சொம்பு தூக்கும் ரத்தத்தின் ரத்தமே

நாத்திக போலிவேஷம் போட்டு தமிழகத்தில் காலூன்றிய கழகக் கண்மணிகள், ரத்தத்தின் ரத்தங்கள்,  இன்னமும் தம்முடைய முகமூடிகளை கழற்றாமல் நம்மிடையே உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன.  


நேற்றைய தினமணி நடுப்பக்கக் கட்டூரையில் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், இதுவரை புத்திசாலியென்றே   நான் நம்பும் ஓர் அறிவுஜீவி ! ஆனால் இன்று அவர் தூக்கிய சொம்பு கொஞ்சம் அருவருப்பைத் தந்தது.
  
ரத்தத்தின் ரத்தமான பழ. கருப்பயா தான், கட்டுரை எழுதியவர், அவர் தூக்கிப் பிடிக்க விரும்பியது நபிகள் நாயகத்தின் பெருமைகளை, அந்தப் பெருமானாரின் புகழ் பாடியதோடு நின்றிருக்கலாம், இன்னமும் நாகரீக மாற்றங்களை தம்முள் அனுமதிக்க மறுக்கும், அப்பட்டமான பிற்போக்குத்தனங்கள் மலிந்த 'மதத்தின்' சாரங்களை, 'மாற்றமுடியாதவை' என பெருமை பட்ட அவரின்  ஜால்ராத்தனம்தான் எரிச்சலைத் தந்தது.


சரி அப்படி அவர் என்னத்தான் எழுதிவிட்டார் என பார்ப்போம், பிறகு சில கேள்விகள், ஆனால்  அது அவருக்கு இல்லை. இனி அந்த அபத்தக் கட்டுரையின் சில துளிகள் :-


இசுலாமியர்களின் கொள்வினை-கொடுப்பினைகள்,  திருமண  உறவுகள்,  அதில் கடைபிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள், திருமண முறிவுகள், அவற்றுக்கான முறைகள் ஆகிய அனைத்துமே அவர்களின் ஷரியத் சட்டத்தில் துல்லியமாக வகுக்கப்பட்டிருக்கின்றன.


பாங்கு சொல்லி அழைக்கும் முறையில் கூட ஆயிரத்தி முந்நூறு  ஆண்டுகளாக  எந்த மாற்றமுமில்லை.  இசுலாம் அவ்வளவு கட்டிறுக்கமானது.  இவற்றையெல்லாம் கவனிக்காமல் அவர்கள் ஷரியத் சட்டத்தை ஒதுக்கிவிட்டு, ஒரே மாதிரியான உரிமையியல்
சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் ?


உச்ச நீதிமன்ற முன்னாள்  தலைமை  நீதிபதி  சந்திரசூட்,  ஷாபானு  என்னும் முஸ்லிம் பெண்ணின் திருமண முறிவு வழக்குத் தீர்ப்பில்
இந்தியாவுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்துக்குப் பரிந்துரை செய்தார்.  ஆனால் ராஜீவ் காந்தி காலத்தில் 1986 -ல் நாடாளுமன்றம் குறுக்கிட்டு அதைத் தடுத்து விட்டது.


'மகர்' முறையை விடுத்து, இந்துத் திருமண முறிவுக்குப் போல், சீவனாம்சம் வழங்க வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு
நாடாளுமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. 


பின்னொருநாள் திருமணமுறிவு நேரிட்டால், அதற்க்கான வழிவகை என்ன என்று சிந்தித்தவர் நபிகள் நாயகம் !  முறிவு  செய்யப்பட்ட பெண்ணிற்கு 'மகர்' பணம் வழங்கவேண்டும் என்பது நபிகள் கண்ட தீர்வு.


திருமணம் என்பதை ஆண் பெண்ணுக்கிடையேயான ஓர் ஒப்பந்தம் 
என்ற அளவிலேயே இசுலாம் பார்க்கிறது.  முறிவு செய்த ஆண் 'மகர்' (ஆண் பெண்ணிற்கு தரும் முறிவு இழப்பீடு)  வழங்காவிட்டால் குற்றமே ஒழிய முறிவு குற்றம் கிடையாது !


இசுலாமியர்கள் கடைபிடிக்கும் விதிமுறைகள், சட்டங்கள் அனைத்தும் அல்லாவினால்  சொல்லப்பட்டு நபிகள் வழியாக இறங்கியவை.
அவற்றைத் திருத்தம் செய்பவன் அல்லாவை விடப் பெரியவனாய் இருக்க வேண்டும்.  அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை.


படித்து விட்டீர்களா ?  சரி, எனக்காக ஒருமுறை மீள்வாசியுங்கள். 
இம்முறை   இதை இசுலாமியர்களாக நீங்கள் படிக்கலாம் !  ஆனால் இசுலாமிய ஆணாயிருப்பவர் சற்று ஊன்றி படியுங்கள், பெண்ணாயிருப்பவர் சரியா தவறா என கேள்விகள்
கேட்டுக்கொண்டே படியுங்கள் !


இறைத்தூதர் தம் மக்களுக்காக சொல்லிச் சென்ற ஒழுக்கமுறைகள்
அம்மக்களால் நேர்மையாக கடைபிடிக்கப் பட்டிருந்தால், மேலே
அடிக்கோடிட்டிருக்கும் அந்தக் கருத்துக்கள் அத்தனையையுமே
நாம் மனமுவந்து பாராட்டியிருக்கலாம் !  ஆனால்  இன்றைய,  இசுலாமியர்கள் வாழ்க்கைமுறை,  கலாச்சாரமாற்றம் என்று காலத்திற்கு ஏற்றவாறு எல்லாவற்றையுமே  உள்வாங்கிவிட்டு,  ஆயிரத்திமுந்நூறு வருஷங்களாய் பாங்கு  சொல்வதில் கூட மாற்றமில்லை, எதையும் அவர்களுள்  மாற்றம்
செய்ய யாராலும்  முடியாது என்று சொல்வது எத்துணை அடாவடித்தனம் ?


மகர்ப்பணம் என்பது இசுலாமிய ஆண், பெண்ணிற்கு தரும் சீர், அல்லது
காப்புப்பணம், மனமொத்த வாழ்வு அமையாவிடில் தலாக் தலாக் தலாக்
எனச் சொல்லி பிரிந்துவிட்டு, 'மகர்' கொடுத்துவிட்டால், அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கச் செல்லலாம்.  ஆனால், இதை ஓர் அநீதியாய்ப் பார்த்து ஜீவனாம்சம் என்பதே சரி என்ற,  சந்திரசூட்  தீர்ப்பை, மிருகபலம் (இந்திரா கொல்லப்பட்டதில்  கிட்டிய அறுவடை)  கொண்டிருந்த  காங்கிரஸ் அரசு, முளையிலேயே கிள்ளிவிட்டது !  இது இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதானே ?  காங்கிரஸ் தன்னுடைய நிரந்தர ஓட்டுவங்கியைத் தக்கவைக்கச்  செய்த சூழ்ச்சிதானே இது ?  இதில் இந்த சொம்பு ஏன் இத்தனை பெருமிதம் கொள்கிறது ?


இது உண்மை, ஒரு சில இடங்களில்  இல்லாமல்  இருக்கக்  கூடும்,   'மகர்' பணத்தையே கூட, பெண் வீட்டாரிடமிருந்து 'செலவு'
எனப்பெற்றுக் கொண்டு, அதையே  திரும்பத் தந்த கதைகள் நிறைய உண்டு, ஆனால் அது கதையல்ல நிஜம், பிறகு பிரிந்த அந்தப் பெண்ணின் கதி ?  ஒன்றுமே கிடையாது சூன்யம்தான் !


நகரத்தை விட்டு கொஞ்சம் புறமாய்ப் போவோம், இஸ்லாமியப் பெண்கள் எல்லோருமே கல்வியறிவு பெறுகிறார்களா ?  அவர்களின் திருமண வயது வரம்பு என்ன ?   தலாக் செய்யப்பட்ட பின் கிடைக்கும்
'மகர்' பணத்தில் அவள் எவ்வளவு நாள் வாழ முடியும் ?
அடுத்த திருமணத்தில் அவள் எத்தனையாவது தாரமாய்ப் போவாள் ?


இந்தியச்சட்டம் பொதுவாய் இருத்தலே இந்தியருக்கு நல்லது
என நினைக்கும் மக்களும், அரசியல்வாதியும்தான் இனி இந்த நாட்டுக்குத் தேவை, மாறாக, தம் வசதிக்காக, தம் சுயநலத்திற்காக,
தாம் போடும் வேஷத்திற்காக,  இறைவன் ஒருவனே மாற்றமுடியும் என்று வாதிடுவது, அவலங்களின் உச்சம், இது இறைவனை ஏமாற்றுவது, இறைவனை ஏமாற்றுபவர்களுக்கு ஃபத்வா உண்டு !
அதை அறிவிப்பது அவனே, அப்போது அந்தத் தீர்ப்பைக் கேட்கும்
ஏமாற்றுக்காரர்கள் நரகத்தில், குற்றவாளிக்கூண்டில் இருப்பர் !!!




                                       -முற்றும்-  





















  

































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!