தமிழனும் தமிழும்

தமிழனும் தமிழும் 
==================

பிரதிலிபிக்காக வரையப்பட்ட கட்டுரை)



ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா ?  என்பது போல, தமிழனும் தமிழும் கடும் எதிரியாகிப் போய் பல நாட்கள் ஆகி விட்டது. 
இரு துருவங்களாக ஆகி, ஒன்று சேர வாய்ப்பின்றி தூர விலகி நிற்கின்றனர். 







தமிழ், ”நான் அப்படியென்ன பெருந்துரோகம் செய்து விட்டோம் இவர்களுக்கு ?  என்னில் இல்லாத அறிவா, அழகா, எளிமையா ? 
என் மூலம் படைக்கப்பட்ட இலக்கியங்களில், ஆன்மீகம் முதல் அறிவியல் வரை, காதல் முதல் காமம் வரை, தத்துவம் முதல் சமத்துவம் வரை எதுதான் இல்லை ?  என்னை படிப்பதால் வாழவே முடியாது என்று இப்படி என்னை புறக்கணிப்பது பாவமில்லையா ?” என்று, ’தான் மட்டும் விரைந்து அழிந்துவிடுவோமோ ?’ என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருப்பதை எளிதாக எவரும் அவதானிக்க முடியும்.






ஆனால், தன் தாய் மொழி தன் கண் முன்னே அழிவதை கையாலாகாமல், கைக்கட்டிக்கொண்டு வேடிக்க பார்க்கும் ஒருவன், இந்த உலகில் ,  பிரத்யேக அடையாளமில்லாமல் ஓர் அகதி போலவே பிற இனத்தோடு  கலந்து வாழ்வான்.  அந்த மொழி தொலைத்த அனாதையைப் பார்த்து நிச்சயம் பிற மொழிகள் எள்ளி கைக்கொட்டிச் சிரித்து அவனை அவமதிக்கத்தான் போகிறது.





எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில், ரஷ்ய மலையின மக்களின் ஒரு சண்டையைப் பற்றி எழுதியிருந்தார்.  அந்த மலையினப் பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் போது,  “உன் குழந்தையைக் கொஞ்சக் கூட உனக்கு தாய்மொழி மறந்து போகட்டும்” எனச் சபிப்பார்களாம்.  அப்படி சாபம் வாங்கும் ஒரு பெண் மிகவும் கலங்கி உடைந்து விடுவாளாம்.  தாய்மொழி தெரியாமல் போவதை விட பெருஞ்சாபம் ஒன்று இல்லை என்று ஒப்பாரி வைப்பாளாம். 




ஆனால், இன்று ஒரு தமிழனை அப்படிச் சபித்தால் அவனுக்கு சொல்லொண்ணா இன்பம் ஏற்படும்.  தமிழை அவன் தன் உடலில் ஒட்டிய பாவக்கறையாய்த்தான் பாவிக்கிறான்.  அந்தக் கறை அதுவாய் கரைந்துபோனால், ஆங்கிலமோ, பிற அன்னிய தேச மொழிகளோ
தெரிந்து அவன் வாழ்வின் உச்சம் பெற்று, இந்த உலகில் உல்லாசமாக உய்யலாம் என்று மகிழ்ச்சி அடைவான்.






தமிழன் என்று ஒட்டுமொத்தமாக நான் குறை கூறுவதாய்க் கருத வேண்டாம்.  ஓரிரு விழுக்காடு விதிவிலக்குகள் இருக்கலாம். 
அந்த விழுக்காட்டில் கோபப்படும் நீங்களும் இருக்கக் கூடும்.  இருந்தாலும் உங்கள் பெயரையோ, உங்கள் வாரிசுகளின்
பெயரையோ சற்று எண்ணிப் பாருங்கள்.  நூற்றுக்கு தொண்ணூறு பெயர்கள் வடமொழிப் பெயர்களாகவோ,
பிற மொழிப் பெயர்களாகவோத்தான் இருக்குமேயன்றி, தமிழன் என்கிற அடையாளத்தைக் காட்டும் பெயர்கள் பத்து விழுக்காடு  இருக்கும் என நம்புவதே கூட கேலிக்குரியதுதான். 





உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது போன தலைமுறையிலேயே ஆரம்பித்துவிட்ட ஒரு புரட்சிதான்(?)   இத்தகைய  நவீன பெயராசைகள்,  சினிமாக்களால்தான் பெரும்பாலும் இங்கு உருவாகின. ஆனால் இப்போதைய
தலைமுறையோ............ வெறிகொண்டு முற்றிலும் தமிழ்ப்பெயர்களைத் தவிர்ப்பதில்தான் மேதமை, ஒயில், பெருமை என
எண்ணிக்கொள்கிறது :(





சரி, இந்தப் பிழை ஏன் இங்கு தோன்றியது என்று நாம் நம்முடைய முப்பதாண்டு வரலாற்றையாவது ஊன்றிப் பார்த்தல் அவசியம்.
அரசுப்பள்ளிகள் கோலேச்சிக் கொண்டிருந்தவரை, இப்படி அன்னிய மொழி மோகம் பெரிதாய்  நம்மை ஆட்டிவைத்து விடவில்லை.   




முப்பதாண்டுகளுக்கு முன், ”கல்வி சேவையல்ல..........பணம் கொட்டும் வித்யசுரபி” என்று கல்வி வியாபாரிகள் நமக்குணர்த்தினார்கள்.  அவர்கள் கல்வித் தந்தைகள் என்ற முகமூடி போட்டுக்கொள்ள, அவர்களின் கோர முகத்தை
உணருவதற்குள் எல்லாம் கை மீறிப் போய்விட்டது !





அதற்கு முன்னர்வரை, பெரு செல்வந்தர்கள், பல நூறு வருடங்களாய் கல்வி பயின்று செழித்த அறிவுடன் திகழ்ந்திருந்த சில இனத்தவர்,
கொழுத்த அரசியல் மற்றும் அரசுத் துறையில் உயர் பதவி வகித்த வாரிசுகள் மட்டுமே தமிழைத் தாண்டி வேற்று மொழிகள் சிலவற்றையும் கற்று வந்தார்கள், ஆனால் அவர்களால் கூட ஒரு காலகட்டம் வரை தாய்மொழியைத் தவிர்த்திருக்க முடியவில்லை.  குழந்தையிலிருந்தே அயல்நாடுகளில் படித்தவர்கள் இப் பட்டியலில் வர மாட்டார்கள்.





பொறியியல் துறை அப்போதுதான் கட்டுமானம், இயந்திரவியல், மின்னணுவியலைத் தாண்டி மென் துறையில் தன் காலை வைத்தது.
ஆரம்பக்கட்ட மென் பொறியாளர்கள்(1985 - 1990) வாங்கிய சம்பளம் கிட்டத்தட்ட நம் நாட்டு குடியரசுத் தலைவர் வாங்கிய சம்பளத்தைக்
காட்டிலும் பல மடங்கு அதிகமாய் இருந்தது.  அரசு உயர்பதவி வகிப்பவர்கள் பெறும் சம்பளம், கிம்பளத்தைக் காட்டிலும் அதிகம்.  மருத்துவர்கள் மாய்ந்து மாய்ந்து பல அறுவை சிகிச்சைகள் செய்து ஈட்டினாலும் அந்தளவு வருவாய் இருந்திருக்காது.  அதுவரை எங்கோ ஓரிரு செல்வந்தர்கள் அறக்கட்டளைகள் மூலம் இருந்த தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறி சம்பாதித்த மாணவர்கள்தான் தங்களுடைய பெரிய விளம்பர ஆதாராமாய்க் காட்டின புதியதாய் தோன்றிய பொறியியல் கல்லூரிகள்.






சாரயம் விற்றவர், கட்டப் பஞ்சாயத்து செய்தவர், தலைவரின் அடி(தடி)மட்டத் தொண்டராய் இருந்தவர்களெல்லாம் திடுக்கென
நீதிச் சிறுகதைகள் முடிவு போல திருந்தி, கல்வித் தந்தைகள் அவதாரம் எடுத்தனர். 






பொறியியல் கல்விப் புரட்சி பல நல்ல முன்னேற்றங்களை இந்த மாநிலத்திற்கு கொண்டுவந்தாலும், அவைகளுக்கேத் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ செய்திட்ட  மாபெரும் தலையாய பிழை, தமிழை பேரளவு ஒழித்ததே........... !





எப்படி என்று பார்த்தால், அரசுப் பள்ளிகளில் அதுவரை ஆங்கில வழி போதனை வகுப்புகள் ஓரிரு வகுப்புகள் மட்டுமே இருக்கும், ஆனால் அவர்கள்தான் பத்தாவது படித்த வேகத்தில் அடுத்த இரு வருடங்களுக்கு எளிதாய் பள்ளிகளில் இடமும் கிட்டியது, அவர்கள் மட்டுமே அதன்பின் தாராளமாய் மதிப்பெண்களையும் பெற முடிந்தது.  




அதுவரை தமிழ்வழிக் கல்வியில் படித்துவிட்டு பதினோறாவது, பனிரெண்டாவது வகுப்பில் திடுமென ஆங்கில வழியில் படிப்பது பெரு விழுக்காடு மாணவர்களுக்கு எட்டிக் காயாய் கசந்தது.  பதினொன்றாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவனுக்கு கல்லூரியில் நல்ல பிரிவுகளில் இடம் கிட்டவேயில்லை.  பொறியியலிலோ, மருத்துவத்துறையிலேயோ,  தமிழ் வழிக் கற்றவர்கள் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப் பட்டனர்.





மாறாக, தொடக்கத்திலிருந்தே ஆங்கில வழிக் கல்வி கற்ற மாணவர்களுக்கு சிறந்த வரவேற்பிருக்க, புற்றீசல் கிளம்பியதைப் போல, குக் கிராமங்கள் வரை, ஆங்கில வழிக் கல்வி போதிக்கும் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்ஈ, ஆங்கிலோ இந்தியன், சர்வதேச பாடமுறைக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் என்று பரவியது.





நகரங்கள், சிறு நகரங்களில் அரசுப் பள்ளி என்பது ஏழைகளுக்கோ, ஒடுக்கப்பட்ட இனத்துக்கோ என்று மட்டுமே ஆனது, மாறாக  நடுத்தரமக்கள், பணக்காரர்கள் எல்லோருமே முழுக்க முழுக்க ஆங்கில வழிக் கல்வியையே நாடினர்.  பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனை, நீக்கம் என்கிற விதிமுறைகள், குழந்தைகளுடன் இயன்றவரை வீட்டிலும் ஆங்கிலத்தில் உரையாடுவதே நலம் பயிக்கும் என்று அந்த பெற்றோர்களை நம்ப வைத்தது.





இங்கு வியந்து பார்க்க வேண்டியது, இந்தத் தலைமுறையில் பெரும்பாலோர் படித்த பெற்றோர்களே இந்த துயர முடிவை ஆதரித்ததுதான் :(




அதேபோல், கி.பி. 2000 ற்கப்புறம், கணினி மென் துறையில் மாபெரும் வேலை வாய்ப்பு அமைந்து, தன் குழந்தைகள் கை நிறைய சம்பாதிப்பதைக் கண்டு, ஆனந்தக் கண்ணீர் விடாத நடு நிலைக் குடும்பங்களே கிடையாது.  ஆனால் அக் குழந்தைகளில் 100க்கு 10 பேருக்கு தமிழ் பேசவே தெரியாது, 100க்கு 50 பேருக்கு தமிழை வாசிக்கக் கூடத் தெரியாது.  100க்கு 90 பேருக்கு தமிழை பிழையின்றி எழுதத் தெரியாது.  இலக்கிய வாசிப்பு என்பது விஷம் போல அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது.  இலக்கியமோ, உண்மை ஆவணங்களை தேடி வாசிக்கும் பழக்கமோ, வரலாற்று உண்மைகளை உள்வாங்கும் திறனோ அறவே அற்றுப்போய், படித்தும், பழைய இந்தியப் பாமரனாய் அவர்களில் பலர் வலம் வருவதை நீங்கள் கண்கூடாகக் கண்டிருக்க முடியும் !






சரி, எப்படியோ நாட்டு வளம் கொஞ்சம், எளிய மக்களின் வாழ்வுத்தரம் கொஞ்சம் உயர்ந்துதான் விட்டது, அதற்காக நம் தாயைப் புறக்கணிப்பதா ?  




என்னதான் தீர்வு ?





தமிழ்வழிக் கல்வி பயில்வதிலும் எல்லாவித உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்பிருக்கிறது என்கிற உறுதியை அரசு நிச்சயம் தமிழ் மக்களுக்கு தர வேண்டும்.




ஒவ்வொரு தமிழனும் தங்கள் குழந்தைகள் தமிழில் எழுதப் பேசத் தெரிவது கட்டாயம் என்பதை உள் வாங்க வேண்டும்.  இயன்றவரை அவர்களுக்கு வாசிப்பும், எழுத்துப் பயிற்சியும் கூட, உதவ வேண்டும்.




ஒரு குறிப்பிட்ட பருவம் வரை குழந்தைகளுக்கு தாய் மொழி வழிக் கல்வி கட்டாயம் என்பதை அரசு கடுமையானச் சட்டங்கள் மூலம் கூட மொழி அழிந்துவிடாமலிருக்க உத்தரவிட வேண்டும்.




இன்னும் என்னால் இந்தத் தமிழ் பற்றி ஓயாமல் எழுத முடியுமென்றாலும் இப்போதே கட்டுரை அளவு விதி மீறி வீங்கியிருக்கும் என்பதை உணர்கிறேன். 




அதே வேளையில், என்னுடைய இந்த மிகச் சாதாரண தமிழ் நடையையேக் கூட வியந்து நோக்கும் பல படித்த, கோடிகளில் சம்பாதிக்கும் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது, தமிழில் எழுதுபவரை அதிசயப் பிறவியாக்கி விடாதீர்கள் என்று இறைஞ்சி என் கட்டுரையை முடிக்கிறேன்.



நன்றி



ராஜா ராஜேந்திரன்
சென்னை-21.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!