வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அடிமையாகாதே !!!

பாலகுமாரன் ஏதோ ஒரு நாவலில் சொல்லியிருந்தார்.  'எதற்குமே அடிமையாகித் தொலையாதே' என்று.  அவர் சொல்ல வந்ததன் முக்கிய நோக்கமே, 'கெட்ட' பழக்கத்துக்கு மட்டுமல்ல, 'நல்ல' பழக்கத்துக்கு கூட அடிமையாகி விடக் கூடாது என்று.  இதென்னடா, கேகூத் தனமா ஓர் அறிவுரை ?  என்று கோபிக்காமல் தொடருங்கள்.
   
மனிதன் தீய பழக்கத்துக்குதான் எளிதில் அடிமையாகிப் போவான், அதனால் எல்லாவற்றையும் இழப்பான் என்றுதானே நம்புகிறீர்கள் ?  நல்ல பழக்கத்துக்கு அடிமையாவது என்பது 'பிடிவாதம்' தானே ?  தன்னுடைய வறட்டுப் பிடிவாதத்தால், தன் சுற்றத்தை, ரத்த உறவுகளை, நண்பர்களை இழந்தவர்கள் எத்தனையோ கோடிகள் உண்டு. 

நண்பர் ஒருவருக்கு குளித்தால்தான் சாப்பிடுவது என்ற ஒரு 'நல்ல' பழக்கமுண்டு.  எதிர்பாராமல் ஒரு விடியற்காலையில் அவர் வீட்டருகில் நெருங்கிய உறவினர் இறந்துபோனார்.  சொந்தங்களுக்கு உதவ உடனடியாக சென்று விட்டார்.  சாவுக்கு வந்த சொந்தங்கள் அவர் செய்த பணிகளைப் பாராட்டி, ஒரு பரிவுடன் அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.  அன்னார் அன்று அந்த சாவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஒரேயடியாய் மாலை குளித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார். 

சொந்தங்கள் பேச்சை தட்ட முடியாமல் ஹோட்டல் சென்றவர் அங்கு போய், 'நான் குளிக்காமல் ஒரு சொட்டுத் தண்ணி கூட குடிப்பதில்லை'  என்று எதையும் மறுத்தவாறு இருந்தார்.  வந்தவர்கள் பல ஊர் பங்காளிகள்.  தவிர்க்க முயன்றவரை அமுக்கிப் பிடித்து வாயில் தோசையைப் பிய்த்து திணித்து விட்டனர்.  பாவம் 'அந்த' நல்ல பழக்கத்துக்கு சின்ன வயதில் இருந்து அடிமையாயிருந்திருப்பார் போல, 'உவ்வ்வ்வவ்வ்வே.....'  என்று பங்காளிகள் மேல் வாந்தியெடுத்து வைத்தார். 

ம்ம்ம்...பிறகென்ன  ஹோட்டலே நாறி, அதைக் கழுவ முதலாளி அரைநாள் ஹோட்டலுக்கு லீவு விட்டார்.  எப்பவுமே வாய்க்காச் சண்ட போடுற பங்காளிக அதுக்கப்புறமா அவரப் பாத்தாலே அரிவாளத் தூக்கினாங்க,

ஆனாலும் மனிதர் இப்போதும் குளிக்காமல் சாப்பிடுவதே இல்லை.  இதென்ன சினிமாவா அல்லது சிறுகதையா முடிவில் திருந்த ?          

நீதி :- அவர் அப்படித்தான், அவள் அப்படித்தான், அது அப்படித்தான் என்று எந்த 'அப்படி இப்படி' பழக்கம் அல்லது பிடிவாதத்துக்கு அடிமையாகாதீர்கள்.  ஏனெனில் எதுவுமே மாறலாலம்,  மாறாதது இவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான். 

('நீங்க மட்டும் ஏன் பிடிவாதமா வெள்ளிக்கிழமையானா அறுக்குறீங்க, அத ஞாயிற்றுக்கிழமைக்கு மாத்துனா நாங்க நிம்மதியா படிக்காம தப்பிப்போமுல்ல' எனும் அன்பு உள்ளமே, உனக்கு என் பதில் 'நோ கமெண்ட்ஸ்')

இது மீள் பதிவு (ஏற்கனவே ஃஃபேஸ்புக்கில் பதிந்ததுதான்)                                                                            -முற்றும்- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக