கூகை ! ( நாவல் மதிப்புரை)

 நான் வாசித்த பல நல்ல நாவல்களுள் ஒன்றாகி, என்றென்றும் மனத்தை விட்டு அகலாதளவு பதிந்த ஒரு நாவலே, ’கூகை’  திரு.சோ.தர்மன் அவர்கள் எழுதியது.  தலித்திலக்கியம்.

கூகை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அதை தலித்களின் குறியீடாக ஆசிரியர் குறிப்பிடுவதை நூறு விழுக்காடு ஏற்கலாம்.


”நம்முடைய சமுதாயத்தில் பாரம்பரியமாய் கூகை எனப்படும் கோட்டான் அல்லது ஆந்தை, ஓர் அபசகுணப் பறவை.  கோரமான அதன் முகத்தை பார்க்க நேர்ந்தாலோ, கொடூரமாக அது அலறும் குரலைக் கேட்டுவிட்டாலோ,  நம் மக்கள் நடுங்கிப் போவர், கேடு வரப் போகிறது என அதை வெறுப்பர்.
சரி சக பறவைகளால் மட்டும் அது என்ன புகழவாப் படுகிறது ?  கூகை, இடப்பெயர்ச்சியை விரும்பாத ஒரு பறவை.  மிக வலிமையான பறவைதானெனினும் பெரும்பாலும் உணவிற்காக அன்றி வேறெதற்கும் தன் பலத்தை அதற்கு உபயோகிக்கத் தெரியாது.  தவறி பகல் பொழுதில் கூகை வெளிப்பட்டு விட்டால் மிகச் சாதாரண கரிச்சான் குஞ்சு முதல் மைனா, காகம் என அனைத்துமே அதை விரட்டி விரட்டி அதன் தலையில் கொத்தும்.  ஆனால் அதே கூகையே இரவாகி விட்டால் மிகவும் பலமான பறவை, என்ன செய்ய, பகலில் அதற்கு கண் தெரியாதே ?

பள்ளக்குடியைச் சேர்ந்த முத்துக்கருப்பனும், மூக்கனும், துஷ்டி சொல்ல சாவு வீட்டிற்கு குறிப்பிட்ட கிராமத்திற்கு செல்லுமாறு பணிக்கப்படுகின்றனர். அதற்குரிய சொற்ப கூலி முன் கூட்டியே கொடுக்கப்படுகிறது.  அந்த முக்கா ரூபாய்க்கு, கோவில்பட்டியில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ’நாச்சியாரம்மா கிளப்புக்கடை’யில் கிடைக்கும் அன்லிமிட்டெட் மீல்ஸ்க்கு சப்புக் கொட்டியபடியே இருவரும் துஷ்டி சொல்லப் புறப்படுகின்றனர்.

போகும்போதே வழியில், ’வயிறை எப்படி காலியாக வைத்திருக்க வேண்டும் ? துஷ்டி சொல்லப் போகுமிடத்தில் காப்பி கீப்பி கொடுத்தால் வாங்கிக் குடிக்கக் கூடாது, அது கொஞ்சம் பசியை மந்தப்படுத்திவிடக் கூடும், சாராயம் நிச்சயம் ஓசியில் கிடைக்கும், அந்தப் பக்கமே போய்விடக் கூடாது, அதே போல் சாப்பாட்டிடையே மிளகாய் கிளகாய் தட்டுப்பட்டால் நாசூக்காக அதை விலக்கி உண்ணவேண்டும், தவறி கடித்துத் தொலைத்தால் அந்த ஒறப்புக்காக, தண்ணிய குடிச்சி குடிச்சி வவுறு நெரம்பிடும், மிச்ச சாப்பாடு இறங்காது’.......
இப்படியாக மேல்பட்டிக்கு கால்நடையாய் நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே, ’ப்ளானை’ பக்காவாக போட்டபடி சென்றதால், சாவு வீட்டில், இவர்களுக்கு கிடைக்கவிருந்த காப்பியையும், அந்த ஊரில் வாக்கப்பட்டு வந்திருக்கும் முத்துக்கருப்பனின் அண்ணன் மகள் கொடுக்கவிருந்த டிபனையும் வலுக்கட்டாயமாகத் தவிர்த்துவிட்டு, அந்த ஊரிலிருந்து வயக்காட்டு வழியாக குறுக்கே புகுந்து, அப்படியே வழியிலிருந்த ஒரு பம்புசெட்டில் குளித்துவிட்டு, போட்டிருந்த வேட்டியையும் அலசி, வெள்ளையும் சொள்ளையுமாய், ஆசையாசையாய், ’நாச்சியாரம்மா கிளப்புக்கடை’யிருக்கும் கோவில்பட்டி அடைந்துவிடுகின்றனர்.

நாயக்கர் மனைவி நாச்சியாரம்மா கையால் அன்லிமிடட் மீல்ஸை சுவைக்க, ஆளுக்கு முக்காரூபாயை கல்லாவில் அமர்ந்திருக்கும் நாயக்கர் கையில் கொடுத்துவிட்டு, பெஞ்சில் அமர வேண்டுமா, கீழே அமர்ந்து உண்ண வேண்டுமா ? என ஒரே ஒரு வினாடி யோசிக்கிறார்கள்.

’ஹ, பெஞ்சிலேயே ஒக்காந்து சாப்பிடுவோம், வெளியூருதானே’ என்று பெஞ்சில் அமர்ந்து, செய்த ப்ளான் படி அன்லிமிடெட் மீல்ஸை உண்ண ஆரம்பிக்கின்றனர்.

இலை விரித்து, தொடுகறியை வைத்துவிட்டு சாப்பாட்டை உள்ளே எடுக்கச் சென்ற நாச்சியார் மீண்டும் அந்த இலையை அடைவதற்குள் இலை காலியாயிருந்தது.

ப்ளான் சக்ஸஸ், நாச்சியாரால் சாப்பாட்டை போட்டு மாளவில்லை.  சோறு சாம்பார் தொடுகறி, சோறு ரசம் தொடுகறி, சோறு காரக் குழம்பு, தயிர், மோர்க்குச் சோறு என்பதோடு நிற்காமல், ஒவ்வொரு முறையும் தொடுகறி.......

“என்னம்மா வேறு யாருக்காவது டோக்கன கொடுக்கட்டுமா வேணாமா, சாப்பாடு மிச்சமிருக்கா ?” என்று நாயக்கர் நாச்சியரம்மாவைப் பார்த்துக் கேட்க
நாச்சியார், கல்லாவில் அமர்ந்திருந்த நாயக்கரை  நோக்கி வசை பாட ஆரம்பிக்கிறார்.  ”மொதல்ல அந்த 'அளவு கிடையாது'ன்னு இருக்கிற போர்ட எடுங்க, அளவுச்சாப்பாடு வைங்கன்னு சொன்னாக் கேக்குறாரா மனுஷன், ’சாப்பிட வர்றவன் முழுப் பசி தீராம போனா அது பாவம்’ன்னுட்டு அளவில்லாச் சாப்பாடு போடனும்ன்னாரு, இப்படி பேய் மாதிரி திங்குறவன்களா வந்தாங்கன்னா, நமக்கே சாப்பாடு கிடைக்காது போலிருக்கே......?”

”ச்சும்மாவா, முக்கா ரூபா குடுத்துருக்கும்ல, ச்சோத்தப் போடுங்க, எலேய் மூக்கா, அண்ணாக்கயிற அவுத்து விட்டுட்டு சாப்பிட்றா”
இப்படியாக அந்த அன்லிமிடெட் சாப்பாட்டு லட்சியத்தை பூரணமாய் வென்றுவிட்டு நடக்க முடியாமல் தள்ளாடி, ஓர் ஆலமர நிழலில் விழுந்து, உண்ட மயக்கத்தில் இருவரும் தூங்க ஆரம்பிக்கின்றனர், செருப்புக்காலால் எத்துப்படும்வரை.

”எலேய் சாதிகெட்ட பயலுகலா, வெள்ளையும் சொள்ளையுமா போட்டுகிட்டா பெஞ்சுல சரிக்குச்சமம் ஒக்காந்து சாப்பிடுவீகளோ ?” என்று சராமாரியாய் கம்பால் அவர்களிருவரையும் வெளுத்து வாங்குகிறார் காவக்கார முத்தைய்யாப் பாண்டி.  அவர்களிருவரும் அலறிய அலறலில் ஓடிவரும் சீனிக் கிழவன், முத்தைய்யாப் பாண்டியின் கால்களில் விழுந்து, ”கொழுப்பெடுத்த ஈன நாய்களை மன்னித்து விடும்படி” மன்றாடுகிறார்.  சீனிக் கிழவனுக்காக மரத்தில் கட்டிவைத்தடித்து தோலை உரிக்காமல் விடுவதாகச் சொல்லிவிட்டு பறக்குடி பக்கமாகப் போகிறார் காவக்கார பாண்டி.


சண்முகம்பகடை குடிசை  நோக்கிப் போன முத்தைய்யாப் பாண்டி, “எங்கலே கருப்பி ?”

”உள்ள இருக்காங்கய்யா”

“போடா, அந்த பாட்டில எடுத்துகிட்டுப் போய் சாராயம் வாங்கிட்டு வா, அப்படியே நீ ரெண்டு க்ளாஸ் போட்டுக்கோ” என்று செருப்பை வாசலில் கழட்டிவிட்டு, கையிலிருந்து கொம்பை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு குடிசைக்குள் நுழைகிறார்.

”யாருக்குடா சாராயம் ?”

”ஓ இன்னிக்கு ஒன் வீட்டுக்கா, நேத்து கண்ணுமாரிப் புருஷன் சாராயம் வாங்க வந்தான் ?

“கண்ணுமாரி திகட்டியிருப்பா, இன்னிக்கு கருப்பி”

“கருப்பி திகட்டிட்டா ?”

”செவலக்கெழவி புருஷன் சாராயம் வாங்க வருவான்”

ஹெஹ்ஹெஹ்ஹே என்ற சிரிப்பலை எழும்பிய அந்த ஓடையில் யார் பேச்சையும் லட்சியம் செய்யாமல், பள்ளக்குடிக்கும், பறக்குடிக்கும், சக்கிலிக்குடிக்குமென இருக்கும் கண்ணாடி டம்ப்ளர்களை ஆவாரஞ்செடி புதரிலிருந்து எடுத்து, சாராயம் வாங்கி குடிக்க ஆரம்பித்தான் சண்முகம்.

சண்முகம்பகடை தன் குடிசையை அடையும் வேளையில், அவனுடைய 14 வயது மகள், வாசலில் காணப்பட்ட செருப்பையும், கம்பையும் பார்த்த மாத்திரத்தில் குடிசையின் பின்புறமாய்ப் பதுங்கி, அமர்ந்து முழங்காலைக் கட்டிக் கொண்டு விம்மிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.

தான் வந்து சேர்ந்ததன் அடையாளமாக லேசாக செருமினான் சண்முகம்.

“அதுக்குள்ளயாலே வந்துட்ட, பாட்டில கொடுத்துட்டு, முக்குரோடு போயி பீடிக்கட்டு சீவல வாங்கிட்டு பொறுமையா வாடா” என்றபடியே மூடியிருந்த குடிசைக் கதவைச் சன்னமாகத் திறந்து சாராய புட்டியை வாங்கிக் கொண்ட வேகத்தில் கதவை அடைத்தார் முத்தைய்யாப் பாண்டி.

”அப்பா, எதுக்குப்பா இந்த மானங்கெட்டப் பெழப்பு, வாங்கப்பா வேறெங்கயாவது போயிடலாம் ?”

“அப்படில்லாம் போயிற முடியாதும்மா, சாராய வேவாரி செந்தூரப்பாண்டிய குருவம்மா குடிசைல ஒண்ணாப் பாத்துட்ட குருவம்மா தம்பி சுடல, “ஏய்யா ஒங்க வீட்டுல பெண்டாட்டிங்க கெடயாதா, நீங்கல்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலையா”ன்னு இளந்தாரி சூடு ரத்தத்துல கேட்ட வார்த்தைய பொறுக்காம அவனுங்க ஊரேச் சேர்ந்து அந்தப் பயல மரத்துல கட்டிவச்சு அடிச்சே கொன்னு போட்டாங்க, ரெண்டு நாள் சவத்த கூட எடுக்க விடல, அப்புறம் மூணு குடியும் அவிங்க கைல கால்ல வுழுந்துதான் பிணத்தையே தூக்கிப் போக விட்டாங்க, அது மட்டுமா, இந்த ஊரே வேணாம்னு ஒரு ராத்திரி ஓடிப்போன குருவம்மாவையும் அவ புருஷனயும் துப்ப போட்டுப் பிடிச்சி, ’பித்தள குடத்த களவாண்டிட்டு வந்துட்டானுக ஈனசாதி பயலுக’ன்னு அந்த ஊர்ப்பஞ்சாயத்துல பொய் சொல்லி, கம்பத்துல ரெண்டு பேரயும் கட்டிவச்சு அங்கனயே விளாறால வீசுனாங்க, யெம்மா இந்த பறக்குடி, பள்ளக்குடி, சக்கிலிக்குடில இவனுங்க அரைஞான் கயிறு படாத பொண்ணுங்களே கிடயாதும்மா, இவனுங்க வச்சதுதன் சட்டம்”

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......நீண்ட பெருமூச்சுடன் இந்த நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  இன்றும்(19/03/2014) ஜூ.வியில், ’நாங்கள் சிங்கங்கள், ஆண்ட வம்சம், நரிகளுக்கு அடங்குவதோ ?” என காடுவெட்டிகுரு பேசியதை வாசித்த வேளையில்தான், ’வெறுமனே பார்ப்பனர்களை எதிர்த்தால் மட்டுமே போதுமானது’ என தமிழ்ச்சமூகச் சீர்திருத்தவாதிகள் நின்றுவிட்டார்களோ என ஐயம் வந்தது.

ஆச்சர்யமாய் எனக்கு கூகையும், பன்றியும் சிறுவயதிலிருந்தே மிகப் பிடிக்கும், அதனாலேயேக் கூட இந்த நாவல் என்னை வசீகரித்திருக்கக் கூடும். செம விறுவிறுப்பு, ஒரே மூச்சில் 50 பக்கங்களை மிக எளிதில் கடக்கும்படியான நடை.  மீதியை முடித்துவிட்டுச் சொல்கிறேன் !!!

சாதிப்பெயரை வாலென வைத்துக் கொண்டு பெருமைப்படும் சின்னப்புத்திக்காரர்களை நான் வெறுத்ததில்/வெறுப்பதில் எந்தத் தவறுமில்லை எனக் கொஞ்சம் கர்வம் என்னிலிருந்து எட்டிப் பார்ப்பது, உங்களுக்குத் தெரிகிறதா ???

                                             =====  இடைவேளை  =====
_________________________________________________________________________________                                                    
                                                             பகுதி - 2


கூகை நாவலில் அதன் ஆசிரியர் சோ.தர்மன் அவர்கள் புகுத்தியிருக்கும் உத்தி என்னை மிகவும் ஈர்த்தது.  அதாவது நாவலை இரு பாகமாக பிரித்திருக்கிறார், அவ்வளவுதானே அன்றி அவைகளை ஒரே ஒரு அத்தியாயமாகக் கூட பிரிக்கவில்லை.

ஏகப்பட்ட சிக்கிருக்கும் போலயே என சந்தேகத்துடன் ஒரு நூற்கண்டை எடுத்து, அதன் நுனி தேடி, புலப்பட்டபின் அதை நீட்டிழுத்து அப்படியே உருவிப் போடுவோமல்லவா, அப்படியே இழுக்க, இழுக்க இலகுவாக கதை சீராய் பாத்திரங்களும், கதைக்களமுமாய் மாறி மாறி பயணிக்கிறது.

பிரதான கதைக்களமாய், கோவில்பட்டி அருகேயுள்ள ஓர் ஊரின் ஒதுக்குப்புறமாய் இருக்கும் பள்ளக்குடி, பறக்குடி, சக்கிலியக்குடியில் தொடங்குகிறது என முன்பே பார்த்தோம்.

இதில் கடும் உழைப்பால் கிட்டிய சந்தர்ப்பத்தில், பள்ளர்கள் மட்டும் வளமாகி ’ஆந்தையைக் கும்பிடுவது அலங்கோலம், அந்தக் கோயிலை இடித்து காளி கோயில் கட்டுவோம்’ என சாதி இந்துவாய் உயர, பறையர்கள் ஊரில் புதிதாய் முளைத்த சர்ச்சின் ஃபாதர் உபயத்தால் தைரியமும், வேலை வாய்ப்பும், ஃபாரின் கோதுமையும், ரொட்டிகளும் கிட்ட, தீவிர கிருத்துவர்களாய் மதம் மாற, இத்தனை நாள் ஒற்றுமையாயிருந்த இவர்களுக்கிடையே பூசல்கள் தோன்றி கலவரம் வெடிக்கிறது.

அத்தோடு அந்த ஊரிலிருந்து வெளியேறுகிறது கூகைச்சாமி எனும் ஆந்தைக் கடவுள், முதல் பாகமும் இங்கு முடிவுறுகிறது.

இரண்டாம் பாகம் சமகால தலித்களின் நிலையை விளக்க முற்படுகிறது(அதாவது 1965 - 2005)

நாம் இவைகளை பல சினிமாக்களில் பார்த்ததுதான், ஆனால் சினிமாவில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காட்ட முற்பட்டதில்லை.

தாழ்ந்தசாதியினர் அதனால்தான் அவர்களை எளிதில் பந்தாடுகிறார்கள் என அழுந்தச் சொன்னால்.......அவர்களை நசுக்க முயலும் ஆதிக்கச் சாதியினர் இன்னார்தான் என ஓங்கிச் சொன்னால்.....சட்டச் சிக்கல்களும், வணிக சிக்கல்களும் வருமென்பதால், 'அதிகார/பணக்கார வர்க்கம் ஏழைகளை நசுக்குகிறது’ என மேலோட்டமாகவேத்தானே சொல்வார்கள் ?

ஏன் சோ.தர்மனே கூட தலித்களுக்கு உதவும் ஆதிக்கச் சாதியை தைரியமாகச் சொல்கிறார், கொடுமை படுத்தும் ஆதிக்கச் சாதியை மேலோட்டமாகத்தான் சொல்கிறார், நாமாகவே அவர்கள் யாராயிருக்கும் என ஓர் ஊகத்திற்கு வரவேண்டியுள்ளது.

சரி, நானிட்ட முதல் பதிவின்படி காவக்கார முத்தையாப் பாண்டி சக்கிலியக் குடியில் இருக்கும் சண்முகப்பகடையை சாராயம் வாங்க அனுப்பிவிட்டு, அவனுடைய மனைவியையே தொடர்ந்து சீரழிப்பதாக பார்த்தோமல்லவா, அது அப்படியே பசு அலுத்து கன்றுக்கு தாவுவதாக காட்சி விரிகிறது.

இளித்தவாயனை ஏமாற்றும் அதிகார காமுகன் என்பதால் இவை கூட அதிர்ச்சி தராது, ஆனால் சண்முகப் பகடையின் மனைவி காவக்கார முத்தைய்யாப் பாண்டியின் கால் பிடித்து கதறிக்கொண்டே ஒரு வரி சொல்கிறாள், வாசிக்கும்போது உங்களுக்கு திக்கென்று நெஞ்சடைக்கக்கூடும்.

சண்முகப் பகடையின் 14 வயது பெண்ணைக் கட்டிக் கொடுத்து அவள் வெளியூர் எங்கேனும் போய்விட்டால் ’இழப்பு’ எனக் கருதி முத்தைய்யாப் பாண்டி ஒரு கால் ஊனமான ஒருவனை ’ஜமீன் பண்ணையில் வேலை செய்கிறான்’ என அழைத்துக் கொண்டு வந்து, ’வரும் வெள்ளிக்கிழமை இவனுக்கும், உன் மகளுக்கும் திருமணம்’ எனச் சொல்லிவிடுகிறார்.

சண்முகமும், கருப்பியும் எவ்வளவு மன்றாடியும் முத்தைய்யா கேட்கவில்லை.  சரி, மகளுக்கு அமையப்போகும் மாப்பிள்ளையாவது ஜமீனில்தான் வேலை செய்கிறானா என விசாரிக்கப் போனால் அதுவும் பொய், கோயில் பிச்சையெடுத்து அரைவயிறுக்குச் சாப்பிடும் அனாதை.
இருந்தும் அவர்களுக்கிடையேயான அத் திருமணத்தை சண்முகப்பகடையால் தடுக்கவே முடியவில்லை.

திருமணம் முடிந்தவுடன் அந்த புது மாப்பிள்ளையை சாராயம் வாங்க அனுப்பிவிட்டு புதுப்பெண் இருக்கும் குடிசைக்குள் நுழைந்து கதவை அடைக்க முயல்கிறார் காவக்கார முத்தைய்யா.

அந்த நோக்கத்தைப் புரிந்துக் கொண்ட கருப்பி, முத்தைய்யாப் பாண்டியின் கால்களில் விழுந்து இவ்வாறாகச் சொல்கிறாள்.

“சாமி, நீங்க நல்லாருக்கனும், வேண்டாஞ் சாமி”

”........”

“சாமி அது உங்களுக்குப் பொறந்த புள்ள சாமி”

”.......”

“ஒங்க ரத்தத்தையே நீங்க குடிக்கப் போறீகளா
சாமி ?”

“........”

“இத்தன வருஷமா என்னய தின்னது காங்கலையா சாமி ?”

“..........”

”சாமி இந்தாங்க சாமி, எடுத்துக்கோங்க சாமி, அவள விட்டுருங்க சாமி”

வெறியேறிய காமத்திற்கு கண்ணேது, உறவேது ?  முத்தைய்யாப் பாண்டியின் முறுக்கேறிய பலத்தில் சண்முகமும், கருப்பியும் தோற்க, உள்ளே வெள்ளையம்மாள் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சாகிறாள்.  

சாது மிரண்டால் ?

சாதுவை மட்டும் மிரள வைக்கவே கூடாது,  முதல் அக்கினிக் குஞ்சை அந்த பெருங்காட்டில் துணிந்து விதைக்கிறான் சண்முகப் பகடை.  முத்தையாப் பாண்டியின் மண்டையை உடைத்து, அவரிடமிருந்து வெள்ளையம்மாளை மீட்ட பின், குடிசையோடு வைத்து எரித்து விடுகிறார்கள்.  மொத்தச் சக்கிலிக் குடியும் இரவோடிரவாக அந்த ஊரை விட்டு வெளியேறுகிறது.

பள்ளர்கள் உழைப்பால் கோவில்பட்டி அருகேயுள்ள அந்தக் கிராமத்தில் ஆதிக்கச்சாதியினரின் காடு கரை வளமாக இருக்கிறது.  நடராஜ ஐயரின் இரு மகன்களும் அரசு அதிகாரிகளாகி உயர் பதவியில் நகரங்களில் வளமாக இருந்தபடியால் இக் கிராமத்தை விட்டு தங்களுடன் வந்துவிடுமாறு பண்ணிய தொடர் நச்சரிப்பில் நடராஜ ஐயர் ஓர் அதிரடி முடிவுக்கு வருகிறார்.

பள்ளர்களில் முதியவனும், கொஞ்சம் அறிவாளியுமான சீனிக் கிழவனைக் கூப்பிட்டு, ”சீனி, நானும் பட்டினம் போயிடப் போறேண்டா, இனி என் வீட்டில் தங்கி தினமும் விளக்கேத்து, உங்க ஆளுகள கூப்பிடு, எல்லோத்துக்கும் சமமா தோட்டத்த பிரிச்சிக் கொடுத்துடுறேன், குத்தகைக்குதாண்டா...... நீங்களே விவசாயம் பண்ணுங்க, விளஞ்சத நீங்களே அனுபவிங்க, என் பங்க ஏத்தி விட்டுடுங்க”(மனைவி இறந்தபின் அவர்களுக்கு இலவசமாகவே கிரயம் பண்ணிக் கொடுத்து விடுகிறார்)

ஊரில் இல்லாத வழக்கமிது.  தாழ்த்தப்பட்டவரெல்லாம் சுயமாய் விவசாயம் பார்க்கக் கூடாது, அவர்கள் விவசாயக் கூலிகளாக மட்டுமே இருக்க வேண்டும், முதலாளிகளாக உயர்ந்துவிட்டால் பிறகு தோட்ட வேலையை யார் பார்ப்பது ? சீனிக் கிழவனே சந்தோஷப் பட வேண்டிய இத் தருணத்தில் பயப்படுகிறான், கேடு வருகிறதோ என்று.

”என் தோட்டம், என் சொத்து, நான் எவனுக்கு வேணுமானாலும் குத்தக கொடுப்பேன், ச்சும்மா கூட கொடுப்பேன், எவன்டா கேப்பான் ? எவனாயவது கேட்டுடச் சொல்லு பாப்போம் ? என்ன ஜமீன் கேப்பானா, சந்தனப் பாண்டி கேப்பானாடா ? இல்ல ரெட்டியார், நாயக்கர் கேட்டுடுவாரா ? எவனுக்கும் இந்த நடராஜய்யர் பயப்பட மாட்டான் பாத்துக்கோ, என் தோட்டத்துல பரம்பரை பரம்பரையா உழச்ச வர்க்கத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப் போறேன், போங்கடா, போய் தைரியமா வேலையப் பாருங்க”

பள்ளர்களுக்கு மட்டுமே கிட்டிவிடும் இந்த திடீர் அதிர்ஷ்டத்தை பறக்குடி கொஞ்சம் போறாமையுடன் பார்த்தாலும், இடையறாத வேலை வாய்ப்பால் செழிப்பு சேர்கிறது.

ஆனால் இதன் பின்விளைவு என்ன தெரியுமா ?

“என்ன அய்யரே இந்தப் பயக கையில வயக்காட்டை ஒப்படைச்சிட்டு பட்டணம் போறாப்பல கேள்விப்பட்டோம், நெசந்தானா ?”

”தலமொறயா தலமொறயா நம்ம வயல்ல ஒழச்ச பயக, அதுவுமில்லாம அவங்களுக்குத்தான காடுகரையில்ல?”

“அது சரி, இவனுங்களுக்கு காடுகர கிடச்சிட்டா எங்க காடுகளுக்கு வேலைக்கு யாரு வருவா ? பக்கத்துல ஜமீன் வேற இருக்கு, அங்க யாரு வேலை செய்வா ?”

”ரெட்டியாரே, என்னோட நெலத்த பிரிச்சிக் குடுக்கப் போறேன், அதுல ஒழச்சு அவிங்க சாப்பிடப் போறாங்க, எனக்கு வேறெதயும் யோசிக்கத் தோணல”

“அப்ப பரம்பர பரம்பரயா இருந்த ஊர் வழக்கத்த மாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டீரு ?”

பள்ளர்கள் இனி சொந்தமாக விவசாயம் செய்வதை தடுக்க முடியாதென உணர்ந்த பின்,  ”அவர்கள் வயல்களில் விளைவதை நாமதான விலைவைக்கப் போறோம், அப்ப அந்த பயகள பாத்துகிடலாம்” என ஜமீன் சொல்லிவிட,ஆதிக்கச் சாதிகள் முணுமுணுத்தவாறே அப்போதைக்கு கலைந்துச் சென்றனர்.  ஆனால் எது நடக்கும் என அஞ்சினார்களோ அதுவே நடந்தது.

“இந்த ஐயப் பய என்னிக்கு இவனுங்ககிட்ட நெலத்த ஒப்படைச்சிட்டுப் போனானோ அன்னையலருந்து அந்தப் பயக போக்கே மாறிப்போச்சு, இப்ப ரெண்டு பயக சைக்கிள் வாங்கிட்டான், நாலு பயக கோயில்பட்டி பள்ளிக்கூடத்துக்கு படிக்க போயிருக்கானாம், வாரச் சந்தைக்குப் போயி நாலு ஜோடி மாட வில பேசியிருக்காய்ங்க, ஆளப் பாத்தா இறங்கக் கூடச் செய்யாம கிண்கிணின்னு மணியடிச்சிகிட்டே ஒய்யாரமா போறானுங்க”

இப்படியாக பள்ளர்கள் வயல்களில் பறையர்கள் ஒற்றுமையாகச் சேர்ந்துழைக்க இருவர்களின் கைகளிலும் வாழ்வின் முதன்முறையாக செலவு போக உபரிப்பணம் கொழிக்கிறது.  யாரும் அவரவர் நிலங்களை விட்டு வேறெந்த ஆதிக்கச் சாதியினர் வயல்களுக்கும் வேலைக்குப் போவதில்லை, போக நேரமுமில்லை.

பறையர்களில் சிலர் சேர்த்த பணத்தில் கடை வைக்கிறார்கள். சாராயக்கட ஓனர் செந்தூரப்பாண்டிக்கு பொறுக்காமல் அப்புசுப்பன் கடையில் தொடர்ந்து கடன் சொல்லி பொருள் வாங்குகிறான்.

 ஊரே மிரளும் சண்டியர், நம் கடையில் பொருள் வாங்குகிறாரே என்று அப்புசுப்பனும் இயன்றவரை கடன் எழுதிக்கொள்கிறார்.   அதுசரி செந்தூரப்பாண்டி அப்புசுப்பன் நல்லாயிருக்க வேண்டுமென்றா கடன் வாங்குகிறான் ?  ஒரு நாள், வாழைத்தாரிலிருந்து பழம் உருவ முயன்ற செந்தூரப்பாண்டியை அப்புசுப்பன் தடுத்து, ’கடனக் கொடுத்துட்டு கைய வைங்க’ என்கிறான்.

“தாயொளி, ஒன் கடைல நான் பொருள வாங்குறதே ஒன் ஈனசாதிக்கு பெருமை, என் கையத் தடுக்கிறியாடா நாயே ?” என்று வாழைத்தாரை அப்படியே இழுத்து தெருவில் போடுகிறான்.  கடைக்குள்ளும் நுழைந்து கடையைச் சூறையாட முயல்கிறான்.  அப்புசுப்பனும், அவன் அப்பன் அய்யனாரும் போதை தலைக்கேறிய செந்தூரப்பாண்டியை முறையே பலகையாலும், அரிவாளாலும் பதிலடி கொடுக்க, தலையற்ற முண்டமாய் கிடக்கிறான் செந்தூரப்பாண்டி.

ஒரு நிமிஷம், இதெல்லாம் எதுக்கு இப்ப ?  பழச கிளறி புரையோடிப்போனத ஏன் புண்ணாக்குறீங்கன்னு வெயில்ல சுடு தண்ணிய குடிச்சா மாதிரி உங்களில் ஒரு சிலர் ஃபீல் பண்ணீங்கன்னா........ப்ளீஸ் போனவார ஆனந்தவிகடன்ல பாரதி தம்பி எழுதியிருந்த “இன்னொரு கொலை பாக்கி” கட்டூரையை வாசித்தபின் தொடருங்க :(

இந்த அப்புசுப்பன் போலீசுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழறது, போலீஸின் அத்துமீறல், பள்ளர்களே ஒடுக்கப்பட்ட இனம்......இந்த அழகில் இவர்கள் பறையர்கள், சக்கிலியர்களை தங்களை விடத் தாழ்ந்தவர்களாக கருதுவது, அப்புசுப்பனுக்கு உதவும் துணிச்சல்காரி பேச்சியின் கதை......இதுவே இரண்டாம் பாகம்.  சரி, இனி முடிவுக்கு வருவோம்,

ஆரம்பப்பத்தியில் சொன்ன அந்தக் ‘கடைசி பத்தி’ இதோ பேச்சியின் புலம்பல் :-


“பட்டிக்காட்ல நாங்க இருந்தப்போ எங்க கையில மம்பட்டியும் களைவெட்டியும், கோடாலியும், பண்ணருவாளும், கடகாப் பெட்டியும் இருந்துச்சு, ஒங்க கையில காடு, தோட்டம், வயக்காடு அம்புட்டும் இருந்துச்சு, நாங்க ஒங்களுக்கு ஒழச்சு ஓடாப்போனோம், டவுணுக்குப் போய் பொழச்சிகிறலாம்னு ஊர விட்டு வெளியேறி வந்தா, எங்க கையில சாந்துச்சட்டியும், தார்ச்சட்டியும், ஜல்லி ஒடைக்க சுத்தியலும், மூட தூக்குற கொக்கியும் கெடச்சுது, உங்க கைல தீப்பெட்டிக் கம்பெனி, ஜின்னிங் பேக்டரி, காண்ட்ராக்டு, பைனான்ஸ், கல் குவாரி, மணல் குவாரி, ஆட்டுச் சந்தை, மாட்டுச்சந்தை இருந்தது, இப்படி நொந்து சீரழிஞ்சது போதும் புதுப்பாத காட்டுறேன்னு இப்ப எங்காளுங்க ஒரு கைல கட்சிக் கொடியையும், இன்னொரு கைல ப்ராந்தி பாட்டிலயும் திணிச்சுட்டீக, அதிகாரம் ஒங்க கைல, நாங்க கூகை போல எங்க பலம் தெரியாம பயந்து, ஒளிஞ்சி, பதுங்கி, ஒடுங்கியே வாழுறோம்”


“என்னடா இது இவ்வளவு பெரிசா முழுக்கதையயும் சொல்லிட்டாரு போலயே ?” எனச் சலிக்கவேண்டாம், நான் என்னை வெகுவாக ஈர்த்த மிகச் சில பகுதிகளை மட்டுமே அப்படியேக் கொடுத்துள்ளேன், இதுப்போல பலப் பல கொடுமைகள், அவர்களுக்கு கிட்டும் தாற்காலிக மகிழ்ச்சிகள், வன்மங்கள், இயலாமைகள் பற்றி, மேஜிகல் ரியலிஸ பாணியில் வெகு அற்புதமாகச் சொல்லிச் செல்கிறார் இதன் ஆசிரியர்.

நீங்கள் தீவிர வாசிப்பாளர் எனில் இந் நாவலை ஒரே மூச்சில் நான்கைந்து மணி நேரத்திற்குள் வாசித்து விடுவீர்கள், ஆனால் இதன் வீரியம் நான்கைந்து வருடங்கள் ஆனாலும் உங்களை விட்டு நீங்கி விடாது, அதுதான் ஆசிரியரின் ஆகச் சிறந்த வெற்றி !

ஆரம்பத்தில் திருமாவளவன், தனக்குக் கொடுத்த ஒரே ஒரு பாரளுமன்றத் தொகுதிக்கும் உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் அல்லவா ?

40 தொகுதிகளில் தங்கள் கட்சிக்கென எதுவுமே தாரவிடினும் அவர் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என சில தலித் அமைப்பினர் ஜெயலலிதாவுக்காக வாக்கு சேகரிக்கிறார்கள் அல்லவா ?

சிங்கக் கூட்டங்கள் நாங்கள், ஆண்ட சாதி நாங்கள் என இவர்களைக் குறி வைத்து சிலர் கொக்கரிக்கிறார்கள் அல்லவா ?

தன் சாதித் தலைவனிடமும் கூட,  இன்னமும் அதே அடிமைக் கோலம் பூண்டு அவன் இட்ட கட்டளையை எந்தப் பின்விளைவையும் சிந்திக்காமல் செய்து தொடர்கிறான் அல்லவா...............?

பெரியாரும், கூகையும் இந்தச் சமுதாயத்திற்கு அவசியம் தேவை, தேவை தேவை !!!

கூகை ( நாவல் 319 பக்கம்)
ஆசிரியர் : சோ.தர்மன்
காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு 2005
மூன்றாம் பதிப்பு 2011.
                                                              == வணக்கம் ==




 

























  •    

கருத்துகள்

  1. கூகை அய்யா, சோ.தர்மன் அழகாக சமூகத்தை தோலுறித்து காட்டியுள்ளார்... இறுதியில் சீனி கிழவன் பட்டபாடும். கூகையின் கால்களில் கட்டி இழுத்து சென்ற கயிறும் என் கண்ணில் கண்ணீர் விட வைத்தது, இப்புத்தகத்தை படித்த பின்பு தினமும் இரவு நேரத்தில் கூகையை தேடி பார்க்கிறேன்,

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!