இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ் ?

ஐயா/அம்மா,

நீங்கள் கொங்கு வேளாளரா ?  வீர வன்னியரா ?
மறவரா....கள்ளரா.....செங்குந்த முதலியாரா, பிள்ளைமாரா.....நாடாரா........நாயக்கரா....விட்டுப்போன பிற ஒசந்த சாதியினரா ?  உங்களுக்காக மட்டுமே இப்பதிவு.

முதலிலேயே ஒப்புக்கொள்கிறேன் எனக்கும் சாதி அடையாளம், அதனால் கிடைக்கும் சலுகைகள் எல்லாம் உண்டு.  ஆனால், ஒரு போதும் எனக்கு கீழான சாதியையோ, மேலான சாதியையோ.......(இந்த வாக்கியத்தையே வெறுக்கிறேன்) ஏகத்துக்கும் புகழவோ / தூற்றவோ தோன்றியதேயில்லை.

காந்தியின் அன்புக்குரியவராக இருந்த 'பெரியார்’ ஒரே  ஒரு கொள்கைக்காக காந்தியை பெரிதும் எதிர்த்தார்.  அது என்னவென்றால், 'ஆதிக்கச் சாதியினரின் அடாவடிகளில் இருந்து அப்பாவிகளை மீட்டுவிட்டு பிறகு வெள்ளையனை விரட்டலாம்,  முதலில் இங்கு வேண்டியது சமூக விடுதலை' என்றார்.  ஆனால் மகாத்மா, 'முதலில் நாடு நமதாகட்டும், நமது ஆனபின்னர் எல்லோரும் சமமென அறிவிக்கலாம்' என்றார்.  இருவருக்கும் நோக்கம் விடுதலைக்காக இருந்தது.
(நன்றி -தமிழ்மகன்)

உன்னுடன் வாழும் சக இனத்தவனையே கொஞ்சமும் கூசாமல், 'நீ எனக்குத் தாழ்ந்தவன், அடங்கிக் கிட' என்று இனத் துவேஷம் காட்டும் உனக்கு, சிங்களனின் இனவெறியைக் கண்டிக்க என்ன துப்பு உள்ளது ? (நன்றி -டான் அசோக்) 

உங்களால் சாதி தரும் பெருமையையோ, சலுகைகளையோ தவிர்க்கவே முடியாது, அப்படியிருக்க ‘சாதி மறுப்பு’ எனும் போலி முகமுடியை ஏன் போட்டுக் கொள்கிறீர்கள்.....என்பதே சாதிப் பற்றாளர்களின் தலையாய கேள்வி.  

சாதி எனும் சாயம் பூசி, அதனால் பலனை தொடர்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமேயல்லாது, அவர்களால் ஒதுக்கப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், சிதைக்க்கப்பட்டவர்களும் கூட, மேலே வரவேண்டும், படிக்க வேண்டும், எல்லா பூலோக வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் 'இட ஒதுக்கீடு' கொண்டுவரப்பட்டது.  

இதெல்லாம் தெரிந்த சேதிதானே, சரி ஒரு குழு, எந்த வகையில் உயரியதாகவும், எந்த வகையில் தாழ்ந்தாகவும் ஆகிறது ?  முதலில் தமிழகத்தில் யாராரெல்லாம் ‘ஆண்ட சாதிப் பரம்பரை’ எனப் பீற்றிக் கொள்ளலாம் ? எனப் பார்ப்போம்.

வரலாறை தொடக்கத்தில் இருந்து சொல்லப்போனால் நிறைய புனைவுக் காவியங்களாகவே கிட்டுவதால்,  சுதந்திரம் கிட்டிய காலத்தில் இருந்து, பின்னோக்கிப் போகலாம். 

சென்னை  போன்ற நகரங்களில் வெள்ளையர்களே நேரடி நிர்வாகத்தில் இருந்ததால்,  கிருத்துவர்கள்தான் நம்மை  கடைசியாய் ஆண்டவர்கள்.  எனவே எஞ்சியுள்ள 'ஆங்கிலோ இந்தியன்ஸ்' தங்களை ஆண்ட பரம்பரை என அறிவித்துக் கொள்ளலாம்.  அட்லீஸ்ட் சென்னை வரைக்குமாவது உரிமை கோரலாம். (ஆண்ட்ரியா  ஆங்கிலோ-இந்தியன் எனக் கேள்விப்பட்டேன், அவரை  'சென்னை  இளவரசி'  என  அறிவித்துவிடலாம்)

வெள்ளையனுக்கு முன்னாள், 'சென்னப்ப நாயக்கர்' எனும் தெலுங்கர் இங்கு பரிபாலனம் செய்திருக்கிறார்,  ஆக, சுந்தரத் தெலுங்கினரே, 'மீரும்  ராசாண்டி'
முத்துராசாப் பேட்டையே......முத்துராசா....முத்துராஸ்.....மதராஸ்....மெட்ராஸ் எனத் திரிபானதாம்.  என்னுடைய இயற்பெயர் முத்துராசா, எனவே பூர்வ ஜென்மத்தில் நான்தான் இங்கு ஆண்டிருக்கிறேன், இனி என்னிடம் வீட்டு வரி கேட்டு எவனாவது வரட்டும் :)

அப்படியே ஆற்காடு பக்கமாய் போனால், அங்கு, சொக்கா போட்ட 'நவாப்பு' சொல்லு எங்கிட்ட 'ஜவாப்பு '   என்றார்.  என்னத்த சொல்ல ?  உங்க வம்சம்  அறுநூறு வருஷ பாரம்பரீயமாச்சே,  முஸ்லீம்களை ஒடுக்க நினைக்கலாமா ?  அவர்கள்தான் நீண்ட நாட்களாக இந்தியாவையே ஆண்டவர்கள், 'ஹொஸூர் மன்னிச்சிருங்க.........நீங்கதான் எங்கள ஆளனும்' !

செஞ்சில  கடைசியா முஸ்லீம் அரசுதான் நடந்தது எனினும், அதற்கு முன்னாள் அதை ஆண்டது 'ஜெய்சிங்' எனும் மார்வாடி.  அதாவது அது ஒரு ரஜ்புத் அரசு.  'ராசா தேசிங்கு' என்று  மக்களால்  அன்புடன்  அழைக்கப்பட்டவர்.   நம்மாளுங்களுக்கு நல்லது நடந்தா சரி, எவன் ஆண்டாலும் அவன அன்பா் ’புரச்சித்தலைவான்’னுதான் அழைப்பாங்க.  ஆக, சேட்ஜி, ஹிந்திப் போராட்டம் நடந்தப்போ இனி தமிழ்நாடு  நமக்கு பாதுகாப்பில்லன்னு, ஊர் மேல போப்போறேன்னு டிக்கட் போட்டீங்களே..........பாத்தீங்களா நீங்க ராசா வம்சம், வாங்க கிரிடத்த பிடிங்க !

புதுவை தமிழ்நாடு இல்லைன்னாலும் ராமதாஸ்க்கு அது மேல ரெண்டு கண்ணு, சரி, அப்ப அந்த பூமியை வன்னிய மன்னந்தான் ஆண்டிருக்கனும்னு போனா, ஒரு துரை, ‘போன் ஜேர்’ என்றார்.  ஃப்ரெஞ்சாமாம்.  சாருக்குதான் ப்ரெஞ்ச் தேசம் சொந்தம்.  சாருக்குதான் புதுவை மன்னர் பட்டம் கொடுக்கனும்.

ஆகா, தஞ்சை சோழ பூமியாச்சே, சோழன் என்ன சாதின்னு சிந்திச்சிட்டு இருந்தபோது, சரபோஜி ன்னு ஒருத்தர் என் தலை மேலயே கொட்டுனாரு.   நாங்க கடந்த  நூறு வருசமா..........கப்பம் மேல கப்பம் கட்டி, மிச்ச காசுல, இங்க அரண்மனை கட்டி, நூலகம் கட்டி, ஆட்சி செய்துட்டிருக்கோம், இங்க வந்து சோழன், கீழன்னுகிட்டு.................மராத்தியர்கள் ஆண்ட பூமியிது, வீர சிவாஜி பரம்பரை.  ஜெய் மராத்தி என்றார்.  பால் தாக்கரே உயிரோடு இருக்கிறப்பவே, அவரக் கூட்டியாந்து சிம்மாசனத்த கொடுத்தி்ருத்தோமுன்னா நாம நிம்மதியா ஒரே லூஸோட இருந்திருப்போமுல்ல ?

கோவையை ஒரு மலையாளி,  மதுரையை கான்சாகிப் (அதான் நம்ம மருதநாயகம்) அதுக்கு முன்னால திருமலை நாயக்கர், நெல்லை வரை பாளையங்களை ஆண்ட நாயக்கர் வம்சாவளி கட்டபொம்மு, இதுபோக, ஆற்காடு நவாபுக்கு கப்பம் கட்டிகிட்டு, தெகிரியமா ஆண்ட, பூலித்தேவன், நாச்சியார் ஆச்சி, மருது ப்ரொஸ், ராமனாதபுரத்துக்கு ஒரு ராசா, எட்டயபுரத்துக்கு ஒரு ராசா, புதுக்கோட்டைக்கு ஒரு ராசா, திருவிதாங்கூருக்கு ஒரு ராசா............இது போக, சாத்தூர் சமஸ்தானம்...........அடக் கெரகம் எதப் போயி தொட்டேன் பாருங்க, நீண்டுகிட்டே போகுது.  

சரி, கடையெழு வள்ளல்கள்னு படிச்சிருக்கோமில்லையா, பாரி, பேகன், சிபி...........இவங்கள்ள, பாரி  செட்யூல்ட் ட்ரைப்.  அதாவது மலைவாழ் சாதி. ஆக, இவங்க கூட ராசாங்கதான்.  ஆகவே ஒத்த சாதி விடாம எல்லாம் ‘ஆண்ட சாதி’ தான்.

இப்படி நான் எழுதிக்கொண்டிருந்த வேளையிலேயே, எழுத்தாளர் ஜெயமோகன், தெள்ளிய கருத்துக்களும், ஆதாரங்களும் நிறைந்த, 'மன்னர் சாதி' எனும்  கட்டூரை ஒன்றை அவருடைய வலைமனையில் சமர்ப்பித்தார்.  

நானெல்லாம், நான் படித்த, பார்த்த, கேட்டதை, அப்படியேவோ, கொஞ்சம் புனைந்தோ எழுதி (ஹிஹி....கிறுக்கி) வைப்பேன்.  ஆனால், எழுத்தையே மூச்சாய் சுவாசிக்கும், ஜெமோ, எஸ்.ரா, சாரு, போன்றோரால் மட்டுமே, எழுத வருவதை, தேடிப் படித்து, ஆராய்ந்து, அலசி, திறம்பட சொல்ல முடிகிறது.  அந்த லிங்க் இதோ :-http://www.jeyamohan.in/?p=35502

இந்த அழகில் சில சாதி வெறி பிடித்த செழிப்பான சொறி   நாய்கள்,  இப்போதெல்லாம் பழையதை மறந்து, மூளைச்சலவை செய்யப்பட்டதைப் போன்று, சக தமிழனை, சக மனிதனை, ‘ நீ கீழானவன்’ என்று குரைத்தத் தள்ளுகின்றன.

உயர்சாதியினரே, உங்களை பாதுகாக்க சட்டம் இருக்கிறது என்பதை திடமாக நம்புங்கள்.  உங்கள் வீட்டுப் பெண்ணை ஏமாற்றுபவன்
எந்த சாதி எனப் பார்க்கவேத் தேவையில்லை.  அவன் ஒரு கிரிமினல்.  அவனை தகுந்த ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்து நீதியால் தண்டனை பெறச் செய்யுங்கள்.  காதல் என்பது இருவர் சம்மதத்துடன் செய்யப்படுவது.  உங்கள் பெண்ணை சாமர்த்தியமாக ஏமாற்றிக் காதலித்துவிடலாம் என தன்னம்பிக்கை இல்லாதது போலெல்லாம் உளறி,  உங்கள் வீட்டுப் பெண்களை வளர்க்காதீர்கள்.

இவ்வளவுநாள், உங்கள் தாத்தா, தந்தையைப் பார்த்த மாத்திரத்தில், அவனுடைய தாத்தா, தந்தை தலையில் கிடந்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு, நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்குவார்கள், இவன் என்னடாவென்றால் நம்முடன் சரிசமமாக அமர்ந்து, என்னை விட மார்க் குறைவாக வாங்கிவிட்டு, ஈசியாக இஞ்சீனியரிங் சீட் வாங்கிவிட்டானே.............என்றெல்லாம் புலம்பாதீர்கள், புலம்ப விடாதீர்கள், ஏனெனில் இதை விட அதிக அட்டூழியத்தை நாம் அவர்களுக்கு இழைத்தும், அவர்களுக்கு அப்போது, அதைச் சொல்லக் கூடத் தெரியவில்லை.

அவர்களுடன் போட்டியிடுங்கள்.  உங்களிடம் செல்வம் உள்ளது,  நல்ல பின்புலமுள்ளது.  உங்களின் வளமான சாதியினர் கட்டிய  கல்விக்கூடங்களில் உங்களுக்கு பிரத்யோக உரிமையுள்ளது, அப்புறமும் எதற்கு அஞ்சுகிறீர்கள் ?

காட்டுவெள்ளத்தை அணை போட்டெல்லாம் கட்டுப்படுத்த முடியாது.  ’நான் மன்னன், நீ என் அடிமை’ என்று சொல்வதெல்லாம், ‘உங்களயெல்லாம் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு’ எனக் கட்டத்துரையைப் பார்த்து கைப்புள்ள சொல்வது போலிருக்கிறது !!!



                                       -- முற்றி விட்டால் நல்லதுதான் --


   




 




















                      


 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!