ஏன் இந்தச் சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடுவதில்லை ?
ஃபேஸ்புக்கில், நிறைய தமிழார்வ இளைஞர்களை, அதாவது தீவிர இலக்கிய வாசிப்பாளர்களை காண நேர்கையில் நெஞ்சம் இனிக்கிறது. உமா மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, நிஜந்தன், ஜானகிராமன், ப்ரவீண்ஸ்(இந்தப் பெயரில் பலர்), விக்னேஷ், வளன், விஷால், சுபத்ரா.......இதுப்போல இன்னும் பலப்பலர்(விடுபட்டவர்கள் அந்தப் பலரில் இருப்பதால் வருந்த வேண்டாம்) இது போன்ற ஒரு தீவிர நல்லிலக்கிய வாசிப்பாளர் கார்த்திக் ரவிகுமார்.
நான் ஜெயமோகனின், ’முதற்கனல்’ செம்பதிப்பை வாங்கி, இதன்மூலம் எழுத்தாளனைக் கொண்டாடுகிறேன் என்ற பதிவில் கோடி பேர் இருக்கும் ஊரில் 350 (அல்லது 600) புக் விற்பதெல்லாம் பெருமையா ? கோபிநாத் 5 லட்சம் விற்கிறார் எனக் குறைபட்டிருந்தார்.
அதற்கு விளக்கமளிக்க போனால் அது பாட்டுக்கு வழக்கம்போல நீண்டு விட்டது. கமெண்டில் போடாமல் தனிப்பதிவாகவே போட்டுவிட்டேன். கீழே கார்த்திக் ரவிக்குமாரின் அந்த மறுமொழி.
Karthik Ravikumar // சமகால இலக்கிய ஆளுமைகள கொண்டாடலன்னு சொல்ல வருவது எது என்றால்... பரோட்டா சூரியவோ இல்லை பவர் ஸ்டாரையோ தெரிந்த அளவிற்கு, நம் மக்களுக்கு ஜெ.மோ,எஸ்.ரா, சாரு இல்லை மனுஷ் இவர்களில் யாரையாவது இவர்களின் எழுத்துக்காக தெரியுமா...7 கோடி மக்கள் தொகையில் 350 பிரதிகள்என்பது எத்தனை சதவிகீதம். நீயா நானா கோபிநாத்தின் புத்தகங்கள் 5 லட்சம் பிரதிகள் தாண்டியிருக்கிறது சார். சமகால இலக்கிய ஆளுமைகள் அத்தனை பேரையும் வாசிக்கும் வழக்கம் உடையவன் என்ற ரீதியில் சொல்றேன்.ஒரு டிவி பிரபலத்துக்கு இருக்கும் கொண்டாட்டச் சூழல் கூட, எழுத்தாளனுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம் //
கார்த்திக்கின் மறுமொழிக்கு இதுவே என் மறுமொழி. தவறெனில் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறேன், சரியெனில்.....திருந்(த்)துவோம் :)
கார்த்திக், நம் ’தமிழ்ச்சமூகம்’ இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகே, எல்லாச் சமூக மக்களினாலும் ’இலக்கியம்’ வாசிக்குமளவு வளர்ந்திருக்கிறது, இது நிதர்சனம்தானே ?
அதற்கு முன், ஓரிரு குறிப்பிட சமூகத்தினரால் மட்டுமே வாழையடி வாழையாக இலக்கியம் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது. காரணம் அவர்களுக்கு மட்டுமே கல்வியும், வாசிப்பும், இலக்கியமும் கிட்டியது/தெரிந்திருந்தது.
இருபதாம் நூற்றாண்டில் கூட 1950 வரை ஓரிரு என்பது நான்கைந்து சமூகம் என்று வேண்டுமானால் வாசிப்பதில் முன்னேறியிருக்கக்கூடும், நாடு ஜனநாயகம் ஆன பின்னரே, ஒதுக்கீடுகளால் கல்வி கிட்டி, பிற சமூகங்களும் மெல்ல வாசிப்பைத் தொடர்ந்திருக்கின்றன.
அதிலும் 1950 களில், திராவிட இயக்க அரசியல்வாதிகளின் எளிய எழுத்தையும், அவர்களின் சொல்லாடல்களுமே ஒப்பற்ற தமிழிலக்கியமென பெரிதும் போற்ற ஆரம்பித்தனர். அவர்களின் கொள்கைகளும் சரியென நம்பினர். இதனால்தான் நம்மிடையே அரசியல், சினிமா அது சார்ந்த இலக்கியவாதிகள் புகழ் பெற்றே இருந்தனர், இருப்பர். உதாரணத்திற்கு அண்ணா, பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வைரமுத்து, இதர......இதர.........!
அப்போதே அண்ணாவின், பெரியாரின், கருணாநிதியின், கண்ணதாசனின் நூல்களெல்லாம் பல பதிப்புகள் கண்டன, ஏன் பொன்னியின் செல்வன் கூட பெரும்புகழ் பெற்றது, ஆனால் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியை அதே அந்தக் குறிப்பிடவர்கள் மட்டுமே வாசிக்க முடிந்தது, காரணம் அந்த மொழி நடை, புதிய வாசிப்பாளர்களை ஈர்க்கவில்லை.
பிறகு பெண்மை போற்றிய ஜெயகாந்தன், வெகுஜன நாயகன் சுஜாதாவின் எளிய நடை தமிழால், எழுத்தாளக் கொண்டாட்டம் 1970 -1980 களில் உச்சம் பெற்றது.
இந்த அழகில் 1985 களுக்குப் பிறகு, தம் பிள்ளைகளுக்கு இங்க்லீஷ் வழிக் கல்வியை வலிய திணித்து, இங்க்லீஷ் படிப்பதும், பேசுவதும் மட்டுமே பெருமையென்று இரு தலைமுறைகள் ஒட்டுமொத்தமாய் தமிழைப் புறக்கணித்தன.
எளியோரும், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே தமிழை படித்தனர், ஒரு சிலரைத் தவிர்த்து.
ஆக, இத்தகைய சமூகச் சூழலில், தொலைக்காட்சி பிரபலமொருவர் எழுதும் எழுத்து வலுவானது, அறிவானது என நம்பும் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக குறை கூறி விட முடியாது. ஏனெனில் அவர்களுடைய அப்பா, தாத்தாவும் ஊடகவியாளர்கள் சொல்வது சரியாயிருக்கும் என நம்பியிருப்பர்.
இந்த நிலை, உங்களைப் போன்ற சரியான பரப்புரையாளர்களால் அடுத்த தலைமுறையில் நிச்சயம் மாறும். அதை விடுத்து, தமிழன் எழுத்தாளனை அவமதிப்பவன், தமிழில் எழுதுவதை விட, வாசிப்பதை விட பிற மொழிக்குச் செல்வதே சிறந்தது, பிற மொழி எழுத்தாளர்களும், வாசகர்களும் மட்டுமே அறிவாளிகள் எனச் சொல்வது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிவது போல்தான் ஆகும்.
தமிழன் புதிய வாசிப்பாளன். அவன் ஆரம்ப நிலையில் இருந்த போது அரசியல்வாதிகளால், சினிமா மூலம் ஏமாற்றப்பட்டவன். எனவேதான் அவன் சினிமாக்காரர்களே நம்முடைய ஆபத்பாந்தவன் என இன்னமும் நம்புகிறான், சினிமா, டிவி மூலம் இலக்கியம் பேசுபவனால் பெரிதும் ஈர்க்கப்படுகிறான், இடையில் மறந்த தமிழால் இன்னமும் கீழே போய், தன்னம்பிக்கை கட்டூரைகள் எழுதும் கோபிநாத், இறையன்பு, சுகி சிவம் போன்றோரை பேரிலக்கியவாதியாய் கருதுகிறான்.
இத்தைகய வரலாறுத்தன்மையை அறவே அறியாமல் உளறுபவர்களைப் புறக்கணித்து, நல்லெழுத்து எது, நல்லெழுத்தாளர் யார், நல்லிலக்கியம் எவை என ஓயாமல் சொல்லிக் கிடக்கும் கடமை நமக்குள்ளது !!!
= = தமிழ் வளர்ப்போம் வருக வருக = =
கருத்துகள்
கருத்துரையிடுக