செவ்வாய், 23 ஏப்ரல், 2013

அமாவாசை மட்டும்தானா இல்லையே !!!

இதை சாரு வட்டத்தில் பதிவிடுவதற்க்காக  எழுதினேன்.   சரியாய் அந்த
நேரம் பார்த்து, சாருவின் மிக விரக்தியான ஒரு பதிவு வந்தது.  வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றுவானேன் என முதலில் பதிந்துவிட்டு, பிறகு நீக்கிவிட்டேன்.


‘அங்காடித் தெரு’ பட விமர்சனத்துக்கு, சாரு சூட்டிய அற்புதத் தலைப்பு ‘அள்ளிப் பூசிய அமாவாசை இரவு’ 

இதன் அர்த்தம், படத்தில் வரும் தொடர் சோகம்.  மேலும்,
படத்தில் எங்கே நம்பிக்கை கீற்று ? என்று சாரு கேட்டிருப்பார் !
எனக்கு அது நிறைய ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஏனெனில் படம் நெடுகவே கீற்றும், கருமையும் தொடர்ந்து பகலும், இரவும் போல வந்து கொண்டேதானிருக்கும்.

உதாரணத்திற்கு :-


அப்பா இறந்த சோகம் ஒரு புறமிருக்க, வேலைக்கு செலக்ட் ஆகும் நாயகன், 'பெரிய கடை, அதனால் ஏக வசதியிருக்கும்' என நம்பி வருவான் = கீற்று

ஆனால், அடாவடிகளும், மிகக் கடுமையான சட்டதிட்டங்களும், வசதிகள் குறைந்த கடை அமைப்பும், பார்த்து ஏமாறுவான் = அமாவாசை


அதே கடையில் துடுக்கு நாயகியின் காதல் அவனுக்கு ஆறுதலாகக் கிட்டுகிறது = கீற்று


கொடுமைக்கார புறநகர் வீட்டில் வேலை செய்யும், ’ருது’வான தங்கைக்கு, என்ன சடங்குமுறைகள் செய்வது எனத் தெரியாமல் கையாலாகாத அக்கா அழுகிறாள் = அமாவாசை

அம்மன் கோயிலில் தீட்டு பார்க்க மாட்டார்கள் என அந்தப் பெண்ணிற்கு உரிய சடங்கு நடத்தப்படுகிறது = கீற்று

நாயகி பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறாள் = அமாவாசை

சீண்டியவனைத் துவைத்து எடுத்து நாயகியை ஆறுதல் படுத்துகிறான் காதலன் = கீற்று

காதல் கிறக்கத்தில் மூடப்பட்ட கடைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் காதலர்கள் = அமாவாசை

எல்லா நவநாகரீக உடைகளையும் போட்டுப் பார்த்து ஒரு இன்ஸ்டன்ட் சொர்கத்தை தரிசிக்கிறார்கள் = கீற்று


இந்த சிக்கலில் இருந்து விடிந்ததும் எளிதாய் விடுபடுவது போல வாய்ப்பு கிட்டியும், சிசி கேமராவால் வேலை பறி போகிறது, திருட்டு பட்டம் கட்டி, காவல்நிலையம் போகிறான் நாயகன் = கீற்று & அமாவாசை

படிப்பறிவு கொடுத்த துணிவில், தவறுகளை தைரியமாக பேசுவதால் உடனடியாக கிட்டிவிடும் விடுதலை = கீற்று

நடுநிசி ஆட்டோ ட்ரைவர்களும், பிளாட்பார விபத்தும் = அமாவாசை

அருகருகே படுத்திருந்தாலும் ஒருத்தருக்கு மட்டும் கால்கள் போகிறது, இன்னொருவர் அவருக்கு கடைசி வரை துணையாக வருகிறார் = கீற்று

இதென்னடா வாழ்க்கை ? ஒரு குறுகிய காலகட்டத்தில் இவ்வளவு அமாவாசை பவுர்ணமியா......என வியப்பவர்களே, இவையெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை வருவதுதான் !

ஏழ்மைப் பிடியில் இருக்கும் 'நடுத்தர வர்க்கம்' வாழ்க்கையே......... 'ஜான் ஏறினால் முழம் சறுக்கும்' எனும் சித்தாந்தத்தில் செல்லக்கூடியது. அது அவர்களின் அறியாமையில் ஏற்படும் இயல்பான தவறுகளாலும் கூட இருக்கலாம்.


பேரளவு இருளும், சிற்றளவே வெளிச்சக் கீற்றும் அனுபவிக்கும் நிறைய கேரக்டர்களை சந்தித்துக் கொண்டே இருப்பதால் வசந்தபாலன் மேல்  நிறைய நம்பிக்கை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக