வியாழன், 18 ஏப்ரல், 2013

என் அடியாளுக்கு குவார்ட்டரும் வேணாம், கோழி பிரியாணியும் வேணாம், ஒரு சொட்டு சூடா ரத்தம் போதும் !!!

இது நிஜமாகவும் இருக்கலாம், திகில் புனைவாகவும் இருக்கலாம் ! 
(இதில் வரும் நம்பகத்தன்மைக்கு நான் பொறுப்பல்ல)

மாநகராட்சியால் ஒரு பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டிவந்தது.  எந்தவித சான்றுகள் இல்லாத 'மிகப் பழங்காலத்து' ஆளுக்கான சான்றிதழ். இதுபோன்ற வேலைகளை எல்லாம் அரசு இயந்திரம் என்ன நவீனமயமானாலும் நீங்கள் தனியாய் போயெல்லாம் உடனடியாக வாங்கி விட முடியாது.  நான் ஓரிரு நாள் அலைந்துப் பார்த்தேன்.  அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றே என்னால் ஒரு சதவிகிதம் கூட கிரகிக்க முடியவில்லை. 

சரி, இனி வேலைக்காவாது என்று இதில் அனுபவமிக்க என் நண்பர் ஒருவரின் உதவியை நாடினேன்.  அவர் இதற்கு சரியான ஆள் 'இவர்தான்' என்று ஒரு நபரை அறிமுகப்படுத்தினார்.   அந்த நபரே இந்தப் பதிவின் கதாநாயகன் !!!

அவர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஊழியர். சமீபத்தில் ரிட்டயர்ட் ஆனவர்.  கை சுத்தமான ஆள் என அவரே சொன்னார்.  தான் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருத்ததாய்ச் சொன்னார்.  சரி, இருங்க அவரையே பேச வைப்போம். 


"சக ஊழியர்களில், லஞ்சம் வாங்குபவர்களைக் கண்டால் கோபம் வரும், அவர்களைப் பற்றி மொட்டைக் கடுதாசி எழுதிப் போட்டுறுவேன், என் கையெழுத்தே ரொம்ப பேமஸ், என் கையெழுத்தப் பாத்தவுன்ன நான் புகார் கொடுத்த ஆளுக்கு சங்குதான் !

"சரி சார், பாதிக்கப்பட்டவன் நீங்கதான் இதுக்கு காரணம்னு யூகிச்ச்சா, அவன் உங்களுக்கு சங்க ஊதியிருப்பானே ?" என்றேன் நான்.

"ஆங்,  அதுமாறியும் ஒரு தடவ ஆச்சு, ரோட்டுல வச்சு காறி துப்புனான் ஒருத்தன், அவன டிஸ்மிஸ் ஆவுற அளவுக்கு எழுதிப் போட்டேன், அடங்கிட்டான்.  அத்த வுடு, டிவி நியூஸ பாத்தாலும் சரி, படிச்சாலும் சரி, என் வயிறெல்லாம் எரியுது, டெங்குவால சாவு....சாவுன்னு.....பச்சக் கொழந்த எல்லாம் சாவுதுங்க, நாங்காட்டி போஸ்டிங்கல இருந்திருந்தன்னா.......ஹெல்த் மினிஸ்டர் என்னத்தான் சவுத்துக்கு அனுப்பி வச்சிருப்பாரு"

"எதுக்கு ?"

"எதுக்கா, சர்த்தான், நான்தான் கொசுவ கட்டுப் படுத்துறதுல அப்போ சென்னைலயே எக்ஸ்பர்ட்.  ஒருநாள், திடீர்னு கார்ப்பரேஷன் சேர்மன் கிட்டருந்து போன், 'அவசரமா சென்ட்ரல் ஸ்டேஷன் போப்பா, ஒரு கம்ப்ளைண்டு'ன்னாரு, அங்க பொறுப்புல இருக்கிற ஜே.இ ய கூப்டுட்டு ஸ்டேஷன் மாஸ்டர்கிட்ட போனா.....அந்தாளு லபோ திபோன்னு குதிக்கிறான், 'பயங்கர கொசுவா இருக்கு, நீங்கள்லாம் ஒண்ணுமே பண்ணுறதில்ல"  'இரு சார், வரேன்னு ஒரே மண்நேரத்தில, அந்த ஸ்பாட்லயே முன்னூறு கொசுவ பிடிச்சேன்"


"என்னாது புடிச்சிங்களா ?  புடிச்சீங்களா, அடிச்சீங்களா சார் ? என்றேன் நான். 

"அய்ய புடிச்சேம்பா, டியூப் ட்ரம் ன்னு ஒன்னு இருக்கு, அத யூஸ் பண்ணுறது ஒரு டெக்னிக்கு, உறிஞ்சி எடுத்துடும், முன்னூறு கொசு, அதுல ஒரு அம்பது கொசு மலேரியா கொசு"

எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி, "மலேரியா கொசுவ உங்களுக்கு அடையாளம் தெரியுமா ?"

"நல்லாக் கேட்ட போ, மலேரியா கொசு, டெங்கு கொசு, யானைக்கால் கொசு...... ச்சே, ஒரு பாவம் பண்ணிட்டேன், வீட்டாண்ட பொறம்போக்கு நெலத்துல சொவர கட்டிட்டேன்னு இடிக்கச் சொல்லிட்டாம்பா கவுன்சிலர் ஒருத்தன், நான் கவர்மென்ட் ஆளு, கொஞ்சம் விட்டுக் கொடுப்பான்னு எவ்வளவு கேட்டும் மசியல, மவனே....என்கிட்டவா வேலையக் காமிக்கிற ன்னு, நைஸா அவன் வீட்டுல ரெண்டு யானைக்கால் கொசுவ விட்டேன், அவனுக்கு ஒன்னும் ஆவல, ஆனா அவுங்க அம்மாவுக்கு யானைக்கால் வந்துச்சு"


என் இதயம் பயத்தில் நாலுகால் பாய்ச்சலில் குதித்தது.

"அதெப்படிங்க, அது அவுங்கள மட்டும் சரியா கடிக்கும் ?"

"அதெல்லாம் வளர்ப்பு முறைல இருக்கு கண்ணு, நான் ரெண்டாயிரம்
கொசு டயர்ல வச்சு வளத்தேன், வெளிய போயி எல்லாத்தையும் கடிக்குமே காண்டி நம்ம வீட்டு ஆளுங்கள கண்டுக்கவே கண்டுக்காது"

 
'செத்தாண்டா சேகர்' என்று மைண்ட்வாய்சில் நான் சொன்னதை அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.  தொடர்ந்தார்.       

"மஸ்கிடோ லிக்யுட் கம்பெனி ஆலவுட்டோ, குட்நைட்டோ....எந்த பாடோ ஒருத்தன் என்கிட்டே வந்து, எனக்கு ஒரு பத்து மலேரியா கொசுவும், அஞ்சு டெங்கு கொசுவும் வேணும்னு டிமாண்ட் பண்ணாங்க, ஒரு கொசுக்கு ஐநூறு ரூபா தரேன்னு சொன்னான், ரெண்டாயிரம் தருவியான்னு கேட்டேன், அப்பன்னா, டெங்கு கொசு போதும்னு சொல்லிட்டாங்க, எக்ஸ்பரிமண்டுக்கு இதுமாறி அடிக்கடி வருவானுங்க"

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தர், நம்ம ஃப்ரெண்டுதான், ஒருநாள் என்கிட்டே வந்து 'பேபி ரொம்ப அசிங்கப்படுத்திட்டா, எதாவது பண்ணனும்னான்'

"யார் சார் பேபி ?"

"அய்ய, இன்னாப்பா நீ.....வண்ணாரப்பேட்ட ஆளுன்ற, க்ராஸ்ரோடு பேபி தெரியாதா ? கவுன்சிலர் அக்கா, பகுதி கீப்பு, ஓடுகாலி சிறுக்கி, பச்ச பச்சையா திட்டுவா, என்கிட்டே ஒரு தடவ வாலாட்டுன, அப்ப போடின்னு விட்டுட்டேன், இப்ப வசமா சிக்குனா,  ரிப்பேர் பாக்குறோம்னு அவ வீட்டுக்கு போயி அஞ்சு மலேரியா கொசுவ விட்டோம், அஞ்சே நாளுதான் அக்காவுக்கு மலேரியா ஜூரம், தம்பிக்கு டைஃபாய்டு, ஆட்டத்த அடக்குனோமில்ல"

"இதெல்லாம் எப்ப சார் ?"

"அதிருக்கும் பத்து வருஷம் முன்னாடி"
இடையில் அவருடைய எல்லாப் பேச்சையுமே நான் நம்பியதாய் எண்ணி, டீக்கு கூட என்னை காசு கொடுக்க விடவில்லை, அதை விட ஆச்சர்யமாய் என் வேலையை இலகுவாய் முடித்தும் கொடுத்தார். அவர் ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால் அவருக்கு கீழே பணிபுரிந்த பல அவருடைய ஜூனியர்கள் இன்னும் அந்த அலுவலகத்தில் இருந்தனர். மதிப்பும் கொடுத்தனர்.  வேலை முடிந்ததும் பெருமையாய் 'எல்லாம் நம்ம பயலுவதான்' என்று தேவர்மகன் போல சொன்னார். 

நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். 

போகும்போது முத்தாய்ப்பாய் ஒன்று சொன்னார்.  "இப்ப இருக்கிற அரசு அதிகாரிங்களுக்கு மனிதாபிமானமே இல்ல, டெங்குவால இவ்வளவு பேர் செத்திருக்காங்க,  அத ஒழிக்க வழியில்லாம திணற்ராங்களே, என்ன மாதிரி சீனியர்ங்க கிட்ட ஐடியா கேக்கனும்னு தோணலயே"  கரெக்டுதானே !!!
                                                                  -முற்றும்-          


       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக