நூறு விழுக்காடு வாக்குப்பதிவாகுமா ?

100 விழுக்காடு வாக்குபதிவு எனில் நீங்கள் மகிழ்ச்சிதானே அடைவீர்கள் ?  ஆனால் அப்படி ஒரு முழுப்பதிவு நடந்ததென அறிந்தால், அடுத்த நிமிடமே அத் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து விடும், ஏன் ?


ஏனெனில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு சாத்தியமேயில்லை.


ஒரு தொகுதி, அது சிறியதாயிருக்கட்டும், பெரியதாயிருக்கட்டும், ராணுவப்பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவத் துறையினர், ரயில்வே, சாலைப் போக்குவரத்து, இன்ன பிற அத்தியாவசியப் பணியிலிருப்பவர்கள் வாக்களிக்க முடியாது. தபால் வாக்குகள் எல்லோருக்குமே சாத்தியமா என்பதில் சந்தேகமுள்ளது.  இவர்கள் சில விழுக்காடு........


என் பக்கத்து வீட்டில் ஒரு முதிய தம்பதி. அவர்களுக்கு தங்கள் வாக்குகளைச் செலுத்த அளப்பரிய ஆசை.  ஆனால் வாக்குச்சாவடி சென்று  வரிசையில் நின்று வாக்களிக்கும் அளவிற்கு அவர்களிருவருக்கும் கால்களில் சிறிது கூடச் சக்தியில்லை.


சரி வாருங்கள் என் வண்டியில் போய் வரலாம் என அழைத்தேன்.  ம்ஹூம், வண்டியில் ஏறி இறங்குமளவு கூட முழங்கால்கள் ஒத்துழைக்காது என மறுத்துவிட்டனர்.  வீட்டருகேயே எல்லாமும் கிடைத்துவிடுவதால் எங்கும்  நெடுந்தொலைவு செல்வதேயில்லை, ஏன் சொந்தக்காரர்களின் சுப காரியங்களுக்குக் கூட அவர்களால் போக முடிவதில்லை.  ஆக, இதுபோன்ற முதியவர்கள், நோயாளிகள், அந் நோயாளிகளைக் கவனிப்பவர்கள் எனச் சில விழுக்காடு........

நம்மூர்களில் இறந்தவர்கள் பெயர்களை உடனையாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியாது.  இந்த அழகில், பல்லாண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இருப்பதுண்டு.  இதுபோக, வீடு மாறிச் செல்பவர்கள், மாற்றலாகி வேறு ஊர் செல்பவர்கள், வெளியூர் மற்றும் அயல் நாடுகளில் பணிபுரிபவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சில விழுக்காடு..........

இயற்கை ஒத்துழைக்காமல், சமயங்களில் அதிக வெயிலோ, அதிக மழையோ, அதிக குளிரோ, நெடுந்தொலைவு சென்று வாக்களிக்க வாகன வசதியில்லாமலோ, இப்படி ஒரு சில விழுக்காடு.......


இதுபோக வாக்களிக்கும் விவரங்கள் தெரியாதவர்கள், கடைகளைத் திறந்தேயாக வேண்டுமென இருக்கும் உழைப்பாளிகள், ஆட்டோ, லாரி ஓட்டுனர் போன்ற தின வரும்படிக்காரர்கள் என சில விழுக்காடு.........


எப்படிப் பார்த்தாலும் இப்படியாக பத்து விழுக்காடு வரை நிச்சயம் வாக்குகள் பதிவாக வாய்ப்பில்லை.    ஆக, சென்னை போன்ற பெரு நகரங்களில் 10 முதல் 15 விழுக்காடு வரை கண்டிப்பாக வாக்குகள் பதிவாகாது, ஆனால் மீதி அந்த 85 விழுக்காடு ?


ஆம், என்னதான் நகரமென்றாலும், இப்போது கட்டாய விடுமுறை காரணமாக மிச்சமிருக்கும் இந்த 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கலாம், சரி, வாக்களிக்க முடியாது என அகங்காரம் அல்லது அதீத விடுதலை வேட்கை கொண்ட அரசியல் வெறுப்பாளர்கள் ஓர் ஐந்து விழுக்காட்டினரை ஒதுக்கினால் கூட, 80 விழுக்காடாவாது பதிவாகியிருந்திருக்க வேண்டும், பதிவானதோ அறுபது விழுக்காடு. (தமிழ்நாடு சராசரி 73 விழுக்காடு)


இன்னும் கொஞ்சம் பரப்புரை அதிகமானால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த 80 -90 விழுக்காடை நிச்சயம் நாம் எட்டி விடலாம்.  90 விழுக்காடு வாக்குப்பதிவு லட்சியம், 80 விழுக்காடு நிச்சயம்,  என இலக்கைச் சென்றடைய உழைப்போம், வாருங்கள் :)

                               = = நன்றி = =  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!