சனி, 13 ஏப்ரல், 2013

வேதாளமும் வெள்ளிக்கிழமையும் !!!

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் விக்கிரமாதித்தன் தண்ணீர் லாரி வேகத்தில், அண்ணா சாலையில் தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான்.  பெவ்லியனிiல் அமர்ந்திருந்த வேதாளம் வழக்கம்போல் எள்ளி நகைத்தது.


"ஓசில வந்தாலும் இந்த நக்கல் மசிருக்கு ஒன்னும் கொறச்சலில்ல" என்று எரிச்சலோடு சொன்னான் விக்கி. 

"வேறொன்னுமில்ல, கடந்து வந்த பாதை தெரியாம, இம்புட்டு வேகமா   போறியே.......வீட்டுக்கு திரும்பனும்னு எண்ணமில்லையோ ?"

"ங்".........என்று ஏதோ ஆரம்பித்த விக்கி, அவசரமாய் நாக்கைக் கடித்துக் கொண்டபடி, "எதாவது அசிங்கமா பேச வச்சிடாத, இப்ப நீயா எனக்கு ரூட் சொன்ன ?  நானாத்தான போறேன் ?  அப்புறமென்ன கடந்து வந்த பாத தெரியாமன்னு நொட்ட சொல்ற ?"

"சினம் குறை குழந்தாய்...........வேகம் விவேகமில்லை என்பதற்காகச் சொன்னேன், சில வருடங்களுக்கு முன்னால் இதே வண்டியை ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது, இவ்வளவு வேகமாகவா ஓட்டினாய் ?"

"கொழந்தயா இருக்கறப்போ தவழவே கஷ்டப்பட்டேன், அப்புறமா வேகமா நடக்கறப்போ.........பழச நின.......... தவழுன்னு சொல்லுவ போலிருக்கே"

'என்ன இவன் இன்று எந்த பால போட்டாலும் கோல் போடுறான்' எனக் குழம்பியது வேதாளம்.  


"என்ன தொழில் செய்வது எனப்புரியாமால், பணக்காரர்களுக்காக ஒரு விடியோ பத்திரிகை ஆரம்பித்தவர், சகட்டு மேனிக்கு ஜால்ரா தட்டியவுடன், திடுமென சாட்டிலைட் டிவிக்கள், காலை மாலை பத்திரிக்கை, பங்கு வர்த்தகம், அரசியல், மந்திரி,  ஊழல், சினிமா, விமானம், கிரிக்கெட் டீம், ஸ்விஸ் பாங்க் ன்னு ஒரு தலைமுறைக்குள்ள ராட்சத வளர்ச்சி அடஞ்சிட்டாரு............அவரும் உன்ன மாதிரி வேகமா போனவர்தான், யாருன்னு தெரியுமில்ல, இல்ல சொல்லனுமா ?"

" வேணாம், வேணாம்........மேட்டருக்கு வா, வேகமா போயி, இப்ப என்ன திவாலாயிட்டாரா ?"

"ஹா...ஹா....கோபத்தில் உன் முகத்தில் பாயும் ரத்த ஓட்டத்தை ரெவ்யூ மிர்ரரில் பார்க்கிறேன், கொள்ளை அழகு"

"பேச்ச மாத்துன, ஜெமினி பிரிட்ஜ்ல இருந்து கீழ தள்ளி விட்ருவேன்"

"சரி, சரி வருகிறேன்,  அவருடைய முழு வளர்ச்சிக்கு தமிழர்கள்தான் உறுதுணையாக இருந்தார்கள், அவர்கள் தொடங்கிய ஒவ்வொரு தொழிலையும் நம்பிக்கையுடன் ஆதரித்து, என்னமோ அவர்கள் சம்பாதித்து இவர்கள் வீட்டுக்கு கொடுப்பது போல் பெருமை பேசி.............இப்போது வளர்த்துவிட்டவர்களை கிஞ்சித்தும் மதிக்காமல், அவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி விட்டு,  இவர்கள் பாட்டுக்கு சிங்களத் தலைவன் தலைமையில் 'டண்டனாடன்' பாடிக் கொண்டிருக்கிறார்கள், பழச நினைக்கணுமா இல்லையா ?"

"ம்ம்ம்ம்.......டச்சிங்காத்தான் பேசுற, ஆனா அதெல்லாம் பாத்தா உலகின் மொத பணக்காரனா வர முடியாதே ?"

"ஆக, பணமெனில் மனம் பார்க்க மாட்டீர் ?"

விக்கிரமாதித்தன் லெப்ட் இண்டிகேட்டர் போட்டு ஓரம் கட்டினான்.  வேதாளம் கொஞ்சம் மிரண்டது.  "சரி சரி விக்கி, இனி ஏதும் பேச மாட்டேன்"


"ஒண்ணுமில்ல கொஞ்சம் இறங்கி, அப்படியே திரும்பி உட்கார்" என்றான் விக்கி. 

"அதிலென்ன விசேஷம் ?"

"அதில்தான் விஷயமே இருக்கு, நாம கடந்து வந்த பாதைய மறக்காம இருக்கணும்னா இதுதான் நல்ல யுக்தி"

அதன்படி அமர்ந்த வேதாளம், அடுத்த ஐந்தாவது நிமிடம் குய்யோ முய்யோ என்று கத்தத் தொடங்கியது. 

"அய்யய்யோ......கொல்றாங்களே....கொல்றாங்களே"

"யே லூசு என்னாச்சு ?"

"வேணாம்பா...வேணாம் என்ன விட்று......அடப் பேயே........எவ்வளவு வேகமா வாராய்ங்க ?  விட்டா தரையோட தேச்சிட்டு தல மேல ஓட்டிட்டு போவாய்ங்க போலிருக்கே ?"

"கடந்து வந்த பாதைய பாத்தா......தல சுத்துதில்ல ?"   

"ஆமாம்ப்பா......பின்னாடி வர்றவங்க உன்ன விட வேகமா வண்டிய விடுறாங்க,  யாருக்கும் முன்னாடி போறவனப் பத்தி கவலையே இல்ல"

"ஹஹஹ..........அதுக்குத்தான் உன்ன இப்படி ஒக்கார வச்சேன், நடந்ததையே நினச்சிட்டிருந்தா முன்னேறி போகவே முடியாது"

"நன்றி மறக்கும் நரன்களே, எக்கேடாவது கெட்டு ஒழியுங்கள்" என்றபடி ஓடும் வண்டியிலிருந்து குதித்து தலைதெறிக்க ஓடியது. 


'ஒழிந்ததது பீடை' என்று விக்கிரமாதித்தன் இன்னும் தன் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.


                                                              
                                                               THE END 
      கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக