புதன், 24 ஏப்ரல், 2013

ஓ......மழைக் கவிதை ! (தெறிச்சி ஓடுங்க)

வேதாளத்தின் கண்ணின் ஓரமாய் கசிந்து விழ  கண்ணீர்த்துளி ஒன்று தயாராய் இருந்தது.  ஆனால் சோகத்தை வெளியே காட்டினால், 'அவளையே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதாய்' தன்மானத்துக்கு இழுக்கு வருமே என அஞ்சி, அந்தக் கண்ணீர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.

காதலியின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்துவதை விடவா வேறொரு கொடுஞ்சாபம் வேண்டும் ?  வாசலில் நிறைய வாண்டு வேதாளங்கள் இருந்தன.  ஒரு வாண்டு விடாப்பிடியாய் நம் வேதாளத்தின் வெந்தபுண்
மீது பன்னீரைத் தூவிக் கொண்டே இருந்தது.

'போதுண்டா கண்ணு, இன்னும் நிறைய கெஸ்ட்களுக்கு வேணுமில்லையா, எனக்கேவா எல்லாத்தையும் தெளிக்கறது ?'  என்று வேதாளம் பணிவாய் போதித்தது.  ம்ஹும், 'விடாது வாண்டு' என்பதுபோல் தொடர்ந்து பன்னீரைத் தெளித்தது அந்த வாண்டு. 

வேதாளம் மண்டபத்துக்குள் நுழைந்த பின்னரும் அந்த வாண்டு வேதாளம், ஒரு நாற்காலியின் மீதேறி, நம்ம வேதாளத்தின் முகத்தில் பன்னீரைப் பீய்ச்சியது.  வந்தது பாருங்கள் கோபம்.......'அடிங்.........' என்று ஓங்கி அந்த வாண்டு முதுகில் அறைந்த மாத்திரத்தில், 'ஆஆ' என அலறியது நம்ம வேதாளம்.

'அட சைத்தானே........கனவு'  அதுக்காக இப்படியா என் முகத்தில் நானே அறைந்துக் கொள்வது ?  அடடே........சென்னையில் மழை பெய்கிறது ?  அதனாலத்தான்யா தொடர்ந்து பன்னீர் தெளிச்சாப்பலயே இருந்தது, எனத் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டார் வேதாளம்.  அப்போதுதான் அந்தப் 'பயங்கரத்தைக்' கண்டார் நம் வேதாளம்.

கீழே விக்கி, எக்ஸாம்பேடின் மீது பேப்பரும், வலது கையில் ரெனால்ட்ஸ் பேனாவுமாகக் காட்சியளித்தான்.

'அய்யகோ, இதென்ன விபரீதம் விக்கி ?  வாளேந்திய கையில் மிடில்கிளாஸ் பீப்புள் பேனவா ?  கதை கிதை எழுதப்போகிறாயா ?  ஏற்கனவே இந்த எழவெடுத்த ஓசி பிளாக் & ஃபேஸ்புக்கால் ரெண்டு கோடி தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்களே......நீ வேறு இந்தச் சேற்றில் உழலத்தான் வேண்டுமா ?'

'கே கூ வேதாளமே......கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன், இடையூறு செய்யாதே'

'அஞ்சு நிமிஷம் மழை பெஞ்சது ஒரு குற்றமாய்யா ?' என்று எள்ளியது வேதாளம். 

உஷ்ணத்துடன் வேதாளத்தை பார்த்த விக்கிரமாதித்தன் திடுமென, மனத்தைச் சாந்தப்படுத்திக் கொண்டு, 'சரி...சரி, வா இந்தக் கவிதை எப்படி இருக்கிறது எனப்பார்' என வேதாளத்தை அருகில் அழைத்தான்.

'ஆண்டவனின் கண்ணீர்' எனத் தலைப்பிட்டு அடிக்கோடு போட்டிருந்தது. 

சித்திரை
தகிக்கும் இரவில்
வரும் ஆனா வராது
காத்தாடியை நம்பி
பாழாய்ப் போன  
நித்திரை !

அதற்கப்புறமும் ஆறேழு வரிகள் இருக்கத்தான் செய்தன என்றாலும், பேப்பரைத் தூர வீசி, 'கொல்றாங்களே....கொல்றாங்களே' என   வழக்கம் போலவே தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தது வேதாளம்.

                                                              ---முற்றும்---    
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக