தீர்ப்புகள் திருத்தப்படலாம் !

நான் எதிர்பார்த்திருந்தது வேறு !

”இந்திய அரசியலமைபுச் சட்டங்களின்படி, நடுவண் அரசால் நடத்தப்படும் அரிய அல்லது தேச பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக குற்றவாளிகளை( நடுவண் அரசை மீறி) விடுவிக்கக் கூடாது”


இப்படித்தான் இன்று சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு தரும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆனால், ஓர் உச்சமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கொடுத்த தீர்ப்பிலிருக்கும் சர்ச்சையை, மேற்கொண்டும் ’வேறு ஓர் அமர்வு விசாரிக்கும்’ என்றதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


இதில் சிலர், ‘சட்டப் புரட்சியை விதைக்கிறோம் பேர்வழி’ என தான்தோன்றித்தனமாய் செயல்பட்டு விட்டார்களோ என அறச்சீற்றமும் எழுகிறது.  அதில் முக்கியமான இருவர், சதாசிவமும், ஜெயலலிதாவும் :(


தேசிய பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட ஓர் அரிய வழக்கில், குற்றவாளிகளை(சரி, சரி, குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகளை.....) மாநில அரசு தன்னிச்சையாய் விடுதலை செய்யலாம் என தீர்ப்பளித்தது எதிர்காலத்தில் எவ்வளவு சட்டச் சிக்கல்களைத் தரும் ?  இதையெப்படி உச்ச நீதிமன்ற தலைமை  நீதியரசர் சிந்திக்காமல் போயிருப்பார் ?


ஒரு விபரீதக் கற்பனையைப் பார்ப்போம்.

யானைத் தந்தப் புகழ் சந்தன வீர்ப்பனை அவருடைய கூட்டாளிகளோடு சேர்த்து கையும் கன்னுமாக உயிரோடு கைது செய்து விட்டார்கள் என வைத்துக் கொள்வோம்.

தமிழக காவல்துறையினர் கைது செய்திருந்தாலும், வீரப்பன் மீது கேரள, கர்நாடகாவிலும் வழக்குகள் இருந்தபடியால், அது நடுவண் அரசின் கீழ் விசாரிக்கப்பட்டிருக்கும்.  நிச்சயம் அவருக்கும், சில முக்கிய கூட்டாளிகளுக்கும் தூக்குத் தண்டனைதான் கிட்டியிருக்கும்.  வழக்கம் போல தூக்கில் போடாது இன்றளவும் சிறையில்தான் இருந்திருப்பர்.


இந்த அழகில், ’இவர்களை தன்னினம்’ என ஒரு மாநிலக்கட்சி போற்றி வருவது உங்களுக்குத் தெரியும்.  தமிழனின் கேடுகெட்ட நேரமாய், இவர்கள் தமிழகத்தை ஆளும் நிலை வந்துவிடுகிறது. வீரப்பன் & குழு  நடத்திய சட்டப்போரில் தூக்குத் தண்டனை விலக்கப்பட்டு வெற்றியும் பெற்றால், இங்கு வீரப்பன் இன ஆதரவு அரசு, உடனடியாக இந்த ’மாநில அரசு அதிகார’ தீர்ப்புப்படி, வீரப்பன் & கோவை விடுதலை செய்து நேரே காட்டில் கொண்டுபோய் விட்டுவிடாதா ?

வீரப்பனை விடுங்கள், வீரப்பனோடு சேர்த்துக் கைதானவர்கள் அத்தனை பேரும் பொய்க் குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டவர்கள் என அவர்களின் இன ஆதரவாளர்கள் போராடினால் நாமும் சரி சரி என்றுதானே வாளாவியிருந்திருப்போம் ?


சட்டச்சிக்கல்களை சற்றே பொறுமையாய் ஆராய்ந்து, “இந்த எழுவரில், மூவர் நம் நாட்டு பிரஜையில்லை, கடவுச்சீட்டு, விஸா இல்லாத அவர்களை எப்படி விடுவிப்பது என நாம் கலந்து பேசியபின், எல்லோரயும் விடுதலை செய்யத் தயார்” என்றுதான் நடுவண் அரசுக்கு ஜெயாவின் மாநில அரசு சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் மாநில அரசு, என்னமோ விடுதலைப்புலிகள் மேலும், ஈழத்தின் மீதும் பெரிய பாசம் இருப்பது போல பாசாங்கைக் காட்ட, அதன் பிரதிபலனாய் வாக்கறுவடைச் செய்ய, வெறும் தலையோடு இரும்புச் சுவர் மீது நங்..... நங் என்று முட்டுவதை வீரம் என பறைசாற்றுவதைப் போல்...............”மூன்று நாளில் பதில் கொடு, இல்லையேல் அத்தனை பேருக்கும் விடுதலை”  என்றது.
இதை, ஆஹா புரட்சி, புரட்சி, தைரிய லட்சுமி, வீரத்தாய், ஈழம்கொண்டாள்........என்றெல்லாம் புகழந்தவர்களில் ஒருவர் கூட, அந்நிய நாட்டுப் பிரஜைகளை விடுதலை செய்தால் அவர்களை யாரிடம் ஒப்படைப்பார்கள் ? என ஒரே ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை.

நல்ல வேளையாக கடைசியில் சட்டமே வென்றது.  இத்தகையச் சட்டங்கள் மட்டுமே சமயங்களில் என்னைப் போன்ற தேசியவாதிகளுக்குச் சற்றே ஆறுதலைத் தருகின்றது

சிறையில் வாடும் அப்பாவிகள்(!!!) மேல் எனக்கு எந்த வன்மமுமில்லை, ஆனால் அவர்களையும், அவர்கள் மேல் பச்சாதாபம் வைத்திருப்போரையும் பகடைக்காய்களாய்.உருட்டி விளையாடும் அரசியல்வாதிகள் மேலும், அரசு அதிகாரிகள் மேலும், சட்ட மேதைகள் மேலும், சராசரிகளாகவும் பொதுப் புத்திக் கொண்டோர் போலவும் செயல்படும் பலப்பல பிரபல ஊடகங்கள் மேல்தான் எனக்கு கடுங்கடுப்பு வருகிறது.


அரசியல்வாதிகள் எக்கேடாவது கெட்டழியட்டும், ஊடக அறிவுஜீவிகளே, உண்மையைச் சொல்வதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம் ?  யாவுமே வணிகத்தந்திரமெனில் உங்கள் வணிகம் நாசமாக போகட்டும்  :(

ஓர் இடைச்செருகல் :-(செருகிய தினம் 26/04/2014)

கலகத்தில்தான் நன்மை பிறக்கும் என்பது உண்மைதான் போல !!!

சதாசிவம் தலையிலான மூவர் அமர்வு, ’ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை ஏற்படுத்தி, கீழ்க்காணும் ஏழு கேள்விகளுக்கு நிரந்தர சட்டத் தீர்வுகளை’ காணக் கோரியிருக்கிறது.

கலகத்தால், காலம் இன்னும் கொஞ்சம் தாமதமானாலும், இக் கேள்விகளுக்கு நிரந்தர பதில் கிட்டிவிட்டால், அவைகளை சட்டமுமாக்கிவிட்டால், உண்மையிலேயே பல பேருக்கு, அது ஆசுவாசமாய் இருக்குமென்பதில்  சந்தேகமேயில்லை.

அந்த ஏழு கேள்விகள் :-

1.) ஆயுள் தண்டனை என்பது குற்றவாளியின் வாழ்நாள் வரையா அல்லது 14 வருடங்கள் என்கிற காலக்கெடு உண்டா ?  தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு தண்டனை குறைப்பாகி அவருக்கு அது ஆயுளாகும்போது, அவருக்கும் இந் நிலைப்பாடு பொருந்துமா ?

2.) குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் கருணை மனுவை விசாரித்து, தூக்குத்தண்டனையை ரத்து செய்யும்போது, அக் கைதியை விடுதலை செய்ய எந்த அரசுக்கு அதிகாரமுள்ளது ?

3.) குற்றவியல் நடைமுறைச் சட்டம் IPC 432(7) வது விதி மாநில அரசை விட உயரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதா ?

4.) அதிகாரம் தொடர்பான அரசியலமைப்பின் ஏழாவது பட்டியலில் மூன்றாவது பகுதியில் எந்த அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா ?

5.) விதி 432(7) படி, ஒரே விவகாரத்தில் தண்டனை அனுபவிக்கும் கைதியை விடுவிப்பதில் இரு அரசுகள் முடிவெடுக்க முடியுமா ?

6.) 432(1) விதியின்படி, ஒரு கைதி தன்னை விடுதலை செய்யக் கோரி விண்ணப்பிக்காத நிலையில், அவரை விடுதலை செய்யும் முடிவை ஓர் அரசால் தன்னிச்சையாக எடுக்க முடியுமா ?  அந்த உரிமை உண்டு என்றால் அதன் நடைமுறைகள் என்ன ?

7.) 435(1) விதியின்படி, சில வழக்குகளில் தண்டனை பெற்ற கைதியை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  ‘ஆலோசனை’ என்பதை ‘ஒப்புதல் பெற வேண்டும்’ எனக் கருதலாமா ?

பாருங்கள்.  இவையெல்லாம் யாரோ ஒரு சராசரி இந்தியன் எழுப்பிய கேள்விகளல்ல.  உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதியும், பிற இரு நீதிபதிகளும் சேர்ந்தெழுப்பும் சட்ட சந்தேகங்கள்.

ஆனால் இங்கு விவாதத்தில், என்னிடம் உங்களுக்கு என்னங்க சட்டம் தெரியும், அதெல்லாம் சதாசிவத்திற்கும், ஜெயலலிதாவிற்கு ஆலோசனை சொன்ன சட்ட வல்லுனர்களுக்கு எல்லாம் தெரியும்.   மாநில அரசுக்கு இல்லாத அதிகாரமா ? ஜெயா உண்மையிலேயே புரட்சி தலைவிதான், சதாசிவத்திற்கு ’தமிழினம் காத்த தவப்புதல்வன்’ பட்டம் கொடுக்கப் போகிறோமென எத்தனை எத்தனை மேதமைத்தன்ம விவாதங்கள் ?  ஜெயா மமதையோடு மத்திய அரசை சந்திக்கு இழுத்தபோதே சொன்னேன், நுணல் ஏன் அரவத்தை சவாலுக்கு அழைக்கிறது ? என்று.

ஆனாலும், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசுகளும் இந்தச் சட்டப்போரில் பங்கேற்று, தமக்குரிய அதிகபட்ச சட்ட அதிகாரங்களை வாதம் செய்து கைப்பற்ற வேண்டும்.

கை மேல் வெண்ணைய் இருந்தபோது,, அதை கொக்கின் தலை  மேல் வைத்து, சூரிய வெப்பத்தில் உருகி, நெய்யாய் வழியும் போது பானையில் பிடிக்கலாம் என விட்டாயிற்று, இனி கொக்கு தலையைக் காட்டும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான் !!!






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!