியில் கயிறில் தொங்கிக் கொண்டிருக்கிறார், கீழே சிங்கக்கூட்டம். எதிரே அப்பு கமல் கையில் துப்பாக்கியுடன் நாகேஷ் தொங்கிக் கொண்டிருக்கும் கயிறை குறி வைத்துக் கொண்டிருக்கிறார். அம்மா ஸ்ரீ வித்யா ஒரு வார்த்தை சொன்னால் அப்பு கமல் வில்லன் நாகேஷை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவார் என எல்லோரும் அவரை கமலைத் தடுக்கக் கோருவார்கள், ஆனால் ஸ்ரீ வித்யாவுக்கு அப்பதான் நாகேஷ் அவர் கணவரைத் துடி துடிக்க கொன்ற ப்ளாஷ்பேக்கும், தன் வாயில் விஷம் ஊற்றியதும், தீ வைத்து குழந்தையோடு கொல்ல முயன்ற காட்சிகளும் வரும்..........அம்மாவின் மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என ஏற்று, நாகேஷ் தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைச் சுடுவார் அப்பு கமல். ’ஸ்ரீவித்யால்லாம் ஒரு பொம்பள, கல்மனசுக்காரி அவளப் போய் பிடிக்கும்ங்கிறியேப்பா’ ன்னா என்னைக் கேப்பிங்க ???
இறுதியாக பேச அழைக்கப்பட்டவர் சசிகலா. இவர் உரை பெரிய விழிப்புணர்வை எல்லோருக்கும் தந்தது ஆசிரியர் உட்பட ;)
நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் மிகப் பிற்போக்குத்தனமாகவும், ஆணாதிக்கம் மிகுந்த ஒரு படைப்பாகவும் இருக்கிறதே என்று சற்றே வெகுண்டு ஒன்று, இரண்டாவதாக, ஒன்று இரண்டாவதாக, ஒன்று இரண்டவதாக என்றபடியே மூன்று, நான்கு என்றெல்லாம் பாயிண்ட்களை அடுக்காமல் அதற்குள்ளேயே அப் பெண் பாத்திரங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மேய்ந்தார். அதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம்தான் அலாதி.
சசிகலா பேசியதை எழுதினால் அது ஆழி சூழ் உலகு வாசித்தவர்களுக்கு
மட்டுமே புரியுமென்பதால் இவருடைய சிறப்பான உரைக்கும் வீடியோ சுட்டி தர முயல்கிறேன், அடுத்து நாவலாசிரியர் திரு.ஜோடி.குருஸ் தன் ஏற்புரையை வழங்க அழைக்கப்பட்டார்.
”நான் அதிக இலக்கியம் வாசித்தது கிடையாது. அவ்வப்போது சில கவிதைகள், கட்டுரைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைப்பேன், அப்ப ஒரு அண்ணாச்சி என் காதுபடவே இப்பல்லாம் பேப்பர் பென்சில் கிடச்சா எவனும் எழுத வந்துடறான் என்று கமெண்ட் அடித்தார். இப்ப்படியாகத் தூண்டப்பட்டு 2004ல் இந்த ஆழி சூழ் உலகைப் படைத்தேன். என் பகுதியில் நடந்த கதை, நான் அறிந்த கதை மாந்தர்கள் என்பதால் புனைவைக் காட்டிலும் இது ஒரு வரலாற்றுப் பதிவு. பல நுண் இலக்கியங்கள் எல்லாம் வாசித்தது கிடையாது என்பதால் இதில் வரும் பெண் பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தார்களோ அவர்களைப் பற்றி அப்படியேச் சொல்லிவிட்டேன், ஒருவேளை அப்படி நல் இலக்கியங்கள் வாசித்திருந்தால் பெண்களை புரட்சியாக கூட காட்டியிருக்க முடியும், ஆனால் அப்படி நான் மாற்றியிருந்தால் நாவல் இப்போது பேசப் படுவதைப் போல் நிச்சயம் பேசப்பட்டிருக்காது.
இப்போதும் என் வீட்டாட்கள் ஜோடியாக வரும்போது ஆண்கள் சோபாவிலும், பெண்கள் தரையில் அமர்வதும் வாடிக்கையாக நடக்கும் ஒன்று. இதை எழுதும்போது அப்படியே பதிந்தால் அதை ஆணாதிக்கமாகவா பார்ப்பீர்கள் ? என்னுடைய இத்தகைய பாத்திரப் படைப்புகள் ஓர் ஆவணம் அல்லவா ? பாவிகளா இப்படித்தான் நீங்க பெண்கள வச்சிருந்திருக்கீங்க, இனியும் இப்படி வச்சிருக்காதீங்க என்பதைத்தான் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் சசிகலாவின் இந்தத் தூண்டுதல் நிச்சயம் என் அடுத்த படைப்பில், பாத்திரங்களைக் கையாள்வதில் சில பொறுப்புகளை நிச்சயம் கொடுக்கும் என்பதால் அவருக்கு நன்றி !
வெள்ளி மாலை என்கிற எந்த பிரச்சினையுமின்றி பனுவல் அரங்கம் நிறைந்திருந்தது. வந்திருந்த பலரும் ஆழி சூழ் உலகின் தீவிர ரசிகர்களாகவும் இருந்தனர். பலரும் மிகச் சிலாகித்து உற்சாகமாக தங்கள் வாசிப்பனுவத்தைப் பற்றிப் பேசினர், மிக நிறைவான ஒரு விழாவாக அமைந்திருந்தது.
ஜோ.டி குருஸா மோடி குருஸா ? வ.உ.சி தீண்டாமையை ஆதரித்தாரா ? என்பது பற்றிய சில சர்ச்சை உரையாடல்களை தனிப்பதிவாக இடுகிறேன், நான் பேச நினைத்ததை எழுதி வைத்திருந்தேன் அதையும் தருகிறேன், வாய்ப்பளித்த வாசகசாலை நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி !!!
அடுத்த பகுதி
=========
அன்புள்ள வாசகசாலை நிர்வாகிகளுக்கும், எழுத்தாளுமைகளுக்கும், வாசகர்களுக்கும் என் வணக்கம்.
இந்த நிகழ்ச்சிக்கு வெறுமனே வாசகனாக வந்து, ஒரு மூலையில் அமர்ந்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டு அதைப்பற்றி விரிவாக எழுதச் சொன்னால் எனக்கு அது மிக எளிதான செயல் ஆனால் சபையில் பேசுவது என்றால் தத்தக்கா பித்தக்கா என குரலில் நடுக்கம் இருக்கும்.
பிறகு எதற்காக வாசகசாலை நிர்வாகி கார்த்திக் என்னைப் பேச அழைத்ததை ஏற்றுக்கொண்டேன் என்றால், இதற்கு முன் இங்கு ஐந்தாம் நிகழ்ச்சியாய் அமைந்த ராஜன் மகள் கலந்துரையாடலின் போது எழுத்தாளர் பா.வெங்கடேசன் சொன்ன ஒரு மேற்கோள்தான். இப்படி திக்கித் திணறிப் பேசுவதைக் கேட்பதிலும் அலாதி சுகம் இருக்கத்தான் செய்கிறது என்றிருந்தார்.
ஆழி சூழ் உலகு. இந்த அழகிய தமிழ்த் தலைப்பை உச்சரிப்பதிலேயே பெரும் சவால் உள்ளது தற்கால இளைஞர்களுக்கு. அதைவிடவும் கடுமையான சவால் இந்த ஆழிக்குள் நுழைவது.
2011ல் தான் இந்த ஆழி சூழ் உலகு நாவலை நான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். எவரும் இதுபற்றி எனக்குப் பரிந்துரைத்திருக்கவில்லை. அந்தக் கடல் படம் போட்ட மேலட்டை. அப்புறம் அந்த ஜோ.டி குருஸ் எனும் இங்க்லீஷ் பெயர். சரி ஏதோ மேலை நாட்டு எழுத்தாளர் கடலைப் பற்றி எழுதியிருக்கும் ஒரு நாவல், நிச்சயம் அருமையாகத்தான் இருக்கும் என்று பந்தாவுக்காக எடுத்தது. இண்டர் நெர் யுக்த்தில அப்பதான் ஃபேஸ்புக் பிரபலமாகியிட்டிருந்த நேரம். இது மாதிரி கனமான புத்தகங்களைப் பரப்பி ஃபோட்டோ எடுத்து போட்டுக்கிட்டா ஒரு அறிவுஜீவி அடையாளம் கிட்டும், பிறகு ஒரு நாள் சாவகாசமா படிக்கலாம்ன்னு எடுத்து புரட்டிப் பார்த்தேன்.
ஜோ.டி.குருஸ் ராயபுரம் ஆளுன்னு போட்டிருந்துச்சி. உடனே எனக்கு சப்புன்னு ஆயிருக்கும்ன்னு நீங்க நினைப்பீங்க, அதான் இல்ல, அவர் இப்ப எங்காளா ஆகியிருந்தாரு, எங்க ஏரியாக்காரர் இவ்வளவு பெரிய நாவல் எழுதியிருக்காரான்னு ஆர்வமா அதப் புரட்டினா......கொஞ்சமும் கருணையேயில்லாத தூத்துகுடி வட்டார வழக்கு. வாழ்க்கைல மொத முறையா அத்தகைய வட்டார வழக்கு புரியணும்ங்கிறதுக்காக ஒரு டிக்ஷ்னரியயே புத்தகத்துக்கு பின்னால குடுத்திருக்கிறத பார்த்து திகைச்சுட்டேன், இருந்தாலும் அதான் பெரிய ஆறுதலும் கூட.
மொத இரண்டு அத்தியாயங்கள இந்த அகராதி உதவி இல்லாம கடக்கவே முடியல. பீச் பக்கம் போயிருந்தீங்கன்னா விடியக் காலைல இந்தக் கட்டுமரத்த சில மீனவர்கல் ஒண்ணாச் சேந்து அத ரொம்பக் கஷ்டப்பட்டு மண்ல இழுத்துக்கிட்டு போய் கடல்ல விடுவாங்க, அதுக்கப்பறமும் அது லேசுல கடலுக்குள்ள போய்டாது, அடிக்கிற ராட்சஷ அலைலை திரும்ப திரும்ப கரைக்கே வரும் எவ்வளவு துடுப்ப போட்டாலும். பிறகு கொஞ்சம் கொஞ்சமா உள்ள போயிடும், அப்புறம் பாத்தா புள்ளியா தெரியும், சில நிமிடங்கள்ல கண் பார்வைல இருந்தே மறஞ்சுடும், அப்படித்தான் இந்த நாவல்லயும் அத்தியாயங்கள கடக்க கடக்க, சுவை கூடி அகராதி துறந்து, இந்த நாவலுக்குள்ள ஆழமா பயணிக்க ஆரம்பிச்சேன், கரைக்குத் திரும்ப மனமே வரல !
1985 ல மீன்பிடிச்சிக்கிட்டிருக்கப்ப திடுக்குன்னு மாறுபடற க்ளைமேட் சிக்கலால ஒரு படகு நடுக்கடல்ல தத்தளிச்சி படகு சின்னா பின்னமாகுது, ஆளுக்கொரு கட்டைய பிடிச்சிக்கிட்டு மிதக்குறாங்க, அதுல ஒரு பெருசோட நினைவு நேரா 1933 க்கு போய் சுறா வேட்டைல போய் நிக்குது.
வரிப்புலியன் சுறான்னு அவங்க அந்த டைகர் ஷார்க் வேட்டைக்கு செய்ற முஸ்தீபுகள், கடலோட காட்சிகள், ஓங்கல்ன்னு டால்ஃபின் மீனச் சொல்லும் அந்த அழகு, அந்த வரிப்புலியன்களோட சுபாவம், ஜோடிப் பாசம்ன்னு எடுத்தவுடனேயே சுனாமியா பாயும் இந்த ஆழி. சுறா வர்றாப்பல தெரியல, சும்மா திரும்பிப் போயிரலாம்னா அது பெரிய பிரஸ்டீஜ் இஷ்யூ, காத்திருக்கிற நேரத்துல காந்தி உப்புச் சத்தியாகிரகம் அற்விச்சிருக்காராமேன்னு பேசறாங்க. காந்தி எப்படிண்ணே இருப்பாரு ? இந்தா இந்த ஓங்கல்ங்க மாதிரி சாந்தி சொருபீ, மனுஷனுக்கு என்னிக்குமே ஒதவுற குணம் உள்ளவரு.
இப்படி இந்த நாவல் நாம ஒரு டைம் மிஷில ஏறி உக்காந்துக்கிட்டு நம்மோட பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த கால இந்தியாவ நோக்கி நம்மளப் பயணப் பட வைக்குது. நாவல் கதை மாந்தர்களோட அப்ப நடந்த சம்பவங்கள், வெள்ளைக்காரன், விடுதலைப் போர், காந்தி, காமராஜர், நேதாஜி, சுதந்திரம், அதுக்கப்புறம் வந்த கழகங்கள், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், பராசக்தி, மனோகரா, தனுஷ்கோடி நீர்ல அழியற காட்சி, அந்த சமயத்துல இங்க ராமேஸ்வரத்துக்குச் சுற்றாலா வந்திருந்த ஜெமினி, சாவித்ரிய பாத்துட்டு போட் மெயில் எக்ஸ்ப்ரஸ்ல ஏறிப்போற ஒரு கருவாடு வியாபாரி கதாபாத்திரம், சில மணி நேரத்துல அந்த ரயில் ராட்சஷ புயல் அலைல ஜல சமாதியாயிடுது.
ஆக, நேர்த்தியாக கதைச் சம்பவங்களை இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களோடு சுவைப்படப் பின்னி நெய்திருப்பார் ஜோ.டி. குருஸ். உங்களுக்கு செய்தித்தாள் வாசிப்பில். வரலாற்று நாவல்கள் வாசிப்பின் சற்றே ஆர்வமிருந்தால், இந்த நாவல் உங்களை மிகவும் வசீகரிக்கும்.
இந்த நாவலை நான் வாசித்துக்கொண்டிருந்த சமயம் கூடங்குள அணு உலை போராட்டம் உச்சத்தில் இருந்தது. இங்க ஃபேஸ்புக்ல அணு உலைய எதிர்க்கிறவங்க மட்டும்தான் மனிதன், பிறர் மிருகம் என்றெல்லாம் எல்லாப் பிரபலங்களும் பேசிக்கிட்டிருந்த நேரம். இடிந்தகரை மக்கள் எப்படி அத்தனை ஒற்றுமையாக அப்ப இந்த போராட்டத்தை முன்னின்று நடத்த முடிந்தது ? என்பதற்கான நுண் அரசியல் இந்த நாவல்ல ஒளிஞ்சிருக்கு. இது முழுக்க முழுக்க என் கருத்து மட்டுமே, நாவலாசிரியர் அப்படியெல்லாம் எந்த ஒரு கருத்தையும் இதுல சொல்லல, ஏற்கனவே அவர் ஜோ.டி குருஸ் இல்ல மோடி குருஸ்ன்னு அறிவுசார்க் கூட்டமொன்னு சொல்லிக்கிட்டிருக்கிற நேரத்துல நான் ஏதோ கலகம் பண்ணா மாதிரி ஆகிடப் போகுது !
நாவல்ல பல பாத்திரங்கள் மிக மிக எனக்குப் பிடிக்கும். அதுல அதி முக்கியமான பகுதின்னா அது வசந்தா தான். ஆசிரியர் வசந்தா அழக எல்லோர் வாயாலயும் புகழ வச்சி, வச்சி அந்த அழகு மட்டும் அப்படியே மூளைல தங்கிடுச்சி. தொம்மாந்திரைன்னு ஒரு முக்கிய கதாபாத்திரம். தன்னோட இளம் விதவை அண்ணிய இன்னொரு தாயா நினைக்க, அந்த இளம் விதவை வாழ்வு பாழாப் போயிடக்கூடாது.... அண்ணிய மறுமணம் செஞ்சுக்கன்னு காகு சாமியார் சொல்லக் கேட்டு தாலி கட்டுறார்........இப்படி எண்ணற்ற சிறப்பான முற்போக்கான கதாபாத்திரங்கள் என்னை ரொம்ப ஈர்த்துச்சி.
நாவல வாசிச்சு நாலு வருஷத்துக்கு மேல ஆகிப்போயிருந்தாலும் மீள் வாசிக்காம பேசத்தான் எனக்கு ஆசை. இருந்தாலும் சிற்சில குறிப்புகளாவது வேணுமேன்னு கார்த்திக்க்கிட்ட புத்தகத்த கேட்டு வாங்கினேன், ஏன்னா என் புத்தகம் இப்ப யார்கிட்ட கொடுத்தேன்னே எனக்கு ஞாபகமில்ல, என்னால் முடிஞ்ச வரைக்கும் என் கிட்ட புத்தகம் கேட்கிறவங்ககிட்ட பதிப்பகம் பெயரைச் சொல்லி அங்க போய் வாங்குங்குங்கன்னுதான் சொல்வேன், ஒரு சில தீவிர எளிய வாசகர்களுக்கு மட்டும் இப்படி கொடுக்க வேண்டியதா போயிடுது ! மீள் வாசிச்சப்ப நான் ஒரு வார்த்தைக்கு கூட அர்த்தம் தேடி பின்பக்க அகராதிக்குள்ள போகல, அந்தளவு இலகுவா, இனிமையா என்னை ஆக்கிரமிச்சாரு எழுத்தாளர் குருஸ் !
கொற்கை நாவல சில வருஷமா எல்லாக் கண்காட்சியிலயும் பாப்பேன், கைல தூக்குவேன், இந்தா இந்த ஆழிக்கு டபுள் சைசுல இருக்கும், விலையும். இருந்தாலும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால அதுக்கு சாகித்ய அகடமி விருது கொடுத்தப்ப ரொம்ப சந்தோஷமும் பட்டேன், வருத்தமும் பட்டேன், வாங்காம மிஸ் பண்ணிட்டனேன்னு. அதவிட இன்னும் என்னை வெட்கப்படச் செய்யும் செயல், ராயபுரத்துல இருக்க ஜோ.டி.குருஸ் சார்கிட்ட ஒரு நாள் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கிட்டு நேர்ல போய் பார்த்து, ஆழி சூழ் உலகு தந்த இன்பனுபவங்கள பேசி, வாழ்த்தி, நன்றி கூறணும்ன்னு, இதோ அதோன்னு அப்படியே நாளக் கடத்தி..........இந்தா இன்னிக்குதான் அவர பாக்கவே முடிஞ்சது, மிக்க நன்றி சார், இப்படி ஓர் அனுபவத்த எங்களுக்கு அளிச்சதுக்கு !
இந் நிகழ்ச்சிக்காக எனக்குப் பேச வாய்ப்பளித்த வாசகசாலையின் அன்பு நிர்வாகிகள் மனோஜ் சார், கார்த்திக், அருண், கிருபாசங்கர், பார்த்தி டியர் அனைவருக்கும் மிக்க நன்றி, வணக்கம், உங்கள் இலக்கியச் சேவை வளர்க, வாழ்க நலமுடன் !!! //
இதத்தான் ஆழி சூழ் உலகு நிகழ்ச்சிக்கு நான் பேச தயார் பண்ணிய உரை, கண்டிப்பா இதப்போல பேசவேயில்ல, கடைசில சில பத்திகள மறந்துட்டு தடக்குன்னு நன்றி சொல்லி தப்பிச்சி ஓடிட்டேன் ;)
சரி, இந்த மோடி குருஸ்ங்கிற வார்த்தைய கேட்டப்பா நம்ம குருஸ் சார்க்கு எப்படி இருந்தது ?
ஜோ.டி .குருஸ் இந்த நாவலில் குறிப்பிட்டிருக்கும் எந்த ஒரு சம்பவங்களிலும் ஒரு படைப்பாளியாக நுழைந்திருக்கவே மாட்டார். என்ன நடந்திருக்குமோ அதை அப்படியே சொன்னதில்தான் நாவல் இத்தனை அழகு பெற்றிருக்கிறது என்பது பேருண்மை.

கிருத்துவ மதத்தால் அம் மீனவ மக்களுக்கு கிட்டிய எல்லா நன்மைகளையும் பட்டியலிடுபவர், காகு பாதிரியாரால் அம் மக்கள் பெற்ற சீர்திருத்தங்கள், கல்வி, பொருளாதார உதவிகளைச் சொல்பவர், அதே கிருத்துவ மதத்தால் எவ்வாறெல்லாம் அம் மக்கள் அடிமைப் படுத்தப்பட்டார்கள், பொம்மலாட்ட பொம்மைகள் போலெல்லாம் அவர்களை சர்ச் நிர்வாகத்தினர் எவ்வாறெல்லாம் ஆட்டுவித்தார்கள் என்பதையும் நேர்மையாகச் சொல்லிச் சென்றிருப்பார்.
“என்னைக் கிருத்துவ மதப் பரப்புரையாளன் என்றும் சொல்கிறார்கள், அந்த மதப் பிழைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினால் மதத் துரோகி, ஹிந்துத்துவாவாதி, மோடி குருஸ் என்றும் சொல்கிறார்கள், சரி இப்படியெல்லாம் சொல்லிவிட்டால் நான் முடங்கிவிடுவேன் என அவர்கள் நினைத்தால்...........என் கை மயிறக் கூட அவங்களால புடுங்கவே முடியாதுன்னு நான் உறுதியாச் சொல்றேன், இப்படித்தான் நான் எழுதுவேன்”
வந்திருந்த வாசகர்களுடன் உரையாடல் நிகழ்ச்சியில், வாசகர் அறிவழகன் நீங்கள் ஏன் உங்கள் இரண்டு நாவல்களிலும் வ.உ.சி. யை கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறீர்கள் ?(வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட உணவை சில கீழ்ச்சாதியினர் தயாரித்தனர் என்பதற்க்காக அந்த உணவைத் தொடமாட்டேன் என்று மறுத்ததாக கொற்கை நாவலில் வருகிறதாம்)
“எனக்கும் வ.உ.சி குடும்பத்துக்கும் எந்த முன்பகையுமில்லை, அவர் மீது வீண் பழி சுமத்த ! தெரிந்த வரலாறு இருப்பது போல மறைக்கப்பட்ட வரலாறு என்றும் பல இருக்கின்றது, அப்படியாக எனக்குத் தெரிந்த ஓர் உண்மையான வரலாறுதான் அந்தச் சிறைச் சம்பவம்”
ஒரு நிமிஷம். இது நான்.
நான் ஒரு வ.உ.சி ரசிகன்.
”வ.உ.சி சுதேசி மிட்டாயைக் காட்டி வெள்ளைக்காரனுக்கு எதிராக போட்டியிட்டு பெரிய அளவில் இந்தியர்களை தன் வாடிக்கையாளர்களாக மாற்றி, அதன் மூலம் பெருங்கோடீஸ்வரராகத் திட்டமிட்டவர், பிஸினெஸ் அடிவாங்கவே, திடீர் தியாகியாக மாறிவிட்டார்” என எள்ளலாகச் சில வருடங்கள் முன்பே மணி தனுஷ்கொடி எனக்குச் சொல்லியிருந்திருக்கிறார்.
அதே போல வ.உ.சி திலகர் ஆள், அவருக்கு காந்தி என்ற மென்மைவாதிகள் பிடித்ததேயில்லை, இறுதிக்காலத்தில் ஏழ்மையில் தவித்த வ.உசி.க்கு உதவ கொடுத்த பணத்தை காந்தி கொடுக்கவேயில்லை.......... நிற்க.
வ.உ.சி உண்மையிலே வணிக வெறி பிடித்தவர்தான் எனில் அவர் சிறையை விட்டு வெளியே வந்தபோது காசில்லாமல் இருந்திருந்தாலும் வெள்ளைக்காரனுக்கு சலாம் போட்டிருந்தால் நிச்சயம் செட்டி நாட்டு ராசாக்கள் போல் இப்பவும் அவர் குடும்பமும் செல்வச் செழிப்பில் கொடி கட்டித்தான் பறந்திருக்கும், ஆனால் வ.உ.சி பேரன் பேத்திகள் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்காக ஓவ்வொரு அரசிடமும் கையேந்தி நின்று கொண்டிருக்கிறார்கள். அந்தத் தீண்டாமை கதைக்கு வருவோம்.
தீண்டாமை என்பது அப்போதைய வாழ்வு முறை. செல்வச் செழிப்பான பணக்கார எல்லாச் சாதியினருக்கும் அது தவறு என்று கூடத் தெரியாத, ’விதி’ என்று நம்பவைக்கப்பட்டிருந்த சூழல். சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம் என்ற பாரதியின் நண்பராக இருந்த வ.உ.சி தீண்டாமையை ஆதரித்தாரா என்று நம்ப முடியவில்லை என்றாலும்.......
இன்னிக்கு எல்லாப் புரட்சியும் பேசிட்டு நாளைக்கு என் மனைவியோடு நான் இருக்கும் போட்டோவைப் பார்க்கும் எதிர்காலச் சமுதாயம், என் மனைவி கழுத்தில் இருக்கும் தாலியைப் பார்த்தோ, அவள் அகலமாக வைத்திருக்கும் குங்குமக் கும்பல்களைப் பார்த்தோ, என்னையும் இதேப் போல ஒரு பிற்போக்குவாதியாக தூற்றுமா தூற்றாதா ? மனைவியை மிரட்டி இதையெல்லாம் பூணச் செய்து பெண்ணை அடிமையாக வைத்திருந்தவன் என்றுதானே நம்பும் ?
சரி மேட்டருக்கு வருவோம். ஆழி சூழ் உலகை படித்துவிட்டு வாசகர் செந்தில், ஆசிரியரைப் பார்க்க அவர் சொந்த ஊரான உவரிக்கேச் சென்று, அங்கு அவர் இல்லாமல் அவர் தாயைச் சந்தித்ததாகச் சொன்னார். ஜோ. டி. குருஸின் அம்மா கடைசிவரை செந்தில் தன் மகனைப் பார்ப்பதற்காகத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறார் என நம்பவே இல்லையாம் !
அதே போல இன்னொரு இளைஞர், ஆறுமுகத் தமிழனின் ’நிலையாமை’ பற்றிய உரையின்பால் நினைவுகள் கிளறப்பட்டு, தன் மீனவ நண்பர்களுடன் ஒரு நாள் பயணமாக கடலுக்குள் போய்வந்த கதையைச் சொன்னார். வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் போயிருந்தாலும், அவர் கடலுக்குள்தான் போயிருக்கிறார் என அறிந்த அவரின் தாயார் கடற்கரையிலியேக் காத்திருந்து, அவரைப் பார்த்த மாத்திரத்தில் பாய்ந்து சென்று கட்டியணைத்து முத்தமாரி பொழிந்ததைப் பார்த்த பின்தான், கடல்வாழ்க்கை எப்படிப்பட்ட துயரம் என்பதை முழுதாய் உணர்ந்தேன் என எல்லோரையும் கவர்ந்தார்.
அதே போல ஒரு முதிய வாசகர்(தொடர்ந்து ஜோ.டி.குருஸ் கலந்து கொண்ட பல கூட்டங்களுக்கு போய் வந்திருக்கிறார்) நான் ராமேஸ்வரப் பாலம் கட்டுமானத்தில் பணி புரிந்தவன். என் அனுபவத்தில் சொல்கிறேன், உங்கள் நாவல் போலெல்லாம் மீனவர் வாழ்வில்லை, அவர்கள் பணக்காரர்களாக, நிறைய சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள்...........
இடைமறித்த ஜோ.டி.குருஸ், மொத்தப் புத்தகத்தில் ஓரிரு பக்கங்களில் இருக்கும் சில வரிகளைப் பிடித்துக் கொண்டு தூற்றுவதோ, புகழ்வதோ மிகத் தவறு. என்னைக் காலி செய்யணும்ன்னு நினைக்கிறவன் செய்ற வேலையே இதுதான், இப்பவும் என் முப்பாட்டன் கும்பிட்ட கடவுள் எனக்கு உசத்திதான், ஆனா அதப்பத்தி நான் பேசுனத மட்டும் பிடிச்சிக்கிட்டு என்ன மத விரோதின்னோ, இன்ன மத ஆதரவாளர்ன்னோ சொல்றது எவ்வளவு பெரிய தப்போ, அதே தப்புதான் நீங்க பேசறதும்..........!!!
போதாது ?
சரி ஜோ.டி.குருஸ் ரசிகர்களுக்காக ஒரு சேதி. கட்டுமரம் போல ஆழி சூழ் உலகு, பாய்மரக் கலம் போல கொற்கை, அடுத்து கப்பல் போல கடல்சார்ந்த மூன்றாம் நாவலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். கப்பல்கட்டும் களம், சென்னை, கப்பல் வணிகம், சினிமாத்துறை போன்றவற்றை பேசப் போகும் நாவல், We are waiting sir.....
நன்றி _/\_

கருத்துகள்
கருத்துரையிடுக